ஏ.ஆர்.ஏ. பரீல்
இஸ்ரேல் 1948ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஓர் நாடாகும். இதற்கு முன்பு இவ்வாறான ஒரு நாடு இருக்கவில்லை. யுத்தத்துக்கென்றே இந்நாடு உலகில் உருவாக்கப்பட்டது என்று கூறலாம்.
யுத்தத்துக்கும் சமாதானத்துக்கும் காலம் இருக்கிறது என்றாலும் இது யுத்தத்துக்கான காலம் இது என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெலன்ட் கருத்து வெளியிட்டுள்ளார். இந்தக் கருத்து மூலமாக இஸ்ரேலுக்கு யுத்தம் தொடர்பில் இருக்கும் இலட்சியம் என்ன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் கடந்த 9ஆம் திகதி காஸா பிராந்தியத்தை முழுமையாக மூடி விடும்படி உத்தரவிட்டார். எரிபொருள், நீர் மற்றும் மின்சாரம் என்பனவற்றையும் அதாவது இவற்றின் விநியோகத்தை முழுமையாக நிறுத்தி விடும்படியும் அவர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலைமை இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினை திகதியொன்று குறிப்பிட முடியாத அளவுக்கு நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.
நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினை உலக நாடுகளில் பல்வேறு அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. ஏற்கனவே பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள இலங்கை மேலும் பொருளாதார ரீதியில் மாத்திரமல்ல பல வழிகளிலும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
தற்போது உலக சந்தையில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரித்துள்ளன. இஸ்ரேலில் குறிப்பிட்டளவு இலங்கையர்கள் தொழில் புரிகிறார்கள். அவர்கள் குறிப்பிடத்தக்களவு அந்நிய செலாவணியை இலங்கைக்கு ஈட்டித் தருகிறார்கள். இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த நிலைமை காரணமாக அங்கு தொழில்புரியும் இலங்கையர்களின் தொழில்கள் இழக்கப்படலாம்.
இலங்கைக்கு பொருளாதார ஆபத்து
இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த நிலைமை காரணமாக உலக சந்தையில் எண்ணெய் விலை பீப்பாய் 100 டொலர் வரையில் அதிகரிக்கலாம். இந்நிலையில் மீண்டு வரும் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் சரிவு நிலையினை எய்தலாம். அல்லது ஒரே இடத்தில் தரித்து நிற்கலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞான கல்வி பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
யுத்த நிலைமை காரணமாக தற்போதும் எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 5 டொலர் வரையில் அதிகரித்துள்ளது. தற்போது எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 100 டொலராகக் காணப்படுகிறது. எதிர்வரும் மாதங்களில் இவ்விலை மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
எண்ணெய் விலை அதிகரிப்பு ஏற்பட்டால் அதன் காரணமாக நாட்டின் பண வீக்கம் மீண்டும் எயர்வடையலாம். இதனால் கொவிட் 19 தொற்று காரணமாகவும் நாட்டின் பொருளாதார பிரச்சினை காரணமாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் துன்பங்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்தார்.
இஸ்ரேலில் தற்போது பணிபுரியும் சுமார் 20 ஆயிரம் இலங்கையர்கள் அங்கு யுத்த நிலைமை காரணமாக இலங்கை திரும்ப வேண்டியேற்பட்டால் அவர்கள் நாட்டுக்கு பங்களிப்புச் செய்த அந்நிய செலாவணி இல்லாமற் போவதுடன் அவர்கள் வேலை இழந்திருப்பது நாட்டுக்குப் பாரிய பிரச்சினையாக அமையும். இஸ்ரேலில் மாத்திரமல்ல மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் தொழில்களுக்குக் கூட பாதிப்புகள் ஏற்படலாம். மத்திய கிழக்கு நாடுகளுக்கு புதிதாக வேலைவாய்ப்பு பெற்றுச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைவடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலைமையினாலும் இலங்கையின் அந்நிய செலாவணிக்குப் பாதிப்பு ஏற்படலாம்.
