சிராஜ் மஷ்ஹூர்
காஸாவின் நிலைமை கைமீறி விட்டது.
நேற்று முன்தினம் இரவு அல் அஹ்லி வைத்தியசாலையை இஸ்ரேல் தாக்கியதில், இதுவரை 500 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சில தகவல்கள் 1000 என்று சொல்கின்றன. இன்னும் பல நூற்றுக் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலால் முழு உலகும் அதிர்ந்து போயுள்ளது.
தெற்கு காஸாவுக்கு இடம்பெயருமாறு சொல்லிவிட்டு, அங்கும் வான்வழித்தாக்குதல் நடத்துகிறார்கள். இதை யாரிடம் சொல்லி அழுவது? அங்கு இடம்பெற்ற 3 தாக்குதல்களில் மட்டும், இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மனிதாபிமான வழிப்பாடு என்பது வெறும் மாயைதானா?
தெற்கிலுள்ள கான் யூனிஸ் பகுதியில் மக்கள் வீதியில் படுத்துறங்குகின்றனர். எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. தனது வீட்டில் மட்டும் 90 பேர் தஞ்சம் புகுந்துள்ளார்கள் என்று ஒருவர் சொல்கிறார். மக்கள் தினமும் குழந்தைகளுக்கு உணவு தேடி அலைந்த வண்ணம் உள்ளனர்.
கைமீறிய இந்த அவல நிலை காரணமாக, நடப்பது நடக்கட்டும் என்று, மக்கள் பலர் மீண்டும் வடக்கிலுள்ள தங்களது வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அசுத்தமான குடிநீரை அருந்துவதால் கொலரா நோய் ஏற்படும் அபாயம் தொன்றியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) சொல்கிறது. UNWRA எனப்படும் பலஸ்தீனுக்கான ஐ.நா.நிறுவனம் நிர்வகிக்கும் பாடசாலையைத் தாக்கி மக்களைக் கொல்கிறார்கள். இது அகதி முகாம் என்பது வெட்ட வெளிச்சமான விடயம்.
தான் வீதியில் நாயைப் போல் தாகித்து இறந்து போவதை விட, ‘கண்ணியமாக- கௌரவமாக’ இறந்து போவதையே விரும்புவதாக ஒரு வயோதிபர் சொல்றார்.
பல நேரலைக் காட்சிகளைப் பார்க்க முடியாமல் நெஞ்சு விம்முகிறது; கண்கள் குளமாகின்றன.
இந்தப் பாரிய மனிதாபிமான நெருக்கடியைச் சமாளிப்பது எப்படி?
இது பாரிய இன அழிப்பு (Genocide) என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. இது அப்பட்டமான போர்க்குற்றம் (War Crime).
அல்-அஹ்லி வைத்தியசாலைத் தாக்குதலை ஐ.நா.செயலாளர் நாயகம் கண்டித்துள்ளார். ‘கண்டனம்’ (Condemn) என்ற சொல்லை, இபோதுதான் அவர் முதல் தடவையாக பயன்படுத்தியுள்ளார். எவ்வளவு பெரிய முரண்நகை- எவ்வளவு பக்கச் சார்பு இது.
இந்த ராஜதந்திர நடிகர்கள் கண்டிப்பதற்கு, 1000 உயிர்கள் பலியாக வேண்டியிருக்கிறது பாருங்கள்.
அரபுலகம் கொதித்துக் கொண்டிருக்கிறது.ஜோர்தானில் மக்கள் பெருந்திரளாக வீதியில் இறங்கி விட்டார்கள். இஸ்ரேலிய தூதுவராலயத்தை நோக்கிச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளால் கலைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்குள்ள மக்களுள் பெருந்தொகையானோர் பலஸ்தீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்தின் தலைநகரான கெய்ரோவிலும் பிரமிட் நகரான ஜீஸாவிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
இவ்விரு நாடுகளுமே பலஸ்தீனுடன் (மேற்குக் கரை மற்றும் காஸா போன்ற) தரைவழி எல்லைகளைக் கொண்டவை. அங்கு நிலமை கட்டுமீறிக் கொண்டிருக்கிறது.
இஸ்ரேலின் அடாவடித்தனங்கள் இந்தளவு தீவிரமடைந்திருப்பது ஏன்?
