முஸ்லிம்களுக்கு எதிரான திகன வன்முறைகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை இறுதி அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை
தகவலறியும் உரிமை சட்டத்தின் ஊடாக விடயம் வெளிவந்தது
(றிப்தி அலி)
முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு திகன பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் உத்தியோகபூர்வ இறுதி அறிக்கை இதுவரை வெளியிடப்படாத விடயம் தற்போது தெரியவந்துள்ளது.
தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் கடந்த ஓகஸ்ட் 31ஆம் திகதி வழங்கப்பட்ட உத்தரவினை அடுத்தே இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
கண்டி மாவட்டத்தின் திகன பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகள் பல நாட்கள் நீடித்தன. இதனால் முஸ்லிம் இளைஞரொருவர் கொல்லப்பட்டதுடன், பல மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டன. இதனால்,சமூக ஊடகங்களுக்கு நாடளாவிய ரீதியில் தற்காலிக தடை விதிக்கப்பட்டதுடன், கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டது.
இந்த வன்முறைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. அது மாத்திரமல்லாமல், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கண்டி மாவட்டத்திற்கு கள விஜயம் மேற்கொண்டதுடன், பொது மக்களிடமிருந்து சாட்சியங்களையும் பதிவுசெய்தனர்.
எனினும், குறித்த வன்முறைகள் தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
இவ்வாறான நிலையில், கொழும்பு – 03 இனைச் சேர்ந்த ஜீ. பாலச்சந்திரன், குறித்த விசாரணை அறிக்கையின் பிரதியினை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தகவல் கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். இதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தகவல் அதிகாரியிடமிருந்தோ, குறித்தளிக்கப்பட்ட அதிகாரியிடமிருந்தோ எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை.
இதற்கு எதிராக தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் கடந்த பெப்ரவரி 02ஆம் திகதி பாலச்சந்திரன் மேன் முறையீடு செய்தார். இது தொடர்பான விசாரணைகள் கடந்த 07.06.2023ஆம் மற்றும் 31.08.2023ஆம் திகதிகளில் இடம்பெற்றன. இதன்போது, குறித்த விசாரணை அறிக்கையின் பிரதியினை வழங்குவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஒப்புக்கொண்டது. இதன் பிரகாரம், திகன வன்முறை தொடர்பான விசாரணைகளின் வரைபு அறிக்கையின் பிரதியினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல் கோரிக்கையாளருக்கு வழங்கியுள்ளது.
இதேவேளை, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கும் திகன வன்முறை தொடர்பான விசாரணைகளின் வரைபு அறிக்கையினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. தற்போது தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள வரைபு அறிக்கையினை https://www.rticommission.lk/web/images/pdf/Release_Info2023/Digana_Riots-HRCSL_Inquiry_Report_Draft-Version.pdf எனும் இணைப்பின் ஊடாக பார்வையிட முடியும்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ரஞ்சித் உயாங்கொடவினை தொடர்புகொண்டு வினவிய போது, திகன வன்முறை தொடர்பான விசாரணை அறிக்கை இதுவரை ஆணைக்குழுவினால் நிறைவு செய்யப்படாததை உறுதிப்படுத்தினார். “குறித்த விசாரணை அறிக்கை விரைவில் நிறைவு செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார். – Vidivelli