யுத்த நிலைமை காரணமாக உலக சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கான கேள்வி குறைவடையும் வாய்ப்பும் உள்ளது. இதனால் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் குறைவடையும். இந்த யுத்த நிலைமை காரணமாக இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைவடையலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கள்
1948ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டதும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கியது. அமெரிக்காவின் அனுசரணையின் கீழ் இஸ்ரேல் படிப்படையாக வளர்ச்சி கண்டது. குறிப்பாக அதன் இராணுவ பலம் மிகவும் பழைமைவாய்ந்த நாடுகளைப் பின்தள்ளி அதிகரித்தது. இராணுவ பலத்தை அதிகரித்துக் கொண்ட இஸ்ரேல் தனது நாட்டின் எல்லையினை மேலும் அதிகரித்துக் கொள்ளத் திட்டமிட்டது. இதனடிப்படையில் 1967இல் சிரியா, ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் யுத்தம் செய்து ஜோர்தானின் மேற்குக் கரை என்று இன்று அழைக்கப்படும் பிரதேசத்தையும் எகிப்தின் காஸா பகுதியையும் சிரியாவின் கோலான் மலைப் பிரதேசத்தையும் கைப்பற்றியது. அன்று முதல் இஸ்ரேல் இப்பகுதிகளை இராணுவ மயமாக்கல் மூலம் ஆட்சி செய்தது. என்றாலும் 2005ஆம் ஆண்டளவில் நோர்வே நாடு முன்வந்து மேற்கொண்ட சமாதான முயற்சியின் பயனாக காஸா மற்றும் மேற்குக் கரை பிரதேசத்தின் நிர்வாக அதிகாரம் பலஸ்தீன மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் 2007இல் நடைபெற்ற தேர்தலையடுத்து இப்பிரச்சினை புதியதோர் திசைக்கு மாற்றம் கண்டது. தேர்தலில் ஹமாஸ் அமைப்பு வெற்றியீட்டியது. ஈரானின் ஆதரவுடைய ஹமாஸ் அமைப்பு காஸா பகுதியின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதன் பின்பு இஸ்ரேல் காஸாவுக்கும் தனது நாட்டுக்கும் இடையிலான தொடர்பினை பூகோள ரீதியில் தடை செய்தது. காஸாவை தரைவழியாக, கடல் வழியாக, வான் வழியாக முழுமையாக மூடியது.
இரண்டு மில்லியன்களுக்கும் அதிகமான மக்கள் வாழும் காஸா பிராந்தியம் மூடப்பட்டதனையடுத்து 365 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட இந்த சிறிய பிரதேசம் திறந்தவெளி சிறைச்சாலை போன்றாகியது.
காஸா பிரதேசத்தை ஆளும் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்குமிடையில் தற்போது உருவாகியுள்ள யுத்த நிலைமை உட்பட தற்போது வரை ஐந்து தடவைகள் யுத்த நிலைமைகள் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ் விவகாரம் தொடர்பில் அரசின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தியுள்ளார். முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலோ அல்லது ஹமாஸ் இயக்கமோ மனித உரிமைகளை மீறுவதற்கோ பயங்கரவாத நடவடிக்கைகளை பரப்புவதற்கு முயற்சிக்குமென்றால் இலங்கை எதிர்ப்பு வெளியிடும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த யுத்த நிலைமை காரணமாக இலங்கை எதிர்கொள்ள வேண்டியேற்படும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார் என்பது இதிலிருந்து தெரியவருகிறது. இந்நிலைமை காரணமாக இலங்கை எரிபொருள் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என ஜனாதிபதி குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.
எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 100 டொலர்கள் வரை அதிகரிக்கலாம் எனவும் ஜனாதிபதி எதிர்வு கூறியுள்ளார். உலக எண்ணெய் உற்பத்தியில் பெருமளவு மத்திய கிழக்கு நாடுகளிலே மேற்கொள்ளப்படுகிறது. யுத்த நிலைமை உருவாகும் போதெல்லாம் இந்நாடுகளில் உற்பத்தி குறைவடைவதால் எண்ணெய் விலை அதிகரித்து வந்துள்ளமை நோற்கப்பாலதாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மைக் காலமாக பலஸ்தீனர்களின் பிரச்சினை தீர்க்கப்படாமை குறித்து சர்வதேச மாநாடுகள் பலவற்றில் கருத்து வெளியிட்டிருந்தார். அண்மையில் ஜனாதிபதி தனது நிவ்யோர்க் விஜயத்தின் போது பலஸ்தீன் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க உலகம் தவறியுள்ளதென குறிப்பிட்டிருந்தார். பலஸ்தீன பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ஐ.நா.வின் 78ஆவது மாநாட்டிலும் உரையாற்றியிருந்தார். பலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு பெற்றுக் கொடுக்க முடியாமற்போயுள்ளது. இதற்கான தீர்வுக்கு திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.
