ஹமாஸ் அமைப்பின் ஆரம்பம் எங்கிருந்து தொடங்குகிறது?
யூ.கே. றமீஸ் எம்.ஏ
(சமூகவியல்)
பலஸதீன் வரலாறு நெடுக ஆக்கிரமிப்பாளர்களால் சூறையாடப்பட்ட புனித பூமியாகும். அதன் அண்மைய வரலாறு கூட அத்தகையதுதான். அதனை ஆக்கிரமிப்பு யூதர்கள் கபளீகரம் செய்து எழுபத்தி ஐந்து வருடங்களாகிவிட்டன. அதன் விடுதலைக்காக பலர் பாடுபட்டார்கள். குறிப்பாக இடதுசாரிகள், பதாஹ் இயக்கம் போன்றவை மிக முக்கியமானவை ஆகும். பின்னர் அவர்களால் கைவிடப்பட்ட பலஸ்தீன விவகாரம் “ஹமாஸ்” அமைப்பினரால் முன்னெடுக்கப்படுகின்றது. ஹமாஸ் அமைப்பும் ஒரு இஸ்ரேலிய தயாரிப்புத்தான் என்ற கருத்துக்களும் மெலிதாக முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாகவே இக்கட்டுரை பேசுகின்றது. இங்கு கீழ்வரும் விடயங்கள் குறித்து நாம் சிந்திப்பது பொருத்தமானது.
1. இஸ்லாமிய அமைப்புகளுடன் முரண்படக்கூடியவர்கள் வரலாறு நெடுக இருந்து வந்துள்ளார்கள். நபியவர்களைக்கூட குற்றம் சுமத்தினார்கள். இது ஆச்சரியமான விடயமொன்று அல்ல. விமர்சனங்களுக்கு உட்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
2.ஆனால் இந்தக் குற்றச்சாட்டு; மிகவும் பழையது. ஹமாஸ் அமைப்பு 1987 களில் ஆரம்பிக்கப்பட்டது. அது முதல் ஹமாஸுக்கு எதிராக இத்தகைய குற்றச்சாடடுக்களை பலரும் முன்வைக்கிறார்கள். குறிப்பாக பலஸ்தீன இடதுசாரிகளும் வேறு பலரும் குற்றம் சுமத்துகின்றனர்.
ஹமாஸுக்கான மக்கள் ஆதரவு பெருகும்போதும் தமது மக்கள் செல்வாக்கில் வீழ்ச்சிகள் ஏற்படும்போதும்தான் இக்குற்றச்சாடடுகள் அதிகமாக முன்வைக்கப்பட்டன. ஹமாஸ் தமது போக்கைவிட வித்தியாசமான இஸ்லாமிய போக்கைக் கடைப்பிடிக்கும்போதும் பலஸ்தீன் விடுதலை இயக்கத்தின் சமாதான பேச்சுவார்த்தைகளை நிராகரித்த போதும் இவ்வகையான போலிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
3. 1967 களில் பலஸ்தீனிடமிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் கைப்பற்றிய பகுதிகளில் சமூக சேவைகளை செய்வதற்கும் பள்ளிவாசல்களை உருவாக்குவதற்கும் சியோனிச நாடு அனுமதித்தது. இதனை ஹமாஸுக்கு உதவியதாக கருத முடியுமா?
இது யூத பிரித்தாளும் கொள்கையின் ஒரு தந்திரமாகும். இந்த அனுமதி ஹமாஸுக்கு மாத்திரமல்ல இடதுசாரி, தேசியவாத சக்திகளுக்கும் பதாஹ்வுக்கும் கூட வழங்கப்பட்டது. இக்காலத்தில் இஸ்லாம் சார்புள்ளவர்கள் மாத்திரமல்ல பலரும் பல நிறுவனங்களை உருவாக்கினார்கள். இஸ்லாமியவாதிகளும் சந்தர்ப்பத்தை நழுவ விடவில்லை. இஸ்லாத்தால் போசிக்கப்பட்ட அக்ஸாவின் பெறுமதியை உணர்ந்து அதனை பாதுகாக்கக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க இந்த சந்தர்ப்பத்தை அவர்களும் பயன்படுத்திக் கொண்டார்கள். இது தவறான ஒரு விடயமாகுமா?
4. இக்குற்றச்சாட்டின்படி ஹமாஸ் அமைப்பு ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் உளவாளிகளாக அல்லது தகவல் வழங்குனர்களாக இருந்திருக்க வேண்டும.; இன்று அவர்களுடன் மோதுவதில், அரபு இஸ்லாமிய சக்திகளை இணைப்பதில் ஹமாஸ் முதன்நிலையில் உள்ளது. இதனை ஒருபோதும் உளவாளிகள் செய்யமாட்டார்கள். உளவாளிகளாக இருந்திருந்தால் அவர்களது தனிப்பட்ட சொந்த நலன்களுக்காக பணியாற்றியிருப்பார்கள். பல விடயங்களை விட்டுக்கொடுத்திருப்பார்கள். பலஸ்தீன் விடயத்தில் விட்டுக்கொடுக்க ஹமாஸ் தொடர்ந்தும் மறுக்கிறது.
5. இடதுசாரிகளும் பதாஹ் அமைப்பும் ஹமாஸுடன் போட்டி போட்டவர்கள். அவர்களுக்கான மக்களாதரவு குறைந்த போது இவ்வாறான குற்றச்சாடடுக்களை முன்வைத்தார்கள்.
