ஹூதிகள் மீதான தாக்குதல்களானது பிராந்தியத்தில் ஆபத்தை அதிகரிக்கும்
இராஜதந்திர நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்துகிறார் கட்டார் பிரதமர்
எம்.ஐ.அப்துல் நஸார்
யேமனின் ஹூதிகளுக்கு எதிரான அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராணுவத் தாக்குதல்கள் செங்கடலில் வர்த்தக கப்பல் பாதைகளுக்கு மட்டுமல்லாது பிராந்திய அமைதிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என கட்டார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்தெல்ரஹ்மான் அல்-தானி தெரிவித்தார்.
டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் உரையாற்றும்போது பேசிய அல்-தானி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அதிகரித்துவரும் பிராந்திய மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவத் தீர்மானங்களை விட இராஜதந்திர முயற்சிகளே அவசியம் என அவர் வலியுறுத்தினார். செங்கடலில் மோதல்களின் அதிகரிப்பு சர்வதேச வர்த்தகத்தை பாதிக்கும் என்பதால் இது ‘மிகவும் ஆபத்தானது’ .
கடந்த வாரம் வியாழக்கிழமையன்று, செங்கடலில் வர்த்தகக் கப்பல்கள் மீதான அண்மைய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், யேமனில் ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஈரான் ஆதரவு போராளிகளுக்கு எதிராக அமெரிக்காவும் பிரித்தானியாவும் தாக்குதல்களை நடத்தின.
செங்கடலில் அமெரிக்க நாசகாரக் கப்பலை நோக்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை ஏவி ஒரு நாள் முழுமையாக முடிவடைவதற்கு முன்னதாக, கடந்த திங்களன்று யேமன் கடற்பரப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏற்றிய அமெரிக்காவிற்கு சொந்தமான கொள்கலன் கப்பலை தாக்கியதன் மூலம் ஹூதிகள் பதிலடி கொடுத்தனர்.
கட்டாரின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சராகவும் பணியாற்றும் அல்-தானி, ஏனைய பிரச்சினைகளுக்கும் தோல்விகளுக்கும் அடிப்படையாகக் காணப்படும் காஸா பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்,
‘நாங்கள் அறிகுறிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம், உண்மையான பிரச்சினைக்கு சிகிச்சையளிக்கவில்லை (தீர்வுகள்) அவ்வாறாயின் அத்தகைய தீர்வுகள் தற்காலிகமானதாகவே இருக்கும்.’
காஸாவில் மோதல்களைக் கட்டுப்படுத்துவது ஏனைய பிரச்சினைகளின் அதிகரிப்ைப கட்டுப்படுத்தும் என கட்டார் நம்புகிறது. தற்போதைய பிராந்திய நிலைமை எல்லா இடங்களிலும் மோதல்நிலை அதிகரிப்பதற்கான காரணியாக உள்ளது.
பாலஸ்தீனில் ராஜதந்திர மற்றும் இரு நாடுகள் என்ற தீர்வு மட்டுமே முன்னோக்கி செல்லும் ஒரே வழி. பல ஆண்டுகளாக இஸ்ரேலிய படை அமைதிக்கான பாதையை நெருங்கவில்லை.
இரு நாடுகள் என்ற தீர்வுக்காக காலக்கெடுவொன்றினையும், மீண்டும் பழைய நிலைக்குச் செல்லாத மற்றும் கட்டாயமான ஒரு நிலைக்கு இஸ்ரேல் உடன்பட வேண்டும். இந்த நிலைப்பாடுதான் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளில் எதிர்கால ஸ்திரத்தன்மைக்கு முக்கியமாகும்.
‘பாலஸ்தீனப் பிரச்சினையை மூடி மறைத்து விடலாம் என நினைத்த சில அரசியல்வாதிகள் உள்ளனர், ஆனால் ஒக்டோபர் 7ஆம் திகதிக்குப் பின்னர் என்ன நடந்தது, பாலஸ்தீனப் பிரச்சினை என்பது பிராந்தியத்திற்கு மாத்திரமல்ல, முழு உலகத்திற்கும் ஒரு மையப் பிரச்சினையாகும் என்பதைக் காட்டுகிறது.
இஸ்ரேலில் ஆட்சிக்கு வரும் எந்தவொரு கட்சியும் தீர்வினை அடைவது என்பதை உறுதியான நிலைப்பாடாகக் கொண்டிருப்பதே எமக்குத் தேவை.
காஸாவை நிருவகிக்கும் ஹமாஸ் இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் வகிபாகத்தை தொடர வேண்டுமா இல்லையா என்பதை பாலஸ்தீன மக்களே தீர்மானிக்க வேண்டும்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் ஒரு சாத்தியமான, நிலையான இரு நாடு தீர்வு இல்லாமல், சர்வதேச சமூகம் காஸாவின் மறுசீரமைப்புக்கு நிதியளிக்க விரும்பாது.
லெபனான், சிரியா, ஈராக் மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் ஈரானுடன் இணைந்த குழுக்கள் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் ஆரம்பமானதில் இருந்து மத்திய கிழக்கின் ஏனைய பகுதிகளுக்கும் மோதல் பரவியுள்ளது.
அமெரிக்க மற்றும் பிரித்தானிய பதில் தாக்குதல்கள் மத்திய கிழக்கிலும் பிரித்தானியாவிலும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது, பல பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஏன் முன்னரேயே பாராளுமன்றத்தை கூட்டவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், ஹூதிகள் கப்பல்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தவுள்ளதாகத் தெரிவித்து வரும் நிலையில் தமது தாக்குதல்கள் ‘வெற்றிகரமானவை’ என தெரிவித்தார்.- Vidivelli