முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்ட திருத்தம்: விவாகரத்து தொடர்பாக நியாயமானதும் சமமானதுமான சட்டங்களை உருவாக்குவதன் அவசியம்
ஹஸனாஹ் சேகு இஸ்ஸதீன்
(சட்டத்தரணி, சட்டமுதுமாணி)
ஹிஷாமா ஹாமின்
(குடும்பச் சட்ட பரப்புரையாளர்)
கிரவுன்ட்வியுஸ் இல் வெளியான
கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் (MMDA) மீது திருத்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற தேவை மிக நீண்டகாலமாக உணரப்பட்டு காலாகாலத்துக்கு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. இந்த வகையில் இறுதியாக 2021ஆம் ஆண்டில் ஒரு குழு நியமிக்கப்பட்டதுடன், அது தனது பரிந்துரைகளை நீதியமைச்சிடம் கையளித்திருந்தது. இக்குழு முன்வைத்த பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட மூல மசோதாவொன்று தயாரிக்கப்பட்டது. ஆயின், இதற்குப் பதிலளிப்பாக, MMDA இனைத் திருத்துவதற்கான சட்ட மூல வரைபுக்கு பதிலளிக்கும் விதத்தில் 18 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பரிந்துரைகளை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு ஜூன் 08, 2023 திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக சமர்ப்பித்துள்ளனர்.
MMDA இனைத் திருத்துவதற்காக 2021 இல் நியமிக்கப்பட்ட குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு நீதியமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மூல வரைபில் பிரதிபலிக்கும் அனைத்து முன்னேற்றகரமான திருத்தங்களையும் நிராகரிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகள் அமைந்துள்ளன. அதுமட்டுமன்றி, 2009 ஆம் ஆண்டு நீதிபதி சலீம் மர்சூப் தலைமை வகித்த குழுவினால் உருவாக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட முன்னேற்றகரமான நிலைப்பாடுகளைக் கூட பின் தள்ளும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் தற்போதைய பரிந்துரைகள் அமைந்துள்ளன. (அவற்றை இங்கே காணலாம்- https://www.mmdasrilanka.org/statment-tamil-15-07-23/)
இவை அனைத்தும் சிக்கலுக்குரியனவாக இருக்கின்றபோதும், இக்கட்டுரையில் விவாகரத்து தொடர்பாக காணப்படும் சட்ட ஏற்பாட்டினையும், நடைமுறையில் அவை பெண்கள் மீது செலுத்தும் விளைவுகளையும் முன்வைக்கிறோம்.
தற்போது அமுலில் இருக்கும் 1951 ஆம் ஆண்டின் இலங்கை முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் மிகவும் பிரச்சினைக்குரிய அம்சங்களில் ஒன்றாக விவாகரத்துக்கான சமமற்ற வகைகளும், செயன்முறைகளும் காணப்படுகின்றன. 2021 ஜூன் மாதம், சட்டத்தரணிகள், துறைசார்நிபுணர்கள் மற்றும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஆகியோரை உள்ளடக்கி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட MMDA திருத்தத்திற்கான ஆலோசனைக் குழு, MMDA இன் கீழ் விவாகரத்தினை பெண்களுக்கும், ஆண்களுக்கும் மிகவும் நியாயமானதாகவும், சமமானதாகவும் ஆக்குவது உள்ளிட்ட தங்களின் பரிந்துரைகளை நீதி அமைச்சிடம் சமர்ப்பித்திருந்தது. இதன் பிரகாரம், நீதி அமைச்சினால் ஒரு சட்டமூலம் வரையப்பட்டது. இந்தச் சட்டமூலம், வாழ்க்கைத் துணையினரான இரு பாலாருக்கும் விவாகரத்துச் செயன்முறைகளைச் சமப்படுத்தி, இரு தரப்பினர்களும் தனித்தும், பரஸ்பர இணக்கத்துடனும் விவாகரத்தினை மேற்கொள்வதற்கான சமச்சீரான அடிப்படையினை உறுதிப்படுத்தியது.
எவ்வாறாயினும், கடந்த சில வாரங்களின் முன்னர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்திருந்த திருத்தங்கள், MMDA இன் கீழ் தற்போது உள்ளதைப் போன்றே பாகுபாடுமிக்கதும், அதீதமான அளவிற்கு நியாயமற்றதுமான விவாகரத்துச் செயன்முறையினைத் திட்டவட்டமாகக் கொண்டிருக்கின்றன.
