எஸ்.என்.எம்.சுஹைல்
ஜும்ஆத் தொழுகைக்கு மக்கள் பள்ளிவாசலுக்கு சென்றிருந்த தருணம் பார்த்து கடந்த வெள்ளிக்கிழமை மதியம் புல்மோட்டை சாத்தனமடு, வீரேடிப்பிட்டி பகுதிகளிலுள்ள வயல் காணிகளை அபகரிக்கும் முயற்சிகளை பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.
பெக்கோ இயந்திரங்களுடன் வயல்நிலத்திற்குள் புகுந்து அடாவடியில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தன.
புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதி பனாமுரே திலகவன்ச தேரர் மற்றும் அவருடன் இன்னும் 8 பேர் கடந்த வாரம் தோண்டாமுறிப்பு பகுதிக்குச் சென்று மக்களுக்கு இடையூறு விளைவித்துள்ளதாகவும் இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாட்டையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறியதாகவும் திருகோணமலை மாவட்டத்தின் ஜம்இய்யதுல் உலமா செயலாளர் எஸ்.எச். சாலிஹீன் மௌலவி கூறினார்.
இதனிடையே, மறுநாள் வெள்ளிக்கிழமை ஆண்கள் ஜும்ஆத் தொழுகைக்குச் சென்றதன் பின்னர் சாத்தனமடு மற்றும் வீரேடிப்பிட்டி பகுதிக்குள் பனாமுர தேரருடன் ஒரு குழு இரண்டு பெக்கோ இயந்திரங்களுடன் நுழைந்து மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
‘2 மணி இருக்கும் நாம் வீட்டில் உணவு உட்கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தோம். எமது வயலுக்குள் பிக்கு உள்ளிட்டோர் அத்துமீறியுள்ளதாக கேள்விப்பட்டோம். பதற்றமடைந்து சாப்பிடாது வீட்டிலிருந்து புறப்பட்டோம்’ என கூறினார் சுலைஹா மவ்சூக்.
வீட்டிலிருந்து சுலைஹா பரபரப்புடன் புறப்பட்டதுபோல், அந்த பிரதேசத்தில் விவசாயக் காணிகள் வைத்துள்ளவர்கள் வேகமாக சம்பவ இடத்துக்கு புறப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் சாத்தனமடு, வீரேடிப்பிட்டி வயல்காணிகளுக்குள் சென்று அத்துமீறி காணிபிடிக்கும் பிக்குகளை எதிர்த்து நின்றனர். சிங்களம் தெரியாதபோதிலும் தமது உணர்வுகளை வெளிப்படுத்திய அவர்கள் ‘இது எமது பூர்வீகம், எங்களை வெளியேற்ற வேண்டாம்’ என கூச்சலிட்டனர்.
இந்நிலையில், இவற்றுக்கு செவிசாய்க்காது பிக்கு தலைமையிலான குழு தொடந்தும் அடாத்தாக பெக்கோ இயந்திரம் மூலம் அங்கு தரைமட்டமாக்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், பெக்கோ இயந்திரத்துக்கு முன்பாக சென்ற சுலைஹா ‘என்னை கொன்றுவிட்டு, இந்த காணிகளை பிடித்துக்கொள்ளுங்கள்’ என சத்தமிட்டார். எனினும், இதனை கருத்திற்கொள்ளாத அவர்கள் அந்தப் பெண் மீது பெக்கோ இயந்திரத்தை நகர்த்த அவர் அடிபட்டு கீழே விழுந்தார். இதன்போது, அச்சத்துடன் அந்தப் பெண்ணை மக்கள் மீட்க முற்பட்டனர்.
காயப்பட்ட பெண், புல்மோட்டை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்படார்.
அச்சுறுத்தலான அந்த நிலைமை குறித்து சிகிச்சை பெற்றுவரும் சுலைஹா கூறுகையில், ‘எனது தந்தை சம்சுதீன் 1960 ஆம் ஆண்டு முதல் இந்த காணியில் விவசாயம் செய்துள்ளார். யுத்தம் காரணமாக சிலகாலம் இந்த நிலம் தரிசானது. என்றாலும் 2010 ஆம் ஆண்டு நாம் மீண்டும் இங்கு விவசாயத்தை ஆரம்பித்தோம். எனக்கு இந்த காணியை எனது தந்தை தந்திருந்தார். அவருக்கு அவரின் தந்தை அதாவது எனது பாட்டனார் இந்த காணியை வழங்கியுள்ளார். நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த இடத்தில் விவசாயம் செய்கின்றோம். நாங்கள் ஏழை மக்கள். எமது பூர்வீகத்தை விட்டு வெளியேறச் சொல்வது அநியாயமாகும். இவர்கள் எமது நிம்மதியை கெடுக்கின்றனர் ’ என்றார்.
இந்நிலையில், 1811 ஆம் ஆண்டு முதல் இந்த நிலத்தில் விவசாயம் செய்தமைக்கான வரலாறு இருப்பதாக கூறினார் திருகோணமலை மாவட்டத்தின் ஜம்இய்யதுல் உலமா செயலாளர் எஸ்.எச். சாலிஹீன் மௌலவி, அத்துடன், ‘எமது பூர்வீகத்தை பறிப்பதற்கு இங்கிருந்து 10 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள அரிசிமலை விகாரையின் பிக்குவும் குழுவினரும் மேற்கொள்ளும் திட்டங்கள் மிகவும் காட்டுமிராண்டித்தனமானவை. அத்தோடு, இந்த விடயத்தில் பொலிஸார் மேலும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மேலும் தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கு முறையான சிகிச்சை வைத்தியசாலையில் வழங்கப்படாமையால் அவர் தற்போது ஆயுர்வேத வைத்திய சிகிச்சை பெறுகின்றார். இங்கு எமக்கு பெரும் அநியாயம் செய்யப்படுகின்றது. இது விடயத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
குச்சவெளி பிரதேசத்திற்கு உட்பட்ட இலக்கம் 32, புல்மோட்டை 01 வட்டாரத்துக்குரிய சாத்தனமடு, வீரேடிப்பிட்டி உட்பட பல பகுதிகளிலும் குறிப்பிட்ட பிக்குவின் குழுவினரால் தொடர்ந்து மக்களுக்கு இடையூறு விளைவிக்கப்படுகின்றது. இவர்கள் பல்வேறு நோக்கங்களுடன் மக்களுக்கு நெருக்கடிகளை கொடுத்து அவர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்குச் செல்ல ஆர்வமாக கிராம மக்கள் இருக்கின்றனர். எனினும் துரதிஷ்டவசமாக அவர்களின் பொருளாதார நிலைமை அதற்கு வாய்ப்பாக அமையவில்லை.
சமூக மட்டத்திலிருந்து நியாயத்தை வென்றெடுப்பதற்கான உரிமை போராட்ட த்திற்கான கோரிக் கையை முன்வை க்கின்றனர். – Vidivelli