எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் அடிக்கடி கொள்ளையிடப்படுவதால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பூநொச்சிமுனை மட்டக்களப்பு நகருக்கு தெற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கடலோர வரலாற்றுக் கிராமமாகும்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் காத்தான்குடி வரலாற்று நூல், ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஏறாவூர் வரலாற்று நூல் மற்றும் நடராசாவின் மட்டக்களப்பு மாண்மியம் வரலாற்று நூல் என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி மட்டக்களப்புக்கு அரேபியர்கள் வருகை தந்த முதலாவது தளம் இப் பூநொச்சிமுனை என்பதாக கூறப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனைக்கு அடுத்தபடியாக ஆழ்கடல் மீன்பிடி நடைபெறுவது புராதனமிக்க பூநொச்சிமுனை துறைமுகத்தில் ஆகும். இங்கு பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு நாட்டில் யுத்தம் முடிவுக்குவந்த பின்னர் இப்பிரதேச மீனவர்கள் எதிர்கொள்ளும் மிகப் பாரிய பிரச்சனை இவர்களின் மீனகள் கொள்ளையிடப்படுவதாகும். அதாவது இப் பூநொச்சிமுனை மீன்பிடி முகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தமது வலைகளை கடலில் விரிக்கின்றனர் இவ்வாறு சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒவ்வொரு படகுகளிலிருந்தும் கடலில் வலைகள் விடப்படுகின்றது. இவ்வாறு விடப்படும் வலையின் ஒரு அந்தத்தில் தமது ஆழ்கடல் மீன்பிடி படகினை இணைத்து சுமார் 4 தொடக்கம் 6 மணித்தியாலங்கள் இவ் வலை கடலில் மிதக்கவிடப்படுகின்றது.
குறித்த நேரத்தின் பின் இவ்வலைகளை மீனவர்கள் தமது படகுகளுக்கு இழுத்து ஏற்றுகின்றனர். கடலில் இரவு நேரத்தில் இவ்வாறு விரிக்கப்படும் வலைகளில் சிக்குண்டு கிடக்கும் மீன்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் செயல்படும் ஒரு குழுவினரால் தொடராக கொள்ளையிடப்பட்டு வருவதாக பூநொச்சிமுனை மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாளாந்தம் சுமார் பல மில்லியன் ரூபா பெறுமதியான வலைகளில் கிடக்கும் மீன்கள் இக்குழுவினரால் கொள்ளையிடப்படுகின்றது. இவ்வாறு மாதம் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் பெறுமதியான மீன்களை இந்த மீனவர்கள் பறிகொடுத்து தமது ஜீவனோபாயத்தை இழப்பதாகவும் மீனவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இந்த மீன் கொள்ளையை தடுக்க கடந்த பல வருடங்களாக இப் பிரதேச மீனவர்கள் போராடி வருகின்றனர்.
இந்தக் கொள்ளையை உரிய அரச் நிறுவனங்களை தடுக்குமாறு கோரி இம்மீனவர்களினால் கடந்த 2019 ஆம் ஆண்டில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றும் நடத்தப்பட்டது.
தொடர்ச்சியாக கடற்றொழில் அமைச்சு மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் பொலிசார் கடற்படை போன்ற பல அரசு நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுத்தும் எந்த முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை என்பது மன வருத்தத்துக்குரியதாகும் என இம் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் கடந்த 10.04.2023 ஆம் திகதி சுற்றாடல் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தலைமையில் நடைபெற்ற காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் இம் மீன் கொள்ளை தொடர்பாக மீனவர்களால் சுட்டிக்காட்டப்பட்டு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு தீர்வு கோரப்பட்டது. அதன் அடிப்படையில் இப்பிரச்சனைக்கான தீர்வினை எட்டுவதற்கான விசேட கூட்டம் ஒன்று காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் தலைமையில் கடந்த 17.05.2023 திகதி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் காத்தான்குடி பொலிஸ் நிலைய அதிகாரிகள் மட்டக்களப்பு கடற்படை அதிகாரிகள் மற்றும் இப் பிரதேச மீனவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் இருந்து செல்லும் ஒரு குழுவினரே இம்மீன் கொள்ளையில் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டினர். அதேபோன்று காத்தான்குடி பொலிசாரின் கூற்றுப்படி இந்த மீன் கொள்ளை கோஸ்டியின் குழுவின் தலைவராக உள்ளவர் ஒரு முன்னாள் பயங்கரவாத குழுவின் உறுப்பினர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன் அடிப்படையில் இக்கூட்டத்தில் மீன் கொள்ளையை தடுக்க பொறிமுறை ஒன்றினை உருவாக்கும் முகமாக சில முடிவுகள் எடுக்கப்பட்டது.
01.களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள நான்கு மீன்பிடி இறங்கு துறைகளை இரண்டு மீன்பிடி இறங்கு துறைகளாக குறைத்து மட்டுப்படுத்தல்.
02. இப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மீனவர்கள் பயன்படுத்தும் 25 குதிரை வலுவுக்கு மேற்பட்ட வெளியினை இயந்திரங்களின் பாவனையை முற்றாக தடை செய்தல்.
03. நாளாந்தம் இப்பிரதேச செயலகப் பிரிவில் இருந்து கடல் தொழிலுக்கு செல்லும் மீனவரின் படகுகள் பிடிக்கப்படும் மீன் போன்றவற்றை பொலிசாரின் உதவியுடன் கடற்படையினர் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுதல்.
இந்த தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டும் முடிவு செய்யப்பட்டது.
இருந்தபோதும் இத் தீர்மானங்கள் எதுவும் இன்றுவரை அமுல்படுத்தப்படவில்லை என்பது வேதனைக்குரியதாகும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக கடந்த 13.07.2023 ஆம் திகதி நடைபெற்ற காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் மீளவும் ஆராயப்பட்டது. இவ்விடயத்தில் கடற்றொல் நீரியல் வளத்திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மிகுந்த விசனம் தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்ய உள்ள கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக தொடர் நடவடிக்கை எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
கடற்றொழில் என்பது மிகக் கடினமான தொழில் நடவடிக்கையாகும். காற்று மழை கடல் சீற்றம் இவ்வாறு பல்வேறு உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தொழிலில் ஈடுபடும் இம்மீனவர்களை இந்த மீன் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டியது அரசினதும் இம் மாவட்ட சிவில் அமைப்புக்களினதும் கடமையாகும். மிக விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என பாதிக்கப்படும் மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதனூடாக இன ஐக்கியமும் நல்லுறவும் நிரந்தர சமாதானமும் ஏற்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான மீன் கொள்ளை போன்ற செயற்பாடு இம்மாவட்டத்தின் அமைதிக்கும் சகவாழ்வுக்கும் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.- Vidivelli