ஏ.ஆர்.ஏ.பரீல்
அரபுக் கல்லூரிகள் தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் டிசம்பர் மாத ஆரம்பத்தில் சாய்ந்தமருது பிரதேசத்தில் அரபுக் கல்லூரியொன்றில் கல்வி பயின்றுவந்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தூக்கில் தொங்கிய மாணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கவில்லை. அரபுக்கல்லூரி நிர்வாகியான மெளலவி ஒருவரினால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக மெளலவி மீதே குற்றம் சுமத்தப்பட்டது. தற்போது அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளார்.
இந்நிலையில் மேலுமொரு அரபுக் கல்லூரியில் மாணவன் ஒருவன் பலமாக தாக்கப்பட்டு காயங்களுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வலம் வந்தன. இந்தக் குற்றச்சாட்டினையடுத்து அந்த அரபுக் கல்லூரியை கடந்த 19ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடி விடுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெலிகம, கல்பொக்க, புகாரி மஸ்ஜித் மாவத்தையைச் சேர்ந்த மத்ரஸதுல் பாரி அரபுக்கல்லூரியின் தலைவருக்கே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024.01.19ஆம் திகதியிட்ட MRCA/13/1/AC/35ஆம் இலக்க, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் என். நிலோபர் கையொப்பமிட்ட மத்ரஸதுல் பாரி அரபுக்கல்லூரியின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் கல்லூரியை கடந்த 19ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடிவிடும் படி வேண்டப்பட்டுள்ளது.
மேலும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கடந்த 2024.01.16 ஆம் திகதி தங்களின் அரபுக் கல்லூரியில் ஒரு ஆசிரியர் மூலம் மாணவன் ஒருவன் பலமாக தாக்கப்பட்ட விடயம் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேற்படி விடயம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை விசாரணை செய்ய திணைக்களம் திட்டமிட்டுள்ளது. விசாரணை மேற்கொள்ளப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும். எனவே திணைக்களத்தின் விசாரணை முடிவுறும் வரை 2024.01.19ஆம் திகதி முதல் தற்காலிகமாக கல்லூரியை மூடி பாதுகாப்பாக மாணவர்களை பெற்றோர்கள் / பாதுகாவலர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரி அரபுக் கல்லூரி
கல்பொக்க, வெலிகமயில் அமைந்துள்ள மத்ரஸதுல் பாரி அரபுக் கல்லூரி 140 வருடகாலம் வரலாற்றினைக் கொண்டதாகும். இங்கு நாடெங்கிலுமிருந்து தற்போது 185 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இக் கல்லூரியில் 20 உஸ்தாத்மார்கள் (ஆசிரியர்கள்) கல்வி போதிக்கிறார்கள்.
இக்கல்லூரியின் அதிபராக அப்துல் ரஹ்மான் (மலாஹிரி) கடந்த 25 வருட காலமாக பணியாற்றி வருகிறார்.
அதிபர் அப்துல் ரஹ்மானை ‘விடிவெள்ளி’ தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் வினவியது. அவர் பின்வருமாறு பதில் வழங்கினார்.
“அடித்து காயங்களுக்குள்ளான மாணவர் ஹிப்ழு வகுப்பில் பயில்பவராவார். இம்மாணவர் தான் தாக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவர் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் தான் ஒவ்வொரு நாளும் ஆசிரியரிடம் பாடத்தை ஒப்புவிக்கவில்லை. நான்கு நாட்கள் பாடம் கொடுக்கவில்லை. இதற்குத் தண்டனையாகவே மாணவனை அடித்துள்ளார். இதனால் மாணவன் சிறிது காயங்களுக்குள்ளாகியிருக்கிறார்.
இச்சம்பவம் கடந்த 16ஆம் திகதி காலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளது. காலையில் ஆசிரியரிடம் அடிவாங்கிய மாணவர் அன்று நண்பகலே வீட்டுக்குப் போய்விட்டார். வீடு சென்ற மாணவனை அவரது சாச்சா முறையான ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார்.
அடுத்த நாள் 17ஆம் திகதி குறிப்பிட்ட மாணவர் கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு கல்வி நடவடிக்கைகளுக்காக கல்லூரியில் விடப்பட்டார். மாணவரின் மாமா முறையான ஒருவரும் உடதலவின்ன ஹக்கீமியா அரபுக்கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றி வருகிறார்.
கல்லூரிக்கு அழைத்து வரப்பட்ட மாணவர் கல்லூரியில் வரவேற்கப்பட்டார். வேறு ஒரு ஹஸரத்தை பாடம் கேட்க ஒதுக்கித் தருவதாகவும் அவரிடம் படிக்கும் படியும் நான் மாணவனிடம் கூறினேன். ஒரு நாள் கல்லூரியில் படித்தார். இதேவேளை மாணவனின் தாயார் அவரை கடந்த 17ஆம் திகதி சிகிச்சைக்காக டாக்டரிடம் அழைத்துச் சென்றார்.
இந்நிலையிலே மாணவரின் சாச்சா பதிவு செய்த வீடியோ அவரது நண்பர் ஒருவர் மூலம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. இதனையடுத்து கல்லூரியின் முகாமைத்துவ சபையை (Board) கூட்டினேன். நிர்வாகம் சம்பந்தப்பட்ட உஸ்தாதை (ஆசிரியரை) பதவியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்தது. அதன் படி ஆசிரியர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த ஆசிரியர் கல்லூரியில் கடந்த 26 வருடங்களாக சேவையில் இருந்தவர்.
