ஏ.ஆர்.ஏ.பரீல்
‘வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்று வாழ்ந்துவரும் இலங்கை முஸ்லிம் ஒருவர் இலங்கை வந்து இலங்கையில் விவாகப் பதிவு செய்து கொள்வதற்கு தடை இருக்கிறது. இலங்கையில் வாழும் ஒரு பெண்ணை அவரால் திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்நடைமுறை முஸ்லிம்களுக்கு மாத்திரமே தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம்கள் பல அசெளகரியங்களுக்குள்ளாகின்றனர். எனவே இவ்விடயத்தில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்
என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் நேற்று முன்தினம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு வேண்டுகோள் விடுத்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இத்தடை காரணமாக வெளிநாட்டில் பிரஜாவுரிமை பெற்றிருக்கும் இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவுக்குச் சென்று அங்கு தங்கள் விவாகப்பதிவினை நடத்திக் கொள்கின்றார்கள். இலங்கையிலிருந்து திருமணப்பதிவிற்காக இந்தியாவுக்குச் செல்வதால் எமது பணம் வீணாக செலவாகிறது. எனவே இது தொடர்பாக ஆக்கபூர்வமான திருத்தத்தை அமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.
2013 ஆம் ஆண்டு சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அச்சுற்று நிருபம் இங்கு திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டவர் ஒருவர் இலங்கை முஸ்லிமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது. இதனடிப்படையில் திருமணம் செய்து கொள்பவர் இலங்கையில் பிறந்தவராக இருந்தாலும் அவர் வேறொரு நாட்டில் பிரஜா உரிமை பெற்றிருந்தால் இலங்கைப் பெண்ணை முஸ்லிம் விவாக பதிவு செய்து கொள்ள முடியாது. முஸ்லிம்களுக்கு மாத்திரமே இந்த நடைமுறை அமுலில் உள்ளது. ஏனைய மதத்தவர்களுக்கு இது விதிவிலக்காகும்.
அத்தோடு விவாக பதிவாளர்களுக்கு மிகக் குறைவான கட்டணமே அறவிடப்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இன்றைய கால கட்டத்தில் இக்கட்டணம் போதாததாகும். இதிலும் அதிகரிப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என்றார். – Vidivelli