தற்போது அமுலில் உள்ள MMDA இன் கீழ் விவாகரத்து
MMDA ஆனது தற்போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விவாகரத்துக்கான வகைகள், நிபந்தனைகள் மற்றும் நடபடிமுறைகள் ஆகியவற்றுக்கு இடையில் வித்தியாசத்தினைக் கொண்டுள்ளது. MMDA சட்டத்தின் கீழ், தலாக் விவாகரத்துக்களைப் பிரகடனப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைக் கணவர்கள் கொண்டுள்ள அதேவேளை, பஸஹ் விவாகரத்தினைப் பெற்றுக் கொள்ளும் ஏற்பாடுகளையே மனைவிகள் கொண்டுள்ளனர்.
தலாக் (“நான் உன்னை விவாகரத்துச் செய்கின்றேன்” எனும் அர்த்தத்தினைக் கொண்டது) பிரகடனம் என்பது கணவரினால் முன்னெடுக்கப்படும் விவாகரத்தின் ஒரு வகையாகும். இந்தத் தலாக் விவாகரத்திற்கு ஏதாவது குறிப்பிட்ட அடிப்படையினை அல்லது காரணத்தினை வழங்கவேண்டும் என்ற எதுவித தேவைப்பாட்டையும் சட்டம் கணவனுக்கு விதிக்கவில்லை. பூரணமான தற்றுணிபுடன் கணவர்கள் விவாகரத்தினைத் தாக்கல் செய்ய முடியும். மனைவியைக் குறைகூறுவதில் இருந்தும் கணவர் தடுக்கப்பட்டுள்ளார் மற்றும் மனைவிக்கு எதிராகப் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் இருந்தும் அவர் தடுக்கப்பட்டுள்ளார் என்பது இதற்கானதொரு காரணமாக இருக்கின்றது.
செயன்முறையினைப் பொறுத்த அளவில், தலாக் கூற விரும்பும் கணவர், அவரின் மனைவி வசிக்கும் பிரதேசத்தில் உள்ள காதிக்கு (முஸ்லிம் நீதிபதி) அறிவித்தல் வழங்கவேண்டும் என MMDA தேவைப்படுத்துகின்றது. எவ்வாறாயினும், தலாக் இனைப் பிரகடனம் செய்கையில் மனைவியின் பிரசன்னத்தினை இச்சட்டம் கோரவுமில்லை; கட்டாயமாக்கவுமில்லை. குறிப்பிட்ட மனைவிக்கு அறிவிக்கப்படும் வரையில் கணவர் தன்னை விவாகரத்துச் செய்யும் நோக்கத்தினைக் கொண்டிருந்ததை அல்லது விவாகரத்துச் செய்திருந்ததை மனைவி அறியாதிருந்த பல வழக்குகள் பெண்கள் குழுக்களிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு சம்பவத்தில், தலாக் கூறியிருந்தும் மனைவிக்கு அறிவிக்காமல், ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் அந்தப் பெண்ணுடன் குறுகிய காலம் வாழ்ந்தமையும், பின்னர் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டபோது அவ்விடயம் தெரிய வந்து காதியிடம் சென்று உறுதிப்படுத்திக் கொண்டமையும் முறையிடப்பட்டுள்ளது. தலாக் விவாகரத்தினை மனைவிமாருக்குக் காதிகள் அறிவிக்கத் தவறிய பல சந்தர்ப்பங்களும் உள்ளன. இச்சந்தர்ப்பங்களில் மிக அடிப்படையான இஸ்லாமிய விதிமுறை மீறப்படுவதனைக் காணமுடியும்.
ஒரு பெண் மாதவிடாய்க் காலத்தில் இருக்கும் போது அல்லது கர்ப்பமாக இருக்கும் போது தலாக் சொல்லல் தடை செய்யப்பட்ட விடயமாகும். இது இஸ்லாம் ஏற்படுத்தியுள்ள விதிமுறை. ஒரு பெண் மாதவிடாய்க் காலத்தில் இருக்கின்றாரா இல்லையா என்பதனை அவரைத் தவிர வேறு யாரிடமும் கேட்க முடியாது. திருமண வாழ்க்கை முடிவுறுகையில் அதனைப் பற்றித் தான் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய அடிப்படை நியாயம் கூட வழங்காத இந்த சட்ட ஏற்பாடுகள், நீதியை அடிப்படையாகக் கொண்ட பரந்த இஸ்லாமிய சட்டத்திலிருந்தும் எந்தளவு தூரம் விலகி நிற்கின்றதை என்பதை யாரும் உணர்ந்து கொள்ள முடியும். நபியவர்களது காலத்தில் தெருவில் நின்று கூட தலாக் சொன்னார்கள் என்ற உதாரணத்தையும் சிலர் எடுத்துக் காட்டுவார்கள். ஆயின், எந்த அணுகுமுறை நாகரிகமான, காருண்யமான, சக மனிதரில் மரியாதை செலுத்தும் இஸ்லாம் வழிகாட்டும் வழிமுறையாக இருக்கின்றது என்பதனை சிந்தித்துப் பார்க்கலாம்.
