கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
சென்றவாரம் “அரசியல் களத்தில் முஸ்லிம் பெண்கள்: காலத்தின் கட்டாயம்” என்ற தலைப்பில் இப்பத்திரிகையில் ஒரு கட்டுரையை வெளியிட்டேன். அதன் இரண்டாவது பாகமாக இலங்கையின் இன்றைய அரசியல் களத்தை மையமாக வைத்து அதில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பினது அவசியத்தைப்பற்றியும் அதற்கான தடைகளைப்பற்றியும் அத்தடைகளையும் மீறி எடுக்கப்படும் சில முயற்சிகளைப்பற்றியும் சில கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
உலகத்திலேயே முதலாவது பெண் பிரதமரை தெரிவுசெய்த நாடென இலங்கை புகழ்பெற்றிருந்தும் இன்றைய 225 அங்கத்தவர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆக 5.3 சதவீதமானோரே அல்லது 12 பெண்கள் மட்டுமே அங்கத்தவர்களாக இருக்கின்றனர். மொத்தச் சனத்தொகையில் 52 சதவீதமாகவும் வாக்காளர் தொகையில் 56 சதவீதமாகவும் பெண்கள் இருந்தும் அவர்களின் பிரதிநிதித்துவம் ஏன் இவ்வளவு குறைவாக இருக்கின்றதென்பது ஆய்வுக்குரிய ஒரு விடயம். இந்த நிலையில் முஸ்லிம் பெண்களின் பிரதிநிதித்துவம் மருந்துக்கேனும் இல்லாதிருப்பதில் என்ன ஆச்சரியம்? இந்த அவலம் அவசியம் மாற வேண்டும்.
இன்று முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் அனந்தம். அதற்கொரு சிறந்த உதாரணந்தான் முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டத்தைத் திருத்துவதற்குக் காணப்படும் தடைகள். பத்திரிகைகளிலே வெளிவரும் கட்டுரைகளும், கண்டனங்களும், பகிரங்கப் பேச்சுகளும், மகஜர்களும், மகாநாடுகளும் அந்த அடிமைச் சாசனத்தை நீக்குவதற்குப் பரிகாரமாகமாட்டா. அரசியல் ஆதிக்கம் ஆண்வர்க்கத்தின் கைகளிலே சிக்கியுள்ளவரையும் அந்த ஆண்வர்க்கம் முல்லாக்களின் செல்வாக்கினுக்குள் அடைபட்டுக் கிடக்கும் வரையும் பெண்களின் இனப்போராட்டமும் வெற்றிபெறப் போவதில்லை. ஆகவே அரசியலுக்குள் முஸ்லிம் பெண்கள் அவசியம் காலடி வைக்கவேண்டும். அதற்கான வழி என்ன?
இலங்கையின் வரலாற்றில் முதன்முதலாக அரசியலில் நுழைந்த முஸ்லிம் பெண் ஆயிஷா றவூப். ஆனால் அவர் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்காது கொழும்பு மாநகர் சபை அரசியலிலேதான் குதித்தார். அதுவே ஒரு சாதனை என்றுதான் கூறவேண்டும். அவருக்குப் பிறகு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தவர் பேரியல் அஷ்ரப். அவர் தன் கணவன் குண்டுவெடிப்பினால் மரணித்தபின் அவர்மேல் இருந்த அனுதாபத்தினால் அவரது தேர்தல் தொகுதி மக்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்தவர். ஆனாலும் அந்த அனுதாபத்தை முதலாகக் கொண்டு அவரால் முஸ்லிம் பெண்களுக்கான அரசியல் அணியொன்றை கட்டியெழுப்பத் தவறிவிட்டார். ஆதலால் இன்றைய நிலையில் முஸ்லிம் பெண்களிடையே கல்வி ஆர்வமும், எழுத்து வன்மையும், பேச்சுத் திறனும், உலக விவகாரங்கள் பற்றிய ஒரு விழிப்புர்ணர்வும் ஏற்பட்டுள்ளபோதும் அவற்றையெல்லாம் முதலீடுகளாகக்கொண்டு அரசியலில் கால்பதிக்கத் தயங்குவது ஆச்சரியமாகத் தெரியவில்லையா? எனினும் அதற்கொரு முக்கியமான காரணம் உண்டு. அதுதான் முல்லா இஸ்லாமும் அதன் ஆதிக்கமும்.
