- சேனநாயக்க சமுத்திர வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன
- தாழ்நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன
ஏ.எல்.எம்.ஷினாஸ்
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் அடைமழை காரணமாக மாவட்டத்தின் தாழ்நில பிரதேசங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து வருகின்றன. சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் 105 அடிக்கு மேல் உயர்வடைந்ததால் 5 வான் கதவுகள் திறக்கப்பட்டதாக மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
சேனநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து அதன் கீழ் உள்ள கல்லோயா குடியேற்ற விவசாய கிராமங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து வருகிறது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். மாவட்டத்தின் தாழ்நில கரையோர பிரதேசங்களான அக்கரைப்பற்று, இறக்காமம், வரிப்பத்தான்சேனை, பொத்துவில், திருக்கோயில், ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, நிந்தவூர், காரைதீவு, கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, நாவிதன்வெளி போன்ற குடியிருப்பு பிரதேசங்கள் மற்றும் வயல் நிலங்களில் வெள்ளநீர் நிரம்பியுள்ளன.
அம்பாறை – காரைதீவை இணைக்கும் பிரதான வீதியில் மாவடிப்பள்ளியை அண்மித்த பிரதான வீதி மற்றும் அம்பாறை – சம்மாந்துறை பிரதான வீதியின் வளத்தாப்பிட்டி பிரதேசத்தை குறுக்கறுக்கும் பிரதான வீதி ஊடாக வெள்ளநீர் பாய்ந்து ஓடுவதனால் குறித்த வீதியுடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கல்முனை – நாவிதன்வெளியை இணைக்கும் பிரதான வீதியின் கிட்டங்கி பாலத்திற்கு மேலால் வெள்ளநீர் பாய்ந்தோடுவதனால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து தடைபட்டுள்ளதுடன், வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதேவேளை சொறிக்கல்முனை – சம்மாந்துறை பிரதான வீதி, நாவிதன்வெளி – வெல்லாவெளியை இணைக்கும் பிரதான பாதையிலும் வெள்ளநீர் பாய்ந்து ஓடுவதனால் மக்கள் தமது அன்றாட பணிகளை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மாவட்ட செயலாளர்:
அம்பாறை மாவட்டத்தின் சேனநாயக்க சமுத்திர நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் ஐந்து வான் கதவுகளை சமுத்திரத்தின் தாழ்நிலப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் திறந்துள்ளோம். இதனால் அம்பாறை, தமன அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, காரைதீவு போன்ற தாழ்நிலை பிரதேசத்தில் வாழும் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் இடத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு மாவட்ட செயலகத்தின் ஊடாக முன் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆறுகள் குளங்களில் மீன் பிடிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் அதே போன்று வெள்ளநீரில் விளையாடுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு சகல பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அனர்த்த மத்திய நிலையம்:
தற்போது அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக அனர்த்த ஆபத்திலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தாழ்நிலப் பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்வதுடன் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக இதுவரை 5848 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2749 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்துள்ளனர். 88 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் சம்மாந்துறை பிரதேசத்தில் கடந்த 31 ஆம் திகதி வீசிய மினிசூறாவளி மற்றும் கனமழை காரணமாக 4 நபர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்று தெரிவித்தார்
தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் காலநிலை மாற்றம் காணப்படுவதோடு மாலை வேைளகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சம்மாந்துறை அல்- அஸ்றக் மகா வித்தியாலயத்தில் பாரிய மரம் குடைசாய்ந்து விழுந்ததனால் கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
பொத்துவில் பிரதேசத்தில் அதிகூடிய 101 மில்லி மீட்டர் மழை (2) பதிவாகியுள்ளது. பிரதேசத்தின் பல்வேறு தாழ்நிலங்கள் ஊடாக வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளதால் முதலைகள், பாம்புகள் போன்றன ஆற்று நீர் ஊடாக பிரதேசங்களுக்குள் ஊடுருவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார்கள்.
சேனநாயக்க சமுத்திர வான் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து ரம்புக்கன நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அல்பிட்டிய, விபுல போன்ற பிரதேசங்களிலும் வெள்ளநீர் வழிந்தோடுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதேவேளை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்போடு காணப்படுவதனால் வள்ளங்கள், தோணிகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன கரையில் இருந்து நீண்ட தூரத்திற்கு அப்பால் பாதுகாப்பாக தரித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கரையோரத்தின் பல பிரதேசங்கள் கடல் அலைகளினால் காவு கொள்ளப்பட்டுள்ளது. சில பிரதேசங்களில் கட்டட இடிபாடுகள் நிகழ்ந்துள்ளதுடன் கரையோரத்தில் நின்ற தென்னை மரங்கள் கடலுக்குள் விழுந்துள்ளன.
கடலை நோக்கி பல்வேறு முகத்துவாரங்கள் ஊடாக வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதனால் கடற்கரை பிரதேசங்கள் எங்கும் பிளாஸ்டிக் போத்தல்கள், ஆற்றுவாழைகள் என இதர கழிவு பொருட்களால் கரையோரம் சேதமடைந்துள்ளன. அதிகளவிலான பாம்புகளின் நடமாட்டமும் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வெள்ளநீர் தேங்கி கிடப்பதால் டெங்கு உட்பட பல்வேறு நோய்களை பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனினும் பல பிரதேசங்களில் பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள் ஊடாக வெள்ளநீர் வழிந்தோடும் வடிகான்கள் துப்புரவு செய்யப்படும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.- Vidivelli