2023 ஆம் ஆண்டில் 63000 இலங்கையர்களுக்கு சவூதி அரேபியா வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது. இதற்கமைய 2023 இல் அதிகமான இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வருடாந்தம் சுமார் 2 இலட்சம் இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அண்மையில் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் தேடி வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்கள் 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 7 முதல் 8 பில்லியன் டொலர்களுக்கு மேல் பணம் அனுப்பியுள்ளதாக சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் பி.எம். அம்சா தெரிவித்துள்ளார். இதில் சுமார் 15 முதல் 20 வீதமான தொகை சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கையர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
விஷன் 2030 திட்டத்தின் கீழ் சவூதி அரேபியாவில் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு தொழிலாளர்களுக்கான கேள்வியும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli