புத்தளம் – உள்ளூர் – இடம்பெயர்ந்தோர் உறவு – நினைவலைகள் சில…

0 259

இஸட்.ஏ. ஸன்ஹிர்
முன்னாள் உதவிக் கல்விப் பணிப்­பாளர்,
புத்­தளம் வலயக் கல்வி அலு­வ­லகம்

இலங்­கையின் வட­மா­கா­ணத்தின் ஐந்து மாவட்­டங்­களை சேர்ந்த, பதி­னை­யா­யிரம் குடு ம்பங்­களை உள்­ள­டக்­கிய, சுமார் 75,000 முஸ்­லிம்கள் 1990 ஒக்­டோபர் காலப்­ப­கு­தியில் அவர்­களின் வாழ்­வி­டங்­களில் இருந்து பல­வந்­த­மாக  வெளி­யற்­றப்­பட்­டனர். அவர்­களில் பெரும்­பா­லானோர் புத்­தளம் மண்ணில் தஞ்சம் புகுந்­தனர். முப்­பத்தி மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் இடம்­பெற்ற இந்த நிகழ்வும் அத­னுடன் தொடர்­பு­பட்ட பல சம்­ப­வங்­களும் இன்றும் நீங்கா நினை­வு­க­ளா­யுள்­ளன. அவர்கள் ஆயுத முனையில் வெளி­யேற்­றப்­பட்ட மாதம் “கறுப்பு ஒக்­டோபர்” எனவும் இறுதி வாரம், “தேசிய துக்க வாரம்”,  “அக­திகள் வாரம்” போன்ற பெயர்­க­ளாலும் அழைக்­கப்­ப­டு­கின்­றது.

புத்­தளம் பாத்­திமா மகளிர் கல்­லூ­ரியின் அதி­ப­ராக திரு­மதி பவ்­சியா மஜீத் சேவை­யாற்­றி­ய­போது, அவர் வெளியூர் மாண­வி­க­ளுக்­கென விடுதி ஒன்றை அங்கு ஆரம்­பித்தார். அவர்­க­ளுக்கு பொரு­ளியல் கற்­பிக்­கு­மாறு என்னை வேண்­டிக்­கொண்டார். அங்­கி­ருந்த மாடிக்­கட்­டி­ட­மொன்றின் மேல் மாடியில், ஒரு நாள் மாலை­வேளை கற்­பித்­துக்­கொண்­டி­ருக்­கும்­போது அனு­ரா­த­புர வீதி வழி­யாக லொறி­களில் வடக்கு முஸ்­லிம்கள் புத்­தளம் நோக்கி வந்­து­கொண்­டி­ருந்­தது இன்றும் நினை­வி­லுள்­ளது. அக்­கா­லப்­ப­கு­தியில் கல்­பிட்டி, அல் அக்ஸா மகா வித்­தி­யா­ல­யத்­திலும் வார இறு­தியில் பிரத்­தி­யேக வகுப்­புக்கள் நடத்­தினேன். கல்­பிட்டி சென்­ற­போது, அப்­போ­துதான் மன்­னாரில் இருந்து வள்­ளங்­களில் வந்­தி­றங்­கிய மக்கள் வீதி ஓரங்­களில் குழுமி நின்­றனர். நான் கற்ற அல் அக்ஸா பாட­சாலை மக்­களால் நிரம்பி வழிந்­தது.

அணிந்­தி­ருக்கும் ஆடைகள் தவிர வேறு­ஏ­து­மின்றி, தமது பிள்­ளை­குட்­டி­க­ளுடன், வரை­ய­றுக்­கப்­பட்ட பிர­தே­ச­மொன்­றுக்குள், ஒரு குறு­கிய காலப்­ப­கு­திக்குள், பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் வந்­தி­றங்­கினால் நிலைமை எவ்­வா­றி­ருக்கும் என்­பதை சற்று கற்­ப­னை­செய்து பாருங்கள். புத்­தளம் மக்கள் அனு­பவ வாயி­லாக இதனை நன்கு உணர்ந்­து­வைத்­துள்­ளனர். ஆனால் இந்­நி­லை­மையை சமா­ளிப்­ப­தற்கு புத்­தளம் அன்று தயங்­க­வில்லை. ஏனெனில் இஸ்லாம் அவர்­களை இணைந்­தி­ருந்­தது. ‘மனிதம்’ அவர்­க­ளிடம் மேலோங்­கி­யி­ருந்­தது. வந்­தோரை அர­வ­ணைத்து உதவும் முயற்­சியில் மறு­க­ணமே ஒன்­றி­ணைந்­தனர்.