முதலில் ஒரு சந்தேகத்தை நீக்கவேண்டியுள்ளது. நான் முல்லா இல்லாம் என்றும் அதன் பாதுகாவலர்களை முல்லாக்களென்றும் பல கட்டுரைகளில் குறிப்பிட்டு வந்துள்ளேன். அதனால் இஸ்லாத்தையும் அதன் தத்துவங்களையும், திருமறையின் உள்ளடக்கத்தையும், நபிபெருமானாரின் போதனைகளையும், செயல்களையும், மெய்யறிவுகொண்டு யதார்த்தபூர்வமாக விளங்கி ஆராய்ந்து அறிவுபெற்ற எத்தனையோ மார்க்க அறிஞர்கள் என்மேல் சினமுற்றிருக்கலாம். ஆனால் நான் கூறும் முல்லா இஸ்லாமும் முல்லாக்களும் அவர்களை உள்ளடக்கவில்லை. உண்மையிலேயே அந்தப் பதங்களை அல்லாமா இக்பாலின் கவிதைகளையும் கட்டுரைகளையும் படித்தபின்புதான் நான் விளங்கிக் கொண்டேன். ஏதோ ஒரு மதரசாவிலே மதக்கல்விகற்று வெளியேறிய ஒரே தகைமையை வைத்துக்கொண்டு குர்ஆனையும் பெருமானார் வாய்மொழிகளையும் ஒரு வாகடத்தைப்போல மனனம்செய்து அவற்றின் நேரடியான கருத்துக்களை சாதாரண மக்களிடம் போதிக்கும் இந்தப் புரோகிதர் கூட்டத்தினரையே நான் முல்லாக்களென்றும் அவர்கள் போதிக்கும் இஸ்லாத்தையே முல்லா இஸ்லாம் என்றும் அழைக்கிறேன். இவர்கள் வரலாற்றியல் அறிவோ சமூகவியல் அறிவோ அரசறிவியல் அறிவோ உலகமாற்றங்களை யதார்த்தபூர்வமாக அறிந்துணரும் திறனோ இல்லாத கிணற்றுத் தவளைகள். ஆனால் அவர்களுக்கு மார்க்கக் கிரந்தங்கள் மனப்பாடம். அவர்களுடைய அந்த வாகடத்தில் ஆண்களே பெண்களின் காவலர்களாம். ஆதலால் பெண்ணினம் சுதந்திரமற்ற ஒரு பொம்மை என்றாகிறது. இந்த இஸ்லாம் தகர்த்தெறியப்பட வேண்டும். இப்போது அது தகர்த்தெறியப்படுகின்றது. ஈரானிலும் ஆப்கானிஸ்தானிலும் இன்று நடைபெறும் போராட்டம் இதுதான். முகம்மது இப்னு அப்துல்லா என்ற ஒரு சாதாரண மனிதர் கதீஜா என்ற ஒரு பெண்ணின் துணை இல்லாமல் இறைவனே அவரின் தலையிற் சுமத்திய இஸ்லாம் என்ற கட்டளையை அன்றைய அரேபியரிடையே செயற்படுத்தி வெற்றிகண்டிருக்க முடியுமா? அந்தப் பெண் ஆணுக்கு அரணாய் இருந்தாரா அல்லது அந்த ஆண் கதீஜாவுக்கு அரணாய் இருந்தாரா? கவிஞர் அப்துல் காதர் லெப்பை கனவுகண்ட இலட்சியப் பெண் இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் உருவாகிக்கொண்டு வருகிறது. அந்தப் பெண்கள் ஏன் அரசியலில் இறங்கக் கூடாது?
இன்றைய இலங்கை பலகோணங்களிலும் சிதைந்து கிடக்கின்றது. அரசியலமைப்பு, மனித உரிமைகள், மக்களது ஜனநாயக சுதந்திரம், பொருளாதாரம், சமூக உறவுகள், நாட்டின் இறைமை, என்றவாறு அச்சிதைவுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். சுருக்கமாகக் கூறுவதானால் நாட்டின் அடிப்படை அமைப்பே இந்தச் சீரழிவுகளுக்கு முக்கிய காரணம். அதனாலேதான் 2022 இல் எழுந்த இளைஞர் போராட்டம் அமைப்பையே மாற்று என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடியது. அந்த அமைப்பின் அடித்தளம் இனவாதம். அதிலும் குறிப்பாகச் சொன்னால் சிங்கள பௌத்த பேரினவாதம். அந்தப் பேரினவாதம் மற்றைய இனங்களிடையேயும் இனவாதத்தைத் தோற்றுவித்துள்ளது. கடந்த எழுபது ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்டிப்படைத்து இன்று அதன் பொருளாதாரத்தையே திவாலாக்கி மூளைசாலிகளையும் திறனாளிகளையும் முயற்சியாளர்களையும் நாட்டைவிட்டே வெளியேறச்செய்து ஒரு பரிதாபநிலைக்கு நாட்டை கொண்டுவந்துள்ளது இனவாதம். எனவே அந்த அமைப்பை தகர்த்து வீசாமல் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நினைப்பது ஒரு பயனற்ற செயல். ஆனால் மக்கள் தேசிய சக்தியை தவிர்த்து இப்போதுள்ள ஏனைய அரசியற் கட்சிகள் யாவும் அந்த அமைப்பை அகற்றுவதற்குத் தயாரில்லை. இதுதான் இன்று காணப்படும் அரசியற் களத்தின் தோற்றம். இந்தக் களத்தில் முஸ்லிம்களின் நிலை என்ன?
