இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் கற்கைகளில் புரட்சிகரமான மாற்றம் தேவை.!

0 2,075
  • மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்

இஸ்லாமிய கற்கைகள் எனும்போது நாம் அரபுமொழி மற்றும்  குர்ஆன், ஹதீஸ, பிக்ஹு, அவை சார்ந்த அடிப்படைக் கலைகள் கற்கைகளையே இங்கு கவனத்திற்கு எடுக்கின்றோம். அந்த வகையில் இலங்கையில் மாத்திரமல்ல உலகின் பல பாகங்களிலும் அரபு இஸ்லாமிய கற்கைகளுக்கான தனியான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் காணப்படுகின்றன. அதேபோன்று இஸ்லாமிய நூலகங்கள், நிறுவனங்கள், தவா இயக்கங்கள், தொண்டர் நிறுவனங்கள்   என தனித்துவமான அமைப்புக்களும் காணப்படுகின்றன.

இந்த நிறுவனங்கள் வரலாறு நெடுகிலும் கால சூழ்நிலைகளுக்கேற்ப அளப்பரிய பங்களிப்புக்களை செய்து வந்திருக்கின்றன. அவற்றின் வரலாறு, பங்களிப்புக்கள் பற்றியெல்லாம் விரிவாக ஆராய்வது எனது நோக்கமல்ல. ஆனால் இந்த நிறுவனங்கள் கொண்டிருக்கின்ற பொதுவான ஒரு பண்பு  இஸ்லாமிய அடிப்படைகளுடன் முரண்படுகின்றதா? என்ற கேள்வி குறித்த கருத்தாடல் ஒன்றிற்கான ஆரம்ப அத்தியாயம் ஒன்றையே இங்கு பதிவு செய்கின்றேன்.

இஸ்லாம் தனி மனித, குடும்ப, சமூக, தேச மற்றும் சர்வதேச வாழ்வை நெறிப்படுத்துகின்ற முழுமையான வாழ்வுநெறி என்ற அடிப்படையில் இயற்கை நியதிகளுடன் முரண்பட்டுக் கொள்ளாத ஆன்மீக அடித்தளங்களுடன் கூடிய அழகிய வாழ்வு நெறியை இஸ்லாமிய அகீதாவாகவும் ஷரீஆவாகவும் பண்பாட்டு விழுமியங்களாகவும் மனித குலத்திற்கு வழங்கியுள்ளது.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை இந்த அழகிய வாழ்வியல் போராட்டங்களிலிருந்து விலகி நிற்கின்ற வெறுமனே மதப் பணிகளையும் ஆன்மீகப் பணிகளையும் மேற்கொள்வதற்காக முற்றுமுழுதாக குடும்பத்தில், சமூகத்தில் அல்லது நாட்டில் தங்கி வாழ்கின்ற  மதகுருபீடத்தையோ, துறவிகளையோ அவர்களுக்கான  மடங்களையோ ஆதீனங்களையோ ஒரு போதும் அங்கீகரித்ததில்லை, மாறாக, உலக வாழ்வில், வாழ்வாதார தொழில் முயற்சிகளில் தம்மை  ஈடுபடுத்திக் கொள்கின்ற இல்லறத்தோடு நல்லறம் பேணுகின்ற மார்க்க அறிஞர்களையே இஸ்லாம் உருவாக்க விரும்புகிறது.

இஸ்லாமிய வரலாற்றில் நபிமார்களாயினும், கலீபாக்களாயினும், நபித் தோழர்களாயினும், இமாம்களாயினும் அவர்கள் தங்கள் வாழ்வாதார தொழிற்றுறைகளில் ஈடுபட்டிருப்பதனை நாங்கள் அறிவோம், என்றாலும் காலவோட்டத்தில் இஸ்லாமிய அரசின் தோற்றம், நிறுவனமயப்படுத்தப்பட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்ட பொழுது துறைசார்ந்த நிபுணர்களுக்கும் அரச பணியில் இருப்பவர்களுக்கும் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்குகின்ற கட்டமைப்பு,  நிர்வாக ஒழுங்குகள் ஏற்படுத்தப் பட்டன. அந்தவகையில் இஸ்லாமிய அறப்பணியில் இருப்பவர்களுக்கும் மஸ்ஜித்களில், கல்வி நிறுவனங்களில்   சேவை புரிபவர்களுக்கும் கொடுப்பனவுகள், உரிமைகள், சலுகைகள்  வழங்குகின்ற முகாமைத்துவ முறைகள் அறிமுகப் படுத்தப்பட்டன.