தலாக் என்று வரும்போது பல காதிகள் கட்டாயமான மத்தியஸ்தத்தினைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதில்லை என்பதுடன், இயலுமான அளவு விரைவாக, சில வேளைகளில் ஒரு நாளினுள்ளேயே, விவாகரத்தினை முற்றாக்குகின்றனர். இங்கு பல காதிகளுக்கு சட்ட ஏற்பாடுகள் தெரிவதில்லை அல்லது அவர்கள் பலவந்தப்படுத்தப்படுகின்றனர் அல்லது அவர்களுக்கு இலஞ்சம் வழங்கப்படுகின்றதாக பல சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன.
பலதாரத் திருமணச் சூழ்நிலைகளிலேயே அதிகளவான தலாக் கோரப்படுவதாகச் சம்பவக் கற்கைகள் வெளிப்படுத்தியுள்ளன. கணவன் மனைவியரை சமமாகவும், நியாயமாகவும் நடாத்த வேண்டும் அல்லது கணவன் குடும்பங்களைப் பராமரிக்கக் கூடிய நிலையிலிருத்தல் என்பது பற்றிய எதுவித நிபந்தனைகளும் அற்ற MMDA இன் கீழான பலதார மண ஏற்பாட்டின் விளைவாக, மனைவிகளையும் குடும்பங்களையும் பராமரிப்பது சுமைமிக்கதாக மாறுகையில், ஆண்கள் எதுவித தயக்கமும் இன்றி தலாக் கூறி விடுகின்றனர். ‘தலாக்’ சொல்லும்போது மனைவிக்கு நட்டஈட்டை- மதாஹ் வினை கொடுக்கும் படி அல்குர்ஆன் கட்டளையிடுகின்றபோதும் MMDA இல் இது தொடர்பான எதுவித வெளிப்படையான ஏற்பாடுகளும் இன்மையினால் மிகச் சுலபமாக பெண்களை தலாக் சொல்லிவிடும் துர்நிலைமை தொடர்கின்றது.
எமது ஆய்வின் பிரகாரம், தமது மனைவிகளையும், குடும்பங்களையும் பராமரிக்க இயலாதிருக்கும் ஆண்களுக்கான ஒரு தெரிவாக விவாகரத்தினை சில காதிகளே பரிந்துரைக்கும் சந்தர்ப்பங்களையும் பல பெண்கள் முகங்கொடுத்திருக்கின்றனர். தலாக் கூறிய பின்னரான இத்தாக் காத்திருப்புக் காலப்பகுதியில், தலாக் கூறிய கணவர்கள் தாபரிப்பினை வழங்கவேண்டும் என சட்டரீதியாக தேவைப்படுத்தப்பட்டுள்ள போதும், பிள்ளைகளுக்கான தாபரிப்புக் கொடுப்பனவினை உறுதிப்படுத்த முன்பே, ஏற்பட்ட பாதிப்புக்கு எவ்விதமான நட்டஈட்டினையும் உறுதிப்படுத்த முன்பே, நிதி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெண்களையும், அவர்களின் பிள்ளைகளையும் கடினமான சூழ்நிலைகளிலும் பாதிப்பு மிக்க சூழ்நிலையிலும் விட்டுவிட்டு, பல காதிகள் விவாகரத்தினை வழங்கிய சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இந்த அநீதியில், சட்ட ஏற்பாடுகளிலுள்ள குறைபாடுகள் மிகத் தெளிவாகப் பங்களிக்கின்ற அதேவேளை, சட்டத்தினை சரிவர செயற்படுத்தாத காதிகளின் செயலின்மையும் இணைந்து காணப்படுகின்றமையை அவதானிக்கலாம்.
