ஏ.ஜே. காமில்
இலங்கை நாடானது தேசிய, மாகாண மற்றும் உள்ளூராட்சி ஆகிய மூன்று ஆட்சி நிலைகளைக் கொண்டு ஓர் ஒற்றை ஆட்சியை மேற்கொண்டு வருகின்ற ஜனநாயக குடியரசாகும். இம்மூன்று வகையான ஆட்சி 5முறையில் கீழ்மட்டத்திலிருந்து இயங்கும் உள்ளூராட்சி நிர்வாகமானது பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுடன் பல வகையிலும் தலையிடும் ஒரு நிர்வாகமாக அமைந்துள்ளது.
உதாரணமாக, ஒழுங்குமுறை, நிர்வாக செயற்பாடுகள், பொதுச் சுகாதாரம், சுற்றுச்சூழல் சுகாதாரம், பொதுப் பாதைகள், வடிகான்கள் நூலகம், மற்றும் பொதுப் பயன்பாட்டு செயற்பாடுகளை உள்ளடக்கிய மக்கள் பயன்பெறும் சேவைகளை வழங்குவது உள்ளூராட்சி நிருவனங்களின் பிரதான கடமையாகளாக காணப்படுகின்றன. இதன் முக்கியத்துவங்களை கருத்தில் கொண்டு அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் கூட உள்ளூராட்சி அதிகாரம் இணைக்கப்பட்டுள்ளது.
தேசிய நிருவாக நிலையினை அடுத்து, இரண்டாம் நிலை மாகாண அதிகாரங்கள் 1987 ஆம் ஆண்டு மாகாண சபை சட்டத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றது. மேலும் மூன்றாம் நிலை உள்ளூராட்சி சபை தொடர்பான முக்கிய சட்டங்களான நகர சபை கட்டளைச் சட்டம் 1939 ஆம் ஆண்டும், மாநகர சபை சட்டம் 1947 ஆம் ஆண்டும் மற்றும் பிரதேச சபை சட்டம் 1987 ஆண்டின் 15 ஆம் இலக்க சட்டங்களாக காணப்படுகின்றன.
அதிகார பரவலாக்கம் செய்யப்பட்ட அரசாங்கத்தின் நிர்வாக அங்கங்களில் ஒன்பது மாகாண சபைகளுக்குள் உள்ளடக்கியதாக எமது நாட்டில் தற்போது வரை 24 மாநகர சபைகளும், 41 நகர சபைகளும், மற்றும் 276 பிரதேச சபைகளும், உள்ளடக்கிய 341 உள்ளூராட்சி சபைகள் இயங்கி வருகின்றன.
அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி
மன்றங்கள்
அந்த வகையில் 1961 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு தென் பகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் இலங்கையில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது இன ரீதியாகவும், மத ரீதியாகவும் மிகவும் வேறுபட்ட மாவட்டங்களில் ஒன்றாக காணப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் 802,252 நபர்களும் அதில் 46 வீதமானோர் முஸ்லிம்களும், 36 வீதமானோர் பௌத்தர்களும், 17 வீதமானோர் தமிழர்களும் மற்றும் 1 வீதமானோர் கிறிஸ்தவர்களும் வாழுகின்றனர். (2021 ஆம் ஆண்டின் புள்ளி விபரத்தின் பிரகாரம்).
இம்மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்கள் செயற்பட்டு வரும் நிலையில் இங்கு வாழும் மூவின மக்களும் ஒற்றுமையாகவும், சகவாழ்வுடனும் மற்றும் பாரம்பரிய கலை கலாச்சார விழுமியங்களை பேணி சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வுடன் மிக நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர். இந் நிலையில் சில அரசியல் இலாப நோக்கத்திற்காக சமூக ஒற்றுமை கூறுபோடப்பட்டு இம்மாவட்டம் பல்வேறுபட்ட முரண்பாடுகளை எதிர்நோக்கியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக சம்மாந்துறை, கல்முனை மற்றும் நாவிதன்வெளி போன்ற உள்ளூராட்சி மன்றங்களில் இனரீதியான முன்னெடுப்புக்களும், அரசியல் ரீதியான நகர்வுகளும் காணப்படுகின்றன. உதாரணமாக கல்முனை மாநகர ஆட்சி முறைமையினை பிரிப்பது தொடர்பான பிரச்சினை மற்றும் சம்மாந்துறை, நாவிதன்வெளி பிரதேச சபைகளின் வட்டார பிரிப்பில் காணப்படும் பிரச்சினைகள் என இவ் உள்ளூராட்சி சபைகள் பல்வேறு சவால்களை எதிர் கொண்டுள்ளது.