ஆனால், இஸ்லாமிய கற்கைகள் கற்போர் சகலரும் மஸ்ஜித்களில் அல்லது தர்ம நிதியங்களில் சேவை புரிய வேண்டுமென்றோ அவர்களுக்கான கொடுப்பனவுகளை பைத்துல்மால் நிதியம் பொறுப்பேற்க வேண்டும் என்றோ அல்லது உள்நாட்டு வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்கள் பொறுப்பெடுக்க வேண்டும் என்றோ, அவர்கள் வேறு விவசாய, வர்த்தக மற்றும் தகமைசார் தொழில் முயற்சிகளில் ஈடுபடக் கூடாதென்றும் சொத்து சுகம் சேர்க்கக் கூடாதென்றும் அவர்கள் இஸ்லாமியப் பணியில் ஏதேனும் வக்பு நிதியத்தில் தங்கி வாழும் முழுநேர ஊழியர்களாக இருக்க வேண்டும் என்றும் எந்தவிதமான கட்டுக்கோப்புகளையும் நிபந்தனைகளையும் இஸ்லாம் விதித்ததில்லை.

இந்த நாட்டில் அரபு மத்ரஸாக்களின் வரலாறு ஒரு நூற்றாண்டையும் தாண்டியுள்ளது, ஆரம்ப காலங்களில் இருந்த சமூக, பொருளாதாரக் கட்டமைப்புக்களில்  அரிதாக வெளிவரும் ஆலிம், ஹாபிழ்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சினைகள் அரிதாகவே காணப்பட்டன, ஆனால் காலம் செல்லச் செல்ல அந்த நிலைமை வெகு வேகமாக மாற்றமடைந்து வந்தாலும் அதற்கேற்ப அரபு இஸ்லாமிய கலாபீடங்களின் கற்கைகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை. நமது சமூகத்தில் ஹாபிழ்களாக, ஆலிம்களாக, ஷெய்குமார்களாக  வருடா வருடம் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பட்டம்பெற்று வெளிவருகின்றார்கள், இவர்களில் பெரும்பாலனவர்கள் ஏதேனும் அடிப்படைத் தொழில் தகைமைகள் வழங்கப்படாது சமூகத்தில திணிக்கப்படுவது இஸ்லாத்தின் பெயரால் இழைக்கப்படுகின்ற பெரும் அநீதியாகும்.

ஜாமிஆ நளீமியாவில் கற்றவன் என்ற வகையில் அன்று ஜாமிஆ கற்கைகளோடு பேராதெனிய பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டதாரிகளாகவும் ஏக காலத்தில் நாம் வெளியேறினோம்! அந்த கலைத்துறை  பட்டப்படிப்பு  நாம்  அரச துறைகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள உதவியது, 1971 காலப் பகுதியில் நளீம் ஹாஜியார்  வெளிவாரிப் பட்டப் படிப்பை அறிமுகம் செய்தபோது ஒரு பட்டதாரி ஆசிரியரின் மாத சம்பளம் சுமார் 300 ரூபா. ஆனால் ஒரு பவுண தங்கத்தின் விலை நூறு ரூபாவுக்கும் குறைவாகவே இருந்தது. தற்போதைய பெறுமதிப்படி ஒரு பட்டதாரி ஆசிரியரின் மாத வருமானம் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கவேண்டும் என நளீம் ஹாஜியார் அவர்கள் சிந்தித்திருக்கிறார்கள்.