புத்­த­ளத்தில் 2000 ஆண்டு காலப்­ப­கு­தியில் முப்­ப­துக்கும் மேற்­பட்ட அரச சார்­பற்ற அமைப்­புக்கள் (NGO) இருந்­தன. ஆனால் இடப்­பெ­யர்வின் ஆரம்­பத்தில் அரச உத­வி­களோ அல்­லது அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் தயவோ இடம்­பெ­யர்ந்­து­வந்த மக்­க­ளுக்குக் கிட்­ட­வில்லை. புத்­தளம் பிர­தேச மக்கள், வந்­தோரை தமது சொந்த பந்­தங்­க­ளாகக் கருதி அனு­ச­ரித்­தனர்.  தமது வீடு­க­ளிலும், பாட­சா­லை­க­ளிலும், தோட்­டங்­க­ளிலும், பள்­ளி­வாசல் வள­வு­க­ளிலும்  அவர்­களைத் தங்­க­வைத்­தனர். தேவை­யான அனைத்­தையும் பகிர்ந்­து­கொண்­டனர். தனி­ந­பர்கள் உட்­பட பள்­ளி­வாசல் நிரு­வா­கமும் சமூக சேவை அமைப்­புக்­களும் இதில் முன்­னின்று உழைத்­தன. அனு­ம­திக்­காகக் காத்­தி­ராமல் உணர்ச்சி மேலீட்டால் பொதுக் கட்­டி­டங்­களின் பூட்­டு­களை உடைத்து அவர்­களை அங்கு தங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை செய்­து­கொ­டுத்த சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றன.

இடம்­பெ­யர்ந்து வந்­தோ­ருக்கு உதவும் முத­லா­வது கூட்டு முயற்­சி­யாக, புத்­தளம் நகரில் பெரிய பள்­ளி­வாசல் களத்தில் குதித்­தது. அதற்குப் பின்­ன­ணி­யாக 1980 இல் தாபிக்­கப்­பட்ட, ‘புத்­தளம் இளம் முஸ்லிம் பட்­ட­தா­ரிகள் சங்கம்’ (YMGA) செயற்­பட்­டது. YMGA யின் முயற்­சி­யுடன் நகர பள்­ளி­வாசல் நிரு­வா­கிகள், சமய இயக்­கங்கள், வர்த்­த­கர்கள், பிர­மு­கர்கள் ஆகி­யோரை உள்­ள­டக்­கிய முத­லா­வது ஆலோ­சனைக் கூட்டம் பெரி­ய­பள்­ளியில் இடம்­பெற்­றது. அதன் பிர­தி­ப­ல­னாக ‘நிவா­ரணக் குழு’ ஒன் றும்  அமைக்­கப்­பட்­டது. வட­பு­லத்­தி­லி­ருந்து வந்­தோரைப் பரா­ம­ரிக்கும் பொறுப்பை இக்­குழு ஏற்று செயற்­பட்­டது.

உணவு, உடு­துணி உட்­பட தேவை­யான பொருட்­களை ஊருக்குள் சேக­ரிக்கும் பணி தொடங்­கி­யது. அவை மத்­ர­ஸதுல் காசி­மிய்­யா­விலும் எம்.எச்.எம். நவவி அவர்­களின் வீட்­டிலும் களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டன.  YMGA தாபக உறுப்­பி­னர்­க­ளுடன் பெரி­ய­பள்ளி நிரு­வாகக் குழுவும் ஜம்­இய்­யதுல் உலமா தலைவர் அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், தப்லீக் அமைப்பின் பிர­தி­நி­தி­யாக எஸ்.எம். பாரூக், ஜமா­அதே இஸ்­லா­மியின் பிர­தி­நி­தி­யாக மர்ஹூம் நியாஸ் ஆகி­யோ­ருடன் பொறி­யி­ய­லாளர் பி.ஐ.எம். ஜிப்ரி போன்­றோரும் இப்­ப­ணியில் முன்­னின்று செயற்­பட்­டனர்.

புத்­தளம் பிர­தே­சத்­துக்கு வந்தோர் ஆரம்­பத்தில் நகரை அண்­மித்து, வடக்கில் மன்னார் வீதியின் மருங்­கு­க­ளிலும், அத்­துடன் மணி­ய­கார வவுன் எனப்­படும் கரம்பை, புழு­தி­வயல் தொடக்கம் விரு­தோடை, கடை­யா­மோட்டை, கன­மூலை, பெருக்­கு­வட்டான், சமீ­ர­கம, கொத்­தான்­தீவு, புளிச்­சாக்­குளம் போன்ற அக்­க­ரைப்­பற்று பகு­தி­யிலும் குடி­ய­மர்ந்­தனர். அவர்­களில் பெரும்­பா­லானோர் கல்­பிட்டிக் குடா­நாட்டில் செறி­வாக தமது வாழ்­வி­டங்­களை அமைத்­துக்­கொண்­டனர்.

வட­மா­காண மக்கள், இடம்­பெ­யர்ந்து வந்த புதிதில் தமது பூர்­வீக மண்ணில் மீள் குடி­யேறப்  பகீ­ரதப் பிர­யத்­தனம் செய்­தனர். அது அவர்­களின் அடிப்­படை உரி­மை­யு­மாகும். இவ்­வி­டயம் தேசிய ரீதி­யாக மட்­டு­மன்றி சர்­வ­தே­ச­ம­யப்­ப­டுத்­தப்­ப­டவும் வேண்­டு­மென பல முயற்­சிகள்  மேற்­கொள்­ளப்­பட்­டன. 1991 இல் கொழும்பு, வெள்­ள­வத்தை, ரோஹினி வீதியில் அமைந்­துள்ள ‘இஸ்­லா­மிய கற்கை நிலை­யத்தில்’ (CIS) பேரா­சி­ரியர் S.H. ஹஸ்­புல்லாஹ் இவ்­வி­டயம் தொடர்­பாக நிகழ்த்­திய உரை, பின்னர் ‘We Want to go home’ என்ற தலைப்பில் ஒரு கையே­டாக வெளி­யி­டப்­பட்­டது.

