எப்.அய்னா
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் நாளுக்கு நாள் வெளிப்படும் தகவல்கள், அதன் விசாரணைகள் தொடர்பில் பாரிய சந்தேகங்களை எழும்பி வருகின்றது. இந்த தாக்குதலின் சூத்திரதாரி யார் எனும் பாரிய கேள்வி நிலவும் நிலையில், தாக்குதல் இடம்பெறப்போகிறது என்ற முழுமையான தகவல்கள் கிடைத்தும் அதனை தடுக்காதது ஏன் என்ற மிகப் பெரிய கேள்வியும் விடையின்றியே இத்தனை வருடங்களாக உலா வருகின்றது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னணியில், 1000 சந்தேகங்கள் எழுப்பப்பட்டாலும், அதன் பின்னணியில் உள்ள அரசியல் சார்புடைய சந்தேகங்கள் மிக முக்கியமானது. செனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் ஊடாகவும் இது தொடர்பிலான சில விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டு சந்தேகங்களுக்கு வலுச் சேர்க்கப்பட்டிருந்தது.
அதன்படி, ‘அபூ ஹிந்த்’ எனும் ஒரு பெயர் தொடர்ச்சியாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விவகாரத்தில் பயன்படுத்தப்படும் நிலையில், இதுவரை அப்பெயருக்கு உரியவர் கண்டறியப்படவில்லை. எனினும் அந்த பெயருக்கு உரியவர் என இந்தியாவில் உள்ள உளவு முகவர் ஒருவரையும், முன்னாள் இராணுவ புலனாய்வு பணிப்பாளர் துவான் சுரேஷ் சலேயின் பெயரையும் சிலர் முன் வைத்தாலும் இதுவரை அவை உறுதி செய்யப்படவில்லை.
இவ்வாறான நிலையில், இந்த தாக்குதலின் ஆரம்பம் 2018 ஆம் ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு சிறிது காலத்துக்கு முன்னர் வரை நீண்டது என பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டி வந்திருந்தனர். இந்த தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள சில சாட்சியங்களும் அவற்றை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், அரச உளவுச் சேவையின் தற்போதைய பணிப்பாளர் துவான் சுரேஷ் சலே மற்றும் சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா ஆகியோர் வழங்கிய சாட்சியங்களின் பதிவு இலங்கை பாராளுமன்றத்தின் தகவல் அதிகாரி ஹங்ச அபேரத்னவினால் மருதானை CSR மையத்துக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வாக்கு மூலங்களை ஆராயும் போதே இந்த உண்மை வெளிப்படுகின்றது.
இலங்கைப் பாராளுமன்றத்தில் கடந்த 2023 செப்டம்பர் மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் மற்றும் செனல் 4 காணொளி தொடர்பில் நடந்த விவாதத்தின் இடையே, பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சாட்சி பதிவுகளை சபைப்படுத்தியிருந்தனர். இந்த தகவல்களை கோரி சமூக மற்றும் அமைதிக்கான மையத்தின் ஆய்வுக் குழு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக முன் வைத்த தகவல் கோரிக்கைக்கு அமைய இந்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் துவான் சுரேஷ் சலே இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பணிப்பாளராக பணியாற்றிக்கொண்டிருந்த காலம் முதல் இராணுவப் புலனாய்வுப் பிரிவிடம் சஹ்ரான் ஹாஸிம் தொடர்பிலான தகவல்கள் இருந்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் செயற்பட்ட புலனாய்வு அதிகாரிகள் சஹ்ரான் ஹாஸிம் தொடர்பில் தகவல்களை வழங்கியமை துவான் சுரேஷ் சலே 2020 ஜூன் 25 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு வழங்கிய சாட்சியத்தில் சிரேஷ்ட அரச சட்டவாதி சஞ்ஜீவ திஸாநாயக்க தொடுத்த கேள்விகள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த சாட்சியத்தின் 94 மற்றும் 95 ஆவது பக்கங்களில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெளஹீத் ஜமாஅத் குழுவொன்றுடன் அவர்கள் தொடர்புபட்டதாகவும், அவர்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அழைத்து கலந்துரையாடல் நடாத்தியுள்ளதாகவும் அவர் அவரது சாட்சியத்தில் 113 ஆவது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை விட JMI அமைப்புக்குள் தமது இராணுவ புலனாய்வுப் பிரிவின் முகவர் ஒருவரை அனுப்பி தகவல்களைப் பெற்றுக்கொண்டதாகவும் அது மிக இரகசியமான நடவடிக்கை எனவும் அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சஹ்ரானின் பாதுகாப்பு தொடர்பில் ஆர்வமாக செயற்பட்ட இந்தியாவில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ‘அபூ ஹிந்த்’ எனும் நபர் சஹ்ரானுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியிலிருந்து உரையாட ஆரம்பித்துள்ளதாக சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா ஆணைக் குழுவிடம் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு அவர் கடந்த 2020 ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி சாட்சியமளித்துள்ளார். 