கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
இது “அரசியல் மூலோபாய அல்லது கொள்கை ரீதியான முடிவாக” இருந்தாலும், 13 வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான ரணில் விக்கிரமசிங்கவின் முன்முயற்சிகள் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு சமூகங்களிடையே அச்சங்களை எழுப்பியுள்ளன. அவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்கின்றனர். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒற்றை மெகா மாகாணம் அல்லது 13 ஏ இன் ஏற்பாடுகளின்படி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட இரண்டு தனி மாகாணங்களில் தங்கள் எதிர்காலம் குறித்து கவலைகளை எழுப்புகின்றனர். முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த விடயம் குறித்து கலந்துரையாட ஜனாதிபதியுடன் பிரத்தியேக பேச்சுவார்த்தை நடத்துமாறு கோரியிருந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கை இதுவரை புறக்கணிக்கப்பட்டுள்ளது. ரணிலின் அலட்சியத்திற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். முதலாவதாக, 13ஏ என்பது இந்தியாவால் ஈர்க்கப்பட்ட ஒரு சட்டமாகும், அந்த நேரத்தில் ராஜீவ் காந்தியின் முக்கிய அக்கறை தமிழ் சமூகத்தை திருப்திப்படுத்துவதும், அதன் இளைஞர்கள் தமிழர் பிரச்சினையை ஆயுதமாக்குவதைத் தடுப்பதும் ஆகும், இது நிச்சயமாக தோல்வியடைந்தது.
முஸ்லிம்கள் மீது எந்த அனுதாபமும் இல்லாத மோடியின் ஆட்சியில் தமிழர்கள் மீதான அந்த தனி அக்கறை இன்னும் வலுவாக உள்ளது. எனவே முஸ்லிம் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் ரணில் தனது இந்திய மூலோபாய நண்பரை அதிருப்தியடையச் செய்ய விரும்பவில்லை. இரண்டாவதாக, இறுதியில் தான் எடுக்கும் எந்த முடிவுக்கும் முஸ்லிம் தலைவர்களின் ஆதரவைப் பெற முடியும் என்ற ரணிலின் நம்பிக்கை மிகவும் நம்பத்தகுந்த காரணமாக இருக்கலாம். அரிதான விதிவிலக்குகளைக் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு கொள்கைகள் இல்லை, நலன்கள் மட்டுமே உள்ளன என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. விலை சரியாக இருக்குமானால், 20 ஆவது திருத்தச் சட்டத்தின் போது நிரூபிக்கப்பட்டதைப் போல, எந்தவொரு பிரேரணையும் தமது சொந்த சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தாலும் அதை ஆதரிப்பதற்காக அவர்கள் கைகளை உயர்த்துவார்கள். முஸ்லிம் வாக்காளர்களே தெரிவு செய்த இத்தகைய தலைமைத்துவத்துடன், 13ஏ சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கையை எதிர்கொள்வது சமூகத்திற்கு கடினமாக இருக்கும்.
ஆனால் முஸ்லிம்கள் 13 ஆம் திருத்தத்தை ஆதரித்தாலும் அல்லது எதிர்த்தாலும் சமூகம் இரண்டு தீமைகளுக்கு இடையில் சிக்கியுள்ளது. முஸ்லிம் விவகாரங்களில் ஓரளவு மட்டுமே அக்கறை கொண்ட சர்வதேச ஆதரவு, ஆக்ரோஷமான தமிழ் தேசியவாதம் மற்றும் இன்னும் கடும்போக்கு பிக்குகள் தலைமையிலான சிங்கள எதிர்ப்புக் குழு. முஸ்லிம்கள் உட்பட அனைத்து தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவக் குரலாகத் தொடங்கிய தமிழ்த் தேசியம், படிப்படியாக அவர்களை விலக்கி முஸ்லிம் அரசியல் கட்சிகளின் எழுச்சிக்கு வழிவகுத்தது. வலுவான மொழிப் பிணைப்பு இருந்தபோதிலும் வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவுகள் மோசமடைந்து வருவது தமிழ்ப்புலிகளால் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் உச்சத்தை அடைந்தது.
1990 ஒக்டோபரில் பிரபாகரன் வடக்கிலிருந்து முஸ்லிம்களை மொத்தமாக வெளியேற்றியதைத் தொடர்ந்தும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகளின் படுகொலைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்தும், பிட்டு, தேங்காய் போன்ற பழமொழிகளுடன் வாழ்ந்து வரும் இரு சமூகங்களும் ஒருவருக்கொருவர் தொடர்புகளை குறைத்துக் கொண்டன.