மாணவரை ஆசிரியர் அடித்துக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை நடத்தினார்கள். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் களுத்துறை பிராந்திய அதிகாரிகள் இருவர் வருகை தந்து விசாரணை நடத்தினார்கள். மாணவரின் பெற்றோரும் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
கடந்த 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்பு சம்பந்தப்பட்ட மாணவன் வெலிகம வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு கடந்த சனிக்கிழமை சிகிச்சையின் பின்பு வைத்தியசாலையிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். மாணவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றே வைத்தியசாலை அறிக்கை தெரிவிக்கிறது.
மாணவன் ஆசிரியரினால் அடிக்கப்பட்ட சம்பவத்தை பெரிதுபடுத்தி அதன் மூலம் சுயலாபம் பெற ஒரு தரப்பினர் முயன்று வருகின்றனர். அந்த தரப்பினர் மாணவர் அவரது வீட்டில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக வெலிகம பொலிஸில் புகாரும் செய்துள்ளனர். அரபுக்கல்லூரிக்கும், பள்ளிவாசலுக்கும் நிர்வாக தெரிவு தொடர்பில் பிரச்சினை ஒன்று நிலவுகிறது. வக்பு ட்ரிபியுனில் வழக்கொன்றும் விசாரணையின் கீழ் உள்ளது. இதனுடன் தொடர்புள்ளவர்களே அரபுக் கல்லூரியை மூடிவிடுவதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்.
விசாரணைக்கு வருகை தந்த முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகளிடம் நாம் நிலைமையை விளக்கியுள்ளோம். சம்பந்தப்பட்ட ஆசிரியரை உடனடியாக பதவியிலிருந்தும் நீக்கியமையை எடுத்துக்கூறியுள்ளோம். காயங்களுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையிலிருந்து ஒரே நாளில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதையும் தெரிவித்துள்ளோம்.
185 மாணவர்கள் கல்லூரியில் பயில்கிறார்கள். எம்மால் உடனடியாக கல்லூரியை மூடிவிட முடியாது. திணைக்களத்தின் அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை மாணவரையும் அவரது தாயாரையும் அழைத்து விசாரித்தார்கள். கல்லூரி நிர்வாகம் சட்டத்தரணியூடாக மேலதிக நகர்வுகளை முன்னெடுத்துள்ளது என்றார்.
விவகாரம் சமாதானமாகத்
தீர்த்து வைக்கப்பட்டது
பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவனும், மாணவரினது தாயாரும் சம்பந்தப்பட்ட கல்லூரி ஆசிரியரும் கடந்த திங்கட்கிழமை காலை வெலிகம பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
வெலிகம பொலிஸார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் சம்பவத்தினையடுத்து கல்லூரி நிர்வாகத்தினால் ஏற்கனவே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் இரு தரப்பினரிடையே சமாதானத்தை நிலைநிறுத்தியதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீண்டும் பதவியில் இணைத்துக் கொள்ளப்படுவாரா? என கல்லூரி அதிபரிடம் வினவிய போது அதுதொடர்பில் பின்னர் ஆலோசித்து தீர்மானிக்கப்படும் என அவர் கூறினார்.
பணிப்பாளர் இஸட். ஏ.எம். பைஸல்
பாரி அரபுக் கல்லூரியின் அதிபர் மெளலவி அப்துல் ரஹ்மானின் தலைமையிலான குழுவினர் கடந்த திங்கட்கிழமை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இஸட்..ஏ.எம். பைஸலை திணைக்களத்தில் சந்தித்து கல்லூரி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடினர். இச்சந்திப்பு சுமுகமாக இடம்பெற்றது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் குறிப்பிட்ட கல்லூரியை கடந்த 19ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடிவிடுமாறு உத்தரவிட்டாலும் கல்லூரியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பயில்வதால் அவர்கள் போக்குவரத்து சிக்கல் காரணமாக தொடர்ந்தும் கல்லூரியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பில் பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைஸலை விடிவெள்ளி தொடர்பு கொண்டு வினவியது, ‘பாரி அரபுக்கல்லூரியில் தொடர்ந்தும் மாணவர்கள் இருப்பதாகவும் ஆனால் கல்லூரி இயங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இக்கல்லூரி பள்ளிவாசலுடன் தொடர்புபட்டு இயங்கி வருவதால் இப்பிரச்சினை தொடர்பில் வக்பு சபையுடனும் கலந்துரையாட வேண்டியுள்ளது. என்றாலும் கல்லூரியை தற்காலிகமாக மூடிவிட வேண்டும் என்ற எனது உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கிறது. அந்த உத்தரவு ரத்துச் செய்யப்பட வில்லை என்றார்.
அரபுக்கல்லூரிகளில் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றமை கவலையளிக்கிறது. பாடசாலைகளில் அல்லது அரபுக் கல்லூரிகளில் மாணவர்கள் எந்தக் காரணங்களுக்காகவும் தண்டிக்கப்படும் கலாசாரம் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.அரபுக்கல்லூரிகள் இது விடயத்தில் மிகக் கவனமாக செயற்பட வேண்டும்.- Vidivelli