தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனா அல்லது ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவா எதிர்கட்சித் தலைவர் என்பதை பாராளுமன்றின் பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்கட்சித் தலைவரை தெரிவு செய்வதில் எழுந்துள்ள சிக்கல் நிலை குறித்து விளக்கமளிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை நிலையியல் கட்டளையின் பிரகாரம் எதிர்கட்சிதலைவர் பதவியினை யாருக்கு வழங்குவது என்பதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்னெடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
ஆளும் தரப்பு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்கட்சியின் தலைவர் யார் என்பதை உத்தியோக பூர்வமாக அறிவிக்க முடியாமல் உள்ளது. நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஸ்ரீ லங்கா பொது ஜனபெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவை எதிர்கட்சி தலைவராக அறிவித்திருந்தார். ஆனால் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக் ஷவை எதிர்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு பாரிய எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
ஆகவே எதிர்கட்சித் தலைவரை தெரிவு செய்வதற்கு நிலையியற் கட்டளையின் பிரகாரமே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை சபாநாயகர் கருஜயசூரிய முன்னெடுப்பார்.
மேலும் எதிர்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொடுப்பதற்கு அதிக பெரும்பான்மையுள்ளவர் ஒருவரையே எதிர்கட்சித் தலைவராக நியமிக்க முடியும். இரா. சம்பந்தன் அல்லது மஹிந்த ராஜபக் ஷ ஆகிய இருவர்களில் எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை பாராளுமன்ற பெரும்பான்மைக்கு அமைவாகவே தெரிவு செய்வோம் என்றார்.
-Vidvelli