எம்.ஐ.அப்துல் நஸார்
நோயாளிகளாலும் இடம்பெயர்ந்த மக்களாலும் நிறைந்திருந்த காஸா நகர வைத்தியசாலை மீது கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் சுமார் 500 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் முழு உலகையுமே உலுக்கியுள்ளது.
கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி தெற்கு இஸ்ரேலிய பகுதிக்குள் ஊடுருவி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீது இஸ்ரேல் தொடர் குண்டுவீச்சு தாக்குதலை ஆரம்பித்ததிலிருந்து காஸாவில் இடம்பெற்ற மிகக் கொடூரமான தாக்குதல் இதுவாகும்.
காஸா பள்ளத்தாக்குப் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸுடனான போரில் இஸ்ரேலுக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவிருந்த நிலையில் இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
அரபு நாடுகளான ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உடனடியாக இத் தாக்குதலைக் கண்டித்துள்ளன. இந்தத் தாக்குதலை கொடூரமான மனிதப் படுகொலை என பலஸ்தீனப் பிரதமர் வருணித்துள்ளதோடு இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் நாடுகளும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அல்-அஹ்லி அல்-அரபி வைத்தியசாலையின் மீதே வான்வழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், இத் தாக்குதலில் சுமார் 500 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் காஸாவின் சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து வந்திருந்த மக்களே இத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுள் பெரும்பான்மையினராவர். இது தவிர நோயாளிகள், பெண்கள் மற்றும் சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
‘ஆங்காங்கே ஏராளமான சிதறிய மற்றும் துண்டிக்கப்பட்ட உடல்கள், இரத்த வெள்ளத்தில் காணப்பட்டன’ என்று ஹமாஸின் சிரேஷ்ட உறுப்பினர் இஸ்ஸத் எல்-ரேஷிக் தெரிவித்தார்.
அல் அஹ்லி வைத்தியசாலையானது அங்கிலிக்கன் கிறிஸ்தவ தேவாலயத்தினால் நிதியளிக்கப்பட்டு நடாத்தப்படுவதாகும். இவ் வைத்தியசாலைக்குள் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் உள்ளன. இத் தாக்குதலில் தேவாலயத்தில் தங்கியிருந்து கிறிஸ்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
அல்-அஹ்லி அல்-அரபி வைத்தியசாலையில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்தவர்களை ஏற்றிய நோயாளர் காவு வண்டிகள் மற்றுமொரு காஸா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் காணொளிகள் தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடாத்தப்படாது என அனைவரும் நம்பியிருந்தனர். எம்மிடம் இருந்த மருந்துகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. இத் தாக்குதலால் இருந்த மருந்துகளும் அழிந்துவிட்டன. சர்வதேச சமூகம் எமக்கு உடனடியாக மருந்துகளை அனுப்ப வேண்டும். மின்சாரம் இல்லாததால் காயமுற்றவர்களுக்கு சிகிச்சைகளை வழங்க முடியாதுள்ளது. தண்ணீரும் இல்லை.
இந்த தாக்குதல் விவரங்கள் எதுவும் தமக்குத் தெரியாது எனவும், ஆனால் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. அத்துடன் இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பு இஸ்ரேலை நோக்கி வீசிய ஏவுகணையே குறிதவறி காஸா வைத்தியசாலையில் வீழ்ந்ததாக தற்போது இஸ்ரேல் கதைகளை பரப்பி வருகிறது. எனினும் இதனை சர்வதேச கண்காணிப்பு அமைப்புகளும் மறுத்துள்ளதுடன் இத்தாக்குதலுக்கு இஸ்ரேலே பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
