கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
ஏன் இஸ்ரவேல் இவ்வளவு துணிச்சலுடன், சர்வதேசப் போர் நியதிகளையும் மீறிக்கொண்டு மிருகத்தனமாகப் பலஸ்தீனர்களை கொன்று குவிக்கிறது? போருக்குக்கூட சர்வதேச ரீதியில் சில விதிகள் இருக்கின்றன. உதாரணமாக வைத்தியசாலைகளை தாக்குவது மனிதாபிமானமற்ற செயல் என்பதும் அக்கட்டிடங்களைத் தாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பதும் சர்வதேச நியதி. ஆனால் அவை எதுவுமே இஸ்ரவேலுக்கு விதிவிலக்கல்ல என்பதை காசாவில் அது நடத்தும் பேயாட்டம் தெளிவாக்குகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி எடுத்த எடுப்பிலேயே ஹமாஸை கடைந்தெடுக்கப்பட்ட ஒரு தீங்கு என வருணித்து அதே மூச்சில் இஸ்ரவேலுக்கு அமெரிக்காவின் பூரண ஆதரவு என்றும் உண்டு எனப் பறைசாற்றி அதனை உறுதிப்படுத்துமாறு அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளரை உடனடியாக இஸ்ரவேலுக்கு அனுப்பினார். அவரைத் தொடர்ந்து ஜனாதிபதியே அங்கு விரைந்து சென்று அந்நாட்டின் பிரதமரையும் அமைச்சர்களையும் இராணுவத் தலைவர்களையும் சந்தித்து அமெரிக்காவின் ஆதரவை மேலும் உறுதிப்படுத்தினார்.
பின் ஏதோ சாட்டுக்காக வழியிலே அரபுநாடுகளின் தலைவர்களையும் சந்தித்து முகஸ்துதிக்காக இரண்டு ஆறுதல் வார்த்தைகளை கூற நினைத்ததை ராஜதந்திரம் என்பதா கபட நாடகம் என்பதா? அவரைச் சந்திக்க மஹ்மூத் அப்பாஸ் தலைமையில் சில அரபுத் தலைவர்கள் மறுக்கவே உடனடியாக பிரித்தானியப் பிரதமர் எகிப்துக்கு விரைந்து அதன் தலைவர் அல்-சிசியைச் சந்தித்துச் சில ஆறுதல் வார்த்தைகளைக் கூறியபின் அதே வீச்சில் இஸ்ரவேலுக்கும் சென்று நெத்தனியாகுவைச் சந்தித்து பிரித்தானியாவின் பூரண ஆதரவை தெரிவித்ததும் என்ன பம்மாத்தோ? உண்மையைச் சொல்வதானால் அமெரிக்காவும் அதன் மேற்குலக நேச நாடுகளும் இஸ்ரவேலின் பிடிக்குள்ளே சிக்கியுள்ளன. குறிப்பாக அமெரிக்கா இஸ்ரவேலர்களின் பிடிக்குள் இருக்கிறது என்பதை ஒரு முறை இஸ்ரவேலின் முன்னை நாள் தலைவர் இஸ்தாக் ராபினே வெளிப்படையாகக் கூறியுள்ளார். சுருக்கமாகச் சொன்னால் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் இஸ்ரவேலை கும்பிடுகின்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. அந்த நிலையில் மேற்குலகை அரபு நாடுகள் கும்பிடுவதை எவ்வாறு விளங்கிக் கொள்வதோ? இதைத்தான் இக்கட்டுரை ஆராய விளைகின்றது.
