நாடளாவிய ரீதியில் 36 ஆயிரத்து 385 பட்டதாரி ஆசிரியர்களை விரைவில் நியமிக்க நடவடிக்கை
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சபையில் தெரிவிப்பு
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 36 ஆயிரத்து 385 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்துடன் 14,385 மாகாண மட்ட ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பிலும் மேலும் 21,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமிப்பது தொடர்பிலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணைகள் இந்த வாரத்தில் இடம்பெற்று அதற்கான தீர்ப்பு கிடைத்ததும் உடனடியாகவே அந்த நியமனங்களை வழங்குவது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ரோஹிணி குமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆசிரியர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதை ஏற்றுக்கொள்கின்றோம். ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளமை, விடுமுறையில் சென்றுள்ளமை மற்றும் ஆசிரியர்கள் பதவி விலகியுள்ளமை உள்ளிட்ட காரணங்களால் ஆசிரியர் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.
அந்த வகையில் அதிகளவு ஆசிரியர் வெற்றிடங்கள் மாகாண மட்ட பாடசாலைகளிலேயே காணப்படுகின்றன. மாகாண மட்ட பாடசாலைகளில் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ், சிங்கள, ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். 60 வயது நிறைவடைந்துள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் 6018பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.
அத்துடன் அமைச்சரவை தீர்மானத்தின்படி பதவியை இராஜினாமாச் செய்தமை, விடுமுறையில் சென்றுள்ளமை மற்றும் ஓய்வு பெற்றுள்ளமை காரணமாக மாகாண மட்டத்தில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் அனைத்து மாகாணங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு இவ்வாறு இணைத்துக்கொள்ளப்படுவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மேல் மாகாணத்திற்கு 5000 பட்டதாரி ஆசிரியர்களும் தென் மாகாணத்திற்கு 1028, மத்திய மாகாணத்திற்கு 1067, வடமத்திய மாகாணத்திற்கு 1408, வடமேல் மாகாணத்திற்கு 665, ஊவா மாகாணத்திற்கு 590, சப்ரகமுவ மாகாணத்திற்கு 877 என மொத்தமாக 10,635 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
அது தொடர்பில் அறிவிப்பு செய்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு பரீட்சை நடத்தப்பட்டு நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு நியமனம் வழங்குவதற்கு முற்படுகையில் நீதிமன்றத்தில் அதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் நேற்றைய தினம் இரண்டு வழக்குகள் தொடர்பில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது..
அந்த வகையில் 10 ஆயிரத்து 635 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதற்கு மேலதிகமாக விஞ்ஞானம், கணிதம், மொழி, சர்வதேச மொழி, தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்காக 5450 பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்தது. அவற்றில் 1700 பட்டதாரிகளை தேசிய பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை நிறைவு பெற்றதும் இந்த நியமனங்களை வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை 21,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக அது தடைப்பட்டது. அது தொடர்பான வழக்கு தீர்ப்பு விரைவில் கிடைத்ததும் அவர்களையும் ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.- Vidivelli