ஏ.ஆர்.ஏ.பரீல்
‘யெமன் ஹூதிகளுக்கு எதிராக போராட செங்கடலில் இலங்கை கடற்படைக் கப்பல் களமிறக்கப்படவுள்ளது.’’
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கூறிய இக் கருத்து பெரும் சர்ச்சைசைக் கிளப்பியுள்ளது.
ஜனாதிபதி இந்தத் தகவலை பகிரங்க நிகழ்வில் வெளியிடும் வரை இது தொடர்பான எந்த தகவலும் வெளியே கசியவிடப்பட்டிருக்கவில்லை. அந்தளவுக்கு இதில் இரகசியத்தன்மை பேணப்பட்டிருக்கிறது.
ஜனாதிபதி தனது இருப்பை தொடர்ந்தும் பலப்படுத்திக் கொள்வதற்கு உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பல நகர்வுகளை மேற்கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.
சர்வதேச நாடுகளின் பாதுகாப்புச் செயற்பாடுகளுக்கு ஆதரவாக செயற்படுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ‘ஷில்ப அபிமானி 2023’ விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். அவர் அங்கு உரையாற்றும் போதே குறிப்பிட்ட முக்கிய தகவலை வெளியிட்டார்.
‘‘உக்ரேனில் போர் நடைபெறுகிறது. காஸாவிலும் போர் தொடர்கிறது. இந்நிலைமை காரணமாக பொருட்களின் விலை அதிகரிக்கலாம். இதேவேளை செங்கடலில் ஹூதி குழுவினர் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதால் கப்பல் போக்குவரத்து செங்கடல் ஊடாக ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கப்பல்கள் செங்கடல் ஊடாகப் பயணிக்காமல் தென்னாபிரிக்காவின் ஊடாக சுற்றிவந்தால் அதன் காரணமாக பொருட்களின் விலை அதிகரிக்கும். எனவே ஹூதி நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு ஆதரவாக இலங்கை கடற்படையின் கப்பலை செங்கடலுக்கு அனுப்ப உடன்பட்டுள்ளோம்’’ என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
கடற்படையின் ஊடக பேச்சாளர்
ஹூதி கிளர்ச்சிக் குழுவினர் செங்கடலில் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை நிறுத்துவதற்காக இலங்கை கடற்படை செங்கடலுக்கு கடற்படை கப்பலொன்றினை அனுப்பி வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதையடுத்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் கண்காணிப்பின் கீழ் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான விஷேட நடவடிக்கைகளுக்கென கடற்படையிடம் சமுதுர, சாகர, விஜயபாகு, பராக்கிரமபாகு, சிதுரல, சயுரல, கஜபாகு ஆகிய விஷேட எட்டு கப்பல்கள் உள்ளன. இந்தக் கப்பல்கள் மீது ஹெலிகொப்டர்களை இறக்கும் வசதிகளும் உள்ளடங்கியுள்ளன என கடற்படையின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் கடற்படையின் கப்பலுக்கு தேவையான எரிபொருள் பெற்றுக்கொள்ளல், உணவு விநியோகம், யுத்த ஆயுதங்கள் பெற்றுக்கொள்ளல் என்பன தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளுக்கு உதவுவதே கடற்படை கப்பலின் இலக்காக இருக்குமெனவும் அவர் கூறினார்.
பிராந்தியத்தில் போர் அபாயம்
செங்கடல் வழியாகப் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் தற்போது அமெரிக்க போர்க் கப்பல்களையும் வணிகக் கப்பல்களையும் தாக்குவதற்கு ஆரம்பித்துள்ளதால் அப்பிராந்தியத்தில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் இவ்வருடம் ஜனவரி 4ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுமார் 25 தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
ஹூதி படையினர் அண்மையில் வணிக கப்பல் ஒன்றைத் தாக்கி கைப்பற்ற முற்பட்டபோது அவர்களது 4 படகுகள் மீது அமெரிக்க கடற்படையின் ஹெலிகொப்டர் ஒன்று தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 4 படகுகளில் 3 படகுகள் நிர்மூலமாகின. ஒரு படகு தப்பிச் சென்றது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் இருந்து சுயஸ் கால்வாய் ஊடாக இந்தியப் பெருங்கடல் நோக்கி வரும் கப்பல்கள் செங்கடலில் பயணித்து யேமனுக்கும், ஜிபுடிக்கும் இடையிலுள்ள குறுகலான பாப் அல் மண்டாப் நீரிணையைக் கடந்தே ஏடன் வளைகுடாவுக்குள் நுழைய வேண்டும். இதுபோன்றே இந்தியப் பெருங்கடலில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்குச் செல்லும் கப்பல்களும் ஏடன் வளைகுடாவில் இருந்து பாப் அல் மண்டாப் நீரிணை வழியாகவே செங்கடலுக்குள் பிரவேசித்து சுயஸ் கால்வாயை கடந்து செல்ல முடியும்.