இதுவரை இஸ்ரேலுக்கு இராணுவ உதவியுடன் ஐந்து C-17 ரக விமானங்களை அனுப்பியுள்ள பென்டகன், ‘உதவி வழங்கப்படுவதில் எந்த முன்நிபந்தனைகளும் இல்லை’ என மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ‘இஸ்ரேல் போன்ற அனைத்து ஜனநாயக நாடுகளும் போர்ச் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்.’ எனவும் தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்த மக்களுக்கான தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டு வரும் தமது பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் பலஸ்தீனிய அகதிகள் நிறுவனம் UNRWA கடந்த செவ்வாயன்று தெரிவித்தது. ‘இது மூர்க்கத்தனமானது என்பதோடு பொதுமக்களின் உயிர்களை துச்சமாக மதிப்பதையும் அப்பட்டமாகக் காட்டுகிறது. காஸாவில் ஐக்கிய நாடுகள் சபையின் இடங்கள் உட்பட காஸாவில் எந்த இடமும் பாதுகாப்பானதல்ல’ எனவும் UNRWA சமூக ஊடகப் பதிவொன்றில் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 7 ஆந் திகதியன்று ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய நகரங்கள் மற்றும் கிப்புட்ஸெஸ் பகுதிகளில் நுழைந்து 1,300 க்கும் அதிகமானோரைக் கொன்றதிலிருந்து, இஸ்ரேலின் 11 நாள் குண்டுவீச்சுத் தாக்குதலில் குறைந்தது 3,000 பேர் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெருமளவில் நகரமயமாக்கப்பட்ட காஸாவின் சில பகுதிகளை விமானத் தாக்குதல்களால் இஸ்ரேல் தரைமட்டமாக்கியுள்ளது, அதில் குடியிருந்த 2.3 மில்லியன் மக்களுள் அரைவாசிக்கும் மேற்பட்டோரை அவர்களது வீடுகளில் இருந்து விரட்டியடித்துள்ளதோடு உணவு, எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்கள் அங்கு செல்வதையும் தடுத்துள்ளது.
உயிரிழப்புக்கள் மற்றும் சொத்தழிவுகளுக்கு மத்தியில், தரை வழி படையெடுப்பினை மேற்கொள்ளும் எதிர்பார்ப்பில் காஸாவின் எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய படைகள் மற்றும் டாங்கிகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ளது.
காஸாவிற்கான அத்தியவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் ஏராளமான லொறிகள் செவ்வாயன்று எகிப்தில் உள்ள ரபா எல்லைக் கடவையை நோக்கிச் சென்றன, இது இஸ்ரேலிய கட்டுப்பாட்டிற்கு வெளியே காணப்படும் ஆக்கிரமிக்கப்பட்டு பகுதிக்கான ஒரேயொரு வழியாகும். எனினும், அதனூடாக நுழைய முடியும் என்பதற்கான தெளிவான அறிகுறி எதுவும் தற்போது தென்படவில்லை.
வைத்தியரின் வாக்குமூலம்
காஸாவில் பணியாற்றும் டாக்டர் ஸியாத் ஷெஹாதாஜ் அல் ஜெஸீராவுக்கு வழங்கிய நேர்காணலில் இச் சம்பத்தை பின்வருமாறு விபரித்தார்:
‘‘இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் காரணமாக தமது வீடுகளிலிருந்து வெளியேறிய மக்கள் பாதுகாப்பு கருதியே வைத்தியசாலை வளாகத்தில் தங்கியிருந்தனர். சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடாத்தப்படாது என அனைவரும் நம்பியிருந்தனர். எம்மிடம் இருந்த மருந்துகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. இத் தாக்குதலால் இருந்த மருந்துகளும் அழிந்துவிட்டன. சர்வதேச சமூகம் எமக்கு உடனடியாக மருந்துகளை அனுப்ப வேண்டும். மின்சாரம் இல்லாததால் காயமுற்றவர்களுக்கு சிகிச்சைகளை வழங்க முடியாதுள்ளது. தண்ணீரும் இல்லை. நாம் இப்போது ஒவ்வொரு நிமிடமும் மரணித்துக் கொண்டிருக்கிறோம். காஸா மீது தாக்குதல் நடத்தப் போவதாகவும் தெற்குப் பகுதிக்குச் செல்லுமாறும் இஸ்ரேல் அறிவித்திருந்தது. இதனையடுத்து இலட்சக்கணக்கான மக்கள் காஸாவின் தெற்குப் பகுதி மற்றும் ரபா, கான் யூனிஸ் பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்தனர். எனினும் இப் பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தினர். எனவே காஸாவின் எந்தப் பகுதியும் இப்போது பாதுகாப்பில்லை. தெற்குப் பகுதியில் அமையப் பெற்றிருந்த குவைத் வைத்தியசாலையையும் குண்டுவீசித் தகர்த்துவிட்டார்கள்’’ என்றார்.