முதலில் ஓர் உண்மையை யாவரும் புரிந்துகொள்ளுதல் வேண்டும். அதாவது அமெரிக்காவின் அரசியல் தலைவர்களோ ஐரேப்பாவின் அரசியல் தலைவர்களோ பிரித்தானியாவின் அல்லது அவுஸ்திரேலியாவின் அரசியல் தலைவர்களோ யூத மக்களையும் இஸ்ரவேலையும் பகைத்துக்கொண்டு ஆட்சியில் அமர முடியாது. இதுவே இஸ்ரவேலின் தலைக்கனத்துக்கு முக்கிய காரணம். இந்த நிலையை இஸ்ரவேலுக்குக் கிடைத்த ஒரு மகத்தான வெற்றியென்றும் கூறலாம். இது எப்படி ஏற்பட்டது என்பதை விளங்கிக் கொண்டால் பலஸ்தீனம் காலவோட்டத்தில் இஸ்ரவேலின் முற்றுகைக்குள்ளாகி அங்கே அரபு மக்கள் அடிமைகளாகவே வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர் என்பதையும் புரிந்து கொள்ளலாம். அந்த நிலையில் பலஸ்தீனம் என்ற ஒரு நாடே இருக்குமா என்பதும் சந்தேகம். யூத மக்களுக்கு ஐரோப்பா பல நூற்றாண்டுகளாக இழைத்த அநீதிக்கும் கொடுமைகளுக்குப் பிராயச்சித்தம் தேடும் முகமாக இப்போது பலஸ்தீனத்தையும் அதன் அரபு மக்களையும் இஸ்ரவேலுக்குப் பலிகொடுக்க நினைத்துள்ளன
“நிலமில்லாத மக்களுக்கு
மக்களில்லாத நிலம்”
இஸ்ரயீல் சங்வில் என்ற யூத எழுத்தாளன் அறிமுகப்படுத்திய மேற்கூறிய சுலோகமே பின்னர் சியோனிசர்களின் பிரச்சாரச் சூத்திரமாகி இறுதியில் 1948 இல் பலஸ்தீனத்தை இரு கூறாக்கி இஸ்ரவேல் என்ற ஒரு நாட்டை பிரித்தானியரின் சூழ்ச்சியோடு உலகுக்கு அறிமுகப்படுத்தியது. அப்பொழுது அங்கு வாழ்ந்த பலஸ்தீன மக்களைப்பற்றி இஸ்ரவேலின் முதலாவது ஜனாதிபதி செய்ம் வைச்மனிடம் ஒருவர் வினவியபோது அவர், “அங்கே பிரயோசனமற்ற சில ஆயிரக்கணக்கான நீக்ரோக்கள் வாழ்கின்றார்கள்” என்று கூறியதாகப் பதிலளித்த தகவல் ஒன்றுண்டு. ஆபிரிக்கக் குடிகளை வெறும் காட்டுமிராண்டிகள் என்று கருதிய ஐரோப்பியர் பலஸ்தீன மக்களையும் அவ்வாறு விபரித்ததில் ஆச்சரியமில்லை. இஸ்ரவேலின் இன்றையப் பிரதமர் நெத்தன்யாகுவும் காஸாவில் வாழும் மக்களை ஆங்கிலத்தில் சவேஜஸ் (காட்டுமிராண்டிகள்) என்று அண்மையில் வருணித்தமை அதே மனப்பான்மையை எடுத்துக்காட்டவில்லையா? நாலாயிரம் ஆண்டுகளாக ஒரு மகத்தான நாகரிகத்தின் சந்ததிகளாக வாழும் பலஸ்தீனர்களைப் பூண்டோடு அழிப்பதற்கும் அது முடியாதபட்சத்தில் அவர்களில் பெரும்பாலானோரை துரத்தியடித்தபின் எஞ்சியவர்களை அடிமைகளாக்கி அவர்களின் நிலத்தை இஸ்ரவேலுடன் இணைப்பதற்கும் அமெரிக்காவினதும் மேற்கு நாடுகளினதும் ஒத்தாசையுடன் அரங்கேறும் இந்த நாடகத்தைப் பார்த்து ஒப்பாரிவைக்கும் அரபுமக்களின் தலைவர்கள் அதே அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் கும்பிடுபோட்டு வாழ்வதை என்னவென்று வருணிப்பதோ?
