வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்

0 5,901

முஸ்லிம் என்பவன் தான் ஒரு முஸ்லிம் என்பதனை தனது பண்பாடுகள், நற்குணங்கள் மூலம் சமூகத்திற்குத் தெரியப்படுத்த முயற்சிக்க வேண்டும், ஒருவரது பண்பாடுகளிலும் நற்குணங்களிலும் உள்ள குறைபாடுகள் அவரது வணக்க வழிபாடுகளிலும் குறைபாடுகள் உள்ளன என்பதனையே பிரதிபலிக்கின்றது. அந்தவகையில் இஸ்லாம் எமக்கு கற்றுத்தரும் ஈமானின் அடிப்படை பண்புகளில் ஒன்றான வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் என்ற விடயத்தில் மிக எச்சரிக்கையுடனும் மிகக கவனமாகவும் நாம் செயற்பட வேண்டும்.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்;

“விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் பூரணமாக நிறைவேற்றுங்கள்.” (அல்குர்அன் 5:1)

“நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையைப் பரிபூரணமாக    நிறைவேற்றுங்கள்.” (அல்குர்அன் 16:91)

வாக்குறுதிகளில் முதன்மையானது உன்னைத் தவிர வேறு எவரையும் வணங்க மாட்டோம் என்று நாம் அல்லாஹ்வுக்கு வழங்கியுள்ள வாக்குறுதியாகும். உடன்படிக்கைகளில் நாம் முதலாவது நிறைவேற்ற வேண்டியது உனது தூதருக்கு முழுமையாகக் கட்டுப்படுவோம் என்று அல்லாஹ்வுடன் செய்துள்ள உடன் படிக்கையாகும்.

“இறை நம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் இறைவனிடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்.” (அல்குர்ஆன் 33:23)

“இன்னும், அவர்கள் தங்கள் (வசம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களையும், வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்”. (அல்குர்ஆன் 23:8)

“இத்தகையோரே பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்”. (அல்குர்ஆன் 23:10,11)

முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), “முஆதே! அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், “அவர்கள் அவனையே வணங்குவதும் அவனுக்கு எதையும் இணைவைக்காமல் இருப்பதுமாகும். (அவ்வாறு அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், “அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமலிருப்பது தான்” என்று பதிலளித்தார்கள். (புஹாரி, முஸ்லிம்)

அல்லாஹ்வுக்கு நாம் கொடுத்த வாக்குறுதிகளில் நாம் எப்படி உண்மையாளர்களாக நடந்துகொள்ள வேண்டுமோ அவ்வாறே மனிதர்களாகிய நாம் பிற மனிதர்களோடு செய்துகொள்கின்ற ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், கொடுக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றும் விடயத்திலும் உண்மையாளர்களாகத் திகழ வேண்டும். அவை குறித்து மறுமையில் நிச்சயம் அல்லாஹ்விடம் நாம் விசாரிக்கப்படுவோம், பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மோசடி செய்தவர் எவ்வித வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வின் முன் சமர்ப்பித்தாலும் அதில் எந்த ஒன்றுக்கும் எவ்வித பெறுமானமும் அங்கு கிடையாது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

“உங்கள் வாக்குறுதியை நீங்கள் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால், (மறுமையில்) வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும்.” (அல்குர்அன் 17:34)

இயந்திரமயமான இன்றைய உலகில் மனிதன் பிற மனிதனுக்கு கொடுத்த, கொடுக்கின்ற வாக்குறுதிகள், ஒப்பந்தங்கள் எல்லாம் சாதாரண ஓர் அம்சமாகவே பார்க்கப்படுகின்றது, இன்று இவ்வாறு செய்து தருகிறேன் என்று சொல்லிவிட்டுச் செல்பவருக்கு நான்கு நாட்கள் கழித்து போன் செய்தால் அவரை அவரது கைபேசியில் கூட தொடர்புகொள்ள முடியாத அளவு இன்று பொய்யும் ஏமாற்றமும் வாக்குறுதிகளுக்கு மாறு செய்வதும் ஒப்பந்தங்களை மீறுவதும் மலிந்து காணப்படுகின்றன. இது எப்படிப்பட்ட குற்றம் என்பதனை பின்வரும் குர்ஆனிய வசனங்கள் எமக்கு தெளிவு படுத்துகின்றன.

“விசுவாசிகளே! நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்வேன் என்று அல்லது செய்ததாக) ஏன் கூறுகிறீர்கள்? நீங்கள் செய்யாத காரியங்களைச் (செய்வேன் என்று அல்லது) செய்ததாகக் கூறுவது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் பாவமாக இருக்கின்றது.” ( அல்குர்அன் 61:2,3)