1992 ஆம் ஆண்டின் இறு­தியில் உரு­வா­கிய வடக்கு முஸ்­லிம்­களின் உரி­மைக்­கான அமைப்பு (NMRO),  ‘மீள்­கு­டி­யற்­றத்தை’ இலக்­கா­கக்­கொண்டு “எம்­மு­டைய தாய­கமும் வடக்கே” என்ற தொனிப்­பொ­ருளில் செயற்­படத் தொடங்­கி­யது. பேரா­சி­ரியர் எஸ். எச். ஹஸ்­புல்லாஹ், மெள­லவி பீ. ஏ. எஸ். சுபியான், பொறி­யி­ய­லாளர் ஏ. எல். புர்­ஹா­னுத்தீன், கலா­நிதி எம். எஸ். அனீஸ், எம். எம். அமீன், எஸ். எச். எம். றிஸ்னி போன்றோர் இவ்­வ­மைப்பின் முன்­னோ­டி­க­ளாவர். 15.11. 1993 இல் றகீப் வரைந்த அட்­டைப்­ப­டத்­துடன் NMRO வின் ‘அகதி’ சஞ்­சி­கையின் முதல் இதழ் வெளி­வந்­தது. இடப்­பெ­யர்வு தொடர்­பான பல விட­யங்கள் இதில் ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்­ட­துடன்  ‘எண்ணக் குமு­றல்­களும்’ பதி­வி­டப்­பட்­டன.
தொடர்ந்து நிகழ்ந்­து­கொண்­டி­ருந்த யுத்தம் இடம்­பெ­யர்ந்­தி­ருந்த மக்­களின்  மீள் குடி­யேற்றக் கனவை எட்டாக் கனி­யாக்­கி­யது. அதே­வேளை, 1999 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் சுமார் 80 ‘மீள் குடி­யேற்றக் கிரா­மங்கள்’ புத்­தளம் பிர­தே­சத்தில் உரு­வா­கின. 2006 இல் 141 நலன்­புரி நிலை­யங்கள் இங்கு இருந்­தன. குறித்த சொற்ப காலப்­ப­கு­திக்குள் குடி­யே­றிய பெரு­ம­ளவு மக்­க­ளுடன், அப்­பி­ர­தே­சத்­துக்­கு­ரிய வரை­ய­றுக்­கப்­பட்ட வளங்­களைப் பகிர்ந்து கொள்­வதில் முரண்­பா­டு­களும் தோன்­றின. இது இயல்­பான ஒன்றே. இவ்­வா­றான விட­யங்கள் இன்றும் சர்­வ­தேச ரீதியில் நிகழ்ந்­து­கொண்­டி­ருப்­பதும் கண்­கூடு. எனினும் புத்­தளம் பிர­தே­சத்தில்  முரண்­பா­டு­களை விட உடன்­பா­டு­களே அதிகம் இருந்­தன. இந்­நி­லையில் உப­கார சமூகம் (Host Community)  தமது வளங்­களை இடம்­பெ­யர்ந்­தோ­ருடன் பகிர்ந்து, இணக்­கப்­பாட்­டுடன் வாழ­வேண்­டிய சூழலை ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்றை ஏற்­பாடு செய்­ய­வேண்­டு­மென கலா­நிதி ஹஸ்­புல்லாஹ் தொலை­பே­சியில் வேண்­டிக்­கொண்டார். இது பற்றி என்­னுடன் மேலும் கதைக்­க­வேண்­டு­மென, நேரிலும் வரு­கை­தந்தார்.

1978 – 82 காலப்­ப­கு­தியில் நான் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கற்­கும்­போது, விரி­வு­ரை­யாளர் ஹஸ்­புல்லாஹ் அவர்­க­ளுக்கும் எனக்கும் இடையில் நெருங்­கிய உறவு இருந்­தது. அவர் தனது முது­மாணிப்  பட்­டத்­துக்­கான (MA)  சமூக, பொரு­ளா­தார ரீதி­யி­லான ஆய்­வுக்­காக சில நக­ரங்­களைத் தெரி­வு­செய்­தி­ருந்தார். அதில் புத்­த­ளமும் ஒன்று. இந்­நி­லையில் புத்­தளம் நக­ரத்தைப் பார்­வை­யிட வேண்­டு­மென அவர் வேண்­டிக்­கொண்­ட­தற்­கி­ணங்க 1981 காலப்­ப­கு­தியில் நாம் புத்­தளம் வந்தோம். நான் அறிந்த வகையில் அதுவே அவரின் முத­லா­வது புத்­தளம் விஜ­ய­மு­மாகும். அவர் தனது முது­மாணிப் படிப்பின் நிமித்தம் கனடா சென்­ற­போது, அவர் தெரி­வு­செய்த ஆய்வுத் தலைப்பின் ஒரு பகு­தியை, இளங்­க­லை­மா­ணிக்­கான எனது தலைப்­பாகத் தெரி­வு­செய்­ய­மாறு ஆலோ­ச­னை­கூறி, பொரு­ளி­யல்­துறைப் பேரா­சி­ரியர் திரு மு. சின்­னத்­தம்பி அவர்­க­ளிடம்  அதற்­கான அனு­ம­தி­யையும் பெற்­றுத்­தந்தார்.