முஸ்லிம் சமுகத்தின் அரசியல் சூத்திரத்தை முல்லாக்களே வகுத்துள்ளனர். அதன்படி இகலோக வாழ்வு அநிச்சயம், பரலோக வாழ்வே நிச்சயம். ஆகவே முஸ்லிம்கள் இவ்வுலகத்தில் வெறும் பயணிகள் மட்டுமே. தமது ஜீவனோபாயத்தை தேடிக்கொண்டும் பரலோக வாழ்வில் வெற்றிபெறுவதற்கான அமல்களைச் செய்து கொண்டும் வாழ்வதே முஸ்லிம்களின் அரசியலாக இருக்க வேண்டும் என்பதே முல்லாக்களின் அரசியற் சூத்திரம். இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன முஸ்லிம்களுக்குத் தேவை ஆட்சியாளர்களின் தயவு மட்டுமே. சுதந்திரம் கிடைத்து ஜனநாயக ஆட்சிமுறையும் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றுவரை அந்தச் சூத்திரமே நடைமுறையில் இருக்கிறது. அதனைத்தான் இன்றுள்ள முஸ்லிம் கட்சிகளும் செயல்படுத்துகின்றன. நாடு நலன் பெறாமல் முஸ்லிம்கள் நலன்பெற முடியாதென்பது இக்கட்சிகளின் அரசியல் வாகடத்தில் இல்லை. எனவேதான் முஸ்லிம்களுக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று மேடைகளில் கர்ஜிக்கின்ற இந்தத் தலைவர்கள் நாட்டுக்கு என்ன வேண்டும் என்பதுபற்றி எதுவுமே பேசுவதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் மாறி மாறி ஆட்சி அமைக்கும் அரசியல் கட்சிகளுக்கும் முஸ்லிம்களின் அரசியல் மந்திரம் என்னவென்பது நன்கு விளங்கும். குலைக்கிற நாய்க்கு முள்ளுப் போடுகிறமாதிரி இவர்களுக்கு ஓரிரண்டு சலுகைகளை வழங்கிவிட்டால் அவர்களின் ஆதரவு கிடைக்கும் என்பதை அந்தக் கட்சிகள் நன்குணரும். இந்த வியாபார அரசியலையும் அது இனிமேலும் பலனளிக்காது என்பதையும் வேறு கட்டுரைகளில் நான் விளக்கியுள்ளேன். அதுமட்டுமல்ல நாட்டின் அரசியல் அமைப்பையே மாற்ற வேண்டுமென்ற நிலை ஏற்பட்டபின்பு இந்த அரசியலுக்கு இடமேது? அந்த மாற்றத்திலேதான் முஸ்லிம் பெண்கள் பங்குகொள்ள வேண்டியுள்ளது.
முஸ்லிம் பெண்கள் தமக்குள்ளே ஆயிரம் சங்கங்களை அமைக்கலாம். ஆனால் அவையெல்லாம் ஓர் அரசியல் குடையின்கீழ் திரளும்வரை எதையும் சாதிக்க முடியாது. அவ்வாறான குடையொன்று விரிக்கப்படுவதை இப்போது உணரமுடிகிறது. தேசிய மக்கள் சக்தி என்ற கட்சிமட்டும்தான் இலங்கை அரசியல் கலாச்சாரத்தின் அடிப்படையையே மாற்றவேண்டும் என்றும், புதிய ஓர் அரசியல் அமைப்பு மதச்சார்பற்றதாக ஜனநாயக விழுமியங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட வேண்டுமென்றும், திறந்த பொருளாதாரக் கொள்கையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் கூறுகிறது. இவை முற்போக்கான கொள்கைகள் என்பதிலே சந்தேகமில்லை.
அக்கட்சியின் முஸ்லிம் கிளையாக சமூக நீதிக் கட்சி என்ற ஒன்று அமைக்கப்பட்டு அதில் மகளிர் அணியொன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடக்கிறது. இதுவரை முஸ்லிம் கட்சிகளே செய்யாத ஒரு முயற்சியாக இது தெரிகிறது. எனவே இவ்வாறான ஒரு குடையின்கீழ் முஸ்லிம் மகளிர் அணிதிரண்டு அரசியலில் ஈடுபடவேண்டியது காலத்தின் கட்டாயம். பிற்போக்குவாதக் கட்சிகளின் சலுகைகளை உதறித்தள்ளி முற்போக்குவாத அணிகளில் இணைந்து நாட்டின் பிரஜைகள் என்றவகையில் உரிமைகேட்டுப் போராட முஸ்லிம் மகளிர் முன்வரவேண்டும்.