யேமனுக்கும் ஜிபுட்டிக்கும் இடையில் அமைந்திருக்கின்ற குறுகலான பாப் அல் மண்டாப் நீரிணை தான் இப்போது செங்கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு ஆபத்தான இடமாக மாறியிருக்கிறது. குறுகிய நேரத்தில் ஹூதி படையினர் இந்த வழியாக செல்லும் கப்பல்களை அடையவோ அவற்றின் மீது தாக்குதல் நடத்தவோ முடியும்.
ஹூதி படையினருக்கு ஈரானின் ஆதரவு கிடைக்கிறது. இப்படையினரிடம் ஏவுகணைகள், வெடி பொருட்கள் ஏவக்கூடிய ஆளில்லா விமானங்கள், படகுகள், நவீன ஆயுதங்கள் இருக்கின்றன. காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கும் நிலையில் இஸ்ரேலுக்கு மாத்திரமன்றி அமெரிக்காவுக்கும் முழு உலகத்துக்கும் அழுத்தம் கொடுக்கவே ஹூதி படையினர் செங்கடலில் இத்தாக்குதலை ஆரம்பித்திருக்கிறனர்.
கிழக்கு, மேற்கு கப்பல் பயணங்களுக்கு செங்கடல் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகளாவிய கடல் வழி வர்த்தகத்தில் சுமார் 15 வீதம் செங்கடல் வழியாக இடம்பெறுகிறது. தானிய வர்த்தகத்தில் 8 வீதமும், எண்ணெய் வர்த்தகத்தில் 12 வீதமும் எரிவாயு வர்த்தகத்தில் 8 வீதமும் செங்கடல்வழியாகவே மேற்கொள்ளப்படுகிறது. செங்கடல் வழியான கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டால் தென்ஆபிரிக்காவைச் சுற்றியே கப்பல்கள் பயணிக்க வேண்டியிருக்கும். இதனால் மேற்குலகத்தின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். ஹூதிகளின் தாக்குதல்களையடுத்து தற்போது கப்பல் நிறுவனங்கள் கப்பல் பயணங்களை இடைநிறுத்தியுள்ளன. இதுவொரு உலகளாவிய நெருக்கடியாக மாறிக் கொண்டிருக்கிறது.
செங்கடல் வழியான கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் ஆபத்துள்ளதாக எச்சரித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஹூதி படையினரிடமிருந்து கப்பல்களைப் பாதுகாக்க இலங்கை கடற்படைக் கப்பல் ஒன்றினை அனுப்ப இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்காக ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் 250 மில்லியன் ரூபா செலவு ஏற்படும் என்றாலும் கடல் வழிப்பாதையை பாதுகாப்பது அவசியம் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
செங்கடலில் பயணிக்கும் கப்பல்களைப் பாதுகாக்க அமெரிக்கா ஏற்கனவே ஒரு கூட்டணியை உருவாக்கியிருக்கிறது. 20 நாடுகள் இந்த கூட்டணியில் இணைந்து கொள்வதற்கு இணங்கியிருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் பென்டகன் அறிவித்திருந்தது. என்றாலும் கடந்த 4ஆம் திகதி அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் ஹூதி படையினர் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்த 12 நாடுகளில் இலங்கை உள்ளடக்கியிருக்கிவில்லை.
ஜனாதிபதியின் திட்டத்திற்கு
சஜித் எதிர்ப்பு
ஹூதி படையினரின் தாக்குதல்களை முறியடிக்க 250 மில்லியன் ரூபா செலவிட்டு இலங்கை கடற்படை கப்பலை ஈடுபடுத்தும் ஜனாதிபதியின் திட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ஹூதி படையினரின் தாக்குதல்களால் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்பது உண்மை. ஆனால் எமது வங்குரோத்து நாடா செங்கடலுக்குச் சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்? உலகில் பணம் படைத்த எத்தனையோ நாடுகள் இருக்கின்றன. அமெரிக்காவினால் இந்தச் செயலை செய்ய முடியும். 250 மில்லியன் ரூபாவை எமது பழுதடைந்துள்ள கணினிகளை திருத்துவதற்கு பயன்படுத்தலாம் அல்லவா? எமது கடற்படையை செங்கடலுக்கு அனுப்புவது நகைப்புக்குரிய விடயமாகும்.