இரு தரப்பிலும் தலைமை படுதோல்வி அடைந்ததால் இந்த நிலை ஏற்பட்டது. சுருக்கம் அந்த தோல்வியின் வரலாற்றைக் கண்டுபிடிப்பதைத் தடுக்கிறது. ஆனால் இப்போதும் கூட இரு தரப்பு தலைவர்களும் சேதத்தை சரிசெய்வதில் மிகவும் சாதாரணமாகவும் அலட்சியமாகவும் இருக்கிறார்கள். குறிப்பாக முஸ்லிம்கள் 13 ஏ இனை ஒரு துடிப்பான சமூகமாக தாங்கள் உயிர்வாழ்வதற்கான மரண அச்சுறுத்தலாகப் பார்க்கிறார்கள். இந்த அச்சத்தின் மையத்தில் நிலப்பிரச்சினை உள்ளது. எடுத்துக்காட்டாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் 30 வீதமானவர்களாக உள்ள நிலையில், சுமார் 20 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பிற்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இது அந்த மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகும். காணி மற்றும் பொலிஸ் நிர்வாகம் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதால், முஸ்லிம்கள் நெரிசல் மிகுந்த பிரதேசங்களில் வாழ நிர்பந்திக்கப்படுவார்கள் என்று அஞ்சுகின்றனர். 4.3 சதுர கிலோ மீற்றர் பரப்பு 50,000 மக்களும் கொண்ட காத்தான்குடி ஏற்கனவே நவீனமயப்படுத்தப்பட்ட நகரப் பரப்பாக உருமாறி வருகின்றது.
ஆனால், 13ஏ சட்டத்தை எதிர்ப்பதன் மூலம் முஸ்லிம்கள் மீது தனி அன்பு இல்லாத சிங்கள எதிர்ப்பாளர்களின் கரங்களை சமூகம் கவனக்குறைவாக பலப்படுத்துகிறது. அரசியல் சந்தர்ப்பவாதம் சிங்கள-பௌத்த மேலாதிக்கவாதிகளை தற்காலிகமாக முஸ்லிம்களுடன் கூட்டுச் சேர ஊக்குவித்து வடக்கு மற்றும் கிழக்கின் மக்கள்தொகை நிலப்பரப்பை மாற்றும் மேலாதிக்க நிகழ்ச்சி நிரலை ஊக்குவிக்கும்.
ஆயுதமயமாக்கப்பட்ட தொல்லியல், வன்முறையான காணி சுவீகரிப்புகள் மற்றும் சிறுபான்மை பிரதிநிதித்துவங்களைக் குறைப்பதற்காக எல்லை நிர்ணய ஆணைக்குழுக்கள் மூலம் வாக்காளர் மாவட்டங்களின் பகுதிகளை வெட்டி மாற்றுவதற்கான சிடுமூஞ்சித்தனமான திட்டங்களுடன், சிங்கள பௌத்த மேலாதிக்க நிகழ்ச்சி நிரல் இரண்டு மாகாணங்களிலும் எந்தவிதமான தடையுமின்றி நடந்து வருகிறது.
வடக்கில் இந்த கொடூரமான செயற்பாடுகள் அப்பட்டமாக முன்னெடுக்கப்படும் ஒரு மாவட்டமாக முல்லைத்தீவு உள்ளது. ஆனால் இந்த மேலாதிக்கவாதிகள் இப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவுடன் அவர்களின் முஸ்லிம் கூட்டாளிகள் கறிவேப்பிலையாக மாறிவிடுவார்கள். மேலாதிக்கவாதிகளுக்கு, தமிழர்கள் குறைந்தபட்சம் பூர்வீகவாசிகள், ஆனால் அடிமைகளாக வைக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் முஸ்லிம்கள் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட வேண்டிய அந்நியர்கள். கடந்த ஏழு தசாப்தங்களாக நிலவும் சமூக-அரசியல் அமைப்பு அல்லது முன்னுதாரணம் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பதை விமர்சன ரீதியாக ஆராய்ந்தால் இந்த அச்சமூட்டும் காட்சியை நிராகரிக்க முடியாது.
எனவே, முஸ்லிம்களுக்கும் பிற சிறுபான்மையினருக்கும் என்ன வழி?