பஸஹ் – மனைவியினால்
முன்னெடுக்கப்படும் விவாகரத்து
பஸஹ் என்பது சுன்னி பிரிவைச் சேர்ந்த மனைவியினால் முன்னெடுக்கப்படும் விவாகரத்து வகையாகும். இந்த வகையின் கீழ் வழக்கிட, மனைவிக்குக் கணவரின் சம்மதம் தேவை இல்லை. இது கணவனின் திருமண வாழ்க்கைத் தவறினை அடிப்படையாகக் கொண்ட விவாகரத்து வகையாகும். MMDA இன் கீழ் பஸஹ் என்பது மிகவும் பொதுவான விவாகரத்து வடிவமாகக் காணப்படுகின்றது. பஸஹ்வுக்கான காரணங்களுள், மோசமாக நடத்துவது, குரூரம், வீட்டு வன்முறை (வாய்மொழி மூலமான துஸ்பிரயோகம் உள்ளடங்கலாக), பராமரித்துப் பேணுவதற்குத் தவறுகின்றமை மற்றும் கைவிடுதல் போன்றவையும் “தரப்பினர்கள் எப்பிரிவினைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனரோ அப்பிரிவினை ஆளுகை செய்யும் முஸ்லிம் சட்டத்தின் கீழ் தவறாகக் கருதப்படும் ஏனைய காரணங்களும்”(MMDA பிரிவு 24) அடங்குகின்றன. ஆண்மையின்மை மற்றும் சித்தசுவாதீனம் போன்ற கணவனின் தவறற்ற காரணங்களின் அடிப்படையிலும் பஸஹ் விவாகரத்தினைப் பெற முடியும்.
MMDA இன் கீழ் மனைவி விவாகரத்தினை முன்னெடுக்கையில், அவர் மணவாழ்க்கையில் கணவனின் தவறுக்கான சாட்சியங்களைக் கொண்டுவர வேண்டும். அத்துடன் மனைவி, தான் முன்வைக்கும் சான்றுகளையும், காரணங்களையும் ஆதாரப்படுத்துவதற்கு குறைந்தது இரண்டு சாட்சியங்களைக் கொண்டுவர வேண்டும். மேலும், இது தொடர்பான விசாரணைகளுக்கும் பல தடவைகள் செல்ல வேண்டும். விவாகரத்துக்கான விண்ணப்பத்தினை ஏற்றுக்கொள்வதற்குக் கூட பெண்ணின் ஆண் பாதுகாவலரிடம் (தந்தை, பாட்டன், அல்லது சகோதரர்) இருந்து கடிதங்களைக் கோருதல் போன்ற சட்டத் தேவைப்பாடுகளற்ற, தமது சொந்தப் புரிதலின் கீழான தேவைப்பாடுகளையும் வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த காதிகள் சேர்த்துக் கொள்வதனால் இவை பெண்களை மேலும் சிரமங்களுக்குள்ளாக்குகின்றன.
MMDA ஆனது இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஆளுகின்ற போதும், அதன் ஏற்பாடுகள் மத்ஹப் (சிந்தனைப் பிரிவுகள்) எனும் பிரிவுகளின் அடிப்படையில் செயற்படுகின்றன. இலங்கையிலுள்ள சுன்னி மற்றும் ஷீஆ பிரிவுகளால் ஆளப்படுபவர்களாயினும், எந்தவொரு மத்ஹப் – சிந்தனைப் பிரிவைப் பின்பற்றுபவராயினும் திருமண மற்றும் விவாகரத்து தொடர்பான விடயங்களில் MMDA இன் கீழ் ஆளப்படுவார். MMDA இன் கீழ், பஸஹ் விவாகரத்துக்கு மத்ஹப் (சிந்தனைப்) பிரிவின் (எழுதப்படாத) சட்டத்தினைப் பிரயோகிப்பதற்கான ஓர் ஏற்பாடு காணப்படுகின்றது. இதனை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர்.
இந்த ஏற்பாடானது, பெண்களைப் பொறுத்தளவில் விவாகரத்தைப் பெறுவதில் தடைகளையும், சிக்கல்களையும் தோற்றுவிக்கின்றன. எமது 2016 ஆம் ஆண்டின் ஆய்வில் இருந்து தெரியவருவது, மேமன் சமுதாயத்திற்கான காதியினை நேர்காணல் செய்ததன் அடிப்படையில், மேமன் சமூகம் ஹனபி மத்ஹபினை (சிந்தனைப் பிரிவு) பின்பற்றுகின்றது என்பதுடன், இதன் கீழ் பஸஹ் விவாகரத்துக்கு இடமேயில்லை என்பதுடன், குடும்ப வன்முறையில் கணவனால் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் பெண்ணிற்கு மேமன் காதி நீதிமன்றில் பஸஹ் வழக்கிட முடியாது. அதேசமயம், ஷீஆ பிரிவின் கீழான போராஹ் சமுதாயத்திலுள்ள பெண்களுக்குப் பிரயோகிக்கப்படும் ஏற்பாடுகளின் அடிப்படையில் கணவன் அனுமதித்தால் தவிர அங்கு பெண்கள் விவாகரத்துக் கோருவதற்கான ஏற்பாடுகளே இல்லை. இச்சந்தர்ப்பங்களில், சூழ்நிலை எதுவாக இருந்தாலும், அது வீட்டு வன்முறையாகவோ அல்லது துஸ்பிரயோகமோ எதுவாக இருந்தாலும், விவாகரத்துக்காகப் பெண்கள் அவர்களின் கணவர்களிடம் இருந்து அனுமதியைக் கோர வேண்டியுள்ளது. இதனை விளங்கிக் கொள்வதற்காக, இந்த வழக்கினைக் கூறமுடியும்.