இஸ்ரவேலின் சாதனை
இஸ்ரவேல் என்ற ஒரு நாடு கிடைத்தவுடன் உலகிலுள்ள யூத இனத்தவர் எல்லாருமே அங்குசென்று குடியேறவில்லை. இன்றைய உலகின் யூதமக்களில் 46 சதவீதமானோரே அங்கு வாழ்கின்றனர். ஆகவே பெரும்பான்மையான யூதர்கள் இஸ்ரவேலுக்குள் குடியேறும் உரிமை இருந்தும் வெளிநாடுகளிலேதான் வாழ்கின்றனர். அவர்களுள் 40 சதவீதமானோர் அமெரிக்காவிலும் எஞ்சிய 14 சதவீதத்தினர் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் வதிகின்றனர். ஆனால் அந்த நாடுகளின் அரசியலிலும் அவற்றின் செய்தி ஊடகங்களிலும் கல்வி நிலையங்களிலும் நிறைந்த செல்வாக்குள்ள ஓர் இனமாக அவர்கள் வாழ்வதுதான் இஸ்ரவேலுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அதை இஸ்ரவேலின் திட்டமிட்ட ஒரு சாதனை என்றும் கூறலாம். உதாரணமாக, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகப் பணியாற்றும் எவராவது இஸ்ரவேலுக்கு எதிரான ஆய்வுகளை வெளியிட்டால் அவர்களின் பதவி உயர்வுக்கு ஏன் அவர்களின் பதவிக்கே அது இடைஞ்சலாகும். அவுஸ்திரேலியாவிலும் அந்த நிலை உண்டு. அதேபோன்று அங்குள்ள ஊடகங்களையும் யூதர்கள் தமது கைப்பிடிக்குள் வைத்துள்ளனர். அதனாலேதான் பலஸ்தீனர்களுக்கு இஸ்ரவேல் செய்யும் பாதகங்கள் மூடிமறைக்கப்பட்டு பலஸ்தீனப் போராளிகள் செய்யும் வன்செயல்கள் பூதாகரப்படுத்தப்படுகின்றன. இவ்வாறான செல்வாக்கே அமெரிக்காவையும் ஐரோப்பிய அரசுகளையும் இஸ்ரவேலுக்குச் சார்பாக இயங்க வைக்கின்றது. அந்தச் செல்வாக்குதான் அந்நாடுகளின் தலைவர்களையும் இஸ்ரவேலுக்குக் கும்பிடுபோடவும் வைத்துள்ளது. இதனுடன் அரபு நாடுகளை ஒப்பிடும்போது ஏற்படும் வேதனையை இனி விளக்குவோம்.
அரபு நாடுகளின் ஒப்பாரி
எந்தவோர் இனமும் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளாதவரை இறைவனும் அதனை மாற்றமாட்டான் என்பது புனித குர்ஆனின் போதனை. இறைவன் யாரையும் ஆட்டுபவனல்ல. மாறாக ஆடுபவன் உதவி கேட்கும்போது அதனை வழங்குபவன் இறைவன். எனவே ஆட்டம் மனிதனின் உற்பத்தி. அதற்கான அறிவை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளான். எனவே ஆட்டுவிப்பவன் இறைவனல்ல. மாறாக ஆடுபவன் கேட்கும்போது உதவி வழங்குபவனே இறைவன். நபிகள் பெருமானாரின் வாழ்க்கை முழுவதும் இந்த உண்மைக்கு ஒப்பற்ற ஓர் எடுத்துக்காட்டு. அவருக்குப் பிறகு அந்தப் போதனையின் தத்துவத்தைச் சரியாக விளங்கிக்கொண்டு தமது உலக வாழ்க்கையையும் இலட்சியத்தையும் மாற்றியமைத்ததனாலேதான் அன்றைய முஸ்லிம்கள் உலகின் ஒப்பற்ற ஒரு வல்லரசின் பிரஜைகளாகி ஒரு மகோன்னத நாகரிகத்தையும் படைத்து மற்றவர்களையும் முஸ்லிம் உலகைப்பார்த்து வியக்க வைத்தனர். என்றைக்கு இறைவனை ஆட்டுபவனாகக் கருதி தாம் அவனால் ஆட்டப்படுபவர்கள் மட்டுமே என்று குர்ஆனின் தத்துவத்தை தலைகீழாக விளங்கத் தொடங்கினரோ அன்று தொடங்கியது முஸ்லிம்களின் வீழ்ச்சி. இது ஒரு சோகமான வரலாறு. அதை விபரிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால் அந்த வீழ்ச்சியின் ஓர் அடையாளமே இன்று அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் அரபுத்தலைவர்கள் கும்பிடுபோடுவது.
