முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்திருத்தங்கள் தொடர்பான முஸ்லிம் பிரதிநிதிகளின் சிபாரிசுகளினால் எதிர்கால முஸ்லிம் சமுகத்தில் ஏற்படப் போகும் தாக்கங்கள்
சட்டத்தரணி
சபானா குல் பேகம்
இலங்கையின் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையானது, பல தசாப்த கால முன்னெடுப்பு எனினும், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்ஷூப் அவர்களின் தலைமையிலான குழுவின் அறிக்கை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து உத்வேகம் அடையத் தொடங்கியது என்பது உண்மை. பல பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் ஆழமாக ஆராயப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட இவ்வறிக்கை சில முஸ்லிம்கள் மத்தியில் பல விமர்சனங்களுக்கு உட்பட்டு, இது ஷரீஆவிற்கு முரண்பட்டது என்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உட்பட சில குழுக்களினாலும் தவறாகப் பேசப்பட்ட ஒரு அறிக்கையாக அமைந்திருந்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் முற்றிலும் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும் என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினரினால் தனி நபர் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை போன்ற பல அழுத்தங்களின் பின்னர் ஷரீஆவிற்கு முரணான விடயங்கள் என முன்னர் கூறப்பட்ட அதே விடயங்களை யார் அவ்வாறு கூறினார்களோ அவர்களே அவை ஷரீஆவிற்கு உட்பட்டது என்று முன்மொழிந்த விடயத்தையும் நாம் மறக்க முடியாது. இது ஒரு வரலாறு.
இதன் பின்னர் அப்போதைய நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்களினால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் மீண்டும் நிலைமை தலைகீழாக மாறியது.
ஷரீஆ என்றால் அது எக்காலத்திற்கும் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டும். எமது தேவைகளுக்கு ஏற்ற வகையிலும், எம்மீது செலுத்தப்படுகின்ற அழுத்தங்களின் பிரதிபலிப்பாகவும் ஷரீஆவின் நிலைப்பாடு மாற்றங்களுக்கு உள்ளாகி, மீண்டும் அவ்வாறான அழுத்தங்கள் குறையும்போது எம் பிடிவாதப்போக்கு தலைதூக்குவதற்கு எமது முஸ்லிம் சமூகம் எவ்வாறு நியாயம் காணப்போகின்றது என்பது இலங்கையின் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தினால் ஆளப்படுகின்ற ஒவ்வொரு முஸ்லிமும் தனக்குள் கேட்டு நியாயம் காண வேண்டிய ஒரு கேள்வியாகும்.
இவ்வாறு இருக்கையில் கடந்த ஜுன் மாதம் எட்டாம் திகதி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினால் (ஒரு சிலர் தவிர) கையொப்பம் இடப்பட்ட, இது தொடர்பான அவர்களது சிபாரிசுகள் அடங்கிய, நீதி அமைச்சருக்கு அவர்களினால் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்ற ஒரு ஆவணம் எம்மத்தியில் உலவுகின்றது. எமது முஸ்லிம் பிரதிநிதிகளினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலும், இவ்வாண்டு ஜூன் எட்டாம் திகதியும் முன்னெடுக்கப்பட்ட நிலைப்பாடுகளில் மாறுபாடுகள் காணப்படுகின்றன என்பதுவும் ஒரு கவலைக்குரிய விடயமாகும். எதுவுமே அறியாத, பாதிக்கப்பட்ட, தங்களுக்கு நீதியே கிடைக்காதா என ஏங்கி தவித்துக் கொண்டிருக்கின்ற அப்பாவி பாமர மக்களை எண்ணி கவலையும் வேதனையும் அடைந்து கொண்டு 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எட்டாம் திகதி எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் (ஒரு சிலரைத் தவிர) நீதியமைச்சிற்கு வழங்கப்பட்ட அறிக்கையென எம்மத்தியில் உலவுகின்ற இந்த அறிக்கையின் மீது நாம் ஒரு கண்ணோட்டத்தை செலுத்துவோம். இவ்வறிக்கையானது அமைச்சர் அலி சப்ரி அவர்களினால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் இவர்களால் வழங்கப்பட்ட அறிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்ஹப்களுக்கு சட்டங்களும், நிவாரணங்களும் மட்டுப்படுத்தப்படாமல் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா மற்றும் கியாஸ் என்பனவற்றின் அடிப்படையில் சிறந்த நிவாரணங்களைப் பெறும் வகையில் சட்டம் விரிவாக்கப்பட வேண்டும் என ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ள போது, இந்த அறிக்கையில், ஷாபி மத்ஹப்பை முன்னிலைப்படுத்திய வகையில் சட்டம் அமைய வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இப்பரிந்துரைக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கையின் பெரும்பான்மையான பௌத்தர்கள் ஏதேனும் விடயங்களில் மகாயனாவைக் குறிப்பிடாமல் தேரவாதத்தையே பின்பற்றுகிறார்கள் என்று உதாரணமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம், இஸ்லாமிய ஷரீஆ கோட்பாடுகளின் அடிப்படையில் அதாவது, அல் குர்ஆன், அல்ஹதீஸ், இஜ்மா, கியாஸ் என்பனவற்றின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்று இவ்வறிக்கையின் முதற் பந்தியில் கூறிவிட்டு, உடன் அடுத்த பந்தியில், ஷாபி மத்ஹப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சட்டம் அமைக்கப்பட வேண்டும் என்று, முன்னுக்குப் பின் முரணாக செய்யப்பட்டுள்ள இந்த பரிந்துரையினால் மக்களே! உங்களுக்குரிய நிவாரணங்கள் ஷாபி மத்ஹப்பின் கட்டுப்பாட்டுக்குள் மட்டுப்படுத்தப்பட போகின்றன.