ஷீஆ பிரிவின் கீழ் திருமணம் செய்த மனைவி, இரண்டே மாதங்களில் அதே பிரிவைச் சேர்ந்த கணவனின் உணர்வு, உடல்ரீதியான வன்முறையினைத் தாங்க முடியாமல் விவாகரத்தினை நாடியபோது, இப்பெண்ணின் குடும்பத்தினரும், சமுதாயமும், சமயத் தலைவர்களும் இவ்விடயத்தில் அப்பெண்ணுக்குக் காத்திரமான ஆதரவினை வழங்கியதுடன் விவாகரத்திற்கு இணங்குமாறு அவரின் கணவருக்கும் பாரிய அழுத்தத்தினை வழங்கினர். எவ்வாறாயினும், இவ்வளவு முயற்சிகளையும் தாண்டி, அக்குறிப்பிட்ட பிரிவுச் சட்டம் தொடர்பாக MMDA இல் உள்ள (எழுதப்படாத) ஏற்பாடுகளின் கீழ் தன்னால் விவாகரத்திற்கான அனுமதியினை வழங்காதிருக்க முடியும் என்ற ஒரே காரணத்திற்காக அக்கணவர் மூன்று வருடங்களாக விவாகரத்தினை வழங்காதிருந்தார்.
அதிகமான பெண்களுக்கு அவர்களின் குடும்பங்களில் இருந்து இவ்வாறான அளப்பரிய ஆதரவு கிடைப்பதில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். கணவனால் மண்ணெண்ணெய் ஊற்றி எரியூட்டப்பட்ட, கைகள் முறிக்கப்பட்ட பெண்களைக் கூட அத்தகைய வன்முறையான கணவர்களுடன் சேர்ந்து வாழும்படி நிர்ப்பந்திக்கும் சிந்தனைகளையுடைய குடும்பங்களையும், காதிகளையும் கொண்டிருக்கும் எமது சமூகத்தில், அவற்றை எதிர்கொள்ளும் பெண்கள், சட்டம் மாற்றப்படாமலும் இஸ்லாத்தில் பொதிந்துள்ள அன்பு மற்றும் கருணைக்கான கோட்பாடுகள் மறுசீராக்கல்களுக்கு வழிகாட்டாமலும் இருந்தால், அதீத குரூரமும் துஸ்பிரயோகமும் மிக்க திருமண வாழ்வில் தொடர்ச்சியாக முடங்கிக் கிடக்க நேரிடும்.
இங்கு MMDA இன் விவாகரத்துக்கான ஏற்பாடுகள், இலங்கையில் மத்ஹப் என்ற சிந்தனைப் பிரிவுகளினால் ஆளப்படுவதனால் பெண்களுக்குச் சமமற்றதாகவும், அநீதியிழைப்பதாகவும், இஸ்லாம் வழங்கிய பரந்த உரிமைகளை மறுப்பதாகவும் இருக்கின்றமையைக் காணலாம்.
சுன்னி பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆனால், MMDA இல்
உள்வாங்கப்படாத விவாகரத்துகள்
முபாரத் என்பது பரஸ்பர இணக்கத்தின் பேரில் மேற்கொள்ளப்படும் ஒரு விவாகரத்தாகும். இது சுன்னி பிரிவின் சில மத்ஹபுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றாலும் இது MMDA இல் வெளிப்படையாகக் குறித்துரைக்கப்படவில்லை. எவ்வாறாயினும், MMDA இன் பிரிவு 98 இனை அடிப்படையாகக் கொண்டு காதிகளால் முபாரத் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பிரிவு பின்வருமாறு குறிப்பிடுகின்றது, “…எந்த முஸ்லிம் திருமணம் அல்லது விவாகரத்துத் தொடர்பான சகல விடயங்களும், தரப்பினர்களின் நிலை மற்றும் பரஸ்பர உரிமைகள் மற்றும் கடப்பாடுகள் ஆகியவை, தரப்பினர்கள் எந்த மதப் பிரிவினைச் சேர்ந்தவர்களோ அந்த மதப் பிரிவினை ஆளுகை செய்யும் முஸ்லிம் சட்டத்தின் பிரகாரமே தீர்மானிக்கப்படும்.”