அது ஒருபுறமிருக்க இன்றைய அரபு நாடுகளின் ஆட்சித்தலைவர்களுள் பொதுவாக எல்லாருமே மக்களால் தெரியப்பட்டவர்களல்ல. சில நாடுகளில் பெயருக்காகத் தேர்தல்கள் நடைபெற்றாலும் அவை ஜனநாயக அடிப்படையில் மக்களால் சுதந்திரமாகத் தெரியப்பட்ட தலைவர்களை உருவாக்கவில்லை. ஆதலால் அத்தலைவர்களுக்கு வெளிநாடுகளின் அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் ஆதரவு தேவை. அமெரிக்காவைப் பகைத்துக்கொண்டு எந்த அரபு நாட்டுத் தலைவனும் நிலைத்திருக்க முடியாது. அன்றைய சதாம் ஹுஸைனும் முஅம்மர் கதாபியும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். எகிப்தின் அரபு வசந்தம் தோற்றதற்குக் காரணம் அமெரிக்கா பழமைவாதிகளுக்கு ஆதரவு வழங்கியதே. சுமார் 800 உயிர்களைக் கொன்று அல்-சிசி பதவிக்கு வந்ததும் அமெரிக்காவின் ஆதரவினாலேயே. எனவே அமெரிக்கா சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் பொம்மைகளையே அரபு நாடுகள் தலைவர்களாகக் கொண்டுள்ளன. பலஸ்தீனப் பிரச்சினையில் சாதாரண அரபு மக்களின் நிலைப்பாடு வேறு. அரபுத்தலைவர்களின் நிலைப்பாடோ வேறு. அமெரிக்கா இஸ்ரவேலுக்குக் கும்பிடுபோட அமெரிக்காவுக்கு அரபுத்தலைவர்கள் கும்பிடுபோடுவதன் அந்தரங்கம் இதுதான்.
மேற்கின் பொதுஜன அபிப்பிராயமும் அரபு நாடுகளும்
மேற்கு நாடுகளின் பொதுஜன அபிப்பிராயத்தை தனக்குச் சார்பாக இஸ்ரவேல் சம்பாதித்துள்ளதுபோல் அரபு நாடுகள் சம்பாதிக்கவில்லை. குறிப்பாக அமரிக்காவின் ஊடகத்துறையிலும் பல்கலைக்கழகங்களிலும் மற்றும் அந்நாட்டின் கேந்திர ஸ்தாபனங்களிலும் எவ்வாறு யூதமக்கள் தமது செல்வாக்கைப் பதித்துள்ளனர் என்பதை மேலே குறிப்பிட்டோம். அதிலே ஒரு துளியைக்கூட அரபு நாடுகள் சம்பாதிக்கவில்லை. ஏனெனில் அதன் முக்கியத்துவத்தை அரபு நாட்டுத் தலைவர்கள் உணரத்தவறியமையே. உதாரணமாக, 1980களில் லண்டனின் பிரபல புதினப்பத்திரிகை நிறுவனமொன்று விற்பனைக்கு வந்தது. அந்த நிறுவனத்தை வாங்கி அப்பத்திரிகையை முஸ்லிம்கள் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்ற நோக்கில் பல புத்திஜீவிகள் எண்ணெய்வள நாடொன்றை அணுகி வலியுறுத்தினர். அந்த நாட்டுத் தலைமைத்துவத்துக்கு அதன் முக்கியத்துவம் விளங்காததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இவ்வாறான ஒரு நிலைப்பாடு அரபு நாடுகளிடையே நிலவும்போது எப்படி மேற்கு நாடுகளின் பொதுஜன அபிப்பிராயத்தை தம்வசப்படுத்தலாம்?