ஒரு முஸ்லிம், எந்த மத்ஹபை பின்பற்றுபவர் என்று யார் தீர்மானிப்பது? அல்லது ஒரு முஸ்லிம் கட்டாயமாக ஒரு மத்ஹப்பை பின்பற்றித் தான் ஆக வேண்டும் என்று ஷரீஆவில் எந்த இடத்தில் உள்ளது? என்பதை இவர்கள் மக்களுக்கு கோடிட்டுக் காட்ட வேண்டும்.
சட்ட ஏற்புடைமையில் இச்சட்டம் முஸ்லிம்களுக்கு ஏற்புடைத்தான சட்டம் என்பதற்கு பதிலாக, “இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களுக்கு -Persons professing Islam” ஏற்புடைத்தான சட்டம் என திருத்தப்பட வேண்டும் என ஆலோசனைக் குழு முன்வைத்த பரிந்துரையை இவ்வறிக்கை நிராகரித்துள்ளது. “முஸ்லிம்” என்ற சொல் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாமல் அவ்வாறே அமைய வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. தாங்கள் “முஸ்லிம்கள்” என்று உரியவர்கள் பிரகடனம் செய்யாத வரையில் ஒருவரை அவர் “முஸ்லிம்” என்று நிரூபிக்க முடியாது. ஆகவே, “முஸ்லிம்” என்ற சொல் சட்டத்தில் மாற்றப்படாமல் இருக்க வேண்டும் என்று காரணம் கூறப்பட்டுள்ளது. “முஸ்லிம்” என்றால் “இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்” என்று அர்த்தம். “Persons professing Islam” என்றாலும் “இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்” என்றுதான் அர்த்தம். “Persons professing Islam” என்பது “முஸ்லிம்” என்ற சொல்லை விட சட்டரீதியில் ஆணித்தரமானதும், உறுதியானதும், விரிவானதுமாகும் என்பது ஏன் உணரப்படவில்லை என்று மக்களே சற்று சிந்தியுங்கள்.
“நிகாஹ் நிகழ்வு” என்று தற்போதுள்ள சட்டத்தில் உள்ள சொற்றொடரை “Solemnization – புனிதமாக நிறைவேற்றுதல்” என்ற சொற்றொடராக மாற்றுவதற்கு ஆலோசனை சபை முன்வைத்த கோரிக்கையை நிராகரித்து “நிகாஹ் நிகழ்வு” என்ற சொற்றொடர் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் அமைய வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அரபு மொழியில் “நிகாஹ்” என்கின்றோம். ஆங்கிலத்தில் “Solemnization”என்கின்றோம். மொழி பெயர்ப்பிற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது? “Solemnization” என்றால் சட்ட ரீதியில் சற்று வலிமையானது. “நிகாஹ்” என்ற அரபு மொழியை கூறி மக்களை அஞ்ச வைத்து எழுத்திலே ஆதாரங்கள் எதையும் வைக்காமல் தற்போது நடைபெறுவது போலவே விரும்பியவாறு விரும்பிய எண்ணிக்கையில் திருமணம் செய்து கொள்ளலாம். பின்னர் பொறுப்புடைமைகள், சட்ட ரீதியிலும், சமூக ரீதியிலும், திருமணத்தின் ஊடாக சுமத்தப்படும் போது, ஆதாரம் எதுவும் இல்லாத சந்தர்ப்பத்தில், “எனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை” என மனைவியையும், பிள்ளைகளையும் தவிக்க விட்டு தப்பித்துக் கொள்ளலாம்.
