சிங்களத்தில் : பிரசாத் தனுஷ்க குணசிங்க
தமிழில் : ஏ.ஆர்.ஏ.பரீல்
‘இஸ்ரேல் எல்லைக்கு அண்மையிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நாங்கள் 700 பேர் தங்கியிருக்கிறோம். 10 நிமிடங்களுக்கு ஒரு தடவை இஸ்ரேல் குண்டுத்தாக்குதல் நடத்துகிறது. எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கழிவறைக்கு செல்வதற்குக் கூட நாங்கள் பயப்படுகிறோம்’ என்கிறார் இலங்கையைச் சேர்ந்த இசான் பெரேரா.
தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த நிலைமை, காஸாவிலுள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
சிறிது காலத்தக்கு முன்பு நான் எனது நெருங்கிய நண்பர் ஒருவரைச் சந்தித்த போது அவரது சிறு பிள்ளைகள் இருவர் பற்றியும் விசாரித்தேன்.
‘ஓ அவர்கள் நலமாக இருக்கிறார்கள். இஸ்ரேல் – பலஸ்தீன் போன்று வாழ்கிறார்கள்’ என்று நண்பர் பதிலளித்தார். அவர்களிடம் சுட்டித்தனம் இருந்தாலும் இஸ்ரேல் பலஸ்தீன் போன்று அடிக்கடி சண்டை பிடித்துக்கொள்வார்கள் என்பதே இதன் பொருள்.
எங்கள் சமூகத்தின் மத்தியில் இரு நாடுகள் பற்றி இவ்வாறான ஒரு கருத்தே வேரூன்றி உள்ளது. ஏனென்றால் இரு நாடுகளும் தொடர்ந்து சண்டையிலேயே வாழ்கின்றன.
உண்மையில் இதுதான் நிலைமை. கடந்த காலங்களில் இருந்து இதுவரை உலகில் அதிகம் யுத்த நிலைமைகளுக்குள்ளாகியிருக்கும் நாடுகள் இஸ்ரேலும் பலஸ்தீனுமாகும் என எவராவது கூறுவார்களாயின் பெரும்பாலானோர் இதற்கு உடன்படுவார்கள்.
இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன்பு இஸ்ரேல் என்ற பெயரில் ஓர் நாடு உலக வரைபடத்தில் இருக்கவில்லை. அப்போது பலஸ்தீன் என்ற பெயரில் நாடொன்று இருந்தது. என்றாலும் இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பின்பு இஸ்ரேல் என்ற பெயரில் தனியாக யூத நாடொன்று உருவாகியது. பலஸ்தீனர்களின் பூமியிலே இந்நாடு உருவாக்கப்பட்டது. இதன்பின்பு பலஸ்தீனர்களும் இஸ்ரேலர்களும் பல தடவைகள் யுத்தம் செய்து கொண்டனர். அவ்வாறு அவர்கள் போரிட்டுக்கொண்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் இஸ்ரேலின் நில ஆக்கிரமிப்பு அதிகரித்தது. பலஸ்தீனர்களின் நிலம் அபகரிக்கப்பட்டதால் அதன் அளவு குறைவடைந்தது. தற்போது பலஸ்தீனம் காஸா பிராந்தியத்துக்கும், மேற்குக் கரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும் பலஸ்தீனுக்கும் அண்மைக்காலங்களில் சிறு கலவரங்கள் மூண்டாலும் பாரிய அளவில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலைமை உருவாகவில்லை.
என்றாலும் கடந்த அக்டோபர் 7ஆம் திகதி அதிகாலை எதிர்பாராத விதமாக அங்கு போர் மூண்டது. ஆயிரக்கணக்கான ரொக்கட் தாக்குதல்கள் இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் போராளிகளால் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரொக்கட் தாக்குதல்கள் ஹமாஸ் போராளிகளால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் எல்லைக்குள் புகுந்த ஹமாஸ் போராளிகள் சிவில் மற்றும் இராணுவ மத்திய நிலையங்களைத் தாக்கினார்கள். அவர்கள் 200க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாக காஸாவுக்குக் கொண்டு சென்றனர்.
இதனையடுத்தே அப்பிராந்தியத்தில் யுத்த நிலைமையொன்று உருவாகியுள்ளது. தற்போது யுத்த நிலைமை மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வான் வழித்தாக்குதல்களுடன் தரை வழித் தாக்குதல்களையும் இஸ்ரேல் காஸா பிராந்தியத்தை நோக்கி நடத்திக் கொண்டிருக்கிறது.
பலஸ்தீன் காஸா பிராந்தியத்தைக் கைப்பற்றி ஹமாஸ் போராளிகளை பூண்டோடு அழித்து விடுவதாக இஸ்ரேலிய பிரதமர் சவால் விட்டிருக்கிறார். இஸ்ரேலின் காஸா மீதான பயங்கரமான தாக்குதல்களின் காரணமாக பலஸ்தீனில் காஸா பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் தினம் கொல்லப்பட்டு வருகிறார்கள். உணவுக்கும், குடிநீருக்கும் மருந்துகளுக்கும் அங்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலைமை அங்கு வாழும் வெளிநாட்டவரையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
காஸாவில் இலங்கையர்கள்
காஸா பிராந்தியத்தில் 17 இலங்கையர்கள் சிக்கிக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலைமை பற்றி நாம் பலஸ்தீனிலுள்ள இலங்கை கொன்சியுலர் ஜெனரல் நாவலகே பெனட் கூரேயைத் தொடர்புகொண்டு வினவினோம்.
