(ஏ.ஆர்.ஏ.பரீல்)
தீவிரவாத குழுக்களின் சிந்தனைகள், ஒழுங்கீனமான அதன் போக்குகள் என்பனவற்றால் இஸ்லாத்துக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்பனவற்றை எடுத்துரைக்க வேண்டும். அவைகள் தங்கள் செயற்பாடுகளின் மூலம் பித்னாக்களையும், பிளவுகளையும் தோற்றுவிக்கின்றன. சமூகங்களுக்கிடையில் பாதுகாப்பின்மை மற்றும் நிலையற்ற தன்மையையுமே பரப்புகின்றன என்பது தெளிவுபடுத்தப்படவேண்டும் என்பன உட்பட 11 கோரிக்கைகள் சவூதி அரேபியா மக்காவில் நடை பெற்ற இஸ்லாமிய சர்வதேச மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இம்மாநாடு கடந்த 13,14 ஆம் திகதிகளில் நடைபெற்றன. மாநாட்டில் உலகெங்குமிருந்து இலங்கை உட்பட 85 நாடுகளின் 150 பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். இதற்கான அனுசரனையினை சவூதி அரேபியா அரசு வழங்கியிருந்தது.தொடர்பாடல் முழுமை பெறல் எனும் தலைப்பில் இம்மாநாடு மக்காவின் ஹரம்ஷரீபுக்கு அருகில் நடைபெற்றது.
மாநாட்டில் ஏழு பிரதான தலைப்புகளில் ஆய்வுத் தலைப்புக்கள் உலகின் தலை சிறந்த உலமாக்களால் முன்வைக்கப்பட்டன. மார்க்க தீர்ப்பாயங்களின் தலைமை முப்திகள், மார்க்க அறிஞர்கள், சிரேஷ்ட ஆளுமைகள் எனப் பலரும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இம்மாநாடு தொடர்ந்தும் எதிர்வரும் காலங்களில் நடாத்தப்படவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஏனைய கோரிக்கைகளாவன உலக முஸ்லிம்களுக்கு மத்தியில் கருத்தொற்றுமை, உடன்பாடு என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் இஸ்லாமிய விவகாரங்களில் அறிஞர்கள், மார்க்கத் தீர்ப்பாயங்கள், இஸ்லாமிய விவகாரத் திணைக்களங்கள் தொடர்ச்சியான உறவையும், அ-னுபவப்பகிர்வையும் ஒத்துழைப்புகளையும் வழங்கவேண்டும்.
குர்ஆனையும் ஸுன்னாவையும் பற்றிப் பிடிப்பதே மார்க்கத்தின் அடிப்படை. அதில் வழிகேடு நெறிபிறழ்வுகளிலிருந்து பாதுகாப்பு உள்ளது என்பதை மாநாடு உறுதிப்படுத்துகிறது. பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள அவற்றை சரியான அடிப்படையில் விளங்கி அவை இரண்டையும் பற்றிப்பிடித்துக் கொள்வது இன்றியமையாதது என்பதை மாநாடு வலியுறுத்துகிறது.
பாடத்திட்டங்கள், கற்பித்தல் முறைகள், மார்க்க உப நியாசங்களில் நடுநிலை, நீதம் என்பவற்றை மிக உயர்ந்த அடிப்படையில் பேணுவது இஸ்லாமிய உலகின் அறிஞர்கள், மார்க்கத்தீர்ப்பாயங்கள், இஸ்லாமிய விவகார அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் பொறுப்பாகும். பண்பாட்டு சிதைவு, எல்லை மீறல், தீவிரவாதம் என்பவற்றுக்கு எதிராக போராடுதல் மற்றும் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் மூலம் இமாம்கள், கதீப்களை தயார்ப்படுத்துவதின் ஊடாக இதை சாத்தியப்படுத்தலாம் என்பதை இம்மாநாடு உறுதிப்படுத்துகின்றது.
புனித குர்ஆனின் பிரதிகளை தொடர்ச்சியாக எரித்து கோபத்தை ஊட்டும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. நிச்சயமாக இவ்வாறான படுமோசமான செயற்பாடுகள் வெறுப்புணர்வையும், காழ்ப்புணர்ச்சியையும், இனப்பாகுபாட்டையும் தூண்டுவதாகும். அத்தோடு மனித சமூகங்களுக்கு மத்தியில் இணைந்து வாழ்வதற்கான விழுமியங்களுக்கும் முரணானதாகும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களுக்காகவும் சேவை செய்வதிலும் மார்க்க விவகார திணைக்களங்கள், மார்க்கத் தீர்ப்பாயங்கள், அறிஞர்களுக்கு மத்தியில் தொடர்ச்சியான உறவைப்பேணி அவர்களுக்கிடையில் முழுமைத்துவத்தை உருவாக்குவதற்காக சவூதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுவரும் முயற்சிகளை இம்மாநாடு பெரிதும் மதிக்கிறது.
நாஸ்தீகம், பண்பாட்டு சீரழிவு என்பற்றிலிருந்து சமூகங்களின் பாதுகாப்பைக் கட்டியம் கூறும் அடிப்படையில் குடும்பத்தை பாதுகாப்பதும், இளம் தலைமுறையினரை முறையாக வளர்ப்பதும் இன்றியமையாததாகும். முறையான பரிகாரம், பாதுகாப்பு என்பவற்றை இலக்காகக் கொண்ட பல்வேறு செயற்திட்டங்களின் ஊடாக இவை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மார்க்க ஆதாரங்களுக்கு ஏற்ப அதன் அடிப்படையிலேயே பத்வாக்கள் வழங்கப்படுவது அவசியமாகும். குழப்பங்களைத் தவிர்த்து நன்மைகளை அவை கொண்டுவர வேண்டும். பத்வாக்கள் வழங்குவதற்கு தகுதியானவர்களிடமிருந்தே பத்வாக்கள் பெறப்படவேண்டும்.
சமூகங்களுக்கிடையில் சகவாழ்வு, சகிப்புத்தன்மையை வலுப்படுத்தல், கருத்து முரண்பாடு மற்றும் பிரிவினையை ஒழித்தல், இஸ்லாமிய ஒற்றுமையை பலப்படுத்தல், இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களுக்காகவும் சேவை செய்தல் என்பவற்றில் அறிஞர்களாலும், பத்வா அமைப்புகளாலும் இஸ்லாமிய விவகார அமைச்சுக்கள், திணைக்களங்களாலும் செய்யப்பட்டிருக்கும் முயற்சிகளை மாநாடு பாராட்டுகிறது.
இம்மாநாடு நடைபெறுவதற்கு ஒப்புதல் வழங்கிய மன்னர் ஸல்மான், இளவரசர் பின் ஸல்மான் இருவருக்கும் இம்மாநாடு நன்றிகளைத் ளைத் தெரிவிக்கிறது எனும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.- Vidivelli