இங்கு பல்வேறு தரப்பினரும் தத்தமது சாதகமான காரணங்களையும், கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்ற நிலையில் அரசியல் கட்சிகளின் சுயநல போக்குகள் மேற்குறிப்பிடப்பட்ட உள்ளூராட்சி சபைகளை திறன்பட செயற்படுத்த முடியாத நிலைக்கு எதிர் கொண்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபை:
சம்மாந்துறை பிரதேச சபையானது கடந்த 1946ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பட்டினச் சபையாகவும் அதனை அண்டிய இரண்டு கிராமமும் (நாவிதன்வெளி, இறக்காமம்) தனித்தனி கிராம சபையாகவும் இருந்த போது 1987 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி அதிகாரசபை திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அவ்விரண்டு கிராம சபைகளும் இணைந்து பிரதேச சபையாக மாற்றப்பட்டது. பின்னர் இணைக்கப்பட்ட அவ்விரு கிராம சபைகளும், 2006ஆம் ஆண்டு நாவிதன்வெளி மற்றும் இறக்காமம் 2010ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தனித்தனி பிரதேச சபையாக பிரிக்கப்பட்டது.
மேலும் சம்மாந்துறை பிரதேச சபையானது 22,097 குடும்பங்களை கொண்டு காணப்படுகின்ற மிகவும் பழமை வாய்ந்த சபைகளில் ஒன்றாகும். இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களும் தமிழர்களும் பல்வேறு வரலாற்று கலாசாரத்தை பேணுகின்ற மக்களாக உள்ளனர். இதன் பின்னணியில் 2013 ஆம் ஆண்டின் தேசிய உள்ளூராட்சி எல்லை நிர்ணய ஆணைக் குழுவின் தீர்மானத்தின்படி 77,284 மக்கள் தொகையையும் அதில் (முஸ்லிம்கள் 87 வீதமானோரும் தமிழர்கள் 13 வீதமானோரும்) 51 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டமைந்த சம்மாந்துறை பிரதேச சபைக்கு 09 ஒற்றை அங்கத்தவர் தேர்தல் வட்டாரமும் 01 மூன்று அங்கத்தவர் தேர்தல் வட்டாரமாக மொத்தம் பத்து வட்டாரங்களும் காணப்படுகின்றன. இதில் 12 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும் 8 பட்டியல் உறுப்பினர்களுமாக மொத்தம் 20 உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டு தெரிவு செய்யப்படுகின்றார்கள். எனினும் 2022ஆம் ஆண்டின் புதிய எல்லை நிர்ணய ஆணைக் குழுவிற்கு இச்சபை வட்டாரத்தின் உறுப்பினர்களை குறைப்பதற்கான சாத்தியப்பாடு அமையப்பெறவில்லை.
இதில் சின்னப்பள்ளி, தைக்காப்பள்ளி, சம்மாந்துறை, விளினியடி, மலையடி மற்றும் மல்கம்பிட்டி போன்ற 06 வட்டாரங்களில் 99 வீதமானோர் முஸ்லிம்கள் கணிசமாக வாழும் வட்டாரமாக காணப்படுகின்றது. அதனை அடுத்து 4ஆம் வட்டாரமான மட்டக்களப்புத்தரவை எல்லைக்குள் 88 வீதமானோர் முஸ்லிம் தரப்பினர்களும் 12 வீதமானோர் தமிழ் தரப்பினர்களும் வாழும் ஒரு வட்டாரமாகும்.