‘இங்கு தற்போது மூன்று குடும்பங்கள் உள்ளன. நாங்கள் இவர்களை எகிப்தின் ரபா எல்லையூடாக எகிப்துக்கு அனுப்பிவைக்க எதிர்பார்த்துள்ளோம். ஐ.நா. அமைப்பு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் இந்நடவடிக்கைகளுக்கு உதவ முன்வந்துள்ளார்கள்.
யுத்தம் மிகவும் கோரமானது . இதில் மாற்றுக் கருத்து இல்லை. யுத்தம் ஒன்று ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்படுவது சாதாரண பொது மக்களே. தற்போது பலஸ்தீனில் வதியும் இலங்கையர் ஒருவருடன் தொடர்புகளை மேற்கொண்டாம்.
‘நான் இசான் பெரேரா 26 வயது. இலங்கையில் கண்டியைச் சேர்ந்தவன். இவ்வருடம் மார்ச் மாதம் நான் வேலைவாய்ப்புப் பெற்று காஸாவுக்கு வந்தேன். முதலில் நான் மாத்திரமே வந்தேன். பின்பு எனது மனைவியையும் பிள்ளைகள் இருவரையும் இங்கு அழைத்துக் கொண்டேன். யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதும் இங்கிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தற்போது இஸ்ரேல் நாட்டின் எல்லையிலிருந்து அமைந்துள்ள முதலாவது நகரத்தின் கிறிஸ்தவ ஆலயத்தில் நாங்கள் தங்கியிருக்கிறோம். இங்கு சுமார் 700 பேர் வரையில் தங்கியிருக்கிறார்கள். அண்மையில் பலஸ்தீன் பள்ளிவாசலொன்றின் மீதும் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. 10 நிமிடங்களுக்கு ஒரு தடவை இஸ்ரேல் 60 ரொக்கட் தாக்குதல் வரையில் நடத்துகிறது. எங்கள் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.
பலஸ்தீனிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் காலையில் எங்களைத் தொடர்பு கொண்டு எங்களது நிலைமை குறித்து அறிந்து கொள்கிறார்கள். தினம் இரு தடவைகள் எங்களுக்கு உணவு வழங்கப்படுகிறது’ என்றார்.
பலஸ்தீன் தூதுவராலயம் இவர்கள் தொடர்பில் கரிசனையுடன் செயற்படுவது பாராட்டத்தக்கதாகும்.
மீண்டும் இரண்டு தினங்களின் பின்பு நாங்கள் இசான் பெரேராவைத் தொடர்பு கொண்டோம். ஆனால் அவரைத் தொடர்பு கொள்வது இலேசானதாக இருக்கவில்லை. தொலை தொடர்பு கட்டமைப்பில் சில தடைகள் இருப்பதை எம்மால் ஊகிக்க முடிந்தது.
‘உண்மையில் நீங்கள் என்னுடன் பேசியதற்காகவே நான் தொடர்பில் இருக்கிறேன். நாங்கள் இங்கு பயத்துடனே இருக்கிறோம். நான் இரண்டு தினங்களுக்கு முன்பு உங்களுடன் பேசிய போது இருந்த நிலைமை இன்று இங்கு இல்லை. தற்போது இங்கு முன்பை விட அதிகமாக வான்வழித்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இப்போது நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது கூட குண்டுத்தாக்குதல் சத்தம் உங்களுக்கு கேட்கிறதல்லவா?
எனது கையடக்கத் தொலைபேசியூடாக போட்டோக்களை அனுப்புவது கூட சவாலாக உள்ளது.. பயமாக இருக்கிறது. போனில் லைட் எரிவதுக்கும் பயப்பட வேண்டியுள்ளது. அந்த வெளிச்சத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படலாம். உண்மையில் கழிவறைக்குச் செல்வதற்குக் கூட நாங்கள் பயப்படுகிறோம்.
அவர் கூறியது உண்மை. அவருடன் தொடர்பில் இருந்த போது பல தடவைகள் தாக்குதல் நடத்தப்படும் சப்தம் எமக்குக் கேட்டது. அதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நாம் தொடர்பினைத் துண்டித்துக்கொண்டோம்.
நானும் மனைவியும் பிள்ளைகளும் எகிப்துக்கு இடம்பெயரவே எதிர்பார்த்துள்ளோம். முடியாவிட்டால் எப்படியாவது மனைவியையும் பிள்ளைகள் இருவரையுமாவது எகிப்துக்கு அனுப்பி வைப்பதற்கே முயற்சிக்கிறேன். என்றாலும் எகிப்தின் ‘ரபா’ எல்லை இதுவரை திறந்து விடப்படவில்லை.
அப்பாவி மனித உயிர்கள் உத்தரவாதமின்றி அல்லலுறும் நிலையில் மனித நேயம் இல்லாத தாக்குதல்கள் தொடர்கின்றன. இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் அருகம்பே பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேல் உல்லாசப் பயணிகளை நாட்டிலிருந்தும் வெளியேறுமாறு சிலர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான நிலைமைகள் தவிர்க்கப்பட வேண்டும். அது எமது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.
நன்றி : ஞாயிறு மவ்பிம
–Vidivelli