அவர்களது அராஜகத்தை எப்போதும் உலக அரங்கில் நியாயப்படுத்தும் உலகப் பொலிஸ்காரர்களின் தலைவர் இஸ்ரேலுக்கு வந்துள்ளமையும் கவனிக்கத் தக்கது. இதற்குள் பல அரசியல் சுழிப்புகள் உள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வருகையை, உலகம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது.
ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. லெபனானிலுள்ள ஈரான் சார்பு போராளிகள் ஏற்கனவே வட இஸ்ரேலை சிறிய அளவில் தாக்கிக் கொண்டிருக்கின்றனர். இஸ்ரேலும் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. லெபனான், சிரியா ஊடாக புதிய போர்க்களங்கள் வியாபிப்பதும் ஈரானின் தலையீடும், இந்த யுத்தத்தை பலமுனைப் போராக மாற்றிவிடும் அபாயத்ததைச் சுட்டிக்காட்டுகின்றன.
ஜோர்தானின் தலைநநரான அம்மானில் ஜோ பைடன் இன்று எகிப்தின் சீஸியையும் பலஸ்தீன மஹ்மூத் அப்பாஸையும் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. அந்த சந்திப்பை ஜோர்தான் ரத்து செய்துள்ளது. வைத்தியசாலைத் தாக்குதலின் எதிரொலியே இது.
களநிலவரம் புதுப்புது வடிவங்களை எடுத்து வருகிறது. மத்திய கிழக்கின் தலைவிதி எப்படி அமையப் போகிறது என்பதை முழு உலகும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது.
கட்டாரும் துருக்கியும் முன்னெடுத்து வரும் ராஜதந்திர நடவடிக்கைகள் என்ன விளைவைத் தரப் போகின்றன? ஐ.நா.பாதுகாப்புச் சபை போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்குமா? ரஷ்யாவும் சீனாவும் கொண்டிருக்கும் பலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு உலக அரங்கில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் எப்படி அமையும்?
மேற்கு நாடுகளில் மக்கள் வீதிக்கு இறங்கி நியாயம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள அரசாங்கங்கள் இரண்டக நிலையில் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. மனிதாபிமானம், மனித உரிமை, யுக்ரைன் யுத்தம் ஆகியவற்றில் அவர்கள் கொண்டிருக்கும் இரட்டை முகம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டிய கட்டாய நிலமை உருவாகியுள்ளது.
பலஸ்தீன விவகாரம் இப்போது ஒரு தீர்மானகரமான கட்டத்தை அடைந்திருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
போரின் கோர வெறிக்குள் அகப்பட்டிருக்கும் அப்பாவி மக்களின் வாழ்வில் விடிவு வேண்டும்; ஒரு தற்காலிக ஆறுதலாவது வேண்டும். ஒரு துண்டு ரொட்டியை, ஒரு சொட்டுத் தண்ணீரை நிம்மதியாக உண்ணவும் பருகவும் ஒரு இடைவெளி தேவை.
கொல்லப்பட்ட, காயமுற்ற, வீடுகளை இழந்த, உள்ளம் உடைந்து நொறுங்கிப் போயிருக்கிற- அத்தனை உறவுகளிடமும் சுற்றத்தாரிடமும் நண்பர்களிடமும் சென்று கண்ணீர் விட்டு அழ வேண்டும்.
யார் யாரை ஆறுதல்படுத்துவது?
மரணம் மலிந்த வீடுகளில்,போக்கிடமின்றி மக்கள் அலைந்து திரியும் வீதிகளில்தான் நம் மனமும் அலைகிறது.
போர் வேண்டாம். பேரழிவு வேண்டாம்.
அந்த மக்களுக்கு நீதிதான் வேண்டும்; இழந்த தாயகத்தில் சுயகௌரவத்துடன் கூடிய நிம்மதியான வாழ்க்கைதான் அவர்களுக்கு வேண்டும். அவர்களது சொந்த மண் அவர்களுக்கு திரும்பக் கிடைக்க வேண்டும்.
எது அந்த சிவப்புக் கோடு?
சகிப்புத் தன்மையின் அந்த எல்லைக் கோடுதான் என்ன?
-Vidivelli