பலஸ்தீனை ஆக்கிரமித்த சியோனிசத்துக்கு உதவுகின்றவர்கள் அவர்களுக்காக பலஸ்தீன பிரச்சினையை விட்டுக்கொடுப்பார்கள். அவர்களோடு சமாதானம் பேசுவார்கள், அவர்களோடு போராட விரும்பமாட்டார்கள். ஹமாஸும் இப்படியான ஒன்றா?
இருநாட்டுக் கொள்கைக்காக பலஸ்தீனை விட்டுக்கொடுத்தவர்கள் யார்? அக்ஸா தொடர்பான எவ்விதமான விடயங்களும் உள்ளடக்கப்படாமல் அதனை கைவிட்டது யார்?
பலஸ்தீனின் சிறியதொரு பகுதியை குறைந்தபட்ச அதிகாரங்களுடன் ஏற்றுக்கொள்ள சம்மதித்தவர்கள் யார்?
ஒஸ்லோ உடன்படிக்கையை செய்தவர்கள் யார்?
பலஸ்தீனர்களை மேற்குக் கரையுடனும் காஸாவுடனும் சுருக்கியது யார்? சியோனிச சக்திகளுடன் இணைந்துகொண்டு பலஸ்தீனர்களை காட்டிக்கொடுத்தது யார்?
யார் ஆக்கிரமிப்பாளர்களான சியோனிசத்துக்கு நெருக்கமானவர்கள்?
யார் அவர்களுடன் ஒத்துழைப்பவர்கள்? யார் அவர்களுக்கு சேவை செய்கிறார்கள்? இவை சாதாரணமான கேள்விகள் அல்ல. இவர்கள்தான் காஸா முற்றுகைக்கு துணைநின்றார்கள். சிறுவர்கள், பெண்கள் கொல்லப்படக் காரணமாயினர். வீடுகள் தரைமட்டமாக்கப்படுவதற்கு ஒத்துழைத்தார்கள். ஏற்றுக்கொள்ளவே முடியாத விடயங்களை நிர்ப்பந்திக்க முயற்சித்தனர். அது நிறைவேறாதபோது இவை அத்தனையையும் செய்தனர். இன்றும்கூட மேற்குக் கரையில் இதுதான் நடைபெறுகிறது.
ஹமாஸ் பலஸ்தீனுக்கு விசுவாசமாக இருக்கிறது. அதனை நேசிக்கிறது. அதனை விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் விடாப்பிடியாக இருக்கிறது. அதற்காக மக்களாதரவை திரட்சியாக பெற முனைகிறது. அரபு இஸ்லாமிய சக்திகளை இணைக்கிறது.
இந்தக்குற்றச்சாட்டு பொய்யானது என்பதை விளங்க இவையே போதுமானது. ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் பலர் தமது உயிர்களையும் தமது குடும்பத்தவர்களையும் அர்ப்பணித்துள்ளனர். சிறைகளில் பலர் பல வருடங்களாக தொடர்ந்து இருக்கிறார்கள். ஹமாஸின் பல தலைவர்களை அதன் ஆரம்ப காலம் முதலே ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் உளவு நிறுவனங்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தேடித்தேடி கொலை செய்திருக்கின்றது. ஹமாஸின் ஸ்தாபகர் அஹ்மத் யாசின் கூட தனது சக்கரநாற்காலியில் அதிகாலையில் சுபஹ் தொழுதுவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய வேளையில் இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம். மேலும் பலர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சிறைகளில் கைதிகளாக உள்ளனர். அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களின் நலன்களுக்காக செயல்படுகின்றவர்களாக இருந்திருந்தால் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே முயன்றிருப்பார்கள்.
மொஸாத் போன்ற உளவு நிறுவனங்களும் ஆக்கிரமிப்பு இஸ்ரேலும் போலியான கருத்துக்களை உண்மை போன்று உருவாக்குவதில் வல்லவர்கள். “மக்களற்ற நாட்டில் நாடற்றவர்களுக்கு ஒரு தேசம்” என்ற கருத்துருவாக்கமும் இப்படியான ஒன்றுதான்.
பலஸ்தீனில் மக்கள் இருக்கவில்.ைல, எமக்கு நாடு இருக்கவில்லை. இப்படியான ஒரு இடத்தில்தான் நாம் எமக்கான நாட்டை உருவாக்கியுள்ளோம் என்பது போன்ற கருத்து இங்கு தோன்றுகிறது. மஃமதிய்யா வைத்தியசாலையை ஹமாஸ் தாக்கியது என்பதும் இப்படியானதுதான். “ஹமாஸின் ஆரம்ப காலத்தில் நாம் அதற்கு உதவினோம்” என்பதும் அப்படியானதுதான்.
ஹமாஸை இஸ்ரேல் உருவாக்கியது என்பது அறிவுபூர்வமான ஒரு கருத்து அன்று. யதார்த்தமாக நோக்கினால் உண்மை மிகவும் வெளிப்படையானது. இப்படியான ஒரு வாதத்தை முன்வைப்பது ஆச்சரியமானது. ஏனெனில் யாரும் சொந்தப் பணத்தில் சூனியம் வைத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதுவே வெளிப்படையானது.- Vidivelli