ஒரு நாடு வளர்ச்சிப்பாதையில் முன்னோக்கிச் செல்வதற்கு நாட்டின் பிரஜைகள் ஆரோக்கியமானவர்களாக இருக்க வேண்டும். அப்போதே ஒரு நாடு சகல துறைகளிலும் தன்னிறைவு பெறும்.
ஆனால் அண்மைக் காலமாக சுகாதாரத்துறையில் பல நெருக்கடிகள், சிக்கல்கள், பின்னடைவுகள் நிலவி வருகின்றமை கவலைக்குரியதாகும்.
அண்மையில் பேராதனை வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்பட்ட யுவதியொருவர் உடம்பெங்கும் நீல நிறமாகி உடனடியாக உயிரிழந்தமை, இதேபோன்று குளியாப்பிட்டி பகுதியில் 4 மாத குழந்தையொன்று தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்பு உயிரிழந்தமை மற்றும் ஏற்கனவே கண் சத்திர சிகிச்சை செய்து கொண்ட பலர் பார்வை குறைபாடுகளுக்கு உள்ளானமை உட்பட பல விரும்பத்தகாத சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது மட்டுமல்ல நாடெங்கும் வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறை நிலவுகிறது. பல ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழந்து பல மாதங்களாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சுகாதார சேவை தொழிற்சங்கங்கள், மருத்துவ அமைப்புகள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றன. அரச வைத்தியசாலைகளில் மாதாந்த மருத்துவ சேவையை பெற்றுக்கொள்ளும் மக்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால் பொது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த யுவதிக்கு ஏற்றப்பட்ட தடுப்பூசியை செலுத்திய மேலும் இருவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பிட்ட தடுப்பூசி பாவனையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த வியாழக்கிழமை சுகாதாரத்துறை அதிகாரிகளை அழைத்து மருந்துப் பற்றாக்குறை உள்ளிட்ட சுகாதாரத்துறையில் காணப்படுகின்ற சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
சுகாதாரத்துறையில் பெரும்பாலான வைத்தியர்கள் ஓய்வு பெற்றுச் செல்கின்றமை மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றமையும் பாரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் புலம்பெயர்ந்துள்ளமை புள்ளி விபரங்களுடன் மருத்துவ சங்கங்களால் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட மருந்துகள் பதிவுகளுக்கு அப்பால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ள அனைத்து மருந்துகளும் மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என சுகாதார தொழில் வல்லுனர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மக்களில் பெரும்பான்மையானோர் அரச வைத்தியசாலைகளையே தமது சிகிச்சைகளுக்காக நம்பியிருக்கின்றனர். பொருளாதார நெருக்கடியினால் அன்றாட உணவுக்குக்கூட அல்லல்படும் மக்கள் தனியார் வைத்திய சேவையை நாட முடியாதுள்ளனர். எனவே அரசாங்கம் இதனை ஓர் அவசர நிலையாகக் கருதி தேவையான மருந்துகளை வைத்தியசாலைகளுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
தரமற்ற மருந்துகள் இறக்குமதி உட்பட இத்துறையில் மாபியாக்களுக்கு இடமளிக்கக்கூடாது. இது விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
இதேவேளை சுகாதார அமைச்சர் அண்மைக்காலமாக நிகழ்ந்துள்ள மருந்து ஒவ்வாமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு டாக்டர் தேதுனு டயஸ் தலைமையில் வைத்திய நிபுணத்துவக் குழுவொன்றினை நியமித்துள்ளார். பிரச்சினை ஒன்று வரும்போது குழுக்கள் நியமிக்கப்படுவதே நமது நாட்டின் கலாசாரம். எனினும் இக் குழுவின் சிபாரிசுகளை நியாயமாக நடைமுறைப்படுத்த அமைச்சர் இடமளிக்க வேண்டும்.
சமகால சுகாதாரத்துறை நெருக்கடிகளை சரியாக முகாமை செய்யவில்லை எனக் குற்றம்சாட்டி சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென எதிர்க்கட்சி கோரியுள்ளது. பதவி விலகக்கோரி சுகாதார அமைச்சின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூகப்பிரதிநிதிகள் பங்கு கொண்டுள்ளனர்.
நாட்டின் சுகாதாரத்துறை பெரும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளதையே இந்த சம்பவங்கள் காண்பிக்கின்றன. இது விடயத்தில் உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவேண்டும். சுகாதாரத் துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டும்.- Vidivelli