2017 இறுதிப் பகுதியிலிருந்து 2019 வரை ‘அபூ ஹிந்த்’ எனும் பெயரில் இருந்த நபர் சஹ்ரானுடன் தொடர்ச்சியாக தொடர்பாடலை முன்னெடுத்திருந்ததாக ஹாதியாவின் சாட்சியத்தின் 76 ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல ஏப்ரல் 3 ஆம் திகதி பாணந்துறை மற்றும் கட்டுவாபிட்டிய வீடுகளுக்கு இடையே பொருட்களை (குண்டு சார் பொருட்கள்) மாற்றும் நடவடிக்கை தொடர்பிலும் ஹாதியாவின் சாட்சியத்தில் 124 மற்றும் 125 ஆவது பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டியில் நடந்த ஆயுத பயிற்சியின் இடையே பொலிஸார் வந்து பரிசீலனை செய்தபோது சஹ்ரான் உள்ளிட்டவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததாகவும், சஹ்ரானின் பையை சோதனை செய்த போதும் பொலிசார் ஆயுதத்தை கண்டுபிடிக்கவில்லை என சஹ்ரான் தெரிவித்ததாகவும் ஹாதியா தனது சாட்சியத்தின் 150 ஆவது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சாய்ந்தமருது சம்பவத்தில், வீடு நெருப்பெடுத்தபோது வீட்டுக்கு வெளியே வந்து சஹ்ரானின் சகோதரர் சைனி தன்னை அழைத்ததாகவும், தான்செல்லவில்லை எனவும், சில நிமிடங்களில் சூட்டுச் சப்தங்கள் கேட்டதாகவும், அச்சத்தத்தின் பின்னர் சாராவின் குரலை ஒத்த குரல் ஒன்று கேட்டதாகவும், தான் பின்னால் திரும்பிப் பார்த்தபோது பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்ததாகவும், அவரது முகத்தில் இரத்தம் தோய்ந்து இருந்ததாகவும், உடை சற்று தீப்பற்றி இருந்ததாகவும் சஹ்ரானின் மனைவி தனது சாட்சியத்தின் 170 மற்றும் 171 ஆவது பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார். அந்த பெண்ணின் உருவ அமைப்பு சாராவை ஒத்தது என ஹாதியா குறிப்பிட்டுள்ளார்.
இதனைவிட அப்போது மேல் மாகாண வடக்கு பகுதிக்குப் பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபரும் தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபருமான தேசபந்து தென்னகோன் 2017 முதல் சஹ்ரானின் பெயரை கேள்விப்பட்டுள்ளதாகவும், 2017 இல் நாலக சில்வா நடாத்திய செயலமர்வொன்றில் தான் கலந்துகொண்டதாகவும், அதில் மத அடிப்படைவாதம் தொடர்பில் குறிப்பிடும் போது சஹ்ரானின் பெயரும் குறிப்பிடப்பட்டதாக தேசபந்து தென்னகோன் ஒப்புக்கொண்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முன்னர் கிடைத்த உளவுத் தகவல்கள், பொலிஸ் மா அதிபரால் கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பின்னர் மேல் மாகாணத்துக்கு பொறுப்பாக அப்போது இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், தான் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அது தொடர்பில் செயற்பட எழுத்து மூலம் ஆலோசனை வழங்கியதாகவும், அந்த ஆலோசனைகளை சரியாக பின்பற்றி இருந்தால் கட்டுவாபிட்டிய தேவாலயம் மீதான தாக்குதலை தடுத்திருக்க வாய்ப்பிருந்ததாக தான் ஏற்றுக்கொள்வதாகவும் தேசபந்து தென்னகோன் தனது சாட்சியத்தின் 78, 79 ஆம் பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட ஆவணங்களை தான் தனக்கு கீழிருந்த அதிகாரிகளுக்கு அனுப்பியதாகவும், ஏப்ரல் 18 ஆம் திகதி கடமையை முடித்துவிட்டு தான் விடுமுறையில் சென்றதாகவும், குண்டு வெடிக்கும் போது தான் மஹியங்கனை பகுதியில் இருந்ததாகவும் தென்னகோன் குறிப்பிட்டுள்ளார். கத்தோலிக்க தேவாலயங்கள் மீது தாக்குதல் நடாத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தமையால் கத்தோலிக்க, கிறிஸ்தவ மதகுருமாரை இது தொடர்பில் தெளிவுபடுத்தினீரா என நீதிபதிகள் தேசபந்து தென்னகோனிடம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அவ்வாறு எதுவும் செய்யவில்லை என அவர் பதிலளித்துள்ளார்.
விரைவில் கத்தோலிக்க தேவாலயங்கள் மீது தாக்குதல் நடாத்தப்படும் என தகவல் இருக்கையில், உயிர்த்த ஞாயிறு தினம் என்பது அண்மித்த விஷேட தினம் என்ற சாதாரண அறிவு இருக்கும் நிலையில், விடுமுறையில் செல்ல முன்னர் தமது பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பில் பதில் கடமைகளை செய்யும் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கினீரா என ஆணைக் குழு கேள்வி எழுப்பிய போது அவ்வாறு செய்யவில்லை என தேசபந்து தென்னகோன் பதிலளித்துள்ளார்.