இதே போன்று, மீதமாக இருக்கின்ற மூன்று வட்டாரங்களில் மல்வத்தை வட்டார எல்லைக்குள் 69 வீதமானோர் தமிழ் தரப்பினர்களும் 31 வீதமானோர் முஸ்லிம் தரப்பினர்களும் இணைந்து வாழ்கின்ற வட்டாரமாகும். மேலும் 10ஆம் வட்டாரமாகிய வளத்தாப்பிட்டி எல்லைக்குள் 77 வீதமானோர் தமிழர்களும் 23 வீதமானோர் முஸ்லிம்களும் வாழ்கின்ற வட்டாரமாக காண முடிகின்றது.
இறுதியாக உள்ள மூன்று அங்கத்தவர் கொண்ட தேர்தல் வட்டாரமாகவுள்ள வீரமுனை 2ஆம் வட்டாரத்தில் 77 வீதமானோர் முஸ்லிம் தரப்பினர்களும் 23 வீதமானோர் தமிழ் தரப்பினர்களும் வாழ்கின்ற வட்டாரமாக காண முடிகின்றது.
03 அங்கத்தவர் கொண்ட வட்டாரத்தினை இல்லாமல் செய்து அதற்குப் பகரமாக மூன்று ஒற்றை அங்கத்தவர் கொண்ட வட்டாரங்களாக மாற்றுவதற்கான ஆலோசனை 2022 ஆம் ஆண்டு புதிய எல்லை நிர்ணய ஆணை குழுவிற்கு முன்வைக்கப்பட்டது. இதன்படி 10 வட்டாரங்கள் 12 வட்டாரங்களாக அமையப் பெறுவதுடன், சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப வட்டாரங்களை ஒதுக்கீடு செய்யும் போது 13 வீதம் தமிழ்த் தரப்பினர்க்கு 01 வட்டாரமும் (1.43 வீதம்), 87 வீதம் முஸ்லிம் தரப்பினருக்கு 11 வட்டாரங்களும் (10.54 வீதம்) அமையப் பெறும்.
எனினும் இவ்விரு சமூகங்களுக்கு மத்தியில் நல்லுறவை பேணும் நோக்குடன் தமிழ் தரப்பினர்களுக்கு 02 வட்டாரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட முடியும் என இவ்வாணைக்குழுவிற்கு சம்மாந்துறை பிரதேச மக்கள் சார்பில் பல பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தரப்பிலிருந்து ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
ஆனால் இப்பிரதேசத்தில் வாழும் பெரும்பாலான தமிழ் தரப்பினர்களும் மற்றும் முன்னாள் பிரதேச சபையின் சில உறுப்பினர்களும் தற்போது வரை நடைமுறையிலுள்ள வட்டார எல்லைகளையும் குறிப்பாக மூன்று அங்கத்தவர் கொண்ட 2 ஆம் வட்டாரமாகிய வீரமுனை வட்டாரத்தினை எவ்வித மாற்றம் செய்யாமல் நடைமுறைப்படுத்துமாறு இவ் ஆணைக் குழுவிற்கு தமது பரிந்துரைகளை பிரதேச சபையின் ஊடாக சமர்ப்பித்துள்ளார்கள்.
இந் நிலையில் தமிழ் தரப்பினர் தமக்கு 12 வட்டாரங்களில் 03 வட்டாரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரைகளை தொடர்ந்து சமர்ப்பித்த வண்ணமே உள்ளனர். இவ்வாறான இரு வேறுபட்ட கருத்தாடல்கள் நீடித்த வண்ணமே உள்ளது.
நாவிதன்வெளி பிரதேச சபை:
நாவிதன்வெளி, கல்ஓயா திட்டம் மற்றும் 2004 ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் பின்னர் பல்வேறு கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த சமூகங்களைக் கொண்டதாக அறியப்பட்ட ஒரு கிராமமாகும்.
நாவிதன்வெளி பிரதேச சபை 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சம்மாந்துறை பிரதேச சபையின் வடக்கு பகுதியிலிருந்து பிரித்து ஸ்தாபிக்கப்பட்டது.
