காஸாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படும்போது அணிசேரா நாடுகளின் அமைப்பு அமைதி காக்கிறது
அமைதி காப்பதால் படுகொலைகளுக்கு இணக்கம் தெரிவிப்பது போலாகிவிடும் என ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு
பாலஸ்தீனர்கள் கடுமையான துயரங்களையும் பெரும் இழப்புக்களையும் சந்தித்துவருகின்றனர். இதுவரையிலும் அணிசேரா நாடுகளின் அமைப்பு அமைதிகாத்தது. காஸா எல்லைகள் அழிவடையும் வேளையில் நாம் எவ்வாறு அமைதி காப்பது? அந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவில்லை என்பதை போலவே அங்கு அதிகளவான அப்பாவி சிவில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமைதி காப்பதால் நாமும் அதற்கு இணக்கம் தெரிவிப்பதை போல் உள்ளது என அணிசேரா நாடுகளின் 19 ஆவது அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், டிஜிட்டல் பிரிவினை மற்றும் பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் வாயிலாக, அணிசேரா அமைப்பில் அங்கம் வகிக்கும் உலகின் அபிவிருத்தி அடைந்துவரும் மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற தன்மை உருவாகியுள்ளது என்றும் அதனால் சிறந்த உலகை உருவாக்க வலுவான மற்றும் ஒன்றிணைந்த அணிசேரா அமைப்பின் ஊடாக மேற்படி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை எட்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
உகண்டா -கம்பாலா நகரில் “உலக சுபீட்சத்துக்காக ஒன்றிணைந்த ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்திக்கொள்ளல்” என்ற தொனிப்பொருளின் கீழ் கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமான அணிசேரா அமைப்பின் 19 ஆவது அரச தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
உகண்டா குடியரசு ஜனாதிபதி யொவேரி முசேவேனியின் (Yoweri Museveni) தலைமையில் 120 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இந்த மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, “அணிசேரா நாடுகளின் 19 மாநாட்டிற்கு தலைமை ஏற்றுள்ளமைக்காக உகண்டா ஜனாதிபதி யொரேவி முசேவேனிக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். தென் துருவ நாடுகளுக்கிடையில் பொது தெரிவுகள் காணப்பட வேண்டிய தீர்மானமிக்க தருணத்தில் உகண்டா அதற்கான களத்தின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளமை காலோசிதமானதாகும்.
தொற்றுநோய் பரவல், கடன் சுமை, காலநிலை அனர்த்தங்கள், புதிய உலகளாவிய போட்டிகள் மற்றும் உலக நாடுகளும் தென் துருவமும் எதிர்கொண்ட பல்வேறு அழுத்தங்களின் பின்னர் நடத்தப்படும் முதலாவது அணிசேரா நாடுகளின் மாநாடு இதுவாகும்.
நாம் இங்கு சந்திக்கும் வேளையில் காஸா பகுதிகளிலும் அதற்கு அப்பாலான பகுதிகளிலும் மனிதாபிமான மோதல்கள் நீண்டு செல்கின்றன. மூன்று மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீன சிவில் மக்கள் கடுமையான துயரங்களையும் இழப்புக்களையும் சந்தித்துவருவதோடு, வலயத்தின் பாதுகாப்பு மற்றும் நிலத்தன்மை என்பனவும் கேள்விக்குறியாகியுள்ளன.
இதுவரையிலும் அணிசேரா நாடுகளின் அமைப்பு அமைதிகாத்தது. காஸா எல்லைகள் அழிவடையும் வேளையில் நாம் எவ்வாறு அமைதிகாப்பது? அந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவில்லை என்பதை போலவே அங்கு அதிகளவான அப்பாவி சிவில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமைதி காப்பதால் நாமும் அதற்கு இணக்கம் தெரிவிப்பதை போல் உள்ளது.
உகண்டாவின் தலைமையில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் 19 ஆவது மாநாட்டின் ஊடாக காஸா பகுதிகளின் பிரச்சினைகள் தொடர்பிலும் பாலஸ்தின மக்களின் சுய நிர்ணய உரிமை மற்றும் சுயாதீனமானதும், சுதந்திரமானதுமான உரிமைகளை பறிக்க முடியாது என்ற விடயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளமை வரவேற்புக்குரியது.
காஸா பகுதிகள் தொடர்பில் தென் ஆபிரிக்கா கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டையும் நாம் வரவேற்க வேண்டும். விரைவில் மனிதாபிமான போர் நிறுத்தத்தையும், பணயக் கைதிகளை விடுவிக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் என சர்வதேச சமூகம் வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேல் அல்லாத தனி இராச்சியத்துக்குள் இரு இராச்சியங்களுக்கு தீர்வை தேட முடியாது. பாலஸ்தீனம் இல்லாமல் எந்த தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாது.
ஐக்கிய நாடுகள் சபைக்குள் காணப்படும் யோசனைகள் மற்றும் இந்த மாநாட்டின் முன்மொழிவுகளுக்கு அமைய, மேற்குக் கரை, காஸா பகுதி மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகள் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். மேலும், காஸா பகுதியின் இன அமைப்பு மாறக்கூடாது. ஐந்து வருடங்களுக்குள் பாலஸ்தீன அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்
நாம் இப்போது பனிப்போரின் பின்னரான நிலைமைகளின் இறுதி நிலை மற்றும் மாற்றம் கண்டு வரும் பல்முனை உலகின் அணுகுமுறைகளை காண்கிறோம். புவிசார் அரசியல் முன்னணியில், முன்னைய பலவான்கள் மற்றும் பலவான்கள் என்ற அந்தஸ்த்தை தக்கவைக்கும் நோக்கில் செயற்படும் தரப்பினர்களுக்கு மத்தியில் மறைமுகமான மற்றும் வெளிப்படையான மோதல்கள் மீண்டும் வெடிப்பதையும் நாம் காண்கிறோம். ஐரோப்பாவின் அட்லாண்டிக் சமுத்திரத்தின் இராணுவக் கூட்டணி வலுப்பெற்றுள்ளது. ஆயுதக் கட்டுப்பாட்டு தொடர்பிலான கடந்த கால ஒப்பந்தங்கள் முறிந்துள்ளன.
இராணுவச் செலவு வரலாற்றில் முன்னர் இல்லாத அளவை எட்டியுள்ளது. மேலும், அணு ஆயுதங்கள் குறித்து மீண்டும் பாரிய அளவில் கொள்கை ரீதியிலான கலந்துரையாடல்கள் இடம்பெற வேண்டும். இந்து மற்றும் பசுபிக் சமுத்திரங்களின், நம்மைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட பிராந்தியத்தில் ஒரு புவிசார்-மூலோபாய போட்டி உருவாகி வருகிறது. மேலும், விண்வெளி மற்றும் சமுத்திரங்கள் மோதலுக்கு சாத்தியமான தளங்களாக மாறிவிட்டன.
அணிசேரா அமைப்பு உங்கள் தலைமையின் கீழ் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். மேலும், பல்முனை உலகில் தென் துருவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளின் மிகப்பெரிய கூட்டாக அணிசேரா நாடுகளின் அமைப்பை மாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நமது எதிர்காலம் நம் கையில் உள்ளது. அதை உருவாக்கும் அல்லது அழிக்கும் திறனும் நம்மிடமே உள்ளது. அதனை நாம் செய்வோம். அணிசேரா அமைப்பின் 19 ஆவது அரச தலைவர்கள் அமர்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக உகண்டா ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், நிமல் பியதிஸ்ஸ, குமாரசிறி ரத்நாயக்க, உதயகாந்த குணதிலக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.- Vidivelli