திருமண பதிவுப் பத்திரத்தில் மணமகளின் கையொப்பத்திற்கு அனுமதி அளித்துள்ள அதேவேளை, ஒரு செல்லுபடியான திருமணத்திற்கு வலியின் கையொப்பம் அவசியமான தேவைப்பாடு என்று வலியுறுத்துவதன் மூலம் அம்மணமகளின் கையொப்பத்திற்கு எவ்வித பெறுமானங்களையும் வழங்காத வகையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்திலும், வலியின் தேவைப்பாடு ஷாபி மத்ஹப்பிற்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய மத்ஹப்களை பின்பற்றுபவர்களுக்கு வலியின் தேவைப்பாடு கட்டாயப்படுத்தப்படவில்லை. அத்துடன் எந்த மத்ஹப்பை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் வலியின் தேவைப்பாடு அவசியம் இல்லை என்று கட்டளை பிறப்பிப்பதற்கு மாத்திரமே காதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மணமகளின் கையொப்பத்திற்கு எவ்விதமான சட்ட வலிதுடைமையும் வழங்காமல், மேற்கூறப்பட்ட விடயங்கள் அனைத்தையும் புறக்கணித்து, வலியின் தேவைப்பாட்டை திருமண வலிதுடைமைக்கு கட்டாயப்படுத்தி, செய்யப்பட்டுள்ள இந்த சிபாரிசுகளின் மூலம் ஏனைய மத்ஹப்களை பின்பற்றுபவர்கள் முஸ்லிம்களே அல்ல என்று கூற எத்தனிக்கப்படுகின்றதா? அல்லது தற்போது சட்டத்தில் உள்ள காதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் மூலம், வலி அவசியம் இல்லை என்ற கட்டளையின் பிரகாரம் நடைபெறுகின்ற திருமணங்கள், அதேபோன்று நடைபெற்ற திருமணங்கள், ஏனைய மத்ஹப்களை பின்பற்றுகின்றவர்களால் வலியின் தேவைப்பாடு இல்லாமல் நடைபெற்ற திருமணங்கள் அனைத்தும், இஸ்லாத்திற்கு முரணாக செய்யப்பட்ட திருமணங்கள் என்று கூற எத்தனிக்கப்படுகின்றதா? மக்களே சற்று சிந்தியுங்கள்!
திருமணப் பதிவு சம்பந்தமாக செய்யப்பட்ட சிபாரிசுகள் இவ்வாறு அமைகின்றன. திருமணத்தை பதிவு செய்தல் கட்டாயம். ஆனால், திருமணம் பதிவு செய்யப்படாவிட்டாலும் அத்திருமணம் செல்லுபடியான திருமணமே. நிகாஹ் முடிந்த உடனேயே திருமணம் பதிவு செய்யப்பட வேண்டும். திருமணம் பதிவு செய்யப்படாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட வேண்டும். இதுவே இந்த சிபாரிசுகள். சற்று நடைமுறைச் சாத்தியமாக சிந்திக்க மாட்டார்களா? தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டால், யாருக்கு எதிராக யார் வழக்கிடுவது? யாருக்கு யார் தண்டனை பெற்றுக் கொடுப்பது? எது தண்டனை? தண்டப் பணமா? சிறைத் தண்டனையா? வசதியுள்ளவர்கள், தண்டப் பணத்தைச் செலுத்தித் தப்பித்துக் கொள்வார்கள். வசதியற்றவர்களுக்கு தண்டப்பணம் செலுத்தாவிடில், தண்டனை சிறைவாசம். திருமணம் செய்த தம்பதியர் சிறைவாசம் அனுபவிக்கப் போகின்றார்கள். சட்டத்தை வசதி படைத்தவர்களுக்கு மாத்திரம் சார்பாகவே அமைத்துக் கொள்ள எத்தனிக்கப்படுகின்றது.
வழக்காற்று திருமணங்களை, அதாவது பதிவு செய்யப்படாத திருமணங்களும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்து அதற்கான காரணங்களாக, அவ்வாறு அங்கீகரிக்கப்படாவிடில், அவ்வாறான திருமணங்களின் மூலம் பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் கிடைக்கின்ற சொத்துரிமைகளும், பரம்பரைச் சொத்துகளுக்குரிய சட்ட அங்கீகாரங்களும் இல்லாமல் போவதனால், பெண்களும், பிள்ளைகளும் பாதிக்கப்படுவார்கள் என்று தமது சமூகத்தில் உள்ள பெண்களையும் பிள்ளைகளையும் பாதுகாக்க முனைகின்றார்கள்.