2013ஆம் ஆண்டு தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தீர்மானத்தின்படி 24,262 மக்கள் தொகையையும் (அதில் தமிழர்கள் 64.8 வீதமானோரும், முஸ்லிம்கள் 34.2 வீதமானோரும், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் 1 வீதமானோரும் காணப்படுவதோடு) 20 கிராம சேவகர் பிரிவுகளை கொண்டமைந்த நாவிதன்வெளி பிரதேச சபைக்கு 07 ஒற்றை அங்கத்தவர் கொண்ட தேர்தல் வட்டாரத்தில் தெரிவு செய்யப்படும் 7 உறுப்பினர்களும் 5 பட்டியல் உறுப்பினர்களுமாக மொத்தம் 13 உறுப்பினர்கள் மாத்திரமே பரிந்துரைக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றார்கள்.
ஆனால், 2022ஆம் ஆண்டு புதிய எல்லை நிர்ணயான குழுவின் கட்டளையின் பிரகாரம் உள்ளூராட்சி சபைகளின் வட்டார உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 வீதமாக குறைத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்ட போது இப் பிரதேச சபையின் வட்டாரத்தையும் மற்றும் உறுப்பினர்களையும் குறைக்கும் நோக்குடன் ஏழு வட்டாரத்திலிருந்து ஆறு வட்டாரமாக குறைத்து அமைத்துள்ளார்கள்.
இதன் பிரகாரம் அண்ணாமலை, அண்ணாமலை வடக்கு மற்றும் நாவிதன்வெளி ஆகிய இம் மூன்று வட்டாரங்களிலும் 99 வீதமானோர் தமிழர்கள் கணிசமாக வாழும் வட்டாரங்களாகும். இதனை அடுத்து, 6ஆம் வட்டாரமாகிய சொறிக்கல்முனையில் முஸ்லிம்கள் 16 வீதமானோரும், 84 வீதமானோர் தமிழர்கள் கணிசமாக வாழும் வட்டாரமாக காணப்படுகின்றது.
அதேபோன்று சாலம்பெக்கனி 5ஆம் வட்டாரத்தில் முஸ்லிம்கள் 98.5 வீதமானோரும், 1.5 வீதமானோர் தமிழர்களும் உள்ள நிலையில், 2ஆம் வட்டாரமாகிய மத்திய முகாமில் 88.6 வீதமானோர் முஸ்லிம்களும் 10 வீதமானோர் தமிழர்களும் 1.4 வீதமானோர் பௌத்தர்களும் இணைந்து வாழுகின்ற இவ்விரு வட்டாரங்களில் கிட்டத்தட்ட 90 வீதமானோர் முஸ்லிம்கள் கணிசமாக வாழும் வட்டாரமாக காணப்படுகின்றது.
இப் புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் இறுதியாக முன்மொழியப்பட்ட வட்டார பிரிப்பில் பெரும்பாலான முஸ்லிம் மற்றும் தமிழ் தரப்பினர்கள் இதற்கு உடன்பட்ட போதிலும், ஒரு சில தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்பினர்கள் இவ் வட்டார எல்லைகளின் பெயர்கள் மற்றும் சில முஸ்லிம் கிராம சேவகர் பிரிவுகள் தமிழ் வட்டார பிரிவுகளோடு இணைத்து வட்டாரமாக பிரிக்கப்பட்டதும் இரு சாரார்களுக்கு மத்தியில் வேறுபட்ட கருத்து முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதை காண முடிகின்றது. தற்போதைய எல்லை நிர்ணயமானது இங்கு வசிக்கும் இனங்களுக்கிடையில் ஒருமித்த ஒப்புதலை பெறாத நிலையில் இங்கும் இப்பிரச்சினைகளை காணக் கூடியதாக உள்ளது.
