ஏ.ஆர்.எ.பரீல்
இஸ்ரேல் -பலஸ்தீன் யுத்தம் பெரும் எண்ணிக்கையிலான அப்பாவி மக்களைப் பலியெடுத்து வருகிறது. அத்தோடு யுத்த நிலைமை மிக மோசமான கட்டத்தை அடைந்து வருகிறது. இதனால் இஸ்ரேல் காஸா பிராந்தியத்தின் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல் பற்றிய சர்வதேச நிலைப்பாடு பாரிய பிளவுகளுக்குள்ளாகியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 07 ஆம் திகதி இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்பு ஆரம்பத்தில் பெரும் எண்ணிக்கையிலான நாடுகள் இஸ்ரேலுக்கே ஆதரவளித்தன. என்றாலும் தற்போது இஸ்ரேல் காஸா மீது மேற்கொண்டு வரும் வான்வழித்தாக்குதல்கள் மற்றும் ஹமாஸ் இயக்கத்தையும் காஸா பிராந்தியத்தையும் முழுமையாக அழிக்கும் வகையில் செயற்படும் விதத்தை அநேக நாடுகள் விமர்சித்து வருகின்றன. அத்தோடு யுத்த நிலைமையை கருத்திற் கொண்டு தமது முன்னைய நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டுள்ளமையை அறிய முடிகிறது.
பெரும்பாலான நாடுகள் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதிலேயே கரிசனை கொண்டுள்ளன.
இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கிடையில் உடனடியாக நீண்ட கால மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஒன்றினை கோரி கடந்த ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டது.
ஜோர்தானினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 121 நாடுகள் வாக்களித்தன. 14 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இதேவேளை 44 நாடுகள் வாக்களிப்பதில் இருந்தும் தவிர்ந்திருந்தன.
இந்த ஐ.நா.சபையின் யுத்த நிறுத்த பிரேரணையை இஸ்ரேல் பிரதமர் மறுத்தார். தற்போது யுத்தநிறுத்தத்தை ஏற்றுக் கொண்டால் அது ஹமாஸ் அமைப்புக்கு பயந்ததாக அமைந்துவிடும் என வாதிட்டார்.
அன்றிலிருந்து சில நாடுகள் இஸ்ரேல் தொடர்பில் தங்களது விமர்சனங்களை அதிகரித்துள்ளன. மேலும் சில நாடுகள் இஸ்ரேலில் இருந்து தமது தூதுவர்களை மீண்டும் அழைத்துக் கொண்டுள்ளன. அல்லது இஸ்ரேலுடனான தமது இராஜதந்திர உறவுகளை நிறுத்திக் கொண்டுள்ளன. யுத்த நிறுத்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்த அமெரிக்கா கூட தமது நிலைப்பாட்டைத் தளர்த்திக் கொண்டது. அமெரிக்க ஜனாதிபதி பைடன் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்குலக நாடுகள்
யுத்தத்தின் ஆரம்பத்தில் இருந்து பெரும்பாலான மேற்குலக நாடுகள் பகிரங்கமாக இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கின. ஹமாஸ் தாக்குதலின் பின்பு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தமது முதலாவது அறிக்கையில் அமெரிக்கா இஸ்ரேலின் பக்கம் இருக்கும் என உறுதி செய்திருந்தார். இஸ்ரேல் தங்களது நாட்டு மக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையானவைகள் இருக்க வேண்டும் என்பதை தாம் கவனித்துக் கொள்வதாகவும் கூறியிருந்தார்.
என்றாலும் கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒருவர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், யுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்படல் வேண்டும் என பதிலளித்துள்ளார்.
மறுதினம், மனிதாபிமான யுத்த நிறுத்தம் தொடர்பில் இஸ்ரேல் மீது அழுத்தம் பிரயோகிப்பதற்காகவும், காஸாவில் பொதுமக்கள் மீது பாதிப்புகள் ஏற்படுவதைக் குறைப்பதற்காகவும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தனி பிலின்கன் இரண்டாவது தடவையாகவும் டெல்அவிவுக்குச் சென்றார். எந்தவொரு யுத்த நிறுத்தமும் தற்காலிகமாக ஏதோவொரு பிரதேசத்துக்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். எனினும் முழுமையான யுத்த நிறுத்தம் தொடர்பில் அரபு நாடுகள் உட்பட ஏனைய நாடுகள் முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது.
எனினும் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் பல இலட்சக் கணக்கானோர் பங்குபற்றிய பாரிய பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் ஒன்று கடந்த வாரம் நடைபெற்றது. அதுமாத்திரமன்றி தினமும் அங்கு மக்கள் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. யுஎஸ்எயிட் அமைப்பில் பணிபுரியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கூட யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தியும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை கண்டித்தும் கடிதம் எழுதியுள்ளனர்.
கனடா மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்கள் தங்களது ஆரம்ப நிலைப்பாட்டிலிருந்தும் சிறிது விலகியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் இவர்கள் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது என்று கூறி இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். என்றாலும் ஐ.நாடுகள் சபையில் வாக்களிக்கும் போது இவ்விரு நாடுகளும் வாக்களிப்பதிலிருந்தும் விலகியிருந்தன.
