கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உட்பட நிலையில் மரணித்த சிறுவன் ஹம்தியின் விவகாரம் கடந்த ஓரிரு வாரங்களாக ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதை நாம் அறிவோம். அழகிய இந்தச் சிறுவனின் மரணம் அவனது குடும்பத்தினரை மாத்திரமன்றி அனைவரையுமே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. இது திட்டமிட்ட செயலா அல்லது மருத்துவ ரீதியாக இடம்பெற்ற தவறா என்பதைக் கண்டறியும் வகையில் விசாரணைகள் தொடர்கின்றன.
இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனப் போராடுவதும் சிறுவனின் குடும்பத்திற்காக பிரார்த்திப்பதும் நம் அனைவரதும் கடமையாகும்.
அதேபோன்று இந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட தரப்புகளை வைத்து இன, மத ரீதியான கண்ணோட்டத்துடன் இதனை அணுகுவதைத் தவிர்ப்பதே சிறந்ததாகும். மருத்துவ சேவையைப் பொறுத்தவரை நாடெங்குமுள்ள வைத்தியசாலைகளில் இன மத பேதமின்றியே சேவைகள் வழங்கப்படுகின்றன என்ற யதார்த்தத்தை நாம் மறந்துவிடக் கூடாது.
இதேவேளை, அண்மைக் காலமாக நாட்டில் மருத்துவத்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையில் சற்று சரிவு ஏற்பட்டு வருகின்ற நிலையில் இச் சிறுவனின் மரணமும் நிகழ்ந்திருப்பதானது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது எனலாம்.
சமீபத்தில் பேராதனை வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்பட்ட யுவதியொருவர் உடம்பெங்கும் நீல நிறமாகி உடனடியாக உயிரிழந்தமை, இதேபோன்று குளியாப்பிட்டி பகுதியில் 4 மாத குழந்தையொன்று தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்பு உயிரிழந்தமை மற்றும் ஏற்கனவே கண் சத்திர சிகிச்சை செய்து கொண்ட பலர் பார்வை குறைபாடுகளுக்கு உள்ளானமை போன்ற சம்பவங்களும் பொது மருத்துவத்துறை மீது மக்கள் நம்பிக்கையிழக்க காரணமாக அமைந்துள்ளன.
இது மட்டுமல்ல நாடெங்கும் வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறை நிலவுகிறது. பல ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழந்து பல மாதங்களாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சுகாதார சேவை தொழிற்சங்கங்கள், மருத்துவ அமைப்புகள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றன. அரச வைத்தியசாலைகளில் மாதாந்த மருத்துவ சேவையை பெற்றுக்கொள்ளும் மக்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பொது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
சுகாதாரத்துறையில் பெரும்பாலான வைத்தியர்கள் ஓய்வு பெற்றுச் செல்கின்றமை மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றமையும் பாரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் புலம்பெயர்ந்துள்ளமை புள்ளி விபரங்களுடன் மருத்துவ சங்கங்களால் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட மருந்துகள் பதிவுகளுக்கு அப்பால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ள அனைத்து மருந்துகளும் மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என சுகாதார தொழில் வல்லுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை மக்களில் பெரும்பான்மையானோர் அரச வைத்தியசாலைகளையே தமது சிகிச்சைகளுக்காக நம்பியிருக்கின்றனர். பொருளாதார நெருக்கடியினால் அன்றாட உணவுக்குக்கூட அல்லல்படும் மக்கள் தனியார் வைத்திய சேவையை நாட முடியாதுள்ளனர். எனவே அரசாங்கம் இதனை ஓர் அவசர நிலையாகக் கருதி தேவையான மருந்துகளை வைத்தியசாலைகளுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
தரமற்ற மருந்துகள் இறக்குமதி உட்பட இத்துறையில் மாபியாக்களுக்கு இடமளிக்கக்கூடாது. இது விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
சிறுவன் ஹம்திக்கும் ஏனையவர்களுக்கும் நடந்தது போன்று எதிர்காலத்திலும் மருத்துவமனைகளே உயிர்களைக் காவு கொள்வதற்கு நாம் அனுமதிக்க முடியாது. எனவேதான் மருத்துவ அலட்சியங்களைத் தடுத்து நிறுத்தி சிறந்த சேவையை வழங்கும் வகையில் நமது பொதுச் சுகாதாரத்துறை வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.- Vidivelli