எமது வங்குரோத்து நிலைமை காரணமாக மாணவர்களுக்கு மதிய உணவு கொடுக்க முடியாதுள்ளது. மாணவர்கள் வகுப்பறைகளில் மயக்கமடைந்து வீழ்கிறார்கள். பொருட்களின் விலைகள் பெரிதும் உயர்ந்துள்ளன. இந்நிலையில் ஜனாதிபதி 250 மில்லியன் ரூபா செலவழித்து கடற்படை கப்பலை செங்கடலுக்கு அனுப்பவுள்ளார். இதனை நாம் எதிர்க்கிறோம் என்றார்.
பிரித்தானிய பொருளாதாரத்தைப் பாதிக்கும்
செங்கடலில் யெமனின் ஹூதி படையினர் நடத்தும் தாக்குதல்கள் விலைவாசி உயர்வு மூலம் பிரித்தானிய பொருளாதாரத்தைப் பாதிக்கலாம் என இங்கிலாந்தின் நிதி அமைச்சர் ஜெரமி ஹன்ட் கூறியுள்ளார்.
ஹூதிகளின் தாக்குதல்கள் பிரித்தானிய சந்தையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். நாங்கள் இவ்விவகாரத்தை மிகவும் கவனமாக கையாள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் காஸா மீது மேற்கொண்டு வரும் யுத்தத்தை நிறுத்துவதற்கு அழுத்தங்களைப் பிரயோகித்தும், அமெரிக்க படைகளுடனான மோதலில் பலியான தங்கள் போராளிகளுக்காக பழிவாங்கும் நோக்கத்துடனே ஹூதிகள் செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை இன்று எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்கள், மக்கள் மீதான வரிச்சுமை, விலைவாசி உயர்வு, மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு போன்றவற்றிலிருந்து மீள முடியாதுள்ளது. இவ்வாறான நிலையில் மில்லியன் கணக்கில் செலவிட்டு செங்கடல் பிராந்தியத்துக்கு இலங்கை கப்பலை அனுப்பி வைக்கப்படவேண்டுமா? ஹூதிகளுக்கு எதிராக நாம் போரிடத்தான் வேண்டுமா? என்ற நியாயமான விமர்சனம் மேலோங்கியிருக்கிறது.
சரக்கு கப்பல்களை பாதுகாக்கவே இலங்கை போர்க்கப்பல் – ரணில்
செங்கடல் ஊடாக இலங்கை வரும் சரக்கு கப்பல்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலினால் கொழும்பு துறைமுகம் உட்பட நாட்டின் அனைத்து துறைமுகங்களின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு இறக்குமதிப் பொருட்களின் விலை அதிகரித்துவிடும். எனவேதான் சரக்கு கப்பல்களைப் பாதுகாக்க கடற்படையின் போர்க்கப்பலை அனுப்புவதற்கு ஆலோசனை வழங்கினேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், செங்கடலில் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து சுமுகமாக இடம் பெறுவதை உறுதி செய்வதற்காகவே போர்க்கப்பலை அனுப்புகிறோம். மாறாக, இரு நாடுகளுக்கிடையிலான போரில் ஒரு தரப்புக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இலங்கை செங்கடலுக்கு போர்க்கப்பலை அனுப்பவில்லை. ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக செங்கடலில் இலங்கை கடற்படையின் போர்க்கப்பலும், சிறப்பு படையினரும் செயற்படுவார்கள் என்றார்.
செங்கடலுக்கு போர்க்கப்பலை அனுப்ப வேண்டாம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடற்படையினருடன் கூடிய போர்க்கப்பலொன்றை செங்கடலுக்கு அனுப்பி வைக்க மேற்கொண்டுள்ள தீர்மானத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்திய நிபுணர் ஜீ. வீரசிங்க அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை நீண்ட காலமாக அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. இந்த ஏற்பாடு அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையை மீறுவதாகும். அத்தோடு ஹூதி கிளர்ச்சியாளர்கள் இலங்கையையும் கடற்படையையும் இலக்காகக் கொள்வார்கள். மேலும் பிரதான அரபு நாடுகளின் ஆதரவினையும் இலங்கை இழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli