(ஏ.ஆர்.ஏ. பரீல்)
காஸா பிராந்தியத்தின் மீது தரைவழி தாக்குல்களை மேற்கொள்வதற்காக இஸ்ரேல் அப்பிராந்தியத்தில் வாழும் பொதுமக்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ள நிலையில் காஸாவின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகரும் பொது மக்கள் மத்தியில் 17 இலங்கையர்களும் இருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
17 இலங்கையர்களையும் எகிப்தின் ‘ரபா’ எல்லை நுழைவாயில் ஊடாக எகிப்துக்குள் வரவழைத்துக் கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை இஸ்ரேலிலிருந்து காணாமல் போயிருந்த இலங்கைப் பெண் அனுலா ஜயதிலக உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவரது உடல் இரு தினங்களுக்குள் இலங்கை தூதுவராலயத்துக்கு கையளிக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
அத்தோடு ஜோர்தானிலிருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் உட்பிரவேசித்த இலங்கைப் பெண்கள் இருவரையும் ஜோர்தான் எல்லை காவல் படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவர் தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை எனவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், யுத்தத்திலிருந்தும் பாதுகாத்துக் கொள்வதற்காக இஸ்ரேலின் அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களில் பாதுகாப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் மேற்கொள்ளப்படும் அபாய அறிவிப்பு (சைரன்) ஒலி எழுப்பப்பட்டதும் மக்கள் குறிப்பிட்ட பாதுகாப்பு நிலையத்துக்கு செல்கின்றனர்.
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் இலங்கை திரும்ப வேண்டிய அவசியம் இல்லை. என்றாலும் எவராவது இலங்கை திரும்ப விரும்பினால் விமான பயணச் சீட்டுடன் உரிய வழிமுறையில் திரும்புவதற்குத் தடையில்லை.
இஸ்ரேலுக்கு ஹமாஸ் நடத்திய தாக்குதலையடுத்து காணாமற் போயுள்ள இலங்கையர் இருவரும் ஹமாஸ் போராளிகளால் பணயக் கைதிகளாக கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி பரவியுள்ளது. இது தொடர்பில் தூதுவர் மட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்து கொள்வதற்காக ஹமாஸ் இயக்கத்தினால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை வழங்குமாறு ஹமாஸ் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.- Vidivelli