குலா என்பது, மனைவி திருமண வாழ்வில் மகிழ்ச்சியற்றவராக இருக்கையில் அவரால் பெறக்கூடிய விவாகரத்தாகும் என்பதுடன் இந்த விவாகரத்தில் மனைவி கணவனுக்கு நட்டஈட்டுக் கொடுப்பனவொன்றினைச் செலுத்தல் வேண்டும். இங்கு கணவனின் அனுமதி தேவையில்லை. மேலே குறிப்பிட்டது போல், கணவனின் அனுமதி தேவையாயின் இதற்கு எதுவித அர்த்தமும் இருக்கப் போவதில்லை. ஆனால், கணவனின் அனுமதியுடன் மாத்திரம் பெறப்படும் குலா விவாகரத்தினை MMDA உள்ளடக்க வேண்டும் என முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழிகின்றனர். இது நடைமுறையில் இருக்கும் சிக்கல்களுக்கு எத்தகைய தீர்வினைத் தரப் போகின்றது என்பது கேள்விக்குறி.
கணவனின் இணக்கத்துக்கான தேவைப்பாடு மிகவும் சிக்கல்வாய்ந்ததாகும். ஏனெனில், கணவன்மார்கள் பொதுவாகத் தீய நோக்குடன் அவர்களின் இணக்கத்தினை வழங்காது வைத்திருக்கலாம். கணவனின் இணக்கம் கட்டாயமானது எனச் சில இஸ்லாமிய அறிஞர்கள் அபிப்பிராயம் கொண்டிருக்கும் அதேவேளை, குலா என்பது மனைவியின் உரிமை என ஏனைய அறிஞர்கள் பலர் வாதிடுகின்றனர்.
இஸ்லாமியச் சட்டத்தில், கணவனின் அனுமதியின்றி குலா விவாகரத்தினைக் கோருவதற்கான உரிமையினை மனைவி கொண்டுள்ளார் என்பதால் பங்களாதேஷ், பாகிஸ்தான், எகிப்து, அல்ஜீரியா, மற்றும் மொரிடானியா ஆகிய நாடுகளில், குலா விவாகரத்துக்குக் கணவனின் இணக்கம் கோரப்படுவதில்லை. பஹ்ரைன், ஜோர்டான், கட்டார், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளில், விவாகரத்துக்கான விண்ணப்பத்தினை மதிப்பிட்ட பின்னர், கணவன் இணக்கம் வழங்கியுள்ளாரா அல்லது இல்லையா என்பதைப் பொருட்படுத்தாது நீதிமன்றத்தினால் குலா விவாகரத்து வழங்கப்பட முடியும். 2022 நவம்பரில், தங்களின் கணவர்கள் இணக்கம் தெரிவிக்கின்றார்களா அல்லது இல்லையா என்பதைப் பொருட்படுத்தாது குலாவின் மூலம் விவாகரத்துச் செய்வதற்கான பூரண உரிமையினை முஸ்லிம் பெண்கள் கொண்டுள்ளனர் என இந்தியாவின் கேரள உயர் நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தற்போது அமுலில் உள்ள விவாகரத்து நடைமுறையினை நீக்காமல் வைத்திருப்பதில் உள்ள பிரச்சினைகள்
இலங்கை முஸ்லிம் சமுதாயங்களினுள் அதிகூடிய எண்ணிக்கையில் மேற்கொள்ளப்படும் விவாகரத்தாக பஸஹ் விவாகரத்து முறை காணப்படுகின்றது. MMDA இன் கீழ், பஸஹ் விவாகரத்திற்கு இறுக்கமானதும் முறையானதுமான நடவடிக்கை முறைகள் பின்பற்றப்பட வேண்டும். அவ்வாறு பின்பற்றத் தவறினால் விவாகரத்துச் செல்லுபடியற்றதாகவும், வலிதானதாகவும் ஆகிவிடக் கூடும். நடவடிக்கை முறையில் வழுக்கள் உதாரணமாக, விசாரணைகள் நடத்தப்படாமை அல்லது விசாரணையின் போது ஜூரர்கள் பிரசன்னமாக இருக்காமை அல்லது மூன்று முஸ்லிம் ஆண் ஜூரர்களே இருக்கலாம் என்று சட்டம் கூறுகின்றவேளை, பெண்களை ஜூரர்களாக வைத்து பஸஹ் விவாகரத்தை வழங்கல் போன்ற வழுக்கள் காணப்பட்டன என்ற அடிப்படையில் காதிகள் சபை முதற்கொண்டு