அலவி மௌலானா சனசமூக நிலையத்தை ஆக்கிரமித்து அதன் முன் புத்தர் சிலை வைப்பு
சட்டவிரோதமான செயல் குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணிலுக்கு முஜிபுர் ரஹ்மான் கடிதம்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
மருதானை ஆர்னோல்ட் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சரும் மேல்மாகாண ஆளுநருமான அலவி மெளலானா நினைவு சனசமூக நிலையத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் புத்தர் சிலையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு மாநகர சபை சுதுவெல்ல வட்டார ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரான கித்சிறி ராஜபக்ஷ பலவந்தமாக அலவி மெளலானா சனசமூக நிலையத்துக்கு முன்னால் புத்தர் சிலையை நிர்மாணித்து வருவதாக இப்பகுதி மக்கள் கொழும்பு மாநகர சபைக்கு முறைப்பாடு செய்துள்ளனர். ஐக்கிய சுதந்திர முன்னணியின் முன்னாள் தொழில் அமைச்சர் அலவி மெளலானா நினைவாக அவர் வாழ்ந்த சுதுவெல்ல பகுதியில் குறிப்பிட்ட சனசமூக நிலையம் நிர்மாணிக்கப்பட்டது.
மருதானை ஆர்னோல்ட் மாவத்தையில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்களாவர். இங்கு புத்தர் சிலை நிறுவப்படுவது இன நல்லிணக்கத்துக்கு பாதகமாக அமையும் எனக் கூறப்படுகிறது.
இவ்விவகாரம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். அவர் ஜனாதிபதிக்கு கடிதம ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்.
கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது சுதுவெல்ல மாநகர சபை வட்டாரத்தில் அமைந்துள்ள அலவி மெளலானா சனசமூக நிலையம் உங்களது அமைப்பாளரால் சட்டவிரோதமாக பலாத்காரமாக கையகப்படுத்தப்பட்டு நிர்மாணம் நடைபெறுகிறது.
இப்பகுதியில் வாழும் குறைந்த வருமானம் பெறுபவர்களின் வரி நிதியில் இந்த சனசமூக நிலையம் நிர்மாணிக்கப்பட்டு அலவி மெளலானாவின் பெயர் பொறிக்கப்பட்டது.
மக்களின் பயன்பாட்டில் இருந்த இந்த நிலையம் சட்டவிரோத நிர்மாணத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் உட்பட அதிகாரிகளுக்கு முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.உங்கள் அதிகாரத்தை சம்பந்தப்பட்ட அமைப்பாளர் உபயோகித்து சட்டவிரோத நிர்மாணத்தை நிறுத்துவதிலிருந்தும் தவிர்ந்திருக்கிறார்.
எனவே உடனடியாக இந்த சட்டவிரோத நிர்மாணத்தை நிறுத்தி குறைந்த வருமானம் பெறும் மக்களின் பாவனைக்கு சனசமூக நிலையத்தை வழங்க ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தின் பிரதி எதிர்க்கட்சித் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. – Vidivelli