இந்த அனைத்து சாட்சிகளையும் அவதானமாக ஆராயும்போது, சஹ்ரான் மட்டுமல்லாமல், கொழும்பை மையப்படுத்தி செயற்பட்ட ஜே.எம்.ஐ. தொடர்பிலும் புலனாய்வு பிரிவு நீண்டகாலமாக அறிந்திருந்தமை புலனாகிறது.
கிடைக்கப் பெற்றுள்ள சாட்சியங்களுக்கு அமைய, மிகவும் குறைந்தளவானோர் உறுப்பினர்களாக இருந்த ஜே.எம்.ஐ. அமைப்புக்குள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் முகவர் ஒருவர் உள் நுழைவிக்கப்பட்டிருந்த பின்னணியில், குண்டுத் தாக்குதல் தொடர்பிலான தகவல்களைப் பெற்று அதனை தடுக்க முடியாமல் போனமை மிகவும் ஆச்சரியமான விடயமாகும்.
பாதுகாப்பு அமைச்சுக்கு தெளஹீத் ஜமாஅத் பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடி, அவர்களின் நடமாட்டம் தொடர்பில் தொடர்ச்சியாக அவதானத்துடன் இருந்த புலனாய்வுப் பிரிவு குண்டுத் தாக்குதலை தடுக்காமல் இருந்தமையானது யாரின் அழுத்தத்தினால் நடந்தது, அதன் பின்னணியில் இருப்பது யார் எனும் சந்தேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
சஹ்ரானின் மனைவியின் சாட்சியத்துக்கு அமைய, கடந்த 2019 ஏப்ரல் 3 ஆம் திகதி பாணந்துைற வீடு மற்றும் கட்டுவாபிட்டிய வீட்டுக்கு இடையே பொருட்கள் பரிமாற்றம் நடந்துள்ளது. களனிகமவில் அப்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்துவினால் சட்டத்துக்கு முரணான உத்தரவொன்றுக்கு அமைய விடுவிக்கப்பட்டதாக இலங்கை பாராளுமன்றத்தில் குறிப்பிடப்பட்ட லொறி, அவ்வாறு விடுவிக்கப்பட்டதும் ஏப்ரல் 3 ஆம் திகதியே என கூறப்படுகின்றது. தேசபந்து தென்னகோன் அதிகார எல்லைக்குள் இருந்த கட்டுவாபிட்டிய வீடு மற்றும் அவரின் அதிகார எல்லைக்கு அப்பால் இருந்த பாணந்துறை வீட்டுக்கு இடையே பொருள் பரிமாற்றம் நடக்கும் போது, அவரது அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட களனிகம பொலிஸாருக்கு கதைத்து லொறி தொடர்பில் ஆலோசனை வழங்கியமை, ஏப்ரல் 19 முதல் சில தினங்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை எடுக்க ஏப்ரல் 3 ஆம் திகதியே விண்ணப்பம் செய்தமை ஆகிய விடயங்கள் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தொடர்பில் தவிர்க்க முடியாத சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. இந்த விடயங்களுக்கு இடையிலான தொடர்பு குறித்தும் முறையான விசாரணைகள் அவசியமாகும்.
பாத்திமா ஹாதியாவின் சாட்சிகளின் பிரகாரம், சஹ்ரானின் சகோதரர் சைனி மற்றும் சாரா ஆகியோர் சாய்ந்தமருது குண்டு வெடிப்பின் பின்னரும் உயிருடன் இருந்துள்ளனர். வெடிப்பின் பின்னர் சைனி தன்னை அழைத்ததாகவும் அதன் பின்னர் மீளவும் சூட்டுச் சப்தங்கள் கேட்டதாகவும் ஹாதியாவின் சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த இடத்திலிருந்து சைனியின் சடலம் கிடைத்த போதும் சாராவின் சடலம் கிடைக்கவில்லை. வீட்டுக்குள் நடந்த வெடிப்பின் பின்னர் சைனி உயிருடன் இருந்தமை, அதன் பின்னர் துப்பாக்கிச் சூடு நடந்தமை, உயிருடன் இருந்த சாரா காணாமல் போனமை ஆகிய சம்பவங்கள் ஊடாக, குண்டுத் தாக்குதல்தாரிகளின் மிலேச்சத்தனத்தை மிஞ்சிய சதி ஒன்று இருந்துள்ளமை புலனாகிறது. இவை தொடர்பில் இதுவரை முறையான விசாரணைகள் இடம்பெறவில்லை.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் ஏனைய சாட்சிகள் மற்றும் கோப்புகளை வெளிப்படுத்தாமல் இருப்பது, இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள சதி வெளிச்சத்துக்கு வரும் என்பதனாலா எனும் பாரிய சந்தேகம் இன்னும் வலுத்துக்கொண்டே செல்கிறது. – Vidivelli