உயர் நீதிமன்றம் வரையில் கணவர்களால் மேன்முறையீடு செய்ய முடியும் என்பதுடன் இந்த வழுக்கள் நிரூபிக்கப்பட்டால், அது பஸஹ் விவாகரத்தினைச் செல்லுபடியற்றதாக்கிவிடும். இந்த மேன்முறையீட்டுச் செயன்முறையின் காரணமாக ஏழு வருடங்களுக்கும் மேலாக பஸஹ் விவாகரத்து வழக்குகள் நடைபெற்று வருவதையும், இதனால் காதிநீதிமன்றில் விவாகரத்தான பெண்ணின் வழக்கு காதிகள் சபையில் மேன்முறையீட்டில் இழுபடுகின்ற படியால், மறு திருமணம் செய்து அவரின் வாழ்வினை முன்கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. மறுதிருமணம் என்பதற்கப்பால் கணவனின் திருமணத் தவறிற்காக செய்த விவாகரத்து வழக்கானது, வருடக் கணக்கில் இழுத்துக் கொண்டு போவதனைத்தான் எமது சமூகப் பெண்களுக்கு நாம் விதியாக்கப் போகிறோமா? இது பல பெண்களின் வாழ்வியல் யதார்த்தமாக உள்ளது. தலாக் விவாகரத்து முறை மிகச் சுலபமாக பெறுவதோடு, கணவர்கள் பலதார மணம் உள்ளடங்கலாகத் தொடர்ச்சியான திருமணங்களில் நுழையலாம் என்ற சந்தர்ப்பம் காணப்படும் அதேவேளை, பஸஹ் விவாகரத்தை நாடும் பெண்களைப் பொறுத்தளவில் வழக்கின் காரணத்துக்காகவன்றி அதன் நடைமுறைக் குறைபாட்டால் பெண்கள் வருடக் கணக்கில் அலைக்கழிக்கப்பட சட்டம் வழிகோலுகின்றது.
எமது ஆய்வில் ஆவணப்படுத்தப்பட்டவாறு, காதிகள் சபையின் பிரதிநிதி ஒருவரின் கருத்தின் படி, ஒருவேளை பஸஹ் விவாகரத்து வழங்கப்பட்ட பின்னர் மனைவி ஏற்கனவே மறுமணமாகி அவருக்குப் பிள்ளைகள் இருக்கும் நிலையில், முன்னாள் கணவர் மேன்முறையீடு செய்து குறித்த பஸஹ் விவாகரத்துச் செல்லுபடியற்றதாகினால், புதிய திருமணம் செல்லுபடியற்றதாக மாறும் என்பதுடன், முன்னைய விவாகரத்து வழக்குத் தீர்க்கப்படும் வரையில் பிள்ளைகள் சட்டநெறிமுறையற்ற பிள்ளைகளாகவே கருதப்படுவர். இது பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் மிகவும் அநீதியான நடைமுறையாகும்.
MMDA இன் கீழ் விவாகரத்து நடைமுறை தற்போது அமுலில் உள்ளதன் பிரகாரம், துஷ்பிரயோகமிக்க திருமண பந்தங்களில் பிணைந்திருக்கும் முஸ்லிம் பெண்கள், விவாகரத்தினைப் பெறுகையில், நடுத்தீர்ப்பாளர்களின் முன்னிலையில் சான்றுகளைச் சமர்ப்பித்தல், பிற சாட்சியங்களைச் சமர்ப்பித்தல், மற்றும் வாக்குமூலங்களை வழங்குதல் என்பவை தொடர்பில் மேலதிக தடைகளுக்கும், சவால்களுக்கும் முகங்கொடுக்கின்றனர். குடும்ப உறவுக்குள் நடக்கும் பாலியல் அல்லது வன்முறை சார் விடயங்களுக்கும் பெண்கள் சாட்சிகளை முன்வைத்து நிரூபிக்கும்படி சட்டம் கூறுகின்றது. கடுமையான உணர்வு ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு முகங்கொடுத்து, அல்லது உளவியல் மனவடுக்களுக்கு முகங்கொடுத்து, தங்களின் வழக்குக்கு ஆதாரமாகத் தயார்நிலையில் சாட்சியங்களைக் கொண்டிராதிருக்கக் கூடிய பெண்கள், விவாகரத்தினைப் பெற்றுக்கொள்வதில் கணிசமான அவலங்களை முகங்கொடுக்கின்றனர். இதேவேளை, மிகச் சுலபமாக மனைவியே இன்றி தலாக் இடம் பெற இச்சட்டம் வழிவகுத்திருக்கிறது.