முறைமை மாற்றம் (System Change) என்பது காலத்தின் கட்டாயம் மற்றும் கதறும் தேவை (crying need). சிங்கப்பூரைப் போல அமைதியான, துடிப்பான, பொருளாதார ரீதியாக செழிப்பான பல்லின, பல கலாச்சார அரசியலாக இருக்க வேண்டுமானால், மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் விழுமியங்களையும் கோட்பாடுகளையும், நீதித்துறையின் சமரசமற்ற சுயாதீனத்தையும் உள்ளடக்கிய ஒரு புதிய அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பு நாட்டிற்குத் தேவை. அப்புஹாமி க்குக் கிடைக்கும் உரிமைகளும், சுதந்திரமும் அந்தோணி, ஆறுமுகம், அப்துல்லா ஆகியோருக்குக் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இத்தகைய மேடையில் இருந்துதான் ஆரகலய (Aragalaya) இளைஞர்கள் அமைப்பு மாற்றத்துக்கான முழக்கத்தை எழுப்பி, நிர்வாகத்தில் ஒரு புதிய முன்னுதாரணத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
துரதிர்ஷ்டவசமாக, அவர்களின் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் முதிர்ச்சியான தலைமையின் பற்றாக்குறையும் அதனுடன் தொடர்புடைய கட்டமைப்பு பலவீனங்களும் ஆரகலயா தனது கோரிக்கையை கோஷ மேடைக்கு அப்பால் முன்னெடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால், தற்போது ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிலும், குழுக்களிலும் தேசிய மக்கள் சக்தி மட்டுமே இந்த முறையை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. எனவே, தற்போதுள்ள இன மைய அரசியல் கலாச்சாரத்தின் கீழ் தமக்கு எதிர்காலம் இல்லை என்பதையும், சிங்கள, தமிழ் தேசியவாதங்களை முஸ்லிம் இனவாதத்துடன் எதிர்கொள்வது தற்கொலைக்கு சமமானது என்பதையும் முஸ்லிம்கள் விழித்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம் கட்சிகள் என்று சொல்லப்படுபவர்கள் இதுவரை சாதித்தது என்ன?
இந்த நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே, முஸ்லிம் அரசியல் வெற்றி பெறும் அணியைத் தெரிவு செய்வதிலும் இணைவதிலும் ஒரு பயிற்சியாக இருந்தது. இரண்டு முஸ்லிம் கட்சிகளும் ஒரே விளையாட்டை விளையாடுகின்றன. இன மைய அரசியலின் எல்லைக்குள் முஸ்லிம் தலைவர்கள் உரிமைகளுக்காகப் போராடுவதை விட கௌரவத்தையும் சலுகைகளையும் பெறுவதற்கான வெற்றி உத்தியாக அரசியல் சந்தர்ப்பவாதத்தைத் தேர்ந்தெடுத்தனர். அந்த மூலோபாயத்தை சிங்களத் தலைவர்கள் சகித்துக் கொண்டனர், வரவேற்றனர், ஏனென்றால் அது தமிழ் தேசியத்தின் எந்தவொரு அச்சுறுத்தலையும் புறக்கணிக்கவும் தோற்கடிக்கவும் அவர்களுக்கு உதவியது. ஆனால், 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த நிலை மாறியது. உள்நாட்டுப் போரில் வெற்றிபெற்று, வெற்றிகரமான மனநிலையில், அரசியல் பௌத்தமும் அதன் ஆதரவாளர்களும் இப்போது முழு நாட்டிற்கும் மேலாதிக்கத்தையும் உரிமையையும் கோருகின்றனர். எனவே அதன் தலைவர்கள் ரணிலின் 13A முன்முயற்சிகளை நிராகரிக்கின்றனர்.
அமைப்பை மாற்றி நாட்டை வேறு திசையில் வழிநடத்த விரும்பும் தே.ம.ச. போன்ற ஒரு மாற்றீட்டை பரிசீலிக்காமல் முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக இந்த மேலாதிக்கவாதிகளுடன் சேர விரும்புகிறார்களா? 13ஏ மோசமானது, ஆனால் அரசியல் முன்னுதாரணத்தை மாற்றாமல் அதை நீக்குவது மோசமானது. நல்லிணக்கம் என்ற பெயரில் 13A ஐ அமுல்படுத்துவதற்கான ரணிலின் முன்முயற்சி தற்போதுள்ள அமைப்பை செம்மைப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகும்.
கடந்த காலங்களில் சோசலிசத் தலைவர்கள் இனவாத அரசியலுக்கு மாற்று வழிகளை முன்வைத்தபோது கூட முஸ்லிம்கள் அவற்றை மொத்தமாக நிராகரித்தனர். தே.ம.ச. இப்போது மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது. தெரியாததைப் பற்றிய பயம் எப்போதும் உண்டு என்பது உண்மைதான். ஆனால் எல்லாவற்றிலும் இடர்வரவு (Risk) இருக்கிறது. தே.ம.ச. சரியானதாக இருக்காமல் விடலாம் ஆனால் இன்று நாடு எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரே விவேகமான மாற்றாகத் தெரிகிறது. தே.ம.ச.வுக்கு எதிராக மற்ற அனைத்து பிற்போக்கு கட்சிகளும் ஒருங்கிணைந்து நடத்திய தாக்குதலே அதன் முற்போக்கான நற்சான்றிதழ்களுக்கு ஒரு மௌன சான்றாகும். – Vidivelli