கல்முனை மாநகர சபை
கல்முனை, கிழக்கிலங்கையிலுள்ள அம்பாறை மாவட்டத்தில் நெரிசல் மிகுந்த நகரப் பகுதிகளில் ஒன்றாகும். நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள சில மாநகராட்சிகளில் இதுவும் ஒன்றாகும். அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் கல்முனை மாநகரம் முதன்மையான சபையாகவும் பண்டைய நகரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. மேலும் கல்வி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான மையமாகவும் திகழ்கின்றது.
கடந்த 1946ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கல்முனை பட்டிண சபையாகவும் கல்முனையை அண்டிய மூன்று கிராமங்களும் தனித்தனி கிராம சபைகளாக இருந்த போது 1987 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி அதிகாரசபை திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அம்மூன்று கிராம சபைகளையும் இணைத்து ஒரு பிரதேச சபையாகவும், பின்னர் 1998ஆம் ஆண்டு நகர சபையாகவும், 2002ஆம் ஆண்டு மாநகர சபையாகவும் தரமுயர்த்தப்பட்டது.
2013 ஆம் ஆண்டின் தேசிய உள்ளூராட்சி எல்லை நிர்ணய ஆணைக் குழுவின் தீர்மானத்தின்படி, கல்முனை மாநகர சபை 122,203 மக்கள் தொகையையும் இதில் (முஸ்லிம்கள் 74.32 வீதமானோரும் தமிழர்கள் 25 வீதமானோரும், கிறிஸ்தவர்களும் பௌத்தர்களும் 0.68 வீதமானோரும் உள்ள நிலையில்) 35,951 குடும்பங்களுடன் 71 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டமைந்துள்ளது. இம்மாநகர சபைக்கு 22 ஒற்றை அங்கத்தவர் கொண்ட தேர்தல் வட்டாரங்களும் 01 இரட்டை அங்கத்தவர் கொண்ட தேர்தல் வட்டாரமாக மொத்தம் 23 வட்டாரங்களும், 24 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் 16 பட்டியல் உறுப்பினர்களுமாக மொத்தம் 40 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள்.
இதன் பிரகாரம் வட்டார இலக்கமாகிய 1ஆம், 6ஆம், 8ஆம், 9ஆம் மற்றும் 11ஆம் ஆகிய 5 வட்டாரங்களிலும் கணிசமாக தமிழர்கள் வாழ்கின்றார்கள். அதனைத் தொடர்ந்து இரட்டை உறுப்பினர் கொண்ட 12ஆம் இலக்க வட்டாரத்தில் 60 வீதமானோர் தமிழர்களும் 40 வீதமானோர் முஸ்லிம்களும் வாழ்கின்ற வட்டாரமாக பார்க்க முடிகின்றது. மீதமாக உள்ள 17 வட்டாரங்களில் கணிசமாக முஸ்லிம்கள் வாழ்கின்ற வட்டாரமாக திகழ்கின்றது.
ஆனால் 2022ஆம் ஆண்டு புதிய எல்லை நிர்ணய ஆனைக் குழுவின் கட்டளையின் பிரகாரம் உள்ளூராட்சி சபைகளின் வட்டார உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 வீதமாக குறைத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்ட போது இந் நகர சபையின் வட்டாரத்தினை குறைப்பது சாத்தியமாக அமையவில்லை.
இரட்டை உறுப்பினர்கள் கொண்ட 12ஆம் இலக்க வட்டாரத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்பினர்களுக்கு இடையில் ஒரு முரண்பாட்டு நிலை காணப்படுகின்றது. அதாவது தமிழ் தரப்பினர்கள் இரண்டு அங்கத்தவர் கொண்ட 12ஆம் இலக்க வட்டாரத்தினை தனித்தனி வட்டாரமாக பிரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்கள். மாறாக முஸ்லிம் தரப்பினர்கள் இவ் வட்டாரத்தில் கல்முனையிலுள்ள தலைமை வர்த்தக தளங்களும் போக்குவரத்து மற்றும் முக்கிய அரச மற்றும் தனியார் காரியாலயங்களும் இருப்பதனால் இதனை இரண்டாகப் பிரிக்கும் போது முஸ்லிம்களுக்கு பாதகமான விளைவுகளையும், இன ரீதியான முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும் என்ற ஐயப்பாட்டிற்காக இதனை இரட்டை உறுப்பினர் கொண்ட வட்டாரமாக தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்த ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளார்கள்.
