ஹை அட்லஸ் மலைப் பகுதியில் வைத்து சுற்றுலாப் பயணிகளான ஸ்கென்டினேவிய பெண்கள் இருவரைக் கொன்ற சந்தேக நபர் மொரோக்கோ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் மொரோக்கோவின் மிகப் பெரிய சுற்றுலா மையமான மர்ராக்கெச்சில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்த டென்மார்க் மற்றும் நோர்வே நாடுகளைச் சேர்ந்த இரு பெண்களது உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதாக அமைச்சு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
24 வயது டென்மார்க்கைச் சேர்ந்த லொயிசா வெஸடிரேஜர் ஜெபர்சன் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டுள்ளார் என அவரது தாயாரை மேற்கோள் காட்டி டென்மார்க் செய்தித்தாளான பீரி தெரிவித்துள்ளது. மொரோக்கோவில் நடைபெறும் குழப்பமான செயற்பாடுகள் காரணமாக அங்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
உயிரிழந்த மற்றைய பெண் 28 வயதான மாரென் உயிலேன்ட் என நோர்வே ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாதுகாப்பே அவரது முன்னுரிமையாக இருந்தது. இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னர் அவர் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார் என மாரென் உயிலேன்ட்டின் தாயார் ஐரேனி உயிலேன்ட் தெரிவித்தார்.
வட ஆபிரிக்காவின் மிக உயரமான மலையுச்சியான தொப்கல்லிற்குச் செல்லும் சன நடமாட்டமற்ற பிரதேசத்தில் இவர்கள் இருவரது உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
மர்ராக்கெச்சில் இருந்து 82 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள தொப்கல் பகுதி மலையேறும் சாகச விளையாட்டுக்கு பிரசித்தி பெற்ற பிரதேசமாகும். தென்கிழக்கு நோர்வே பல்கலைக்கழகத்தின் மாணவிகளான இருவரும் நத்தார் விடுமுறையைக் கழிப்பதற்காக மொரோக்கோவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர் என நோர்வே ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அவர்கள் மொரோக்கோவில் ஒரு மாதகாலத்தைச் செலவிட திட்டமிட்டிருந்ததாக தென்கிழக்கு நோர்வே பல்கலைக்கழகத்தின் முதல்வர் பீட்டர் ஆசென் தெரிவித்தார். இந்தக் குற்றத்திற்கான பின்னணி என்னவெனக் கண்டறிவதற்கான விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. கொலை இடம்பெற்ற இடத்திற்குச் செல்லும் வீதி பொலிஸாரினால் மூடப்பட்டுள்ளது.
ரபாட்டில் அமைந்துள்ள தூதரகத்திலிருந்து நோர்வே பொலிஸார் அதிகாரிகளுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்கில் மர்ராக்கெச்சிற்கு சென்றுள்ளனர்.
குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலையேறும் சாகச விளையாட்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மொரோக்கோ ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது பிராந்தியத்திற்கு மோசமான ஒன்றாக அமையும், சந்தேகத்திற்கிடமின்றி சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை இரத்துச் செய்யும் நிலையினை ஏற்படுத்தும் என உள்ளூர் சுற்றுலாப் பயண வழிகாட்டியான ஹுஸைன் இமிலில் தெரிவித்தார்.
மொரோக்கோவின் பொருளாதார ஆதாரமாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது பெரும்பங்கினை அது வகிக்கின்றது. தேசிய வருமானத்தில் 10 வீத பங்கினைக் கொண்டதாக இத்துறை காணப்படுவதோடு நாட்டின் பிரதான அந்நியச் செலாவணி வருமான மூலமாகவும் காணப்படுகின்றது.
பல ஆண்டுகள் மந்த நிலையில் காணப்பட்ட மொரோக்கோவின் சுற்றுலாத்துறை 2017 ஆம் ஆண்டு 11.35 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவேற்றிருந்தது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 மில்லியனைத் தாண்டியது அதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
-Vidivelli