எம்.எப்.அய்னா
தாடி வளர்த்தமைக்காக, வகுப்புக்களில் கலந்துகொள்ளவும் பரீட்சைக்கு தோற்றவும் அனுமதி மறுக்கப்பட்ட, கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவனுக்கு, பரீட்சைக்கு தோற்ற அனுமதியளிக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் அப்துல் ரஹீம் மொஹம்மட் நுசைப் எனும் அக்கரைப்பற்றில் வசிக்கும் மாணவன் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை விசாரணைக்கு ஏற்று, மேன் முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இந்த நிலையில், மனு தொடர்பில் விளக்கமளிக்குமாறு நீதிமன்றம், பிரதிவாதிகளான கிழக்கு பல்கலைக்கழக சுகாதார அறிவியல் பீடத்தின் பீடாதிபதி, குறித்த கற்கை பீடத்தின் தலைமை அதிகாரி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு அறிவித்துள்ளது.
இந்த மனுவில் 38 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். கிழக்கு பல்கலைக் கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் வி. கனகசிங்கம், கிழக்கு பல்கலைக்கழக சுகாதார அறிவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ரி. சதாநந்தம், தாதியர் கற்கை குறித்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஜெனோசா நமசிவாயம், சுகாதார அறிவியல் பீடத்தின் தலைவர் ஏ.எம். சஷி சாரதா அழகக்கோன், கிழக்கு பல்கலைக் கழக பிரதி உப வேந்தர் பேராசிரியர் கே.ஈ. கருணாகரன், சட்ட மா அதிபர் உள்ளிட்ட 38 பேரே முறையே 1,2,3,4,5 மற்றும் 38 ஆம் பிரதிவாதிகளாக இந்த வழக்கில் பெயரிடப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 140 ஆவது உறுப்புரைக்கு அமைய இந்த எழுத்தணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Eu/IS/2017/NUR/29 எனும் மாணவ அடையாள அட்டையை உடைய மனுதாரரான மாணவன் 2017 ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக் கழகத்தில் அனுமதி பெற்றுள்ளதுடன் அங்கு தாதியர் துறையில் விஞ்ஞான இளமானி பட்டத்துக்காக கற்கைகளை ஆரம்பித்துள்ளார். அதன்படி அவர் அங்கு 4 வருடங்கள் கற்கைகளை நிறைவு செய்துள்ளார்.
தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் பிரகாரம், 2 ஆம் பிரதிவாதி ‘ தொழிலாளர் சட்டம் மற்றும் மனித உரிமைகள்’ எனும் பாடத்திட்டதை கற்பிக்கும் நிலையில், கடந்த 2023 பெப்ரவரி 7 ஆம் திகதி விரிவுரைகளின் இடையே ஆண் மாணவர்கள் கண்டிப்பாக சவரம் செய்துவிட்டு வர வேண்டும் என எச்சரித்துள்ளார். இது தொடர்பில் மனுதாரரான மாணவன் குறித்த 2 ஆம் பிரதிவாதியை சந்தித்து, தாடி வைப்பது தனது மத நம்பிக்கை பிரகாரமான வழிமுறை என்பதை விளக்கியுள்ளதுடன், இதன்போது 2 ஆம் பிரதிவாதி, ‘ உமக்கு பட்டம் பெற வேண்டுமாக இருந்தால் கண்டிப்பாக முழுமையாக சவரம் செய்துவிட்டு வாருங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க கடந்த 2023 பெப்ரவரி 27 ஆம் திகதி மனுதாரர் இரு முகக் கவசங்கள் ஊடாக தனது தாடியை மறைத்தவாறு விரிவுரைகளில் பங்கேற்றிருந்த நிலையில் 4 ஆவது பிரதிவாதி அவரை விரிவுரை மண்டபத்தில் இருந்து ஏனைய சக மாணவர்கள் பார்த்திருக்க வெளியேற்றியுள்ளார்.