பதிவு செய்யப்படாத திருமணங்களினால் கணவனோ, தகப்பனோ தான் திருமணமே செய்யவில்லை என்று ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் தப்பித்துக் கொள்கின்ற போது, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, வசிக்க இடமின்றி, வாழ வழியின்றி தவிக்கின்ற பெண்களினதும், பிள்ளைகளினதும் நிலைப்பாடுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றோம்.
எதிர்காலத்தில் வரப் போகின்ற சொத்துரிமைகளைப் பற்றி சிந்திக்கப் போகின்றோமா? நிகழ்காலத்தில் அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற உணவு, உடை, உறையுள் போன்றவற்றைப் பற்றி சிந்திக்கப் போகின்றோமா? மக்களே அவசியம் எது? அத்தியாவசியம் எது என்று சிந்தியுங்கள். திருமணப் பதிவு கட்டாயமாக்கப்படக் கூடாது என ஷரீஆவின் எந்த இடத்தில் கூறப்பட்டுள்ளது என இவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
முஸ்லிம் பெண்கள் திருமணப் பதிவாளர்களாக நியமிக்கப்படக் கூடாது என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திருமணப் பதிவு அதிகளவான ஆண்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறுவதாகவும், திருமணப் பதிவுகள் பெரும்பாலும் பள்ளிவாசல்களில் நடைபெறுவது பாரம்பரிய கலாச்சாரம் என்பதனாலும் பெண்களினால் சில சந்தர்ப்பங்களில் பள்ளிவாசலுக்குச் செல்ல முடியாது காணப்படும் என்றும் இச் சிபாரிசுகளுக்கான காரணங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமிய வரலாறுகள் அறியப்படாமல், உணரப்படாமல் செய்யப்பட்ட சிபாரிசுகளாகவே இவை காணப்படுகின்றன. வரலாறுகளை திரும்பிப் பார்க்கின்ற போது பெண்களுக்கு இஸ்லாத்தில் வழங்கப்பட்டுள்ள அந்தஸ்துகளும், பெண்களின் பங்களிப்புகளும் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றன என்பது இச் சிபாரிசுகளினால் மறக்கடிப்பட்டுள்ளது. பெண்கள் பள்ளிவாசலுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் செல்லக் கூடாது என்று எந்த தடையையும் இஸ்லாம் விதிக்கவும் இல்லை. திருமணப் பதிவுகள் கட்டாயமாக பள்ளிவாசல்களில் தான் நடைபெற வேண்டும் என்று இஸ்லாம் எந்த கட்டாய விதிகளையும் அமைக்கவும் இல்லை. இவ்வாறு இருக்கையில் முஸ்லிம் பெண்கள் திருமணப் பதிவாளர்களாக நியமிக்கப்படக் கூடாது என்று முன் வைக்கப்பட்டுள்ள சிபாரிசு இலங்கை அரசியலமைப்பிற்கு மாத்திரமல்ல, உலக மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு மாத்திரமல்ல, இஸ்லாமிய மனித உரிமைக் கோட்பாடுகளுக்கும் முற்றிலும் முரணானது என்பதை சமூகம் உணர வேண்டும்.
பெண் காதிகளின் நியமனம் தொடர்பில் இச் சிபாரிசுகளில் மிகவும் சமயோசிதமான உத்திகள் கையாளப்பட்டுள்ளன. காதிகள் நியமனம் தொடர்பிலான முழுப் பொறுப்பையும் நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ள அதேவேளை, இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆண்கள் தான் காதிகளாக நியமிக்கப்பட வேண்டும் என்று ஒரு துப்பும் நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு இச் சிபாரிசுகளினால் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் பார்வையில், நாங்கள் பெண் காதிகள் நியமனத்தை எதிர்க்கவில்லை என்ற ஒரு எண்ணப்பாட்டை ஏற்படுத்தியுள்ள இச்சமயோசிதத்தை என்னவென்று சொல்வது? காதிகள் நியமனங்கள், வர்த்தமானியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முக பரீட்சைகளின் பின்னர் நீதிச் சேவை ஆணைக்குழுவினால்தான் மேற்கொள்ளப்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பல முஸ்லிம் நாடுகளில், பெண்கள் காதிகளாக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், பல இஸ்லாமிய அறிஞர்களும் பெண்கள் காதிகளாக நியமிக்கப்படுவதற்கு இஸ்லாத்தில் எவ்வித தடையும் இல்லை என்று கூறியுள்ள போதிலும், இலங்கையில் மட்டும் பெண்கள் காதிகளாக நியமிக்கப்பட முடியாது என்று குரல் எழுப்புவது எந்த விதத்தில் நியாயம்? முஸ்லிம் பெண்களை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் அவர்களை அடிமைப்படுத்துவது மனித உரிமைக் கோட்பாடுகளுக்கும் இஸ்லாத்திற்கும் முரணானது என்பதை மக்கள் உணர வேண்டும்.
