ஏ.ஆர்.ஏ.பரீல்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான நான்கு நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக இரண்டு நாட்கள் அதாவது செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் – பலஸ்தீன் விவகாரத்துக்கு மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. வெள்ளை மாளிகை தற்காலிக போர் நிறுத்தம் இரண்டு நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளமையை உறுதி செய்துள்ளது.
ஹமாஸ் இயக்கம் கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல்களை மேற்கொண்டது. இத் தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 240 பேர் பணயக் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர்.
இதனையடுத்து ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் யுத்தம் மூண்டது. 49 நாட்களுக்குப் பின்பு இரு தரப்புக்குமிடையில் தற்காலிக போர் நிறுத்தம் நான்கு நாட்களுக்கு அமுலுக்கு வந்தது. இரு தரப்பினரும் இரு தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். கத்தார் இரு தரப்பினருக்கும் இடையில் மத்தியஸ்தம் வகித்து இந்த ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது.
ஹமாஸ் இயக்கம் பணயக் கைதிகளாக கைது செய்யப்பட்ட 240 பேரில் 50 கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். இஸ்ரேல் ஏற்கனவே சிறைகளில் அடைத்துள்ள பலஸ்தீன கைதிகளில் 150 பேரை விடுதலை செய்ய வேண்டும். நிவாரண உதவிகளை எடுத்துச் செல்லும் 200 வாகனங்களை தினமும் காஸாவிற்குள் அனுமதிக்க வேண்டும். காஸாவின் தென் பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதலை முற்றாக நிறுத்த வேண்டும். வட காஸாவில் பகல் நேரங்களில் இஸ்ரேலினால் வான் வழித்தாக்குதல் மேற்கொள்ளப்படக்கூடாது எனும் நிபந்தனைகளே ஒப்பந்தத்தில் உள்ளடங்கியிருந்தன.
கடந்த அக்டோபர் மாத இறுதியில் இந்த தற்காலிக போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும் இஸ்ரேல் மேற்கொண்ட பாரிய தரை வழித்தாக்குதல்கள், ஷிபா வைத்தியசாலை மீதான தாக்குதல்கள் மற்றும் வைத்தியசாலை ஆக்கிரமிக்கப்பட்டமை காரணமக இப்பேச்சுவார்த்தை பின்னடைவைச் சந்தித்தது.
ஹமாஸினால் சிறைப்பிடிக்கப்பட்ட பணயக் கைதிகள் அனைவரையும் எப்படியாவது மீட்டே தீருவோம். யுத்த நிறுத்தத்துக்கு இணங்க மாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் சூளுரைத்து வந்தார்.
இறுதியில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தனது நிலையிலிருந்தும் இறங்கி வந்தார். கத்தாரின் மத்தியஸ்தத்தின் கீழ் அவர் இணக்கப்பட்டுக்கு வந்தார்.
தற்காலிக போர் நிறுத்தத்தின் இறுதி நாளான திங்கட்கிழமை இரவு ஹமாஸ் 11 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்தது. இவர்களில் மூன்று வயதான இரட்டை சிறுமிகளும் உள்ளடங்குவர். இதன் அடிப்படையில் ஒப்பந்தத்தின் படி 50 இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இஸ்ரேல் தனது சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 33 பலஸ்தீன கைதிகளை விடுதலை செய்துள்ளது. இவர்களில் 30 சிறுவர்களும் 3 பெண்களுமாவர்.
செவ்வாய் மற்றும் புதன் கிழமை தற்காலிக போர் நிறுத்தத்தில் ஹமாஸ் 20 இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவித்துள்ளனர் என அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபை பேச்சாளர் ஜோன்ன கிர்பி தெரிவித்துள்ளார்.
தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வருவதற்கு முன்பு யுத்தத்தில் சுமார் 14850 பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவ் எண்ணிக்கையில் பெரும்பாலானோர் குழந்தைகளும் பெண்களுமாவர். சுமார் ஆறாயிரம் பேரளவில் கட்டிட இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
காஸா மீதான தரை வழித்தாக்குதலின் போது கொல்லப்பட்ட தனது இராணுவத்தினரின் எண்ணிக்கை மற்றும் விபரங்களை இஸ்ரேல் முழுமையாக வெளியிடவில்லை. ஏராளமான இராணுவ வாகனங்களையும் இஸ்ரேல் இழந்துள்ளது.
ஹமாஸினால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேல் மக்களின் உறவினர்களின் அழுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள், இஸ்ரேலிய பிரதமருக்கு எதிரான கோஷங்களே இஸ்ரேலிய பிரதமரை தற்காலிக போர் நிறுத்தத்துக்கு அடிபணிய வைத்தது என்று கூறப்படுகிறது.
இதேவேளை கடந்த சில தினங்களாக காஸாவில் கடும் மழை பெய்து வருவதன் காரணமாக மக்கள் பல அசெளகரியங்களை எதிர் கொண்டுள்ளனர். அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் வான் வழித்தாக்குதல்களினால் வீடுகளை இழந்துள்ள மக்கள் தற்காலிக கூடாரங்களில் குளிரைத் தாங்கக் கூடிய ஆடைகள் இன்று அவதிப்படுகின்றனர் என பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
பலஸ்தீனர்கள் குளிர் தாங்க முடியாது தங்களது சிதைந்த வீடுகளுக்குச் சென்று இடிபாடுகளுக்கிடையில் உடைகள் மற்றும் போர்வைகளைத் தேடுவதைக் காணக்கூடியதாக இருப்பதாக பி.பி.சி. செய்தியாளர் தெரிவித்துள்ளார்்.
கத்தார் வெளிவிவகார அமைச்சு
மனிதாபிமான அடிப்படையில் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனுக்குமிடையிலான தற்காலிக போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பணயக் கைதிகள் மற்றும் இஸ்ரேல் சிறைகளிலுள்ள பலஸ்தீன கைதிகளின் விடுதலை தொடர்பில் கத்தார் மத்தியஸ்தம் வகித்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கத்தார் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஜீட் அல் அன்சாரி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பு தற்காலிக போர் நிறுத்த நீடிப்பில் 20 இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுதலை செய்வதாக உறுதியளிப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் தற்காலிக போர் நிறுத்தம் 2 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குப் பின்னரும் போர் நிறுத்த கால எல்லை நீடிக்கப்படுமா? என ஊடகங்கள் அவரிடம் வினவிய போது நீடிக்கப்படலாம் என நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் இது இலகுவான காரியமல்ல என அவர் பதிலளித்தார்.
போர் முடிவுக்கு வரவில்லை
இது தற்காலிக போர் நிறுத்தமே தவிர போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதேவேளை இஸ்ரேல் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கும் வரை நாங்களும் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிப்போம் என ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியா கூறியுள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேல் ஹமாஸிடமிருக்கும் தனது பணயக் கைதிகளை மீட்டுக் கொண்ட பின்பு தாக்குதலைத் தொடர்வதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. -Vidivelli