ஏ.ஆர்.ஏ.பரீல்
செனல் 4 அண்மையில் வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆவணப்படம் சமூகத்தின் மத்தியில் பல சர்ச்சைகளையும், வாதப் பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நீதியை வேண்டி நிற்கின்ற அனைவருக்கும் நிலையானதொரு தீர்வையும், தெளிவையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும் என இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அர்கம் நூராமித் செனல் 4 ஆவணப்படம் தொடர்பில் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறினார். மேலும் எதிர்காலத்தில் நாட்டில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாதிருக்க உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவேண்டும் என்றார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்; இஸ்லாத்திற்கும் குறித்த தீவிரவாத சிந்தனைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று ஏற்கனவே நாம் அறிக்கையொன்றினையும் வெளியிட்டோம். ஸஹ்ரான் பேசிய விடயங்களைக் குறிப்பிட்டு ஸஹ்ரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் பாதுகாப்பு செயலாளரிடம் முறைப்பாடு செய்தோம்.
இது தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குறிப்பிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றிருக்காது தடுக்கப்பட்டிருக்கலாம். துரதிஷ்டவசமாக தாக்குதல் நடைபெற்றதோடு குறிப்பாக கிறிஸ்தவ மக்களும் அதேபோன்று முஸ்லிம்களும் இதனால் பாதிப்புக்குள்ளாகினார்கள்
இதனைத் தொடர்ந்து நாம் நாட்டில் சகவாழ்வைக் கட்டியெழுப்பவும், இஸ்லாம் தொடர்பாக சரியான புரிதல்களை பல்லின மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டோம்.
எனினும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வெறுப்புப் பேச்சுக்கள் தொடர்ந்த வண்ணமிருந்தன. அளுத்கம, திகன, மினுவாங்கொடை மற்றும் குருநாகல் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்கதாகும். இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அத்தோடு முஸ்லிம் அமைப்புகள், நிறுவனங்கள் இஸ்லாமிய அடையாளங்கள் சந்தேகிக்கப்பட்டு கொச்சைப்படுத்தப்பட்டன. முஸ்லிம்கள் இந்நாட்டில் தலைகுனிந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.
குறித்த தாக்குதல் தொடர்பாக நாட்டில் மூன்று அறிக்கைகள் வெளியிடப்பட்டபோதிலும் தாக்குதலின் பின்னணியில் வேறு ஒரு சாரார் இருப்பதாக பாராளுமன்றத்திலும் வெளியிலும் அரசியல் ரீதியாகப் பேசப்பட்டு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நிலையானதொரு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனத் தெரிவித்தார்.