திடீ­ரென இரட்­டிப்­ப­டைந்த சனத்­தொகை கார­ண­மாக புத்­தளம் பிர­தே­சத்­துக்குள் ஏற்­பட்ட சமூக, பொரு­ளா­தார, கல்வி, போன்ற பிரச்­சி­னை­களைக் கலந்­து­ரை­யாட வேண்­டு­மெ­னவும், இரு சாராரும் நன்மை பெறக்­கூ­டிய முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொள்­ள­வேண்­டு­மெ­னவும், அதற்­காகப் புத்­தளம் உப­கார சமூ­கத்­துடன் (Host community) சிநே­க­பூர்வ கலந்­து­ரை­யாடல் தொட­ரொன்றை நடத்­த­வேண்­டு­மெ­னவும் ஹஸ்­புல்லாஹ் சேர் வேண்­டிக்­கொண்­ட­தனை, புத்­தளம் மாவட்ட ஜம்­மிய்­யதுல் உலமா, புத்­தளம் பெரி­ய­பள்­ளி­வாசல் போன்­ற­வற்­றுக்கும் பேரா­சி­ரியர் எம். எஸ். எம் அனஸ் அவர்­க­ளுக்கும் அறி­வித்தேன். ஏற்­க­னவே பேரா­சி­ரி­யர்கள் அனஸ், ஹஸ்­புல்லாஹ் ஆகியோர் இவ்­வி­டயம் தொடர்­பாகக் கலந்­து­ரை­யா­டி­யு­மி­ருந்­தனர்.

வடமேல் மாகாண சபைத் தேர்தல் இடம்­பெற்ற தின­மான 25.01.1994 அன்று உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற வகையில் ஆரம்­பிக்­கப்­பட்டு பின்னர் முறை­மை­யாக செயற்­ப­டத்­தொ­டங்­கிய ‘புத்­தளம் மக்கள் மன்­றத்­துடன்’ (PPF) இக்­க­லந்­து­ரை­யா­டலை மேற்­கொள்­வ­தென  முடி­வெ­டுக்­கப்­பட்­டது. 1999 ஒக்­டோபர் 08 ஆம் திகதி, ஹஸ்­புல்லாஹ் அவர்கள், எஸ். எச். எம். றிஸ்னி, ஏ. ஜீ. அனீஸ், எம். எச். மிஹ்லார் போன்­றோ­ருடன் எனது வீட்­டுக்கு வந்தார். அன்று இரவு புத்­தளம் மத்­ர­ஸதுல் காஸி­மிய்­யாவில், அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்­களின் தலை­மையில் மக்கள் மன்றப் பிர­தி­நி­தி­க­ளுடன் கலந்­து­ரை­யாடல் ஆரம்­ப­மா­னது.
இதன் மற்­று­மொரு சந்­திப்பு 28. 04. 2000 அன்று இடம்­பெற்­றது. கலந்­து­ரை­யா­டல்கள், பல சுற்­றுக்­க­ளாக இடம்­பெற்­றன.  இடைக்­கிடை வட­பு­லத்தின் அனைத்து மாவட்­டங்­க­ளையும் சேர்ந்த பிர­தி­நி­தி­களும் கலந்­து­ரை­யா­டலில் கலந்­து­கொண்­டனர். புத்­தளம் சார்­பாக, மக்கள் மன்ற அங்­கத்­த­வர்கள் உட்­பட பல உள்ளூர் பிர­மு­கர்­களும் பங்­கேற்­றனர். ‘யுத்தம் முடி­வ­டைந்த பின் …’ என்ற தலைப்­பி­லான கலந்­து­ரை­யாடல் ஒன்று பேரா­சி­ரியர் ஹஸ்­புல்லாஹ் அவர்­க­ளுடன் 29. 10. 2010 இல் காசி­மிய்­யாவில் இடம்­பெற்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.
இடம்­பெ­யர்ந்­தோரின் வாழ்க்­கையை நேரில் காண்­ப­தெற்­கென ராஜ­தந்­தி­ரி­களும், வெளி­நாட்டு செல்­வந்­தர்­களும், பரோ­ப­கா­ரி­களும் புத்­தளம் பிர­தே­சத்­துக்கு விஜ­யம்­செய்­வ­துண்டு. ஆனால் சமா­தான அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள், பிர­மு­கர்கள் போன்றோர் வரு­கை­த­ரும்­போது உள்ளூர் மக்­க­ளையும் சந்­திக்­க­வேண்டும் அவர்­களின் கருத்­துக்­க­ளையும் உள்­வாங்­க­வேண்டும் என்­பதில் பேரா­சி­ரியர் ஹஸ்­புல்லாஹ் உறு­தி­யாக இருந்தார். அந்­த­வ­கையில் 17. 04. 2005 இல், இடம்­பெ­யர்ந்­தோரை சந்­திக்க புத்­தளம் வந்த நோர்வே சமா­தான தூதுவர் எரிக் சொல்­ஹை­மு­ட­னான தனி­யான ஒரு சந்­திப்பு ஒன்று, புத்­தளம் பெரிய பள்­ளி­வா­சலின் மேல் மாடியில் இடம்­பெற்­றது. அப்­போது புத்­தளம் பூர்­வீக மக்கள் சார்­பா­ன­தொரு அறிக்கை சொல்­ஹை­முக்குக் கைய­ளிக்­கப்­பட்­டது. இதில் ஆசி­ரியர் எஸ். எம். முபாரக் ஆற்­றிய பங்கு அளப்­ப­ரி­யது.  மேலும் National Peace Council உட­னான சந்­திப்­பொன்றும் புத்­தளம் நகர மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது.

