உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: நஷ்டயீட்டை முழுமையாக செலுத்த 2033 வரை அவகாசம் கேட்கிறார் மைத்திரி!
எம்.எப்.அய்னா
இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் 21 இல் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இன்னும் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை. இந் நிலையில், அந்த கொடூர சம்பவத்தை தடுக்கத் தவறியவர்கள் தொடர்பில் இலங்கையின் உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்து, நேற்று 12ஆம் திகதி புதன்கிழமையுடன் 6 மாதங்கள் நிறைவடைந்தது.
ஒரு தீர்ப்புக்கு 6 மாதங்கள் நிறைவடைது என்பதில் அப்படி என்ன முக்கியம் இருக்கிறது என சிந்திக்கலாம். ஆம்.. ஒரு முக்கியமான விடயம் இருக்கின்றது.
போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் 21/4 உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க தவறியதன் ஊடாக, இலங்கையினுடைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னர் தேசிய உளவுச் சேவையின் பணிப்பாளராக இருந்த தற்போதைய பொலிஸ் நிர்வாக பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ் ஆகியோர் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி தீர்ப்பளித்தது. இலங்கையின் அரசியலமைப்பு ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள 12(1), 14 (உ) உறுப்புரைகள் ஊடாக கூறப்படும் அடிப்படை மனித உரிமைகளை அவர்கள் மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்து அந்த தீர்ப்பை அளித்திருந்தது.
இதற்கமைய இலங்கையினுடைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவை நட்ட ஈடாக செலுத்த வேண்டுமெனவும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தலா 75 மில்லியன் ரூபாவை நட்டஈடாக செலுத்த வேண்டுமெனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவை நட்டஈடாக செலுத்த வேண்டுமெனவும் தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த சிசிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபாவை நட்டஈடாக செலுத்த வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. இதனை விட அரசு ஒரு மில்லியன் ரூபாவை நட்ட ஈடாக செலுத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் ஆணையிட்டது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக இழப்பீட்டுக்கான அலுவலகம் ஒன்றினை ஸ்தாபிக்குமாறும், அவ்வலுவலகத்தின் கீழ் நிதியம் ஒன்றினை ஏற்படுத்தி அந் நிதியத்தில் பிரதிவாதிகள் தமக்கு விதிக்கபப்ட்டுள்ள உத்தரவுக்கு அமைய நட்ட ஈட்டுத் தொகையை வைப்புச் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி குறித்த நட்ட ஈட்டுத் தொகையை 6 மாதங்களுக்குள் செலுத்தி முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது. இது தான் தீர்ப்புக்கும் 6 மாதங்களுக்கும் இடையிலான தொடர்பு.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹார, எல்.டி.பி.தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ, எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய ஏழுபேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் ஏகமனதாக இந்த தீர்ப்பை அறிவித்திருந்தது.
ஆம், அந்த 6 மாதம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஆனால், இதுவரை அரசை தவிர, எந்த பிரதிவாதியும் உயர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் முழுமையான நட்ட ஈட்டுத் தொகையை செலுத்தவில்லை என அறிய முடிகின்றது.
அப்படியானால், நட்ட ஈட்டுத் தொகையை முழுமையாக செலுத்தாத பட்சத்தில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பில் பெயர் குறிப்பிட்டு நட்ட ஈடு செலுத்த கட்டளை இடப்பட்டவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்க்கொள்ள நேரிடுமா? என்ற விடயம் பேசுபொருளாகியுள்ளது. அப்படியான சூழல் உருவானால் அது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்பு செயலர், முன்னாள் பொலிஸ் மா அதிபர் என அதிகாரத்தில் இருந்த ஒரு குழு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ளும் முதல் சந்த்தர்ப்பமாக மாறும்.
எனினும் அப்படியான நிலைமை ஏற்பட வாய்ப்புக்கள் மிக அரிது என பேசப்படுகின்றது. காரணம், இந்த பிரதிவாதிகள் முழுமையாக நட்ட ஈட்டை செலுத்தாத போதும் சிறிய தொகைகளை நட்ட ஈடாக ட செலுத்தியுள்ளனர்.
உண்மையில், நட்ட ஈடு செலுத்த உத்தரவிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்கள், இந்த தற்கொலை தாக்குதலை தடுக்க தவறியமையை மிகத் தெளிவாக சித்திரித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகத் தெளிவானது.