திருமண வயதைப் பொறுத்தவரையில் ஆண் பெண் இரு பாலாருக்கும் திருமணத்திற்கான ஆகக் கூடிய வயதெல்லையை 18 ஆக ஆக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ள அதேவேளை, 16 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு காதியின் அனுமதியுடன் திருமணம் நடைபெறலாம் என்று ஒரு விலக்களிப்பும் இச் சிபாரிசுகளில் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் முஸ்லிம்களை பொறுத்தவரையில் பால்ய திருமணங்கள் மிகக் குறைவாகவே நடைபெறுகின்றன என்று புள்ளி விபரம் ஒன்றும் இவ்வறிக்கையில் காட்டப்பட்டுள்ளது. அறிக்கையில் காட்டப்பட்டுள்ள திருமணங்கள், பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் மாத்திரமே என்பதுவும், முஸ்லிம்களின் திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயம் இல்லை என்பதனால் பதிவு செய்யப்படாத பால்ய திருமணங்களுக்கு புள்ளி விபரங்கள் எதுவும் இல்லை என்பதுவும் மறந்தும் இருக்கலாம். மறைக்கப்பட்டும் இருக்கலாம்.
18 வயதிற்கு குறைந்தவர்கள் “சிறுவர்கள்” என்ற சட்டத்தை நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். சிறுவர்களுக்கு கட்டாயக் கல்வி அவசியம் என்பதையும் நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். சிறுவர்கள் உரிமைகள் பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ள நாட்டின் பிரஜைகளாக நாம் இருக்கின்றோம். ஆனால் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைக்கு நாம் வழிகோலுபவர்களாக இருக்கின்றோம். இதனை எவ்வாறு நியாயப்படுத்துவது?
சவுதி அரேபியா உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளின் திருமணத்திற்கான ஆகக் குறைந்த வயதெல்லையை 18 ஆக மாற்றுவதற்கான திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டிருக்கும் நிலையில் இலங்கையின் முஸ்லிம் சட்டத்தில் மாத்திரம் மாற்றம் செய்வதற்கு ஏன் இந்த தயக்கம்?
காதி முறைமையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அதற்கு சாதகமான காரணங்களாக, இலகுவான அணுகல், குறைந்த செலவு, குறைந்த நேரம், தரப்பினர் தனியாக விசாரிக்கப்படுவர், மூன்று மேன்முறையீடுகள் அதாவது காதிகள் சபை, மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் என்பன காணப்படுகின்றன என கூறப்பட்டுள்ளது. காதி முறைமை, ஏனைய நீதிமன்றங்களுக்கு மாற்றப்படுவதனால் பின்வரும் பாதிப்புக்கள் ஏற்படும் என்றும் கருத்துரைக்கப்பட்டுள்ளது. செலவு அதிகம், காலம் அதிகம், சட்டத்தரணிகளின் உதவிகளை நாட வேண்டிய பொறுப்பு போன்றவை காணப்படும் என்றும், இதன் மூலம் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் நிவாரணம் தேடிப் பெறுவது மறுக்கப்படுகிறது என்றும், இதனால் அவர்களது மன அழுத்தங்கள் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. பெண்களில் கரிசனை காட்டிப் பெண்களின் மன அழுத்தங்களை குறைப்பதற்காக, காதி முறைமையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று சிபாரிசு செய்யப்படுகிறது.
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து, அது தொடர்பிலான நிவாரணங்களுக்காக வேண்டி, காதி முறைமையை நாடிய அனுபவங்களை கொண்ட பெண்களே! ஆண்களே! சற்று உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள். இந்த கருத்து சரியானவையா? நீதியை இலகுவாக அணுக முடிகின்றதா? செலவில்லாமல் கச்சிதமாக காரியத்தை நிறைவு செய்ய முடிகின்றதா? கால, நேரம் வீணாகவில்லையா? நீங்கள் தனியாக, நிதானமாக விளங்கப்படுகின்றீர்களா? நீங்கள் எவ்வித மன அழுத்தங்களுக்கும் ஆளாகவில்லையா?