அழிக்கப்பட்டு வரும் காஸா
தற்போது காஸா பிராந்தியத்தில் ஓர் யுத்த நிலைமையையே அவதானிக்க முடிகிறது. இஸ்ரேல் ஜெட் விமானங்கள் பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல் மேற்கொள்ளும் ஆயிரம் இறாத்தல் அல்லது இரண்டாயிரம் இறாத்தல் நிறைகொண்ட குண்டுத் தாக்குதல்களால் காஸாவில் கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன. குண்டுத் தாக்குதல்கள் காஸாவின் சிவில் சமூகத்தின் பாதுகாப்பினைக் கருத்திற் கொள்ளாது இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படுகிறது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதலுக்காக அப்பாவி சிவிலியன்கள் இஸ்ரேலினால் இலக்கு வைக்கப்படுவது மனித உரிமை மீறலாம்.
இந்தப் பிரச்சினையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் பலஸ்தீனத்துக்கு எதிராகவும் களமிறங்கியுள்ளது. அமெரிக்காவின் பாரிய யுத்தக் கப்பலான ஜெரால்ட் போர்ட் தற்போது காஸா பிராந்தியத்துக்கு அண்மித்து நங்கூரமிடப்பட்டுள்ளது. அக்கப்பலில் 5000 இராணுவ வீரர்கள் நிலை கொண்டுள்ளனர். கப்பலில் தாக்குதல்கள் விமானங்கள் மற்றும் யுத்த தளபாடங்கள் தரித்து வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை சீனாவும் அமெரிக்காவும் இரு தரப்பும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்தி சமாதானமடைய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன. ஐ.நாடுகள் சபைாயின் பொதுச் செயலாளரும் இதனையே வலியறுத்தியுள்ளார்.
தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்
இஸ்ரேலிய இாணுவம் காஸா மீது தரை, வான் மற்றும் கடல் வழியாக தாக்குதல்களை மேற்கொள்ள தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்கில் உருவாகியுள்ள இந்நிலைமை இலங்கைக்கு மாத்திரமல்ல முழு உலகுக்கும் சவாலாக மாறியுள்ளது.
தாக்குதலுக்கான நேரவரையறை எதனையும் இஸ்ரேல் இதுவரை குறிப்பிட்டுக் கூறவில்லை. என்றாலும் காஸா பிராந்தியம் எச்சமயத்திலும் கடும் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடலாம் என அஞ்சப்படுகிறது. இஸ்ரேல் வட காஸாவிலுள்ள 1.1 மில்லியன் பலஸ்தீனர்களை தெற்கு பிராந்தியத்துக்கு இடம்பெயர உத்தரவிட்டதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை காஸாவானது நரக படுகுழியொன்றுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவுவதற்காக தனது இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலொன்றினை அப்பிராந்தியத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. யு.எஸ்.எஸ். டுவைட்டி எய்ஸென் ஹோவர் எனும் இந்தக் கப்பல் ஏற்கனவே அப்பிராந்தியத்தை வந்தடைந்துள்ள ஜெரால்ட் ஆர்போர்ட் விமானத் தாங்கி கப்பலுடன் இணைந்து செயற்படவுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கன் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும் இடையிலான மோதல்கள் குறித்து சவூதி அரேபிய ரியாத்தில் அந்நாட்டு இளவரசர் மொஹமட் பின் சல்மானை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இப்பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக அமைந்ததென பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஈரானிய வெளிநாட்டமைச்சர் ஹொஸைன் அமீரப்துல்லாஹியன் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனி யெஹ்ஹை டோகாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஐ.ம.ச. எச்சரிக்கை
பலஸ்தீன் – இஸ்ரேல் யுத்தத்தை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் இலங்கையில் பலஸ்தீனம் குறித்து தவறான சித்தரிப்புகளை சமுக மயப்படுத்தி முயற்சிக்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகள் தீவிரமடைந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கைப் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மனுஷ
இஸ்ரேல் – ஹமாஸ் மோதலால் எரிபொருளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்துகொண்டு எரிபொருளை களஞ்சியப்படுத்தி வைக்குமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை ஜனாதிபதி பணித்துள்ளார் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் சுமார் எட்டாயிரம் இலங்கையர்கள் பணி புரிகின்றனர். அத்துடன் காஸாவிலும் சில குடும்பங்கள் இருக்கின்றன. இவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அவர்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டுமென்றால் அதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.- Vidivelli