எஸ். டிலக்ஷன்
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இலங்கையின் பொருளாதாரத்துக்கு அவர்கள் வழங்கிய – வழங்கிவரும் பங்களிப்பைப் பாராட்டி – அவர்களை கௌரவிக்கும் விழா எதிர்வரும் நவம்பர் மாதம் அரச அங்கீகாரத்துடன் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
‘மலையகம் – 200’ நிகழ்வுக்கு இணையாக அரசியல் களத்திலும், சமூக வலைத்தளங்களிலும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் சம்பந்தமாகவும், மலையக பெருந்தோட்ட சமூகத்துக்கான காணி உரிமை பற்றியும் கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன. மலையக மக்களுக்காக சிவில் அமைப்புகளின் பங்களிப்போடு தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரையும் பாத யாத்திரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மலையக பெருந்தோட்ட சமூகத்தின் உரிமைப் போராட்டத்துக்கு, உரிமைக் கோஷத்துக்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு குரல் எழுப்பவில்லை என்ற விமர்சனமும் ஆங்காங்கே முன்வைக்கப்பட்டுவருகின்றது. அந்த விடயத்துக்குள் வருவதற்கு முன்னர் மலையக தொழிற்சங்க வரலாற்றில் முஸ்லிம் தலைவர்களின் பங்களிப்பு பற்றி சுருக்கமாக பார்த்து விடுவோம்.
இவ்வாறு மலையக மக்களுக்காக உரிமைக் குரல் எழுப்பிய முஸ்லிம் தலைவர்கள் பற்றிப் பேசுகையில்,- எழுதுகையில் சிரேஷ்ட அரசியல் – தொழிற்சங்க தலைவரான ‘மனிதருள் மாணிக்கம்’ என போற்றப்படும் அப்துல் அசீஸையும், அவரின் குடும்பத்தாரையும் மறந்து – கடந்துபோக முடியாது.
இன்றைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னோடியான இலங்கை – இந்திய காங்கிரஸ் 1939 ஆம் ஆண்டு உதயமானபோது அதன் ஆரம்பகால அங்கத்தவராக இடம்பிடித்தவர் அப்துல் அசீஸ். காலப்போக்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப் பதவியையும் அலங்கரித்தவர். அரசியல் மற்றும் தொழிற்சங்க பலத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக நின்றவர்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அணியுடன் கொள்கை ரீதியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக காங்கிரஸ் இருந்து வெளியேறி தேசிய தொழிலாளர் காங்கிரஸ் எனும் புதிய தொழிற்சங்கத்தை உருவாக்கி அதன் ஊடாக தனது பயணத்தை தொடர்ந்தார்.
மலையக வரலாற்றில் 1966 இல் இடம்பெற்ற ‘பஞ்சப்படி போராட்டம்’ முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. முழு இலங்கையையும் உலுக்கிய குறித்த போராட்டத்துக்கு அசீஸே அறைகூவல் விடுத்திருந்தார். 45 நாட்களுக்கு மேலாக போராட்டம் நீடித்தது. போராட்டம் மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படாவிட்டாலும்கூட மலையகத்தில் உழைக்கும் மக்கள் மத்தியில் அது போராட்டக் குணத்தை ஏற்படுத்தியது. இக்காலப்பகுதியில் தொழிலாளர்களுக்கு தேவையான வாழ்வாதார உதவிகளையும் அவர் செய்து கொடுத்திருந்தார்.
சம்பள நிர்ணய சபை உறுப்பினராக இருந்தபோதும், பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த காலத்திலும் மலையக தமிழர்களின் மேம்பாட்டுக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தவர்தான் அசீஸ்.
அவரின் மறைவின் பின்னர், அவரது மகனான அஷ்ரப் அசீஸ் தந்தை வழியில் தனது தொழிற்சங்க பயணத்தை ஆரம்பித்தார். அவரும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழில்சார் உரிமைகளுக்காகவும், இதர உரிமைகளுக்காகவும் குரல் எழுப்பினார். அதுமட்டுமல்ல அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல உதவிகளை செய்தார். கொழும்பில் வாழும் மலையக மக்களுக்கு பிரச்சினையென்றால் உதவிகளை வழங்குவதில் அவர் என்றும் பின்நின்றதில்லை.
அசீஸ் ஜனநாயக காங்கிரஸ் எனும் தொழிற்சங்கத்தை நிறுவி, அதன் ஊடாகவும் தொழிற்சங்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. தந்தைபோல் அல்லாவிட்டாலும், தனக்குரிய பாணியில் தொழிற்சங்க பணியாற்றியவர். முதலாளியாக இருந்துகொண்டு – வணிகங்களையும் கவனித்தபடி, தொழிற்சங்க தலைவராக செயற்படுவதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல.
உடல் நலக்குறைவால் சில வருடங்களாக அவர் செயற்பாட்டு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவில்லை. அவரின் உடலில் இறுதி மூச்சு இருக்கும்வரை, மலையக மக்களுக்காக அவரின் குரல் ஒலித்துகொண்டே இருந்தது.
இப்படி மலையக மக்களுக்காக – பெருந்தோட்ட சமூகத்துக்காக களத்தில் நின்று – செயற்பட்டு – குரல் கொடுத்த தலைவர்களும் இருக்கவே செய்கின்றனர்.
மலையக மக்களுக்கான உரிமைசார் அரசியலை இலக்காகக் கொண்டு 80 களில் உருவான மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகச் செயலாளராக பதவி வகித்த பீ.ஏ.காதர்கூட, மக்களுக்காக சிறைவாசம் சென்றவர். இன்றளவிலும் அவர் மலையக மக்களின் உரிமைசார் விடயங்களுக்காக சர்வதேச மட்டத்தில் குரல் கொடுத்துவருகின்றார். இவ்வாறு மலையக மக்களுக்காக செயற்பட்ட முஸ்லிம் தலைவர்கள், இலக்கியவாதிகளின் பெயர் விபரம் ஏராளம். அவை வரலாற்றில் நிச்சயம் பதியப்பட வேண்டும்.- Vidivelli