நாட்டின் பிரதான தமிழ் பத்திரிகைகளான வீரகேசரி, தினக்குரல், தினகரன் ஆகியவற்றில் பத்திரிகையாளராகப்பணிபுரிந்து ஓய்வு நிலையில் வாழும் எம்.ஏ.எம்.நிலாம் இம்மாதம் 22 ஆம் திகதி அகவை 78 கால் பதித்துள்ளார்.
முஸ்லிம் ஊடகவியலாளர்களில் மூத்த ஒருவராக கலாபூசணம் அல்-ஹாஜ் எம். ஏ. எம். நிலாம் அவர்களை நான் காண்கின்றேன். கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் மினுவாங்கொட கல்லொழுவை கிராமத்தில் 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி பிரபல சமூக சேவையாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான மர்ஹும் முஹம்மட் ஆரிப் ஹாஜியானி ஹபீலா தம்பதிகளின் புதல்வராக பிறந்த நிலாம், மினுவாங்கொட போலவத்த கத்தோலிக்க வித்தியாலயம், கல்லொழுவ முஸ்லிம் மஹா வித்தியாலயம் ஆகியவற்றில் சாதாரண தரம் வரை பயின்ற பின் பொது வாழ்வில் ஈடுபட்டார். 1963 ஆம் ஆண்டு முதல் 1977 வரை இலக்கியத்துறையில் ஈடுபாடு காட்டிய இவர், “ஈழத்து நூன்” என்ற பெயரில் கவிதை மற்றும் கதைகளை எழுதி வந்தார். 1977 ஆம் ஆண்டில் இவர் முழு நேர ஊடகத்துறையில் பிரவேசித்தார். தினகரனில் பிரதம ஆசிரியராக இருந்த காலஞ்சென்ற சட்டத்தரணியார் சிவகுருநாதன் இவருக்கு தினகரனில் இணைந்து பணியாற்றுவதற்கு உதவினார். பிராந்திய செய்தியாளராகப் பணிபுரிந்த இவருக்கு தினகரன் ஆசிரியர் பீடத்தில் இணைந்து பணிபுரிவதற்கு வாய்ப்பினை அவர் வழங்கினார்.
முன்னாள் சபாநாயகர் மர்ஹும் எம்.ஏ.பாக்கீர் மாகார், முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களும் தினகரனில் இவருக்கு இணைந்து பணி புரிவதற்கு உதவினார்கள். அக்காலம் பணி புரியும் போது ஏற்பட்ட உள்ளகப் பிரச்சினைகளையடுத்து இவர் வீரகேசரியில் இணைந்து அங்கு சுமார் பத்து வருட காலம் பணிபுரிந்தார். வீரகேசரியின் அப்போதைய செய்தி ஆசிரியர் டேவிட் ராஜுவின் அழைப்பிலே இவர் பத்திரிகையில் இணைந்தார்.
தமிழுக்கு மேலதிகமாக சிறப்பான சிங்கள அறிவு அவர் பணிபுரிந்த பத்திரிகைகளில் முதன்மையானவராகத் திகழ அவருக்கு உதவியது. நாட்டின் பல முக்கிய அரசியல் செய்திகள் இவர் பேரைத் தாங்கி வந்துள்ளன. இதனால் இப்பத்திரிகைகளில் நிலாம் இன்றியமையாதவராகத் திகழ்ந்தார். நிலாம் வீரகேசரியில் 10 வருடங்களும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தினக்குரலில் ஆசிரியர் பீடத்தில் இணைந்த முதல் குழுவிலும் இடம் பெற்றார்.
தினக்குரலில் தொடர்ந்து 18 வருட காலம் பணிபுரிந்தார். 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துடன் இவர் மீண்டும் அரச கட்டுப்பாட்டில் இயங்கும் லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தில் இணைந்தார். லேக் ஹவுஸ் தமிழ் வெளியிடான தினகரன், தினகரன் வார மஞ்சரியில் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அங்கு ஐந்து வருட காலம் பணிபுரிந்து சேவையிலிருந்து ஓய்வு பெற்ற போதும் இவர் தொடர்ந்து தமிழ் பத்திரிகைகளுக்கு அரசியல் கட்டுரைகள், கதைகளை எழுதி வருகிறார். கலாபூஷணம் நிலாமுக்கு இருக்கும் தமிழ் அறிவுக்கு மேலதிகமாக இருந்த சிங்கள அறிவே அவரை ஊடகத்துறை உச்சத்திற்கு எடுத்துச் சென்றது. செய்திகளை மேம்படுத்தும் அவருக்கு இருந்த விஷேட திறமை அவர் பணிபுரிந்த மூன்று பத்திரிகைகளிலும் நாளாந்த தலைப்புச் செய்திகளின் சொந்தக்காரராக்கியது. நாலாயிரத்துக்கு மேற்பட்ட தலைப்புச் செய்திகளை இவர் எழுதி இருப்பதாக பத்திரிகைகள் பற்றிய நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்தின் பின் இலங்கையில் தமிழ் பத்திரிகைகள் வெளிவருவதில் பல சவால்களை எதிர்நோக்கின. அநேகமான தமிழ் பத்திரிகையாளர்கள் வேலைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது தமிழ் பத்திரிகைகள் வெளியிடுவது கூட ஸ்தம்பித்தது.
தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் சிவகுருநாதன் அவர்கள் அகதிகள் முகாமில் இருந்தார். நானும் மற்றொரு நண்பரும் இணைந்து நிறுவனத்தின் கடுமையான கண்காணிப்பின் கீழ் தினகரனை வெளியிட்டோம். அக்கால கட்டத்திலே வீரகேசரி சில நாட்கள் வெளிவரவில்லை. பின்பு அப்போதைய ஆசிரியாரகவிருந்த எஸ். நடராஜாவுடன் நிலாம் மட்டுமே ஆசிரியர் பீட பணியாளர்களாக இருந்து பத்திரிகையை நீண்ட நாட்கள் வெளியிட உதவினார். அந்நாட்களில் பத்திரிகையைப் பார்த்தால் அநேகமான செய்திகள் நிலாமுடைய பெயரிலே வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நிலாமின் இவ்வாறான பங்களிப்புகள் தமிழ் பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்றாகக் காணப்பட்டது.
தமிழ், சிங்கள புலமைக்கு மேலதிகமாக இவரது எழுத்தாளுமையும் இலக்கிய நேயமும் எல்லோராலும் விதைத்து போற்றப்படும் ஒன்றாகும். கவிதை, சிறுகதை பத்தி எழுத்துக்கள், அரசியல் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் என்று பன்முகப் பார்வை கொண்ட இவர், எழுத்தோடு மட்டும் நின்று விடாமல் அதிக ஈடுபாடு மிக்கவராக காணப்பட்டார். கவிதை எழுதுவதில் தீவிர அக்கறை காட்டி வரும் இவர், இரு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். “நூன் கவிதைகள்” என்ற பெயரில் ஒரு நூலையும் “தட்டுத் தாவரம்” என்ற பெயரில் ஒரு நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார். தட்டுத் தாவரம் கவிதை நூலின் வெளியீட்டு விழா இவரது கிராமமான கல்லொழுவையில் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகிய மூவரதும் பிரசன்னத்துடன் பெருவிழாவாக நடைபெற்றது.
தலைவர்கள் மத்தியில் இருக்கும் கௌரவத்தை உணர்த்தும் விழாவாக இது அமைந்திருந்தது. முன்னாள் சபாநாயகர் மர்ஹும் எம்.ஏ பாக்கீர் மாகார், மலையகத்தமிழர் தலைவர் ஏ.அசீஸ், அவரது மகன் அஷ்ரப் அசீஸ், அஷ்ரப் ஹுஸைன் போன்ற அரசியல் சமூகத் தலைவர்களுடன் நெருங்கிச் ஏற்பட்ட இவர், தான் வாழும் கல்லொழுவைக் கிராமத்தின் பள்ளிவாசல், பாடசாலை ஆகியவற்றின் வளர்ச்சிக்காக நீண்ட காலமாக அவர் உழைத்து வருகிறார். வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் எழுத்தாளர்கள், அறிஞர்கள், அரசியல் பிரமுகர்களை கல்லொழுவைக் கிராமத்துக்கு அழைத்துச் சென்று மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் சகோதரர் நிலாமுக்கு முக்கிய பங்கு உண்டு.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக அங்கத்தவரான இவர், அதன் செயலாளர், தேசிய அமைப்பாளர், உப தலைவர் உட்பட பல பதவிகளை வகித்து அதன் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளார். இவரது சேவைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி இவரை கௌரவித்திருக்கின்றது. இது தவிர இவருக்கு கலாபூஷணம் விருது வழங்கப்பட்டதோடு, பிரபல சிங்கள ஊடக அமைப்பு இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கொழும்பில் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
சபாநாயகர் மர்ஹும் எம்.ஏ.பாக்கீர் மாகாருடன் நெருங்கிச் செயற்பட்ட இவர், இலங்கை முஸ்லிம் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். லேக் ஹவுஸில் தான் பத்திரிகையாளராக இணைவதற்கு மர்ஹும் பாக்கீர் மாகார், மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரும் தனக்கு உதவியதை இன்றும் இவர் நன்றியுடன் நினைவு கூறுகிறார்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது அவரது அமெரிக்கா விஜயத்தில் ஊடகக் குழுவில் ஓர் அங்கத்தவராக இவரும் இடம்பெற்றார். வெள்ளை மாளிகைக்குள் நுழைந்ததனை பெருமையாகக் குறிப்பிடுகிறார். ஆர் சிவகுருநாதன், கே. சிவப்பிரகாசம், பீ பாலசிங்கம், சிவநேச்செல்வம், கே. குணராசா, வீ. செந்தில்வேலர், தனபாலசிங்கம் எஸ். நடரஜா, டேவிட்ராஜு, ஸ்ரீகஜன் ஆகிய தமிழ் பத்திரிகை ஆசிரியர்களுடன் நெருங்கிச் செய்யப்பட்டார்.
குருநாகல் அரக்கியால கிராமத்தில் சௌதா உம்மா என்பவரைத் திருமணம் செய்திருக்கின்ற நிலாம், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். அவருடைய ஒரு மகன் றிஸான் 37 ஆவது வயதில் நோய்வாய்ப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறையடி எய்தினார். இவரது மூத்த மகன் றிபான் தற்போது கட்டாரில் தொழில் புரிகின்றார்.
இப்போது 05 பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்ற சகோதரர் எம்.ஏ. எம் நிலாம், மேலும் பல வருடங்கள் சுகதேகியாக வாழ்வதற்கு பிரார்த்திப்போம்.
என்.எம்.அமீன்
தலைவர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்