பேரா­சி­ரியர் ஹஸ்­புல்­லாஹ்வும் அவ­ரது குழு­வி­னரும் ஏற்­பா­டு­செய்த பல கருத்­த­ரங்­கு­களில் புத்­தளம் மக்கள் மன்றம் பங்­கேற்­றது. ‘சமூக அபி­வி­ருத்­திக்­கான ஆய்வு செய­ல­மைப்பு (RAAF) 29. 09. 2001 இல் இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் நடத்­திய கருத்­த­ரங்கில், மக்கள் மன்ற பொதுச் செய­லாளர் என்­ற­வ­கையில் நானும் இணைச் செய­லாளர் எஸ். ஆர். எம். முஹ்­ஸியும் கலந்­து­கொண்டோம். ‘இடம்­பெ­யர்ந்த முஸ்லிம் அக­தி­களின் நிலை’ என்ற தலைப்பில் நடத்­தப்­பட்ட இக்­க­ருத்­த­ரங்கில், ‘வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் இழந்த அசையும் அசையா ஆத­னங்கள்’ பற்­றிய அறிக்கை ஒன்றும் வெளி­யி­டப்­பட்­டது.

இந்­நி­கழ்வில், ‘உள்ளூர் – இடம்­பெ­யர்ந்தோர் ஒன்­றி­ணைந்து தமது உரி­மை­களை வென்­றெ­டுப்­பதன் அவ­சியம்’ பற்­றிய கருத்­துக்­களை நாம் முன்­வைத்தோம். ‘புத்­த­ளத்தில் இடம்­பெ­யர்ந்து வாழும் முஸ்­லிம்­க­ளுக்­கான நிரந்­தரத் தீர்வு’ என்ற தலைப்பில் UNHCR அமைப்­பினால் Hotel Hilton இல் 17. 10. 2001 இல் நடத்­தப்­பட்ட கலந்­து­ரை­யா­டலில் மக்கள் மன்ற சார்பில்  ஆசி­ரியர் எம். எம். முபாரக் ஆசி­ரியர் அவர்­க­ளுடன் நானும் கலந்­து­கொண்டேன்.

மக்கள் மன்­றமும் மனி­த­வள அபி­வி­ருத்தி, மனித உரிமை அமைப்பும் (OHRD) இணைந்து, உள்ளூர் – இடம்­பெ­யர்த்தோர் நல்­லு­றவு தொடர்­பான சிநே­க­பூர்வ கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தின. இத்­த­கைய இரு கலந்­து­ரை­யா­டல்­களுள் ஒன்று, 20. 04. 2001 அன்று மத்­ர­ஸதுல் காஸி­மிய்­யா­விலும் மற்­றொன்று 04. 05. 2001 இல் மக்கள் மன்­றத்தின் மன்னார் வீதி காரி­யா­ல­யத்­திலும் இடம்­பெற்­றன. ஐக்­கிய நாடுகள் அக­தி­க­ளுக்­கான உயர் ஆணைக்­குழு (UNHCR), மக்கள் மன்றம் என்­ப­ன­வற்­றுக்கு இடையில் உள்ளூர் – இடம்­பெ­யர்ந்­தோ­ருக்­கி­டை­யி­லான நல்­லு­றவு பற்­றிய மற்­று­மொரு சந்­திப்பு 15. 06. 2001 இல் இடம்­பெற்­றது. இதில் UNHCR சார்பில்  J ஹோல், கெமீ­லியா மெல்சன். எம். ஐ. எஸ். அஹ்மத், ஏ. விமல், திலக் சந்­தி­ரகாந்த் ஆகியோர் பங்­கு­பற்­றினர். இக்­க­லந்­து­ரை­யாடல் நள்­ளி­ர­வு­வரை நீடித்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இதன் தொடர் கலந்­து­ரை­யா­ட­லொன்று 23. 10. 2001 இல் புத்­தளம் பிர­தேச செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் மக்கள் மன்றப் பொரு­ளாளர் எம். எச். ஏ. ரஷீத் பங்­கேற்றார்.

