பொதுஜன முன்னணியில் இணைந்ததற்கு எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன
சபையில் ஐ.தே.க. திட்டவட்டமாக தெரிவிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக் ஷ பொதுஜன முன்னணியில் இணைந்தமைக்கான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மஹிந்த ராஜபக் ஷ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியா? அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியா? என சபையில் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கும் சுசில் பிரேமஜெயந்தவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் நிலவியது. மஹிந்த ராஜபக் ஷ பொதுஜன முன்னணியில் இணையவே இல்லை என சபையில் அடித்துக்கூறுகின்றார் சுசில் பிரேமஜெயந்த எம்.பி, இல்லையென வாதிட்டார் கிரியெல்ல எம்.பி.
சபையில் நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சி தலைவர் குறித்த சர்ச்சை எழுந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் குறித்து விசேட உரையொன்றை ஆற்றிய வேளையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகிய நபர்கள் பாராளுமன்றத்தின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டினார். சம்பந்தனின் உரையின் பின்னர் விசேட கூற்றொன்றை எழுப்பிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் சுசில் பிரேமஜெயந்த எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக் ஷ நியமிக்கப்பட்டமை சரியென கூறியதுடன், ஊடகங்களில் மாத்திரமே மஹிந்த ராஜபக் ஷ கட்சி மாறிவிட்டார் என விமர்சிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துவிட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் மஹிந்த ராஜபக் ஷ எந்த சந்தர்ப்பத்திலும் தான் கட்சி மாறியதாக கூறவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அவர் இணைந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவினால் இன்றுவரை மஹிந்த ராஜபக் ஷ கட்சியை விட்டு விலகிவிட்டார் என்ற கருத்தையோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீரவினால் அவ்வாறான ஒரு அறிவிப்போ பாராளுமன்றத்திற்கு விடுக்கப்படவில்லை. ஆகவே நாம் அனைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாகவே பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த காரணி குறித்து சபை முதல்வர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக் ஷ்மன் கிரியெல்ல சபையில் விமர்சனம் ஒன்றினை முன்வைத்தார். இதன்போது சுசில் பிரேமஜெயந்தவிற்கும் சபை முதல்வர் லக் ஷ்மன் கிரியெல்லவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் நிலவியது. இதன்போது சபைமுதல்வர் கிரியெல்ல, நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா என சுசில் எம்.பியை நோக்கிக் கேட்டார், அதற்கு சுசில் எம்.பியும் ” நீங்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்” என பதில் தெரிவித்ததும், சபை முதல்வர் கிரியெல்ல:-
நீங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெறவில்லையா?
சுசில் எம்.பி:- இல்லை,
சபை முதல்வர் கிரியெல்ல:- மஹிந்த ராஜபக் ஷ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெறவில்லையா?
சுசில் எம்.பி:- இல்லை,
சபை முதல்வர் கிரியெல்ல:-
நாமல் ராஜபக் ஷ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெறவில்லையா?
சுசில் எம்.பி:- இல்லை.
சபை முதல்வர் கிரியெல்ல:- உங்களின் டுவிட்டர் கணக்குகளில் இதற்கான ஆதாரங்கள் முழுமையாக உள்ளது, எம்மாலும் இவற்றை நிரூபிக்க முடியும், சுயநல அரசியல் செய்ய வேண்டாம் என குறிப்பிட்டார். இதன்போது எழுந்த ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான கயந்த கருணாதிலக எம்.பி:- உங்களின் உறுப்புரிமை குறித்த ஆதாரங்கள் எம்மிடமும் உள்ளன என தனது கையில் இருந்த தொலைபேசியின் மூலமாக சில புகைப்படங்களை காண்பித்ததுடன் நீங்கள் ஏமாற்றுவது உங்களை நம்பி வாக்களித்த மக்களை என்பதை மறந்துவிட்டீர்கள் என்றார்.
இதன்போது எழுந்த ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான கயந்த கருணாதிலக எம்.பி:- உங்களின் உறுப்புரிமை குறித்த ஆதாரங்கள் எம்மிடமும் உள்ளது என தனது கையில் இருந்த தொலைபேசியின் மூலமாக சில புகைப்படங்களை காண்பித்ததுடன் நீங்கள் ஏமாற்றுவது உங்களை நம்பி வாக்களித்த மக்களை என்பதை மறந்துவிட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
-Vidivelli