கோத்தாவை ஜனாதிபதியாக்கவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
செனல் 4 ஆவணப்படத்தில் அஸாத் மெளலானா கூறுவது என்ன?
எம்.எப்.அய்னா
பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள இலங்கையின் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் எனும் 47 நிமிட காணொளிதான் இன்று பெரும் பேசு பொருளாகியுள்ளது.
இதற்கு காரணம் இருக்கின்றது. சர்வதேச பயங்கரவாத விவகாரங்கள் குறித்த ஆய்வாளராக கூறப்படும் பேராசிரியர் ரொஹான் குணரத்ன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு இஸ்லாமிய மத தீவிரவாதம்தான் காரணம், இதில் அரசியல் பின்னணி இல்லை என ஒரு புத்தகத்தை வெளியிட்டு சில வாரங்களிலேயே, இல்லை அது முழுக்க முழுக்க அரசியல் சதி நடவடிக்கை என்பதை உறுதிப்படுத்துவதாக இந்த காணொளி வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தம்மைத் தாமே இலங்கையின் ஐ.எஸ்.ஐ.எஸ். இனர் என அழைத்துக்கொண்ட தேசிய தெளஹீத் ஜமாஅத் தலைவனாக செயற்பட்ட சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான கும்பலினால் 8 தொடர் குண்டுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.
கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவபிட்டி – புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம் ஆகிய கிறிஸ்தவ தேவாலயங்களும் கொழும்பு காலி முகத்திடலுக்கு சமீபமாகவுள்ள ஷங்கிரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி ஆகிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. மேற்படி ஆறு தாக்குதல்களும் இடம்பெற்றது ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையிலான 45 நிமிட இடைவெளியிலேயே ஆகும்.
அதே தினம் பிற்பகல் 1.45 மணியளவில் தெஹிவளை பொலிஸ் பிரிவின் மிருகக்காட்சி சாலைக்கு முன்பாக உள்ள ‘ நியூ ட்ரொபிகல் இன்’ எனும் சாதாரண தங்கு விடுதி கொண்ட ஹோட்டலில் குண்டு வெடிப்புச் சம்பவம் பதிவானது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.15 மணியளவில், குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைக்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளை இலக்கு வைத்து தெமட்டகொட மஹவில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரியினால் தாக்குதல் நடாத்தப்பட்டது.
இந்த 8 தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், 30 வெளிநாட்டவர்கள் உட்பட 268 பேர் கொல்லப்பட்டதுடன், 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்தனர்.
இந்த கொடூர கொலைகள் தொடர்பில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டதாக தெரியவில்லை. அவ்வாறிருக்கையில் இந்த தொடர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி யார், காரணம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டு வரும் பின்னணியில் செனல் 4 இன் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
உண்மையில், செனல் 4 தொலைக்காட்சி காணொளிக்கு அமைய, அத்தொலைக்காட்சி உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் சதி இருந்ததாக முன் வைக்கும் குற்றச்சாட்டுக்கு பிரதான சான்றாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையானின் செயலாளராக இருந்த அசாத் மெளலானா என அறியப்படும் மொஹம்மட் ஹன்சீரின் சாட்சியத்தை முன் வைக்கின்றனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டே அசாத் மெளலானா, செனல் 4 இடம் கூறியுள்ள இந்த விடயங்களில் பலவற்றை உள்ளடக்கி, ஜெனீவா மனித உரிமை பேரவை முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை பதவிக்கு கொண்டுவருவதற்காக, அதற்கான கட்டாய சூழலை ஏற்படுத்த சிவனேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான், உளவுத் துறை பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, உள்ளிட்டோர் ஊடாக இந்த தற்கொலை தாக்குதல் அரங்கேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதில், பிரதானமாக இந்த தற்கொலை தாக்குதலின் ஆரம்ப புள்ளி தொடர்பில் வெளிப்படுத்தல் இருக்கும் நிலையில், அதற்கான ஏனைய சான்றுகளை தேடி நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
அதாவது கடந்த 2017 இல் காத்தான்குடி அலியார் சந்தியில் நடந்த மோதலை அடுத்து, சஹ்ரானின் சகோதரர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பிள்ளையானும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியாக இருந்தார். மட்டக்களப்பு சிறைச்சாலையிலேயே சஹ்ரானின் சகோதரர் சைனி மெளலவி ( சாய்ந்தமருது சம்பவத்தில் உயிரிழந்தவர்) தலைமையிலான குழுவினருக்கும் பிள்ளையானுக்கும் இடையில் ஏற்பட்ட உறவு உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல் வரை சென்றதாக கூறப்படுகின்றது.