மூன்று மேன்முறையீட்டு நடைமுறைகளை சாதகமான ஒரு காரணமாக முன் வைக்கும் போது அதில் காணப்படுகின்ற கால தாமதம் உணரப்படவில்லையா? பொத்துவில் முதல் பொலன்னறுவை வரையுள்ள காதி மேன்முறையீடுகள் கல்முனை காதிகள் சபைக்கும், ஏனைய அனைத்துப் பாகங்களிலும் உள்ள காதி மேன்முறையீடுகள் கொழும்பு காதிகள் சபைக்கும் நியாயாதிக்கம் பெற்றுள்ளமையினால், போக்குவரத்திற்கும், தங்குமிட வசதிகளுக்கும், மக்கள் படும் அவலங்களுக்கு இங்கு எவ்வாறு தீர்வு காணப்படப் போகின்றது? மாவட்ட நீதிமன்றங்களும், அதற்குரிய மேன்முறையீட்டு நியாயாதிக்கம் கொண்ட மாகாண மேல் நீதிமன்றங்களும் அந்தந்த பிரதேசங்களிலேயே காணப்படுகின்றமையினால் இத்தகைய பிரச்சினைகள் ஓரளவிற்காவது தீர்க்கப்படும் என்ற உண்மையை நாம் ஏன் மறைக்கின்றோம்? மறுக்கின்றோம்?
ஒரு முறைமையற்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு நீதி முறைமையான கட்டமைப்பிற்குள் நாம் முன்னேறிச் செல்லப் போகின்றோம் என்ற உண்மையை மக்களுக்கு நாம் ஏன் மறைக்கின்றோம்?
பலதார மணம் நிபந்தனைகளினால் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதனை ஆமோதித்துள்ள இச் சிபாரிசுகள், நிபந்தனைகளையும், சட்டத்தையும் மீறி செய்யப்படுகின்ற பலதார மணமும் செல்லுபடியானதாகவே இருக்க வேண்டும் என்றும் சிபாரிசு செய்துள்ளதனால், விதிக்கப்பட்ட மட்டுப்பாடுகளின் அமுலாக்கும் தன்மை எந்த அளவிற்கு வலிதுடைமை பெறும் என்ற கேள்வி உருவாகின்றது. நிபந்தனைகளை மீறிய பலதார மணம் தண்டப் பணத்திற்குரிய தண்டனையாக கருதப்பட வேண்டுமே தவிர செல்லுபடியற்றதாக மாற்றப்படக் கூடாது என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. பணம் உள்ளவர்கள் தண்டப் பணத்தை செலுத்தி தப்பித்துக் கொள்வார்கள். பணம் இல்லாதவர்கள் தண்டப் பணம் செலுத்தாமைக்கு சிறைத் தண்டனை அனுபவிப்பார்கள். யாருக்கு எதிராக யார் முறைப்பாடு செய்வது? கணவன் சிறைத் தண்டனை அனுபவிக்கும் போது, மனைவியினதும் பிள்ளைகளினதும் நிலை என்ன? தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் பலதார மணத்தினால் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் நடைபெறுகின்ற பாதிப்புகளை விடவும் மேலதிகமான பாதிப்புகளை இப்பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் ஏற்படுத்தும் வகையிலேயே இந்த சிபாரிசுகள் அமைந்துள்ளன என்பதை மக்கள் உணர வேண்டும்.
விவாகரத்தும், விவாகரத்து நடைமுறைகளும் மத்ஹபுகளின் அடிப்படையிலேயே அமுல்படுத்தப்பட வேண்டும் என்று இந்த சிபாரிசுகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கணவனின் தவறுகளை அடிப்படையாகக் கொண்டு மனைவியினால் கோரப்படுகின்ற பஸ்ஹ் விவாகரத்துக்கள் மத்ஹபுகளின் அடிப்படையிலேயே அமுலாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கும் இந்த நிலையில் சில மத்ஹபுகளில் கணவனின் தவறுகளை அடிப்படையாக வைத்து மனைவியினால் விவாகரத்துப் பெற முடியாத அளவிற்கு இறுக்கமான சட்ட திட்டம் காணப்படுகின்ற போது இத்தகைய பெண்களுக்கு இந்த சிபாரிசுகள் மூலம் எவ்வாறு விடிவு ஏற்படப் போகின்றது?