யுத்தத்தை நிறுத்தக் கோரி கடந்த வாரங்களில் லண்டன் எங்கும் பலஸ்தீன ஆதரவாளர்கள் நடைபவனியில் ஈடுபட்டார்கள்.
ஐரோப்பிய ஒன்றியம் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தும் ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலை கடுமையாக எதிர்த்தாலும் யுத்தநிறுத்தம் தொடர்பில் வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் தனது பாதுகாப்பினை திட்டமிடுவதற்கு உரிமை இருக்கிறது என்றும் இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்த ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கு வாக்களிப்பதிலிருந்தும் தவிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன.
இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உரிமையிருக்கிறது. இஸ்ரேலின் உரிமையை ஆதரிக்கிறோம் என ஆரம்பத்தில் தெரிவித்திருந்த பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மெக்ரோன் சிவில் மரணங்கள் அதிகரித்து வருகின்றமையை அடுத்து தனது ஆரம்ப நிலைப்பாட்டிலிருந்தும் சிறிது மாறிக்கொண்டுள்ளார்.
காஸா தொடர்பில் ஹமாஸ் மற்றும் பொது மக்கள் இடையே உள்ள வேறுபாடுகளை இனங்கண்டு கொள்ள வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகள்
மத்திய கிழக்கின் பெரும்பாலான நாடுகள் ஐ. நாடுகள் சபையின் பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களித்தன. அத்தோடு பல நாடுகள் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
உடன்படிக்கையொன்றின் ஊடாக இஸ்ரேலுடன் உறவை பேணிவந்த ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஆரம்பத்தில் ஹமாஸின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன. என்றாலும் இரு வாரங்களுக்கு முன்பு பஹ்ரைன் தனது தூதுவரை இஸ்ரேலிலிருந்து மீள அழைத்துக் கொண்டதுடன் பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் நிலை கொண்டிருந்த இஸ்ரேல் தூதுவரை நாட்டிலிருந்தும் வெளியேற்றியது. ஜோர்தானும் இஸ்ரேலில் இருந்த தனது தூதுவரை மீள அழைத்துக் கொண்டது.
சவூதி அரேபியாவும் தாக்குதலை உடனடியாக நிறுத்திக் கொள்ளும் படி இஸ்ரேலைக் கோரியுள்ளது.
மேலும் ஐக்கிய அரபு இராச்சியம், ஜோர்தான், பஹ்ரைன், சவூதி அரேபியா, ஓமான், கட்டார், குவைத், எகிப்து மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் காஸாவில் இஸ்ரேல் பொது மக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்துகின்றமையையும், சர்வதேச சட்டம் மீறப்படுகின்றமையையும் எதிர்த்து கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஒன்றிணைந்த அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளன.
தற்பாதுகாப்புக்கான உரிமை ஊடாக சட்டத்தை மீறுவதும், பலஸ்தீன மக்களின் உரிமைகளை மதியாமையையும் நியாயப்படுத்த முடியாதென குறிப்பிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஈரானின் ஆன்மிக தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமைனி இஸ்ரேலுடனான பொருளாதார தொடர்புகளை நிறுத்திக் கொள்ளும் படியும் இஸ்ரேலுக்கு எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்தும் படியும் முஸ்லிம் நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதன் பின்பு கொமைனி மற்றும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஆகிய இருவரும் ஹமாஸ் அமைப்பினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அத்தோடு இத்தாக்குதலுக்கும் ஈரானுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த யுத்தம் தொடர்பில் ஆரம்பத்தில் நடுநிலை வகிப்பதற்கு முயற்சித்த துருக்கி ஜனாதிபதி அர்துகான் ஒக்டோபர் 28 ஆம் திகதி இஸ்தான்பூலில் நடைபெற்ற பலஸ்தீன் ஆதரவுப் பேரணியொன்றில் உரையாற்றிய போது இஸ்ரேலை யுத்த குற்றவாளியென பிரகடனப்படுத்துவதற்கான திட்டத்தை தாம் வகுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
பலஸ்தீனர்களின் பூமியைப் பாதுகாப்பதற்காக போராடும் விடுதலை இயக்கம் எனவும் ஹமாஸ் அமைப்பை அர்துகான் வர்ணித்தார். துருக்கி ஐ.நா.வின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா.வின் யுத்தநிறுத்த பிரேரணைக்கு வாக்களிப்பதிலிருந்தும் தவிர்ந்திருந்த ஒரேயொரு மத்திய கிழக்கு நாடு ஈராக் ஆகும். என்றாலும் தொழில்நுட்ப கோளாறே இதற்குக் காரணம் எனத்தெரிவித்து பின்பு பிரேரணைக்கு ஆதரவாக தனது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டது.
மத்தியகிழக்கில் இஸ்ரேலைத் தவிர எந்தவோர் நாடும் பிரேரணையை எதிர்த்து வாக்களிக்கவில்லை.