வாக்களித்து மாறு செய்தல் என்பது நயவஞ்சகத்தனத்தின் அடையாளமாகும், நமது ஆடைகளோ வெளித் தோற்றங்களோ எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றாவிட்டால் மனிதர்களின் பார்வையில் நாம் கௌரவமானவர்களாக தெரிந்தாலும் அல்லாஹ்வின் பார்வையில் நாம் யார் என்பதனையே கீழுள்ள நபி மொழி எமக்கு விவரிக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும்.
1) பேசினால் பொய்யுரைப்பான்.
2) வாக்களித்தால் மாறு செய்வான்.
3) நம்பினால் மோசடி செய்வான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) ஸஹீஹ் முஸ்லிமின் ஓர் அறிவிப்பில்: “அவன் நோன்பிருந்தாலும் தொழுதாலும் அவன் தன்னை முஸ்லிம் எனக் கருதினாலும் சரியே” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நயவஞ்சகத்தனத்திலிருந்து நம்மை நாம் விடுவித்து, வாக்குறுதிகளை நிறைவேற்றுதல், ஒப்பந்தங்களை சரிவர பேணிக்கொள்ளுதல் போன்ற நபிமார்கள் வாழ்வில் பேணி வந்த அவர்கள் மக்களுக்கு போதித்த உயர்ந்த குணங்களைக் கொண்டு எம்மை நாம் அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூ சுஃப்யான் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள் : (ரோம மன்னர்) ஹிரக்ல் என்னைப்பார்த்து, ‘உம்மிடம், ‘அவர் (முஹம்மத் ஸல்) எதையெல்லாம் உங்களுக்கு கட்டளையிடுகிறார்?’ என்று கேட்டேன். (அதற்கு) நீர், ‘அவர் தொழும்படியும், வாய்மையையும் நல்லொழுக்கத்தையும் கைக்கொள்ளும்படியும், ஒப்பந்தத்தையும், வாக்குறுதியையும் நிறைவேற்றும்படியும், நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படியும் கட்டளையிடுகிறார்’ என்றுசொன்னீர். என அவர் கூறிவிட்டு இதுதான் ஓர் இறைத் தூதரின் பண்பாகும்” என்று கூறினார்.(ஸஹீஹுல் புஹாரி)

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

நபி(ஸல்) அவர்கள் வபாத்தான போது அபூபக்கர் (ரழி) அவர்களிடம் அலா இப்னு ஹழ்ரமீ (ரழி) அவர்களிடமிருந்து (சிறிது) செல்வம் வந்தது. அபூபக்கர் (ரழி), “யாருக்காவது நபியவர்கள் கடன் பாக்கி தரவேண்டியதிருந்தால் அல்லது நபியவர்களின் தரப்பிலிருந்து யாருக்காவது வாக்குறுதி ஏதும் தரப்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும் (அவரின் உரிமையை நாம் நிறைவேற்றுவோம்)” என்று கூறினார்கள். (இந்த அறிவிப்பைக் கேட்டு) நான், “எனக்கு இவ்வளவும், இவ்வளவும், இவ்வளவும் தருவதாக நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வாக்களித்திருந்தார்கள்” என்று கூறினேன். – “இப்படிக் கூறும் போது, தம் இரண்டு கைகளையும் ஜாபிர் (ரலி) அவர்கள் மூன்று முறை விரித்துக் காட்டினார்கள்” என்று அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு அலீ (ரஹ்) கூறினார்கள் , அபூபக்கர் (ரழி) என் கையில் (முதலில் பொற்காசுகள்) ஐநூறையும், பிறகு ஐநூறையும் பிறகு ஐநூறையும் எண்ணி வைத்தார்கள். (ஸஹீஹுல் புஹாரி)

நபிகளார் பெரும் ஒரு சமூகத்தின் தலைவராக வாழ்ந்து மரணித்தாலும் அவர் உயிரோடிருக்கின்ற வேளையில் கொடுத்த வாக்குறுதிகள்கூட அவரது மரணத்தோடு மரணித்துவிடக் கூடாது என்பதில் நபித்தோழர்கள் மிகவும் கவனமாக இருந்து அவர்களது மரணத்துக்குப் பின்னரும் அவர்களது வாக்குறுதிகளை நிறைவேற்றி முடித்தனர், இதுவே அவர்கள் உருவாக்கிய தோழர்களின் உயர்ந்த பண்பாகும்

ஹுதைஃபா பின் அல்யமான் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்; நான் பத்ருப் போரில் கலந்து கொள்ளாததற்குக் காரணம் யாதெனில், நானும் என் தந்தை ஹுசைல் (எனும் அல்யமான்) அவர்களும் (பத்ர் நோக்கிப்) புறப்பட்டோம். அப்போது குறைஷிக் காபிர்கள் எங்களைப் பிடித்துக் கொண்டனர். “நீங்கள் முஹம்ம(துடன் சேர்ந்து எங்களுக்கெதிராகப் போர் செய்வ)தை நாடித்தானே செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நாங்கள் “(இல்லை) மதீனாவை நோக்கியே செல்கிறோம்” என்று (பேச்சை மாற்றிச்) சொன்னோம். அப்போது குறைஷியர் “நாங்கள் மதீனாவுக்கே திரும்பிவிட வேண்டும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து (குறைஷியருக்கெதிராக) போரிடக் கூடாது” என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எங்களிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டனர். நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், “நீங்கள் இருவரும் (மதீனாவுக்கே) திரும்பிச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கு ஆதரவாக அவர்களது வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி கோருவோம்” என்று சொன்னார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்)

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் என்பதற்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்கள் உத்தம நபிகளாரும் அவர்கள் உருவாக்கிய அருமைத் தோழர்களுமே என்பதனையே மேலுள்ள செய்தி எமக்கு அறியப்படுத்துகின்றது, அல்லாஹ்வின் தூதரை கொள்கை கோட்பாடுகள், வணக்க வழிபாடுகளில் அச்சொட்டாக பின்பற்றும் நாம் அவர்களை அவர்களது உயர்ந்த நற்குணங்களிலும் பண்பாடுகளிலும் முழுமையாக பின்பற்றாத வரை உண்மையாக நாம் அவரை நேசிக்கவில்லை சரிவர அவரை பின்பற்றவுமில்லை என்பதுவே அர்த்தமாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.