குல்உ விவாகரத்தின் போது, அதாவது கணவனில் எவ்வித தவறுகளும் இல்லாத சந்தர்ப்பத்தில் அக்கணவனோடு வாழ முடியாது என்று அந்தப் பெண்ணினால் கோரப்படுகின்ற விவாகரத்து நடைமுறையில், கணவனின் சம்மதம் கட்டாயத் தேவைப்பாடாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாம், குல்உ விவாகரத்து முறைகளில் இவ்வாறு தான் கூறுகின்றதா என்பதை நாம் இதயத்தைத் தொட்டுச் சொல்ல வேண்டும். குல்உ விவாகரத்து முறைக்கு மிகவும் ஆதாரமாக காணப்படுகின்ற வரலாற்றுச் சம்பவத்தை நாம் மறந்து சமூகத்திற்கு, அதிலும் விஷேடமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, தீங்கு விளைவிக்க முனைவது மிகவும் தவறான ஒரு செயற்பாடாகும். நிரூபிக்க முடியாத வகையில் கணவனினால் நிசப்தமாக விளைவிக்கப்படுகின்ற தவறு மற்றும் கொடுமைகளினால் பாதிக்கப்படுகின்ற பெண்கள், மத்ஹபுகளை முன்னிலைப்படுத்தி விவாகரத்து நடைமுறைகளுக்கு அவசியமற்ற மட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்ற நிலையில் இதனால் பாதிக்கப்படுகின்ற பெண்கள், குல்உ விவாகரத்திற்கு கணவனின் சம்மதம் கட்டாயத் தேவையாக்கப்படுகின்ற போது, இதனால் பாதிக்கப்படுகின்ற பெண்கள், இவ்விறுக்கமான பிணைப்புகளில் இருந்து விடுபடுவதற்கு எங்கே வழி தேடுவார்கள்?
காதிக் கட்டமைப்பிற்கு அப்பால் கணவனினால் மொழியப்படுகின்ற தலாக் விவாகரத்தை அங்கீகரிக்கும் வகையில் அமைந்துள்ள தற்போதுள்ள சட்டத்தின் பிரிவு 30 ஐ தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று சிபாரிசு செய்கின்ற போது, இதனால் பாதிக்கப்படுகின்ற பெண்களும், சிறுவர்களும் நிவாரணம் தேடி எங்கே செல்வார்கள் என்பதை சிந்திக்கமாட்டோமா?
எவ்வித பிரச்சினைகளும் இல்லாமலேயே விடுதலை பெறுவதற்கு ஆண்களுக்கு மட்டுப்பாடுகள் எதுவும் அற்ற சுதந்திரத்தை வழங்குவதற்கு சிபாரிசு செய்து அதேவேளை, பிரச்சினைகளிலும், சிக்கல்களிலும் இருந்து விடுதலை பெறுவதற்கு பெண்களுக்கு எவ்விதமான சுதந்திரங்களையும் வழங்காமல், மட்டுப்பாடுகளுக்கு மேல் மட்டுப்பாடுகளை விதித்து, சிபாரிசு செய்வதன் மூலம் என்ன வெற்றி காணப்படப் போகின்றது?
அறிக்கையில் செய்யப்பட்ட சிபாரிசுகளில் தற்போதுள்ள சட்டத்தில் உள்ள தலாக், பஸஹ் என்ற சொற்கள் அகற்றப்படாமல் இருக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தவர்கள், பஸஹ் என்ற ஒரு சொல் தற்போதுள்ள சட்டத்தில் இல்லவே இல்லை என்பதை அறிந்து கொள்ளத் தவறியமை கவலைக்குரிய விடயம்.
விவாகரத்தின் பின்னரான மத்தா கொடுப்பனவு சட்டத்தில் சேர்க்கப்பட்டு அது தொடர்பிலான முழு அதிகாரமும் காதியின் தற்றுணிபின் கீழ் உள்வாங்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. மத்தா என்பது பணம் மாத்திரமா? அல்லது அசையும் ஆதனம் மாத்திரமா? அசையாத ஆதனங்கள் மத்தாவினுள் உள்ளடக்கப்படமாட்டாதா? மத்தா தவிர்ந்த ஏனைய விவாகரத்து தொடர்பான நிவாரணங்கள், உதாரணமாக, சொத்துரிமைகள், சொத்துப் பகிர்வுகள், இவை தொடர்பில் விசாரணை செய்து தீர்ப்பு செய்வதற்குரிய நியாயாதிக்கம் காதிக்கு வழங்கப்படலாமா? இது தொடர்பில் ஏன் சிந்திக்க தவறுகின்றோம்? சிவில் வழக்கு நடைமுறைகளுக்கு உட்பட்ட விவகாரங்கள் எவ்வாறு காதியின் நியாயாதிக்கத்திற்கு உட்படுத்தப்படுவது? இது பற்றி ஏன் சிந்திக்கத் தவறுகின்றோம்?
குடியியல் நடைமுறைச் சட்டக் கோவையில், இது தொடர்பான விடயங்களில் முஸ்லிம்கள் விலக்களிக்கப்படுகின்றனர். காரணம், முஸ்லிம்களுக்கு முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் காணப்படுகின்றது. முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில், இவை தொடர்பில் எந்த ஏற்பாடுகளும் இல்லை. இவ்வாறான ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டாலும் இவை தொடர்பிலான நியாயாதிக்கம் சட்டரீதியாக காதிக்கு வழங்கப்பட முடியாது. ஏனென்றால் காதி, ஒரு நீதிபதி அல்ல. இதனை எப்போது உணரப் போகின்றோம்? இதனால் சமூகத்திற்கு ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு எவ்வாறு நிவாரணம் காண போகின்றோம் என்று ஏன் சிந்திக்க தவறுகின்றோம்?