ரஷ்யா
ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல்கள் மேற்கொண்டதையடுத்து சில தினங்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எதுவித கருத்தும் வெளியிடவில்லை. அவரது முதல் கருத்து, மத்திய கிழக்கு தொடர்பில் அமெரிக்காவின் கொள்கை தோல்வியடைந்துள்ளது என்பதாக அமைந்திருந்தது.
ஐ.நாவின் மனிதாபிமானமான யுத்த நிறுத்த பிரேரணைக்கு ரஷ்யா ஆதரவாக வாக்களித்தது.
ஆசியா
ஐ.நா.சபையில் முன்வைக்கப்பட்ட யுத்த நிறுத்த பிரேரணைக்கு ஆசிய வலயத்தில் அனைத்து நாடுகளும் ஆதரவாக வாக்களித்தன. காஸாவில் பொதுமக்களைத் தண்டிப்பதை உடன் நிறுத்துமாறு சீன அரசு இஸ்ரேலை கோரியுள்ளது.
இந்தியா ஐ.நா.சபையின் பிரேரணையில் வாக்களிப்பதை தவிர்ந்து கொண்டது. எனினும் இஸ்ரேலின் சட்விரோதக் குடியேற்றத்தை நிறுத்த வேண்டும் என கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்தது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசு பதவியேற்றதும் இந்திய- இஸ்ரேல் உறவு விரைவாக பலமடைந்தது. அக்டோபர் 07 ஆம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலையடுத்து நரேந்திர மோடி, இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய மக்கள் நிரந்தரமாக இஸ்ரேலுடனே இருப்பார்கள். இந்தியா பயங்கரவாதத்தை முழுமையாகக் கண்டிக்கிறது. என்று கருத்து வெளியிட்டிருந்தார்.
இஸ்ரேலுடன் எவ்வித இராஜதந்திர உறவுகளையும் பேணாத பாகிஸ்தான், இரத்தம் சிந்துவது மற்றும் மனித உயிரிழப்புகள் தவிர்க்கப்பட வேண்டும் என ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது. பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி தற்போதைய சூழலில் உடனடி யுத்த நிறுத்தத்தைக் கோருகிறோம் என கோரிக்கை விடுத்திருந்தார். கடந்த 1ஆம் திகதி காஸாவில் ஜபாலியா அகதிமுகாம் மீது குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து பாகிஸ்தான் இஸ்ரேல் மீதான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்திக் கொண்டது. பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மிலேச்சத்தனமான தாக்குதல் இது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்கா
55 நாடுகளின் உறுப்புரிமையைக் கொண்ட ஆபிரிக்கா சங்கம் பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
பலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகள் குறிப்பாக பலஸ்தீனத்தை சுயாதீனமான, சுதந்திரமான நாடு என்பதை மறுக்கின்றமையே இஸ்ரேல்- பலஸ்தீன தொடரான முரண்பாடுகளுக்கும் காரணம் என ஆபிரிக்க சங்கம் தெரிவித்துள்ளது.
சோமாலியா பிரதமர் ஹம்ஸா ஆப்தி பாரே ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக கருதவில்லை எனவும் அவ்வமைப்புக்கு பூரண ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
டியுனீசியா ஆரம்பத்திலிருந்து பலஸ்தீன மக்களுக்கு நிபந்தனைகளற்ற பூரண ஆதரவைத் தெரிவித்து வந்தாலும் ஐ.நா.சபையின் பிரேரணைக்கு வாக்களிப்பதிலிருந்தும் விலகியிருந்தது. வாக்களிப்பிலிருந்தும் விலகியிருந்த ஏனைய ஆபிரிக்க நாடுகள் கமரூன், எதியோப்பியா, தென் சூடான் மற்றும் சம்பியா என்பனவாகும்.
ஒக்டோபர் 27 ஆம் திகதி ஐ.நா வில் முன்வைக்கப்பட்ட பிரேரணையை எந்தவொரு ஆபிரிக்க நாடும் நிராகரிக்கவில்லை.
லத்தீன் அமெரிக்கா
பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகள் ஐ.நாவின் பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களித்தன. காஸாவுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதும் இஸ்ரேல் மீதான உறவினைத் துண்டித்துக் கொண்ட முதலாவது லத்தீன் அமெரிக்கா நாடு பொலிவியாவாகும்.
காஸா மீதான கொடூரத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொலம்பியா மற்றும் சிலி ஆகிய நாடுகள் தங்களது நாட்டின் தூதுவர்களை இஸ்ரேலிலிருந்தும் மீள அழைத்துக் கொண்டன.
பிரேஸில் ஜனாதிபதி இஸ்ரேல் பொதுமக்கள் மீது ஹமாஸ் இயக்கம் மேற்கொண்ட தாக்குதல்களை கண்டித்ததுடன் அனைத்து பணயக் கைதிகளையும் ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறியிருந்தார். ஆனால் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ளார்.
ஐ.நாவின் பிரேரணைக்கு எதிராக வாக்களித்த தெற்கு அல்லது மத்திய அமெரிக்க நாடுகள் பரகுவே மற்றும் கெளத்தமாலா ஆகும்.- Vidivelli