மேற்குலகின் மதத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் பொது அரங்குகளிலும் ஊடகங்களிலும் வெளிப்படுத்துகின்ற ஒரு கருத்து மேற்கின் நாகரிகம் யூத-கிறித்தவ விழுமியங்களின் அடிப்படையில் உருவானது என்பதாகும். ஆனால் யூதர்களும் கிறித்தவர்களும் முஸ்லிம்களும் நபி இபுறாஹீமின் வழித்தோன்றல்கள். அவ்வாறாயின் ஏன் அந்த நாகரிகத்தை ஆபிரகாமின் விழுமியங்களால் உருவானதென அழைக்க முடியாது? இக்கேள்வியை பல மகாநாடுகளில் இக்கட்டுரையாளர் எழுப்பியுள்ளார். மௌனமே அக்கேள்விக்கு விடையானது. எந்த அளவுக்கு முஸ்லிம் உலகை மேற்கு தள்ளிவைத்துள்ளது என்பதற்கு இதைவிடவும் ஒரு சான்று வேண்டுமா? ஒட்டுமொத்தத்தில் மேற்கு நாடுகளின் பொதுஜன அபிப்பிராயத்தை தமக்கு ஆதரவாகத் திருப்பும்வரை அந்த நாடுகளின் தலைவர்களை கும்பிட்டு வாழ்வதைவிட வேறு வழி இல்லை. இது ஒரு துரதிஸ்டம். இந்த அவலமே இன்று பலஸ்தீனப் பிரச்சினையிலும் அரபு நாட்டுத் தலைவர்களின் கையறு நிலையை உணர்த்துகின்றது.
மீண்டும் ஓர் அல்-நகபா அல்லது அழிவி
1948 போரில் இஸ்ரவேலின் பயங்கரவாதிகள் பலஸ்தீன மக்களை துரத்தியடித்ததை முதலாவது நகபா அல்லது அழிவி என வரலாறு பெயரிட்டுள்ளது. இப்போது காசாவில் நடக்கும் இனச்சுத்திகரிப்பு அவர்களின் இரண்டாவது அழிவியை தோற்றுவித்துள்ளது. அமெரிக்காவும் அதன் மேற்கு நேசநாடுகளும் இரண்டாவது அழிவிக்குப் பூரண ஆதரவு. ஏதோ பலஸ்தீனர்கள்மேல் கருணை காட்டுவதாக உலகத்தை ஏமாற்ற 20 பொதிவண்டிகளில் உணவும் மருந்துவகைகளும் குடிநீரும் அனுப்பியுள்ளார்களாம். இது எந்த மூலைக்குப் போதுமோ? காசா மக்களின் மொத்தத் தேவையின் 2 சதவீதமே இந்தப் பெருங்கொடை. இது என்ன பம்மாத்தோ? அதேவேளை இஸ்ரவேலினதும் உக்ரெய்னினதும் பாதுகாப்புக்காக 105 பில்லியன் டொலர்களை அனுப்ப அமெரிக்கா ஆயத்தமாகிறது. அதுமட்டுமா? 2020 வரை இஸ்ரவேல் மட்டும் 146 பில்லியன் டொலர்களை அமெரிக்க நிதியுதவியாகப் பெற்றுக் கொண்டுள்ளது. இது அமெரிக்க வரியிறுப்பாளர்களின் பணம். அமெரிக்கா எவ்வாறு இஸ்ரவேலின் வலைக்குள் சிக்கியுள்ளது என்பதற்கு இதைவிடவும் ஒரு சான்று வேண்டுமா?
மக்களின் ஆதரவில்லாமல் அரசோச்சும் அரபு நாடுகளின் தலைமைத்துவங்கள் நிலைத்திருக்குமட்டும் அத்தலைமைகள் அமெரிக்காவுக்குக் கும்பிடுபோட்டுக் கொண்டே இருக்கும். அதனால் காசா முதலிலும் முழு பலஸ்தீனமும் பின்னரும் அகன்ற இஸ்ரவேலாக மாறுவதை தவிர்க்க முடியாது. அவ்வாறு மாறும்போது அங்கே பலஸ்தீனர்கள் இருக்கமாட்டார்கள். ஏதோ உலகைத் திருப்திப்படுத்துவதற்காக அவர்களில் ஒரு சிறு பகுதியினர் அங்கு வாழ நேரிட்டால் அவர்கள் இஸ்ரவேலின் அப்பார்தைற் என்ற ஒரு இனவெறி ஆட்சியிலேதான் வாழ்வார்கள். ஆகவே பலஸ்தீனத்துக்கான போராட்டம் வெற்றிபெற வேண்டுமானால் அது வேறொரு வடிவம் பெறவேண்டும். அது என்ன வடிவம் என்பதை வாசகர்களின் சிந்தனைக்கே இக்கட்டுரை விட்டுவைக்கின்றது.- Vidivelli