மொத்த உயிரிழப்புகள்
காஸா மீது கடந்த 12 நாட்களாக இஸ்ரேல் நடாத்திய வான் தாக்குதல்களில் நேற்று மாலை வரை 3478 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் 1000 இற்கு மேற்பட்ட சிறுவர்களும் 1032 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அதேபோன்று சுமார் 12500 பலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.
காஸாவுக்கு வெளியே மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலம் ஆகிய பகுதிகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 18 சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் உள்ளடங்கலாக 62 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 1300 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இதனிடையே இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த 7 ஆம் திகதி நடாத்திய தாக்குதல்களில் சுமார் 1400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 947 பொது மக்களும் 299 இராணுவத்தினரும் 54 பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவர். மேலும் 4121 பேர் காயமடைந்துள்ளனர்.
லெபனான் மீது இஸ்ரேல் நடாத்திய வான் தாக்குதலில் அங்கும் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பொது மக்களும் 9 லெபனான் போராளிகளும் 5 பலஸ்தீன் போராளிகளும் அடங்குவர்.
உலக நாடுகள் கண்டனம்
இத் தாக்குதலை உலகின் பல நாடுகள் கண்டித்துள்ளன. இத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. இதனை ஒரு போர் குற்றம் என ஆபிரிக்க ஒன்றியம் வர்ணித்துள்ளது. நியாயப்படுத்த முடியாத அகோரம் என பிரேசில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் காஸா வைத்தியசாலை மீதான தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறுவதாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இத் தாக்குதல் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட சீனாவின் வெளிவிவகார அமைச்சர் உடனடியாக அங்கு போர் நிறுத்தம் வர வேண்டும் என்றும் கோரியுள்ளார். எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு இச் சம்பவத்தை கண்டித்துள்ளதுடன் இது ஒரு இனப்படுகொலை என்றும் வர்ணித்துள்ளது. இது வேண்டுமென்றே நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் என எகிப்து ஜனாதிபதி சிசி தெரிவித்துள்ளார்.
உணவின்றித் தவிக்கும் மக்கள்
காஸாவில் உணவுப் பொருட்கள் வேகமாக தீர்ந்து வருவதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது. காசா நகரை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் விடுத்த கெடுவால் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அந்த நகரை காலி செய்துள்ளனர். அவர்களில் 60 சதவீதம் பேர், காஸாவில் இருந்து தெற்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பகுதியில் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபீர் எடேஃபா, “இரண்டு வாரங்களுக்கு முன்பாக போதுமான அளவு உணவு கையிருப்பு இருந்தது. ஆனால், தற்போது உணவுப் பொருட்களுக்கான பற்றாக்குறை அதிகரித்துள்ளது. காஸா நகரை விட்டு மக்கள் வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் கெடு காரணமாகவே தற்போது மிக வேகமாக உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களை தயாரிக்கும் 5 தொழிற்சாலைகளில் ஒன்று மட்டுமே தற்போது இயங்குகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், எரிபொருள் மற்றும் மின்சார பற்றாக்குறை காரணமாகவும் மற்ற இயந்திரங்கள் இயக்கப்படவில்லை. நெருக்கடியான இந்த தருணத்தில் விற்பனையகங்களுக்கு போதுமான உணவுப் பொருட்கள் கிடைக்கச் செய்வதே ஐ.நா உலக உணவுத் திட்டத்தின் முன் உள்ள சவாலாகும். இயங்கக்கூடிய சில பேக்கரிகளின் முன் மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் அமெரிக்க ஜனாதிபதி
இஸ்ரேல் – ஹமாஸ் போரை அடுத்து, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவுக்கு நேற்று வந்துள்ளார். அவருக்கு விமான நிலையம் சென்று இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்பளித்தார். இதன்பின் இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஜோ பைடன், “காசா மருத்துவமனை மீதான தாக்குதலால் நான் மிகுந்த வேதனையும், அதேநேரம் கோபமும் அடைந்துள்ளேன். நான் பார்த்தவரையில் மருத்துவமனை தாக்குதலை இஸ்ரேல் செய்யவில்லை. மாறாக, வேறொரு குழு இதை செய்திருக்கலாம் எனத் தோன்றுகிறது’’ எனத் தெரிவித்துள்ளார். எனினும் பைடனின் கருத்தை பலஸ்தீனின் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் ஆகிய அமைப்புகள் மறுத்துள்ளன.- Vidivelli