MMDA மீதான திருத்தங்கள் கட்டாயம் நியாயமானவையாகவும் சமமானவையாகவும் இருக்க வேண்டும்
தற்போது நடைமுறையில் உள்ள விவாகரத்து நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் அதனை அவ்வாறே பேணுவது MMDA இல் செய்யப்படும் எத்தகைய திருத்தங்களினதும் பாரிய வீழ்ச்சியாக இருக்கும். ஏனெனில், இச்சட்டத்தின் பிரதான பயன்பாடுகளில் ஒன்று விவாகரத்தாகும். MMDA இன் மீதான திருத்தங்கள் விவாகரத்துக்கான செல்லுபடியாகத்தக்க காரணங்களுடன் மனைவிக்கும், கணவனுக்கும் விவாகரத்தின் சமச்சீரான தன்மையினைக் கட்டாயம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதுடன் பால்நிலை, மதப் பிரிவு மற்றும் மத்ஹப் என்பவற்றின் அடிப்படையில் அநீதி இழைக்காமல் இலங்கையிலுள்ள சகல முஸ்லிம்களும் பிரயோகிக்கத்தக்க வகையில் செயற்திறனும், வினைத்திறனும் மிக்க விவாகரத்துச் செயன்முறையாகவும் அவை இருக்க வேண்டும்.
பின்வரும் திருத்தங்கள் முன்னுரிமைக்குரியனவாகும்:
தலாக், பஸஹ், குலா மற்றும் முபாரத் விவாகரத்து நடவடிக்கை முறைகள் ஏற்றத் தாழ்வற்றவையாக இருக்க வேண்டும் என்பதுடன் அவை குடும்பங்களின் நலனோம்புகை மற்றும் சிறந்த நலன் ஆகியவற்றினையே மையப்படுத்த வேண்டும். இது பாதிப்புக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எந்தத் தரப்புக்கும் ஏற்படக் கூடிய சாத்தியமுடைய சகல பாதிப்புக்களையும் கட்டாயம் தணிக்கக் கூடியவகையில் அமைதல் வேண்டும்.
மேன்முறையீட்டுச் செயன்முறை சகல வடிவிலான விவாகரத்துக்கும் தன்னிலையான அடிப்படையிலும் நடவடிக்கைமுறை அடிப்படையிலும் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுடன் எவ்விதமான சட்டத் தாமதங்களையும் தவிர்ப்பதற்காக அது கட்டாயம் கால வரம்பிற்கு உட்பட்டதாகவும் இருக்கவேண்டும்.
மதப் பிரிவின் அடிப்படையில் அல்லது மத்ஹபின் அடிப்படையில் முஸ்லிம் பெண்களின் வெவ்வேறு பிரிவினருக்கு வெவ்வேறு வகையான விவாகரத்துக்கள் பிரயோகிக்கப்படுவது அதீத பாகுபாடு, தீங்குமிக்கதாக உள்ளது. தீர்மானம் எடுப்பவர்களாகவும், குடும்பத்தை நிர்வகிப்பவர்களாகவும் பொதுவாக ஆண்களே காணப்படுகின்ற சமூக அமைப்பில் வன்முறையின் போது விவாகரத்தினை பெண்கள் பெற்றுக் கொள்வதாயின் அதற்கான இடம் விவாகரத்தின் வகைகள் (பஸஹ், குலா மற்றும் முபாரத் உள்ளடங்கலாக), விவாகரத்துக்கான காரணங்கள் மற்றும் விவாகரத்தின் வினைத்திறன்மிக்க செயன்முறை ஆகியன, தரப்பினர்கள் எந்த மதப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் அல்லது மத்ஹபைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொருட்படுத்தாது, MMDA இனால் ஆளுகை செய்யப்படும் சகல முஸ்லிம்களுக்கும் சமமாகப் பிரயோகிக்கப்படத்தக்கதாக இருக்க வேண்டும்.
சட்டத் திருத்தத்திற்கான பரிந்துரைகள், சுய இலாபங்களையோ வாக்கு வங்கிகளையோ கணக்கெடுக்காமல், பிற்போக்கான இறுகிய பொருள்கோடல்களாகவன்றி, முஸ்லிம் சமூகத்துக்குள் மேலும் பிரிவினைகளை வளர்ப்பதாக அல்லாமல், சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்குக் காத்திரமாக தீர்வினை முன்வைப்பனவாக இருத்தல் வேண்டும்.- Vidivelli