எழுத்து- காலித் ரிஸ்வான்
அரபு மொழி யானது மனிதகுல நாகரிகம், அறிவு மற்றும் கலாச்சார வளர்ச்சியின் அடிக்கற்களில் ஒன்றாகும். 400மில்லியனுக்கும் அதிகமான மக்களாலும், உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகவும் அரபு மொழியானது காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ஆம் திகதி, அரபு மொழியின் முக்கியத்துவம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில், உலக அரபு மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் உலக அரபு மொழி தினமானது ‘அரபு மொழி: கவிதை மற்றும் கலைகளின் மொழி’ என்ற கருப்பொருள் தாங்கி கொண்டாடப்படவுள்ளது. 1973ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அரபு மொழியை அவ்வமைப்பின் ஆறாவது அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரித்த திகதியான டிசம்பர் 18ம் திகதியே அரபு மொழி தினமாக யுனெஸ்கோவால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அரபு மொழியானது கட்டிடக்கலை, கவிதை, தத்துவம், அரபு எழுத்தணி மற்றும் இசை என பலதரப்பட்ட துறைகளையும் கட்டி ஆண்டுள்ளதோடு ஒவ்வொரு துறைகளிலும் பாரிய வரலாற்று மாற்றங்களைத் தோற்றுவித்தும் உள்ளது. அறிவியல் துறைகளும் இம்மாற்றங்களுக்கு விதிவிலக்கல்ல. மிகவும் முக்கியமாக அரபு மொழியானது இந்திய, சீனா, ஆபிரிக்கா வரையிலான பட்டுப் பாதையில் அரேபியரின் பாரம்பரிய கலாச்சாரப் பரிமாற்றத்திற்கான ஊடகமாக காணப்பட்டது.
அரபு மொழியானது, வரலாறு, கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு தவிர்க்கமுடியாத இடத்தை வகிக்கிறது. இம் மூத்த மொழியின் வரலாறானது அரேபிய தீபகற்பத்தின் தோற்றம் வரை நீள்கிறது. அதன் தோற்றம் முதல், பரிணாம வளர்ச்சியடைந்து உலகின் பல பிராந்தியங்களும் பரவி, வணிகம், அறிவியல், இலக்கியம் மற்றும் இஸ்லாத்தின் மொழியாக மாறியதோடு புனித அல்-குர்ஆனின் நிலையான பாதுகாப்பிற்கும் பரவலுக்கும் மகத்தான பங்களித்தது.
டிசம்பர் 18ஆம் திகதியை உலக அரபு மொழி தினமாக நிறுவப்பட வேண்டும் என்பது அரபு மொழி மற்றும் அரேபிய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய நாடுகளால் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, இது அரபு மொழியை உத்தியோகபூர்வ அல்லது முதன்மை மொழியாகக் கொண்ட 22உறுப்பு நாடுகளைக் கொண்ட பிராந்திய அமைப்பான ‘அரபு லீக்’ இனால் முன்னெடுக்கப்பட்ட முயற்சியே ஆகும். சவூதி அரேபியா, எகிப்து, ஜோர்டான் மற்றும் மொராக்கோ போன்ற நாடுகளின் முயற்சிகள், அரபு மொழிக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைப்பதற்கும் மற்றும் அரபு தினத்தை பிரகடனம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தன.
கலை, கணிதம், மருத்துவம், வானியல் மற்றும் தத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் அரபுலகு உச்சம் தொட வழி சமைத்த அரபு மொழியானது இஸ்லாமிய ஆட்சியின் பொற்காலத்தின் போது ‘அறிவின் மொழி’ என்று வர்ணிக்கப்பட்டது. இந்த சகாப்தத்தில் வாழ்ந்த அரேபிய அறிஞர்கள் அரபு மொழியிலான புத்தகங்களை எழுதியும் அத்தோடு பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய நூல்களை அரபு மொழியில் மொழிபெயர்த்தும் அந்த அறிவு மற்றும் கலைகளை பாதுகாத்து உலகம் பூராகவும் விரிவடையச் செய்தனர், இதுபின்னர் ஐரோப்பாவிற்குப் பரவி உலக மறுமலர்ச்சியையே உருவாக்கியது.
உலக அரபு மொழி தினம் கொண்டாடப்படுவதானது அரபு மொழியின் செழுமையையும் அதன் கலாச்சார, வரலாற்று முக்கியத்துவத்தையும் உலகளவில் அங்கீகாரம் பெறச் செய்யவும் அதன் பெருமைகளை கொண்டாடவும் ஒரு வாய்ப்பாகும். அரபு மொழியின் அழகு, பன்முகத்தன்மை மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கில் கருத்தரங்குகள், கலாச்சார கண்காட்சிகள், கவிதை வாசிப்புகள் மற்றும் கல்வி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் உலகளவில் இந்நாளில் நடைபெறுகின்றன. மேலும் அரபு மொழி பேசும் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளையும் அவர்களது பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஒரு நாளாகவும் இந்நாள் காணப்படுகிறது.
மேலும், அரபு மொழியானது பல நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழியாக காணப்படுவதோடு, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா முழுவதும் இராஜதந்திர உறவுகள் மற்றும் பொருளாதார கூட்டாண்மைகளை வளர்த்து ஊக்குவிக்கின்ற மொழியாக காணப்படுகிறது. ஊடகங்களில் அரபு மொழியின் பரவலானது உலகளாவிய உரையாடல்களில் அதன் தாக்கத்தை அதிகரிக்கிறது.
பல்வேறு கலாச்சாரங்களை இணைக்கும் மற்றும் இஸ்லாமிய உலகில் ஒரு முக்கிய பங்கை வகிக்கும்அரபு மொழியானது தொடர்பாடலுக்கு மட்டுமல்லாமல், தலைமுறை தலைமுறையாக கருத்துக்கள், விழுமியங்கள் மற்றும் மரபுகளை பாதுகாக்கும் மற்றும் பரப்பும் மிக முக்கிய சாதனமாக உள்ளது.
அரபு மொழியின் நீடித்த மரபு மற்றும் இன்றைய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில் அதன் தொடர்ச்சியான முக்கியத்துவம் அரபு மொழியின் உயர்வுக்கு ஒரு சான்றாக நிற்கிறது.
உலக அரபு தினத்தை முன்னிட்டு பல நாடுகளிலும் கொண்டாட்டங்கள் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தூதுவராலயங்களாலும், அரபுக் கலாசாலைகளாலும் மன்றும் அரபு சார் நிறுவனங்களாலும் இந்நிகழ்வுகள் பல வடிவங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்படுகின்றன. அந்த வகையில் இலங்கையிலும் சவூதி அரேபிய தூதுவராலயத்தால், டிசம்பர் 18 திங்கட் கிழமையன்று கொழும்பில் கோலாகலமான கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட இருக்கின்றன. சவூதியின் இலங்கைக்கான தூதுவர் கௌரவ காலித் ஹமூத் அல் கஹ்தானி தலமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளதோடு இலங்கையின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.