அதே போல 3 ஆவது பிரதிவாதியும், அனைத்து ஆண் மாணவர்களும் கண்டிப்பாக முழுமையாக தாடி, மீசைகளை சவரம் செய்தே விரிவுரைகளுக்கு வர வேண்டும் என அறிவித்துள்ளார். இது குறித்தும் மனுதாரரான மாணவன் அந்த விரிவுரையாளரை சந்தித்து தனது மத நம்பிக்கை தொடர்பில் விளக்கியுள்ளார். இதன்போது 3 ஆம் பிரதிவாதி ‘எனக்கு உங்களுடைய மத நம்பிக்கை குறித்து விளங்குகின்றது. ஆனால், பீடாதிபதியை மீறி என்னால் செயற்பட முடியாது. எனவே அவரின் கடிதத்துடன் வாருங்கள். எனக்கொன்றும் பிரச்சினை இல்லை’ என குறிப்பிட்டதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்த்து கடந்த மே மாதம், மனுதாரரான மாணவன் வகுப்புக்களுக்கு வருகை தந்த போதும், தாடி வைத்திருந்தமையால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகை தரவில்லை என வரவு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 80 வீத வரவு இல்லை என்பதாக கூறி அவரை பரீட்சைகளுக்கு தோற்றவிடாமல் செய்வதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே முதலில் மனுதாரர் கடந்த ஜூன் முதலாம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிட்ட நிலையில், பின்னர் மேன் முறையீட்டு நீதிமன்றில் இந்த்த ரிட் மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த வெள்ளிக் கிழமை இந்த விவகாரத்துடன் தொடர்புபட்ட, எழுத்தாணை மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது மனுதாரருக்காக மன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆஜராகி வாதங்களை முன் வைத்திருந்தார்.
தனது சேவை பெறுநரான பல்கலைக் கழக மாணவன், கிழக்கு பல்கலைக் கழகத்தின் தாதியர் பீட இறுதியாண்டு மாணவன் என இதன்போது மன்றில் குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், அவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றும் மாணவன் எனவும், அவர் தாடி வைத்தமைக்காக வகுப்புக்களில் கலந்துகொள்ளவும் பரீட்சைக்கு தோற்றவும் பல்கலைக் கழக நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
வகுப்புக்களில் கலந்துகொள்ளவும் பரீட்சைக்கு தோற்றவும் அவசியம் எனில், தடையை வெட்டி அகற்றுமாறு பல்கலைக் கழகம் தனது சேவை பெறுநருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.
இந்த மாணவன், தனது மத நம்பிக்கைக்கு அமைய தாடி வளர்ப்பதாகவும், அதனை அகற்றுமாறு கட்டளை இட பல்கலைக் க்ழக நிர்வாகத்துக்கு எவ்வித சட்ட ரீதியான அதிகாரமும் இல்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.
இவ்வாறான சட்டம் ஒன்றினை கொண்டுவர, பல்கலைக் கழக சட்டத்தின் கீழ் எவ்வித அதிகாரமும் நிர்வாகத்துக்கு இல்லை என வாதிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், தனது சேவை பெறுநர் பல்கலைக் கழகத்தில் அனுமதி பெறும் போது அங்கு இவ்வாறான எந்த ஒழுங்குமுறைமைகளும் இருக்கவில்லை எனவும் அவ்வாறான நிலையில் இறுதியாண்டில் இவ்வாறான சட்டமொன்றினை கொண்டுவருவது அவரது மத நம்பிக்கை மற்றும் கற்றல் நடவடிக்கைகளை வெகுவாக பாதித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.
அதனால் எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள பரீட்சைக்குத் தோற்ற தனது சேவை பெறுநருக்கு சந்தர்ப்பம் அற்றுப் போயுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இதன்போது பிரதிவாதிகளுக்காக மன்றில் ஆஜரான அரச சட்டவாதி, பல்கலைக் கழகத்தின் ஒழுக்காற்று தீர்மானத்தின் அடிப்படையில் வழக்குடன் தொடர்புபட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அந்த பல்கலைக் கழகத்தில் இருக்கும் ஏனைய முஸ்லிம் மாணவர்கள் அந்த தீர்மானத்துக்கு உட்பட்டு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அவர் கூறினார்.
பல்கலைக் கழகம் ஊடாக எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கூடாது என அரச சட்டவாதி வாதிட்டார்.
எவ்வாறாயினும் இரு தரப்பு விடயங்களை ஆராய்ந்த தலைமை நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, குறித்த மாணவன் பல்கலைக் கழகத்தில் சேரும் போது இவ்வாறான ஒழுங்குமுறை ஒன்று இருக்கவில்லை என்பதை திறந்த மன்றில் சுட்டிக்காட்டி அவதானத்தை ஈர்த்தார்.
அதனால் இறுதி ஆண்டில் அவ்வாறான சட்டம் அல்லது ஒழுங்கு முறைமையை ஏற்படுத்துவது, குறித்த மாணவனை பாதிக்கும் என தலைமை நீதிபதி கூறினார்.
அதனால் எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகும் பல்கலைக்கழக பரீட்சைக்கு தோற்ற குறித்த மணவனுக்கு அனுமதியளிக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தலைமை நீதிபதி இடைக்கால உத்தரவொன்றினை பிறப்பித்தார்.- Vidivelli