(ஏ.ஆர்.ஏ.பரீல், றிப்தி அலி)
இவ்வருட ஹஜ் யாத்திரையை மேற்கொண்ட யாத்திரிகர்களிடமிருந்து தாம் பயணித்த ஹஜ் முகவர்களுக்கு எதிராக 13 முறைப்பாடுகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஹஜ் முகவர்கள் உறுதியளித்தபடி சவூதியில் தங்குமிட வசதிகளை வழங்காமை, மற்றும் அடிப்படை வாதிகளை உரிய முறையில் வழங்காமை, மினாவில் கூடார வசதிகள் உரிய முறையில் வழங்கப்படாமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முகவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வருட ஹஜ் யாத்திரையில் ஹஜ் முகவர்களுக்கு எதிரான முறைப்பாடுகள், மற்றும் ஆலோசனைகள் இருப்பின் அவற்றை அனுப்பி வைக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விளம்பரம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
‘ஹஜ் முகவர்களுக்கு எதிராக கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையிலான சுயாதீன குழுவொன்றினால் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளன. விசாரணையின் பின் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஹஜ் முகவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும். முகவர்களின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக தடை செய்யப்படும் அல்லது அனுமதிப்பத்திரம் முற்றாக இரத்துச் செய்யப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைசல் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.- Vidivelli