பிள்ளையானின் குழு, இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் சேர்ந்து செயற்பட்டுவந்தது என்பது பிரசித்தமான இரகசியமாக இருக்கும் நிலையில், அந்த வலையமைப்புக்குள் இருந்த அப்போதைய இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக செயற்பட்ட பிரிகேடியர் சுரேஷ் சலே ( தற்போது உளவுத் துறை பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே) உள்ளிட்டோரால் வகுக்கப்பட்ட திட்டமே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் என அசாத் மெளலானா கூறுகின்றார்.
ஆனால், அசாத் மெளலானா அகதி அந்தஸ்து பெறுவதற்காக இவ்வாறு பொய் கூறுவதாக பிள்ளையான் தெரிவிக்கும் நிலையில், உளவுத்துறை பிரதானி சுரேஷ் சலேவும் குற்றச்சாட்டை மறுக்கின்றார்.
ஆனால் செனல் 4 இல் அசாத் மெளலானா கூறும் விடயங்கள், மற்றும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அவர் வழங்கியுள்ள வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களைப் பார்க்கும் போது, ஏனைய சான்றுகள் ஊடாக அந்த விடயங்களை உறுதி செய்ய முடியுமாக இருப்பின் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னணியில் இருந்ததாக நம்பப்படும் அரசியல் சதியை உறுதியாக வெளிப்படுத்திக்கொள்ளலாம்.
அசாத் மெளலானாவின் கூற்றுப் படி, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் அரசியல் சதியில் அவரும் சேர்ந்தே செயற்பட்டிருக்கின்றார். அந்த விடயம் வெளிச்சத்துக்கு வரும் என்ற அச்சத்தில் உளவுத்துறை பிரதானி மிரட்டிய பின்னரேயே உயிர் அச்சுறுத்தலால் நாட்டை விட்டு வெளியேறியதாக அவர் கூறுகின்றார்.
உளவுத்துறை பிரதானி சுரேஷ் சலே, புத்தளம் வனாத்துவில்லு பகுதியில் வைத்து சஹ்ரான் உள்ளிட்டோரை சந்தித்தமை, அதன் பின்னரான நகர்வுகள், தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரியான ஜமீல் குண்டை வெடிக்கச் செய்யாமை, கிழக்கில் சஹ்ரான் குழுவினரின் பாதுகாப்பு மற்றும் இருப்பை உறுதி செய்தமை போன்ற விடயங்களை வைத்து அசாத் மெளலானாவின் பேட்டியை ஆய்வு செய்யும் போது பல நியாயமான சந்தேகங்கள் எழுகின்றன. அது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அரசியல் சதி இருந்ததா எனும் பாரிய கேள்வியை ஏற்படுத்துகின்றது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் திடீரென ஓரிரு நாட்களில் திட்டமிட்டு நடாத்தப்பட்டது அல்ல எனவும் அது சுமார் 3 வருட திட்டத்தின் பிரதிபலன் எனவும் அசாத் மெளலானா கூறுகின்றார். அப்படியானால் இந்த விவகாரத்தில் விசாரணையாளர்கள் மேலதிக கரிசனை எடுத்துக்கொள்ள வேண்டும். அசாத் மெளலானா பிரசித்தமாக சொல்லியிருக்கும் விடயங்களை வாக்கு மூலமாக பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து அதிலிருந்து மேலதிக விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படல் வேண்டும். இதற்காக சட்ட நடவடிக்கை எடுத்து அதிலிருந்து மேலதிக விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படல் வேண்டும். இதற்காக சட்ட மா அதிபர் உடனடியாக ஆலோசனைகளை அளிப்பதுடன், அந்த நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய வேண்டும்.
இந்த்த செனல் 4 காணொளியின் ஊடாக பிரதான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரால் சுரேஷ் சலே, இப்போதும் உளவுத்துறை பிரதானியாக இருக்கும் நிலையில், அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு அந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இல்லையேல் நீதியான விசாரணைகள் கேள்விக் குறியாகும் நிலையில், உள்ளக பொறிமுறை மீது மக்களின் நம்பிக்கை இல்லாமல் போக்கும். அவ்வாறானதொரு நிலைமை தலைதூக்குமானால் பல தரப்புக்களும் கோருவதை போன்று சர்வதேச விசாரணை ஒன்றே சாத்தியமாகலாம். – Vidivelli