முஸ்லிம் தனியார் சட்ட விடயத்தில் சுமுகமான தீர்வுகள் எட்டப்படும்
நீதியமைச்சர் தெரிவிப்பு; ஹலீம்தீன் குழுவுடனும் பேச்சு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள அறிக்கை மற்றும் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையிலான குழுவினர் தயாரித்து வழங்கியுள்ள அறிக்கை என்பன கவனத்திற் கொள்ளப்பட்டு சுமுகமான தீர்வுகள் எட்டப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
நீதியமைச்சர் விஜேயதாசவிடம் முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரியினால் நியமிக்கப்பட்டிருந்த முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்குவதற்கான குழு அண்மையில் தனது சிபாரிசுகள் அடங்கிய மகஜரை நீதியமைச்சரிடம் கையளித்திருந்தது. இந்நிலையில் நீதியமைச்சர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீனின் தலைமையிலான குழுவினரை தனது அமைச்சுக்கு அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடினார்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்திருத்த வரைபில் சில விடயங்களில் மாற்றங்களைக் கோரியுள்ளதை குழுவினரிடம் எடுத்து விளக்கினார். சட்டத்திருத்தம் இஸ்லாமிய வரையறையினை மீறி வரைபு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
சட்டத்திருத்த வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்கள் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் திருத்தம் தொடர்பிலான வாதங்கள் என்பனவற்றையும் கருத்திற்கொண்டு சுமுகமான தீர்வொன்றினை எட்டுவதாக சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையிலான குழுவினரிடம் நீதியமைச்சர் தெரிவித்தார்.- Vidivelli