21/4 தற்கொலை குண்டுத்தாக்குதலில் தனது இரு பிள்ளைகளை இழந்த தந்தையான நந்தன சிறிமான்ன, சுற்றுலா துறை வர்த்தகர் ஜனக விதானகே, இரு கத்தோலிக்க மதகுருமார், ஷெங்ரில்லா ஹோட்டலில் குண்டுத் தாக்குதலில் சிக்கிய சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க, கத்தோலிக்க மதத் தலைவர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர், ஹில்மி அஹமட், ஊடகவியலாளர் கசுன் புஸ்ஸவெல்ல, உள்ளிட்ட 12 தரப்பினர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதில் பிரதிவாதிகள் தரப்பினராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, அப்போதைய அமைச்சரவை, முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி, பொலிஸ் மா அதிபர் பூஜித், தேசிய உளவுச் சேவையின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ், சில அமைச்சுக்களின் செயலர்கள், பொலிஸ் பிரதானிகள் மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டனர்.
இந் நிலையில் 12 மனுக்கள் குறித்த தனது இறுதித் தீர்ப்பை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி 12 ஆம் திகதி அறிவித்தது. அது 124 பக்கங்களை கொண்டிருந்த நிலையில், தீர்ப்பின் சுருக்கத்தை பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய திறந்த மன்றில் வாசித்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக இழப்பீட்டுக்கான அலுவலகம் ஒன்றினை ஸ்தாபிக்குமாறும், அவ்வலுவலகத்தின் கீழ் நிதியம் ஒன்றினை ஏற்படுத்தி அந் நிதியத்தில் பிரதிவாதிகள் தமக்கு விதிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு அமைய நட்ட ஈட்டுத் தொகையை வைப்புச் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நட்ட ஈடு செலுத்துவதற்கான காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இதுவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 15 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ ஒரு மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர 1,725,588 ரூபாவையும், முன்னாள் உளவுத் துறை பிரதானி சிசிர மெண்டிஸ் 5 மில்லியன் ரூபாவினையும், முன்னாள் தேசிய உளவுச் சேவை பிரதானியும் தற்போதைய பொலிஸ் நிர்வாகப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தன 4.1 மில்லியன் ரூபாவினையும் நட்ட ஈடாக செலுத்தியுள்ளனர். இழப்பீட்டுக்கான அலுவலகம் ஊடாக அவர்கள் இந்த நட்ட ஈட்டுத் தொகையினை செலுத்தியுள்ளனர்.
இதனை விட அரசு ஒரு மில்லியன் ரூபாவை நட்ட ஈடாக செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருந்த நிலையில், திறைசேரி அந்த தொகையினை இழப்பீட்டுக்கான அலுவலகத்துக்கு வழங்கியுள்ளது.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 85 மில்லியன் ரூபாவையும் முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ 49 மில்லியன் ரூபாவினையும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர 73.274412 ரூபாவினையும், முன்னாள் தேசிய உளவுச் சேவை பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன 70.9 மில்லியன் ரூபாவினையும் முன்னாள் தேசிய உளவுச் சேவை பிரதானி சிசிர மெண்டிஸ் 5 மில்லியன் ரூபாவினையும் , உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நட்ட ஈடாக இன்னும் செலுத்த வேண்டியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்வாறான பின்னணியில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரத்தை ( motion) ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 100 மில்லியன் ரூபா நட்ட ஈட்டில் வெறும் 15 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள நகர்த்தல் பத்திரத்தில், தனக்கு முன்னாள் ஜனாதிபதி எனும் ரீதியில் 97 ஆயிரத்து 500 ரூபா ஓய்வூதியம் கிடைப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் 54 ஆயிரத்து 285 ரூபா கொடுப்பனவு கிடைப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, தற்போது தான் செலுத்தியுள்ள 15 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக செலுத்த வேண்டிய 85 மில்லியன் ரூபாவை, 10 தவணைகளில், அதாவது 85 இலட்சம் ரூபா வீதம் எதிர்வரும் 2024 ஜூன் 30 ஆம் திகதி முதல் 2033 ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வருடாந்தம் செலுத்தி முடிக்க அனுமதிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நகர்த்தல் பத்திரம் ஊடாக கோரியுள்ளார்.
தாம் தவறிழைத்தது மாத்திரமன்றி நீதிமன்ற உத்தரவையம் மதிக்காது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நஷ்டயீடையும் செலுத்தாது காலத்தைக் கடத்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதித்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.- Vidivelli