இடம்­பெ­யர்ந்த முஸ்­லிம்கள் மீளவும் தமது சொந்த இருப்­பி­டங்­களில் குடி­யே­று­வது தொடர்­பாக இன விவ­கார தேசிய நல்­லி­ணக்க அமைச்சர் பெட்டி வீரக்கோன் தலை­மையில் அவ­ரது அமைச்சில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் மக்கள் மன்­றத்தின் சார்பில் இஸட். ஏ. எம். றஸ்மி கலந்­து­கொண்டார். ‘தேசிய இனப்­பி­ரச்­சி­னையும் முஸ்­லிம்­களும்’ என்ற தொனிப்­பொ­ருளில் Muslim Peace Forum, மாளி­கா­வத்தை, இஸ்­லா­மிய மத்­திய நிலை­யத்தில் 03. 02. 2001 இல் நடத்­திய கருத்­த­ரங்கில் மன்­றத்தின் தலைவர் அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், இணைச் செய­லாளர் எஸ். ஆர். எம். முஹ்ஸி ஆகியோர் பங்­கேற்­றனர்.

புத்­தளம் பிர­தே­சத்தின் சமா­தான முயற்­சிகள் பற்­றிய ஆய்­வொன்­றினை பிரித்­தா­னிய உயர் ஸ்தானிகம் மேற்­கொண்­டது. இது தொடர்­பான ஒரு கலந்­து­ரை­யாடல் மத்­ர­ஸதுல் காஸி­மிய்­யாவில் இடம்­பெற்­றது. கொழும்பு பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யாளர் எம். ஆர். டீ. முனீர் GQL திட்­டத்தை சேர்ந்த பீ. கே. வித்­தி­யா­னந்த ஆகியோர் கலந்­து­கொண்ட இக்­க­லந்­து­ரை­யா­டலில் மக்கள் மன்றப் பிர­தி­நி­திகள் தமது கருத்­துக்­களை முன்­வைத்­தனர்.

புத்­தளம் நக­ரிலும் கரம்பை, கல்­பிட்டி, திகளி, சமீ­ர­கம, பள்­ளி­வா­சல்­துறை, புளிச்­சாக்­குளம், ஆலங்­குடா போன்ற சில கிரா­மங்­க­ளிலும் விரும்­பத்­த­காத முறுகல் நிலைகள் ஏற்­பட்ட சந்­தர்ப்­பங்­களில் பெரி­ய­பள்ளி, ஜம்­மிய்­யதுல் உலமா, மக்­கள்­மன்றம், அர­சியல் தலை­மைகள் போன்­றன ஒன்­றி­ணைந்து உட­ன­டி­யாகக் கள விஜ­யங்­களை மேற்­கொண்டு அவை தொட­ரா­வண்ணம் பாது­காத்த சந்­தர்ப்­பங்கள் பல. ஓரிரு சம்­ப­வங்கள் முரண்­பாட்டை உச்­ச­ம­டை­யச்­செய்­த­தையும் மறுக்­க­மு­டி­யாது. அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் நியா­யத்தின் பக்கம் நின்ற அனைத்துத் தரப்­பி­னரும் பாராட்­டுக்­கு­ரி­யோ­ராவர்.  இவ்­விரு சாரா­ருக்­கு­மான நல்­லி­ணக்கம் பற்றி பல கொத்­பாக்கள் நிகழ்த்­தப்­பட்­டுள்­ளன. அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், மெள­லவி எம். எச். எம். எம். முனீர் உட்­பட பல உல­மாக்கள் இதனைச் சிறப்­புற செய்­துள்­ளனர்.

புத்­தளம் பிர­தே­சத்­துக்குள் இரு­சா­ரா­ருக்கும் இடையில்  சமூக, பொரு­ளா­தார, கல்வி, தொழில்­வாய்ப்பு , வீட­மைப்பு, உட்­கட்­ட­மைப்பு உட்­பட வளப்­ப­கிர்­வுகள் போன்­ற­வற்றில் ஏற்­பட்ட பிரச்­சி­னை­களைத் தீர்த்­து­வைப்­ப­திலும்  உள்ளூர் இடம்­பெ­யர்ந்தோர் உறவை வலுப்­ப­டுத்­து­வ­திலும்  புத்­தளம் பெரி­ய­பள்­ளி­வாசல், மஜ்­லிஸுஸ் சூரா, புத்­தளம் மாவட்ட ஜம்­மிய்­யதுல் உலமா, புத்­தளம் மக்கள் மன்றம், புத்­தளம் மாவட்ட புத்­தி­ஜீ­விகள் ஒன்­றியம், சமா­தா­னத்­துக்கும் கல்வி அபி­வி­ருத்­திக்­கு­மான அமைப்பு (OPED) போன்­ற­னவும் அர­சியல் தலை­மை­களும் முன்­னின்­று­ழைத்­தன. அத்­துடன், சமூக அபி­வி­ருத்­திக்­கான ஆய்வுச் செய­ல­மைப்பு (RAAF) போன்­ற­னவும் எம்­முடன் இணைந்து செயற்­பட்­டன.

