இலங்கையில் விவாக பதிவு செய்த தம்பதி வெளிநாட்டில் விவாகரத்து பெற்றால் அது இந்நாட்டிலும் செல்லுபடியாகும்
மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இலங்கையில் விவாகப்பதிவு செய்து கொண்டுள்ள வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தம்பதிகள் தாம் வாழும் நாட்டில் விவாகரத்துக்கு விண்ணப்பித்து விவாகரத்து பெற்றுக் கொண்டால் அவ்விவாகரத்து இலங்கையின் சட்டப்படி செல்லுபடியாகும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வகையில் வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்றில் விவாகரத்து பெறும் தம்பதிகள் இலங்கையிலுள்ள மாட்ட நீதிமன்றுக்கு திரும்பி வந்து விவாகரத்துக்கான நீதிமன்றின் ஒப்புதலை பெற வேண்டுமெனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் வாழும் இலங்கையர் ஒருவர் அந்நாட்டின் நீதிமன்றத்தினால் பெறப்பட்ட தனது விவாகரத்தை ஏற்றுக் கொள்ளுமாறு பதிவாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையின் பின்பே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்பை வழங்கியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.
இதேவேளை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு முஸலிம் விவாக விவாகரத்து சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் விவாக பதிவுகளுக்கும் செல்லுபடியாகுமா என காதிநீதிபதிகள் போரத்தை தொடர்பு கொண்டு வினவிய போது, இது தொடர்பில் காதிகள் சபை சட்ட மாஅதிபர் திணைக்களத்தை தொடர்பு கொண்டு தெளிவுகள் பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் சட்டமா அதிபரே தீர்மானிக்க வேண்டுமெனவும் காதி நீதிபதிகள் போரத்தின் உபதலைவர் இப்ஹாம் யெஹ்யா தெரிவித்தார்.
காதிநீதிபதிகள் சட்டமா அதிபரின் தீர்மானத்தை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.- VIdivelli