இலங்கையில் இன்று பெரும்பாலான அறபு இஸ்லாமிய மத்ரஸாக்களிலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை மற்றும்  வர்த்தகம், முகாமைத்துவம் போன்ற பட்டப் பரீட்சைகளுக்கும்  மாணவர்களை தயார் செய்கின்றமை ஒரு சிறந்த முன்னேற்றமாகும், அத்தோடு தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலக் கல்வி, சட்டம், இஸ்லாமிய நிதியியல் போன்ற கற்கைகளும் ஒருசில இஸ்லாமிய கலையகங்களில் கற்பிக்கப்படுகின்றமை வரவேற்கத்தக்க மாற்றமாகும்.!

இஸ்லாத்தைப் பொறுத்தவரை சமூகத்தில் தங்கி வாழ்கின்ற ஒரு “மதகுரு பீடம்” கிடையாது. சகலரும் உழைத்துண்டு வாழ்வதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது, யாசகம் அது எந்த வடிவில் இருந்தாலும் அதனை இஸ்லாம் ஊக்குவிப்பதில்லை! இஸ்லாமிய நிறுவனங்களில், அமைப்புக்களில், பள்ளிவாசல்களில், தஹ்வா அமைப்புகளில்  இருப்பவர்கள் முற்றிலும் துறந்த முனிவர்களாக, சமூகத்திலும் வக்பு சொத்துகளிலும் தங்கி வாழும் முழு நேர ஊழியர்களாக இருக்க வேண்டும் என்ற கடப்பாடும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை காலத்திற்குப் பொருத்தமான  வாழ்வாதாரக் கற்கைகளை வழங்காது சிறுவர்களை இஸ்லாமிய கலையகங்களில் வைத்திருப்பது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.  இஸ்லாமிய அறிஞர்கள் தமது சொந்தக் கால்களில் நிற்கக்கூடியஸகாத் செலுத்தக்கூடிய தொழிலதிபர்களாக, பல்துறை நிபுணர்களாகத் திகழவேண்டும்!

கடந்த பல தசாப்தங்களாக நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் அரபு இஸ்லாமிய கலாபீடங்களில் சாதாரணதர, உயர்தர மற்றும் வெளிவாரி பட்டப் படிப்புகளுக்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தாலும் கூட அவை வெறும் கலைத்துறைகளை மையமாக வைத்தே பெரிதும் போதிக்கப்படுகின்றன. உண்மையில் இஸ்லாமிய கற்கைகளுடன் வாழ்வாதாரக் கற்கைகளை வழங்குவதென்பது மிகவும் சிரமமான விவகாரம் மாத்திரமல்லாது, அதிகூடிய வளங்களையும் முதலீட்டையும் வேண்டிநிற்கின்ற திட்டமுமாகும்.

மாணவர்களின் முழுநேர உழைப்பை வேண்டி நிற்கின்ற துறைகள் அல்லாது வர்த்தகம், முகாமைத்துவம், சட்டம், இஸ்லாமிய வங்கியியல், தகவல் தொழில்நுட்பம், மனிதவள முகாமைத்துவம் சார்ந்த இன்னோரன்ன கௌரவமான தொழிற்றுறைகளுக்கான  தகைமைகளை டிப்ளோமா மற்றும் உயர் தொழில்நுட்ப சான்றிதழ்களை அரபு இஸ்லாமிய காலாபீடங்கள் தமது பாடத்திட்டங்களில் உள்வாங்க வேண்டும், ஒருசில கலாபீடங்கள் அவ்வாறான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்க விடயமாகும்.

முற்போக்கான இலட்சியக் கனவுகளுடன் நோக்குடன் செயற்பட்ட அவற்றின் ஸ்தாபகர்களின் மறைவுக்குப் பின்னர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் காணப்படுகின்றன. ஆனால் அதேவழி வந்த வேறுபல நிறுவனங்கள் பல்வேறு உள்  கட்டமைப்பு மற்றும்  வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக பல மைல்கற்களைத் தாண்டியுள்ளன.