தாபரிப்பு தொடர்பில் இவ்வறிக்கையில் எந்த சிபாரிசுகளும் முன் வைக்கப்படவில்லை. ஆனால் நடைமுறையில் உள்ள சட்டத்தில் காதிக்கு வழங்கப்பட்டுள்ள அத்தனை அதிகாரங்களும் காதிக்கு வழங்கப்பட வேண்டும் என மாத்திரம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. தாபரிப்பு தொடர்பில் தற்போதுள்ள சட்டத்தில் காதிக்கு கட்டளை வழங்கும் அதிகாரம் உள்ளதே தவிர கட்டளையை அமுலாக்கும் அதிகாரம் இல்லை. கட்டளையை அமுலாக்கும் அதிகாரத்தை காதிக்கு வழங்கவும் முடியாது. ஏனென்றால், காதி, ஒரு நீதிபதி அல்ல. வழங்கப்படுகின்ற கட்டளையை அமுலாக்குவதற்கு கணவன் வாழுகின்ற பிரதேச நீதவான் நீதிமன்றத்திற்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீதவான் நீதிமன்றத்திற்கு காதியின் அமுலாக்கல் பத்திரம் செல்வதற்கு இடையில் தாபரிப்பு நிலுவைகள் அதிகரித்து விடுகின்றன. இதனை பெற்றுக் கொள்வதற்கு, உரிய இடத்திற்குச் செல்ல வேண்டிய போக்குவரத்து செலவு வேறு. இத்தகைய நடைமுறை சிக்கல்கள் இன்றி பெண்கள் வாழுகின்ற பிரதேச நீதவான் நீதிமன்றத்தினாலேயே முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தின் பிரகாரம் கட்டளை பிறப்பித்து கட்டளையை அமுலாக்குகின்ற போது, நிலுவைகள் அதிகரிக்காது. செலவுகள் மீதமாகும். உடனடி நிவாரணங்கள் கிடைக்கும். இதனை பற்றி ஏன் சிந்திக்க தவறுகின்றோம்? பெண்களையும் பிள்ளைகளையும் பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் அவர்களை சீரழிக்கும் வகையில் சிபாரிசு செய்வது எந்த வகையில் நியாயம் என்பதை சமூகம் உணர வேண்டும்.
மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்படுகின்ற விவாக, விவாகரத்து மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட ஏனைய விடயங்கள் தொடர்பிலான தீர்ப்புகளுக்கு எதிராக மாகாண மேல் நீதிமன்றங்களில் செய்யப்படுகின்ற மேன்முறையீடுகள், தாபரிப்பு தொடர்பில் நீதவான் நீதிமன்றங்களில் வழங்கப்படுகின்ற தீர்ப்புகளுக்கு எதிராக மேல் நீதிமன்றங்களில் செய்யப்படுகின்ற மேன்முறையீடுகள் என்பனவற்றின் எண்ணிக்கையையும், இவை தொடர்பில் காதியினால் வழங்கப்படுகின்ற தீர்ப்புகளுக்கு எதிராக காதிகள் சபைக்கு செய்யப்படுகின்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கையையும், விகிதாசார அடிப்படையில் ஒரு புள்ளி விபரக் கணிப்பீடு செய்கின்ற போது எவை அதிகம் என்கின்ற உண்மை நிச்சயமாக புரியும். நிதர்சனத்தை மக்களுக்கு கோடிட்டுக் காட்ட வேண்டும்.
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்படுகின்ற போது மக்களினால் எதிர்நோக்கப்படுகின்ற பாதிப்புக்கள் குறையும் என்பது கண்கூடு. அதை சிந்திக்கவும் தவறுகின்றோம். ஏற்றுக் கொள்ளவும் மறுக்கின்றோம். இது, முஸ்லிம் சமூகத்திற்கு இது பற்றி அறிந்த புத்தி ஜீவிகள் செய்கின்ற பாரிய துரோகம்.
சமூகத்திற்கும், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நன்மை செய்கின்றோம் என்ற பெயரில் செய்யப்படுவது என்ன என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். ஏதோ ஒன்றை தவற விடக் கூடாது என்ற ஒரு வரட்டு கௌரவத்திற்காகவும், சுய இலாபங்களுக்காகவும், தவற விடக் கூடாத பல விடயங்கள் தவற விடப்படுகின்றன என்ற உண்மை எப்போது உணரப்படப் போகின்றது. மக்களே! சுயமாக சிந்தியுங்கள்.- Vidivelli