இதேவேளை 3 தமிழ் கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 9ஆம் இலக்க வட்டார நிலப்பரப்பில் குறிப்பாக விவசாய நிலப்பரப்புக்கள் சாய்ந்தமருது எல்லை வரை அமையப் பெற்றிருப்பது பாதகமான விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்ற காரணத்தினால், இந் நிலப்பரப்பை உரிய வட்டார எல்லைகளுக்குள் உள்வாங்க வேண்டும் என்ற ஒரு முன்மொழிவும் இப் புதிய ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், 1987 ஆம் ஆண்டு உள்ளூராட்சி அதிகார சபை திருத்தச் சட்டத்தின் பிரகாரம் கல்முனை பட்டிணச் சபை பிரதேச சபையாக மாற்றம் பெற்ற போது அதன் தெற்கு எல்லையாக காரைதீவு, அம்பாறை பிரதான வீதியில் நடுப்புள்ளி வழியாக மாவடிப்பள்ளி வயல் காணிகளை உள்ளடக்கியதாக எல்லை வரைபடம் 1987.12.05 ஆம் திகதிய வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட போதிலும் காரைதீவை தனிப் பிரதேச சபையாக 2011ஆம் ஆண்டு உருவாக்கும் போது, இப்பிரதேச சபைக்கு வடக்கு எல்லையாக கல்முனை மாநகர சபைக்குச் சொந்தமான மாளிகைக்காடு பிரதான வீதி தொடக்கம் அதன் நேர் கோடாக உள்ள விவசாய காணிகளையும் இணைத்து இச்சபை உருவாக்கப்பட்டது. இவ்வாறாக பல முரண்பாடுகள் கல்முனை மாநகர சபைக்குள் காணப்படுகின்றன. இந் நிலையில் சாய்ந்தமருது பிரதேச மக்கள் கல்முனை மாநகர சபையிலிருந்து விடுபட்டு தமக்கான தனியான உள்ளூராட்சி சபை ஒன்றினை மிக நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.
பரிந்துரை:
மேற்குறிப்பிடப்பட்ட இம்மூன்று உள்ளூராட்சி சபைகளுடைய பிரச்சினைகள் தனித்தனியாக ஆராயப்படுவதோடு இவ் அரசானது இருதரப்பினர்களுக்கிடையில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஒரு சிறந்த தீர்வினை பெற்றுக் கொடுப்பதே சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாகும். இந்த நிலையில் உள்ளூராட்சி சபையின் ஆட்சிக் காலம் முடிந்த நிலையில் அதனை உரிய நேரத்தில் நடாத்தாமல் பிற்போடுவதும் மேற்குறிப்பிடப்பட்ட பிரச்சினையை அதிகரிப்பதோடு, கீழ்மட்ட ஜனநாயக ஆட்சி முறையினை மறுக்கின்ற ஒரு போக்காகவும் இது அமைந்து விடுகின்றது.
எனவே அரசாங்கமானது இங்கு காணப்படுகின்ற பிரதான 2 பிரச்சினைகளான எல்லை மற்றும் வட்டார நிர்ணயம் போன்றவற்றினை சரி செய்யப்பட வேண்டும். அத்தோடு உரிய நேரத்தில் தேர்தலை நடாத்தி பொதுமக்களின் சகவாழ்வுக்கும் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துவதற்கும் அரசு நடவடிக்கை எடுப்பது இன்றியமையாததாகும்.
எனவே இவ்வாறு கிராம மட்டங்களில் புரையோடிக் கிடக்கும் சமூக, கலாச்சார மற்றும் அரசியல் ரீதியான விடயங்கள் உரிய முறையில் தீர்க்கப்படாத விடத்து நாட்டில் நாம் எதிர்பார்க்கும் சமாதானம் மற்றும் அபிவிருத்தி என்பன வெறும் கனவாகவே மாறிவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.– Vidivelli