முஸ்­லிம்கள் என்ற ரீதியில் இரு­சா­ராரும் ஒன்­று­பட்­டி­ருந்­தாலும் ஒரு சில கலா­சார, பண்­பாட்டு வேறு­பா­டுகள்,பேச்சு வழக்கு, புரிந்­து­ணர்­வின்மை போன்­றன, ஆரம்ப காலங்­களில் கிராம மட்­டங்­களில் முரண்­பா­டுகள் ஏற்­படக் கார­ணி­களாய் அமைந்­தன. இப்­பின்­ன­ணி­யி­லேயே பெள­தீக, மனித வளப்­ப­கிர்­வு­களின் போட்­டித்­தன்­மையும், முறுகல் நிலை­மை­களும் தோன்­றின. இந்­நி­லையில் உள்ளூர் மக்­களின் நலன்கள் பாதிக்­கப்­ப­டா­வண்ணம், இரு தரப்­பி­ன­ருக்கும் இடை­யி­லான சக­வாழ்வு சாத்­தி­யப்­பா­டுகள் பற்றி விஞ்­ஞான  பூர்­வ­மான ஆய்­வு­களை மேற்­கொள்ள புத்­தளம் பெரி­ய­பள்­ளி­வாசல் சில முன்­னெ­டுப்­பு­களை மேற்­கொண்­ட­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. 21.01. 2012, 13. 05. 2012, 07. 07. 2012 ஆகிய தினங்­களில் இது தொடர்­பான செய­ல­மர்­வுகள் இடம்­பெற்­றன. இதில் பிர­தான வள­வா­ள­ராக ‘முஸ்லிம் செய­லக’ CEO, எம். மஹ்ரூப் கலந்­து­கொண்டார். 21.01. 2012 அன்று DC Pool இல் இடம்­பெற்ற கூட்­டத்­துக்கு புத்­தளம் பிர­தே­சத்­தி­லுள்ள அதி­பர்கள் ஆசி­ரி­யர்கள் உட்­படப் புத்­தளம் பிர­தேசப் பிர­மு­கர்கள் பலர் கலந்­து­கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவற்றின் வெளிப்­பா­டா­கவே 24. 08. 2016 இல் ‘வடமேல் மாகாண நல்­லி­ணக்கப் பொறி­மு­றைகள் பற்­றிய கலந்­தா­லோ­ச­னைக்­கான செய­ல­ணிக்கு ‘புத்­தளம் விருந்­தோம்பல் சமூ­கத்தின் அபி­லா­சை­களும் முன்­மொ­ழி­வு­களும்’ என்ற தலைப்­பி­லான ஆவணம் கைய­ளிக்­கப்­பட்­டது.  புத்­தளம் பெரி­ய­பள்ளி, புத்­தளம் மாவட்ட ஜம்­இய்­யதுல் உலமா என்­பன இணைந்து எஸ். ஆர். எம். முஸம்மில், எஸ். எம். எம். ரிபாய், எஸ். ஆர்.எம். முஹ்ஸி, எச். எம். உஸாமா அஹ்மத் ஆகி­யோரின் கையொப்­பங்­க­ளுடன் அதனை சமர்ப்­பித்­தன. ‘Puttalam People’s Forum for Reconciliation and Coexistence’ (PPF 4 RC) என்ற ஓர் அமைப்பு உரு­வா­கவும், புத்­தளம் பிர­தே­சத்தின் வர­லாறு, பாரம்­ப­ரியம், மர­புகள், மர­பு­ரிமை, கலை, கலா­சாரம், பண்­பாடு போன்­றன ஆவ­ணப்­ப­டுத்­தப்­படல் வேண்டும் என்ற நோக்கில் 16. 02. 2011 இல் ‘puttalamonline.com’ இணை­யத்­தளம் தோற்­றம்­பெ­றவும் இவ்­வ­ர­லாற்றுப் பின்­ன­ணி­களே கார­ண­மாகும்.உள்ளூர் – இடம்­பெ­யர்ந்தோர் நல்­லு­றவு தொடர்­பாக, பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யாளர் பேரா­சி­ரியர் எம். எஸ். எம். அனஸ் அவர்­க­ளு­ட­னான பல கலந்­து­ரை­யா­டல்­களை புத்­தளம் மக்கள் மன்றம் நடத்­தி­வந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. புத்­த­ளத்­திலும் கண்­டி­யிலும் இவை இடம்­பெற்­றுள்­ளன. சமூக நல்­லி­ணக்கம், வளப்­ப­கிர்வு, உரி­மை­களை வென்­றெ­டுத்தல் போன்ற  கலந்­து­ரை­யா­டல்­களில் ஜம்­மி­யத்துல் உலமா தலைவர் அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், பெரி­ய­பள்ளி நிரு­வாக சபைத் தலைவர் எஸ். ஆர். எம். முஸம்மில் ஆகியோர் உட்­பட எஸ். ஆர். எம். சலீம், எம். ஐ. ஏ. லத்தீப், இஸட். ஏ. எம் றஸ்மி , எம்.ஓ.ஜே.எம். நிஜாம்,எம். எஸ். அப்பாஸ், எம். எச். எம். பஸ்லுர் ரஹ்மான், எஸ். எம். எம். ரிபாய், ஹிதா­யத்­துல்லாஹ் அஜ்மல், ஹிஷாம் ஹுசைன் , எம். ஐ. ருஷ்தி, என். எம். நுஸ்பான், ரினாஸ் மொஹமட், ரஸ்மி ஷஹீத், எஸ். எல். எம். மின்சார், றிஸ்கான் ராசிக், எம். எம். எம். மிஹ்லார், நஸ்­லியா காதர், இஸ்­மாயில் ரிபானா போன்­றோ­ருடன் மற்றும் பலரும் கலந்­து­கொண்­டுள்­ளனர்.