தத்தமது கல்வித் தகைமைகளுக்கும் வாழ்வாதாரத்திற்கும், பிரபல்யத்திற்கும்,  சௌகரியங்களிற்கும், குறுகிய பார்வைகளுக்கும், நிகழ்ச்சி நிரல்களிற்கும் ஏற்ப எதேச்சாதிகாரமான கட்டுப்பாட்டிற்குள் இஸ்லாமிய நிறுவனங்களை வைத்துக் கொண்டுள்ளவர்கள் அல்லாஹ்வை பயந்துகொள்ள வேண்டும்..!

இவ்வாறான காலத்திற்குத் தேவையான மாற்றங்கள் முன்மொழியப்படுகின்ற பொழுது இஸ்லாமியக் கலாபீடங்களின் மதபோதகர்களை, தாஈக்களை உருவாக்கல் என்ற பிரதான இலக்கு தவறிவிடும் என்று சிலர் மிகவும் குறுகிய தப்பெண்ணத்திலான வாதங்களை முன்வைக்கின்றனர், சமூகத்தில் இஸ்லாமிய கற்கைகள் அல்லாத பல்வேறு துறைகளில் கற்பவர்கள் போன்று குடும்பப் பொறுப்புக்களும் இல்லறமும் குடும்ப வாழ்வும் சமூகப் பொறுப்புக்களும் ஆசைகளும் தேவைகளும் இஸ்லாமியப் பட்டதாரிகளுக்கும் உண்டு என்பதனையும், ஹலாலான வாழ்வாதார கற்கைகளைப் பெறுவது  அவர்களது அடிப்படை உரிமை என்பதனையும் கல்வி நிறுவனங்களை நடாத்தும் முகாமைத்துவ மற்றும் நிர்வாக சபைகள் கவனத்திற்க் கொள்ள வேண்டும்.

அதிலும் குறிப்பாக பருவ வயதை எட்டாத மாணவர்களை ஹிப்ழ் கற்கைகளுக்காகவும் எட்டாம் வகுப்பு சித்தியடைந்தவர்களை கிதாபு கற்கைகளுக்காகவும் சேர்த்துக்கொள்கின்ற நிறுவனங்கள் அந்த சிறார்களது அடிப்படை உரிமைகள் மீறப்படாதவாறு தமது கற்கை நெறிகளை அமைத்துக்கொள்ள வேண்டும். உண்மையில் எந்தவொரு நிறுவனமும் வற்புறுத்தலின் பேரில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை. பருவ வயதை அடையாதவர்கள் தங்களது பெற்றார், பாதுகாவலரின் விருப்பத்தின் பேரிலேயே மத்ரஸாக்களில் சேர்க்கப்படுகின்றனர், இங்கு பெற்றார், பாது காவலரும் மத்ரஸா நிர்வாகிகளும் சிறார்களது உரிமைகள் விடயத்தில் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளனர்.

சில முற்போக்கான இஸ்லாமிய நிறுவனங்கள் வெளிவாரி பல்கலைக்கழக கற்கை  நெறிகளை கடந்த ஓரிரு தசாப்தங்களாக கலைத்துறையுடனும்  புவியியல், பொருளாதாரம், இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம் அரபு மொழி போன்ற ஓரிரு பாட விதானங்களுடன் மட்டுபடுத்தி வழங்கி வந்தாலும்கூட தற்போது அரசினால் அறிமுகப்படுத்தப்படுகின்ற புதிய உயர்  கல்விக் கொள்கைகள் மூலம் வெளிவாரிக் கற்கைகள் பாரியளவில் மாட்டுப்படுத்தப் படுகின்ற நிலைமையில் புதிய மாற்றீடுகளைப் பற்றி தீவிரமாக சிந்தித்து வருவதாக அறியமுடிகிறது.

இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய கலாபீடங்கள் இருந்தாலும் ஒவ்வொன்றும் தமக்கே  உரிய தனித்துவமான கல்வி முறைகளை, பாடவிதானங்களைக்  கொண்டுள்ளதால் அண்மைக்காலமாக அவற்றை இயன்றவரை ஒருமுகப்படுத்துகின்ற முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அவற்றை அமுலுக்கு கொண்டு வருவதில் பல்வேறு சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இலங்கையில் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்கள் தரப்படுத்தலின் கீழ் கொண்டுவரப்படல் வேண்டும்.

இலங்கையில் முஸ்லிம் சமய கலாசார விவகாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதும் பதிவு செய்யப்படாததுமான சுமார் 250ற்கும் மேற்பட்ட அறபு மத்ரஸாக்கள் இருக்கின்றன, பெரும்பாலும் எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் உள்வாங்கப் படுகின்றார்கள்.

அதற்கும் மேலாக நூற்றுக்கணக்கில் ஹிப்ழ் மத்ரஸாக்கள் இருக்கின்றன அவற்றிற்கு இளம் சிறார்கள் உள்வாங்கப் படுகின்றார்கள்.

வருடாந்தம் சுமார் 2500 ஆலிம் ஹாபிஸுகள் பட்டம் பெற்று வெளியேறுவதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

உயரிய இஸ்லாமிய பணியிற்காக தமது வாழ்நாளை அர்பணிக்கும் கண்ணியமிக்க உலமாக்கள் ஹாபிழ்கள் விடயத்தில் சமூகத்தின் சிவில், சன்மார்க்க ,அரசியல் தலைமைகள் கூட்டுப்பொறுப்புணர்வுடன் கூடிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுதல் காலத்தின் கட்டாயமாகும்.

“ஊர் திரும்பி பணி செய்தல்”

“ஊர் திரும்பி பணி செய்தல்” என்பது இஸ்லாமிய கற்கைகளின் பிரதான இலக்காகும், களப்பணி என்பது பேச்சு, எழுத்து சார் கருத்தியல் மென்பொருள் பகிர்வுகள் மாத்திரம் அல்ல.

அதற்கான திட்டமிடல், வழிகாட்டல், களப் பயிற்சிகள் மற்றும் அனுபவப் பகிர்வுகள் ஏககாலத்தில் இடம் பெறல் கற்கைகளின் பகுதியாக இருத்தல் வேண்டும்.

சமூகத் தளத்திலிருந்து முற்றாக மாணவர்களை பிரித்தெடுத்து நீண்டகால வதிவிடக் கற்கைகளுக்குப் பின்னர் விடுவிக்கும் பாரம்பரிய முறை கோளாறுகள் நிறைந்தது. தனிமனித, குடும்ப, சமூக தேசிய வாழ்வில் அன்றாட ஈடுபாடு ஒரு இலட்சியப் பணியின் அடிப்படை அமசமாகும்.

 

இன்னும் சில நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்களது சிவில் சமூக ஈடுபாடுகள் குறைவாக இருப்பதற்கு பல்வேறு கொள்கைசார் காரணிகள் இருந்தாலும் சமூக உளவியலை உரிய பரிமாணங்களில் உள்வாங்கி அணுகுமுறைகளை கற்கின்ற காலம் முதலே சரியான முறைகளில் கையாளுகின்ற மூலோபாயங்கள் “ஹிக்மத்” இல்லாமை மிகப் பெரும் குறைபாடாகும்.

பட்டம் பெற்று வெளியே செல்லுகின்ற பட்டதாரிகளின் அடைவுகள் சமூக மற்றும் தேசிய செயற்பாடுகள் காலத்திற்குக் காலம் மதிப்பீடு செய்யப்பட்டு ஸ்தாபனங்களின் அடைவுகள் மதிப்பீடு செய்யப்படுவது போல் அவர்களது வெளியுலக அனுபவப் பகிர்வுகளையும் வழிகாட்டல்களையும் கற்கின்ற மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதும் கட்டாயமாகும்.

ஒவ்வொரு இலட்சிய வாதியின் வாழ்விலும் ஒரு ஹிஜ்ரத்தும், இடைப்பட்ட சமர்களும் மக்கா வெற்றியும் இருக்கத் தான் செய்கிறது.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.