எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்
பலஸ்தீன மக்களுக்கு முழுமையான சுய நிர்ணய உரிமை உண்டு. அவர்களின் சுதந்திரம் கட்டாயமாக பேணப்பட வேண்டும். அத்துடன், இந்தப் பிரச்சினைக்கு மிகச் சிறந்த தீர்வாக அமையக் கூடியது இரு நாட்டுத் தீர்வாகும். குறிப்பாக, பலஸ்தீன மக்களுக்கு கிழக்கு ஜெரூசலத்தை மையமாகக் கொண்ட ஒரு தனி நாடு உருவாவதே இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், பலஸ்தீன பிரச்சினையை இலங்கை அரசாங்கம் ஏன் ஆதரிக்க வேண்டும் என்கிறபோது, நாங்கள் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறோம். இந்த நேரத்திலும் மனிதாபிமான அடிப்படையில் நாம் நீதியின் பக்கம் நிற்க வேண்டும்.
அத்தோடு, கடந்தகாலங்களில் இஸ்லாமிய நாடுகளின் வெறுப்பை நாம் சம்பாதித்திருக்கிறோம். தற்போது பொருளாதார நெருக்கடிமிக்க காலகட்டத்தில், அரபு இஸ்லாமிய நாடுகளின் நன்மதிப்பை பெற்றுக்கொள்வது அவசியமானதாகும்.
இதனால், இலங்கை பொருளாதாரத்தில் பல வகையில் தாக்கத்தை செலுத்தும். அரபு நாடுகளுடனான உறவு மேம்படும். அதேபோல், அரபு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். அரபு இஸ்லாமிய நாடுகளின் உதவிகளையும் பொருளாதார மேம்பாட்டுக்காக பெற்றுக்கொள்ள முடியும்.
பலஸ்தீனத்திற்கு சகல விதத்திலும் ஒத்தாசை புரிந்து எமது இராஜதந்திர ஆதரவை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதையும் இந்த விடயத்தில் அரசாங்கம் கூடுதலான கரிசனை காட்ட வேண்டும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.- Vidivelli