‘இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வு­கா­ணலில் வட­புல முஸ்­லிம்கள் எவ்­வாறு புறக்­க­ணிக்­கப்­பட முடி­யா­த­வர்­களோ அவ்­வாறே, தற்­போது இம்­மக்கள் வாழ்ந்­து­கொண்­டி­ருக்கும் புத்­தளம் மண்­ணுக்­கு­ரி­ய­வர்­களும், தீர்­வுக்­கான பேச்­சு­வார்­தை­களில் கவ­னத்­திற்­கொள்­ளப்­படல் வேண்டும். மேலும் வட­புல முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்­கான சந்­தர்ப்பம் வரும்­போது கணி­ச­மான தொகை­யினர் தொடர்ந்தும் புத்­த­ளத்தில் வாழப்­போ­வது நிச்­சயம். இந்­நி­லையில் அவர்­களும் புத்­தளம் மக்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படல் வேண்டும்’ என, புத்­தளம் மக்கள் மன்­றத்தால் 15. 05. 2002 இல் வெளி­யி­டப்­பட்ட பிர­சுரம் ஒன்றில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

வடக்­கி­லி­ருந்து பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட மக்­களின் சனத்­தொகை இன்று மூன்று  இலட்­சத்­துக்கும் அதி­க­மாகும். அவர்­களில் சுமார் ஒன்­றரை இலட்சம் பேர் வவு­னியா மாவட்டம் உட்­பட வட­பு­லத்தில் வாழ்­கின்­றனர். சுமார் 40 சத­வீ­த­மானோர் தம்மை வாக்­கா­ளர்­க­ளாகப் புத்­த­ளத்தில் பதிந்­துள்­ளனர். வடக்கில் பதிவை மேற்­கொண்­ட­போதும், வசதி வாய்ப்­புக்­க­ளின்மை கார­ண­மாகத் தொடர்ந்தும் தமது வாழ்­வி­டங்­க­ளாகப் புத்­த­ளத்தைத் தேர்ந்­தெ­டுத்­த­வர்­களும் உள்­ளனர். இவ்­விரு பிர­தே­சங்­க­ளுக்கும் அடிக்­கடி மாறிக்­கொண்­டி­ருப்­போரும் இல்­லா­ம­லில்லை. பெள­தீக, மனித வளப்­ப­கிர்வுப் பிரச்­சினை புத்­தளப் பிர­தேசம் தவிர்ந்த தென்­னி­லங்­கையில் வாழ்­வோ­ருக்­கி­டையில் இல்லை.

இன்று இப்­பி­ர­தே­சத்தில் வசிப்போர் பூர்­வீக மக்­க­ளுடன் இரண்­டறக் கலந்­துள்­ளனர். விருந்­தோம்பல் சமூ­கத்­துக்கும்  இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளுக்­கு­மான திரு­மண உற­வு­களும் வலுப்­பெற்று வரு­கின்­றன. புதிய தலை­மு­றை­யி­ன­ருக்கு, புத்­தளம் மட்­டுமே தெரியும் என்ற நிலை ஏற்­பட்­டுள்­ளது. அதே­வேளை வறு­மையின் விளிம்பில் வாழும் மக்கள் இரு தரப்­பிலும் சரி சம­மாக உள்­ளனர். புத்­தளம் பிர­தே­சத்­துக்குள் 02.01.2007 இல் அமைக்­கப்­பட்ட ஐந்து பாட­சா­லை­களும் 17.01.2008 இல் உரு­வாக்­கப்­பட்ட ஒரு பாட­சா­லையும் மன்னார் கல்வி வலய நிரு­வா­கத்­துக்குள் இருந்து 01.01.2020 முதல் புத்­தளம் கல்வி வலய நிரு­வா­கத்­துக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. இந்­நி­லையில் வளப்­ப­கிர்வு, தேவை­யான வளங்­களைப் பெற்­றுக்­கொள்ளல், வேலை­வாய்ப்பு போன்ற எல்லா அம்­சங்­க­ளிலும் அனைத்துத் தலை­மை­களும் புரிந்­து­ணர்­வுடன் இணைந்து செயற்­ப­ட­வேண்­டி­யது காலத்தின் ணர்வுடன் இணைந்து செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

நாம் முஸ்லிம்கள். இஸ்லாம் எம்மை இணைத்துள்ளது. சாதிக்கவேண்டியவைகள் பல உள்ளன. வரலாற்றை அனுபவக் கற்கையாகக் கொண்டு செயலாற்றுவதன் மூலம் அவற்றை சாத்தியமாக்கலாம். எல்லாம் வல்ல அல்லாஹ் என்றும் எமக்குத் துணைநிற்பானாக. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.