பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடிக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்
பலஸ்தீன விவகாரம் குறித்து உலமா சபை அறிக்கை
(ஏ. ஆர்.ஏ.பரீல்)
‘பலஸ்தீன் நெருக்கடிக்கான தீர்வுகள் பேச்சுவார்த்தை மூலம் ஆராயப்பட்டே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இரத்தம் மற்றும் அப்பாவி மனித உயிர்களை விலையாக வைத்து பிரச்சினையைத் தீர்க்க முடியாது’ என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பலஸ்தீன் – இஸ்ரேல் மோதல் பற்றி சர்வதேச சமூகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி மற்றும் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘பலஸ்தீன் இஸ்ரேல் மோதல் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொண்டுள்ளதுடன் பல மில்லியன் மக்களை தங்களது இருப்பிடங்களிலிருந்தும் இடம் பெயரச் செய்திருக்கிறது.
உலகிலுள்ள அனைத்து நாடுகளும் இன, மத வேறுபாடின்றி மக்களிடையே நிலையான அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டிய அவசியத்தில் உள்ளன. மனித இனத்தின் வரலாறு நெடுகிலும் அடக்கு முறையும், அநீதியும் மனித குலத்திற்கு எந்தவொரு நன்மையையும் வெற்றியையும் பெற்றுக்கொடுக்கவில்லை. மாறாக நாடுகளை அழித்து நாசம் செய்து பின்னடைவையும், தோல்வியையுமே ஏற்படுத்தியிருக்கிறது.
அந்தவகையில் பலஸ்தீன் நெருக்கடிக்கான தீர்வுகளும் பேச்சுவார்த்தை மூலமே ஆராயப்பட வேண்டும். இரத்தம் மற்றும் அப்பாவி மனித உயிர்களை விலையாக வைத்து இந்த நிலைமையைத் தீர்க்க முடியாது. பாகுபாடு மற்றும் வெறுப்புக்கு எதிராக எழுந்து நின்று இந்தப் பிரச்சினையை பாரபட்சமற்ற மனிதாபிமான முறையில் அணுகி நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வது அனைத்து சமூகங்களினதும் பொறுப்பாகும். நாம் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் படி மனித குலத்தின் நல்வாழ்வுக்காக இவ்விவகாரம் தொடர்பில் மனிதாபிமான மற்ற முறையில் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்வோம். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக. நிலையான அமைதியையும் நல்லிணக்கத்தையும் செழிப்பையும் அருள்வானாக ’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli