ரவூப் மௌலவியுடன் பேச்சு நடத்த உலமா சபை தயாராகவே உள்ளது

ஜனாதிபதி முன்னிலையில் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி

0 257

(றிப்தி அலி)

காத்­தான்­குடி அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்­யுல்லாஹ் நம்­பிக்கை பொறுப்பு மற்றும் பத்­ரிய்யா ஜும்ஆப் பள்­ளி­வாசல் ஆகி­ய­வற்றின் தலை­வ­ரான ஏ.ஜே.அப்துர் ரவூப் மௌலவி முன்­வைத்து வரும் மார்க்க கொள்கை தொடர்பில் அவ­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்த அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தயா­ராக உள்­ள­தாக உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா தலை­மை­யி­லான முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­தி­க­ளுக்கும் ஜனா­தி­ப­திக்கும் இடை­யி­லான முக்­கிய சந்­திப்­பொன்று கடந்த 5ஆம் திகதி புதன்­கி­ழமை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்­றது.  இச் சந்­திப்பின் இறு­தியில் காத்­தான்­கு­டி­யினைச் சேர்ந்த மௌலவி அப்துர் ரவூ­பிற்கு எதி­ராக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வினால் 40 வரு­டங்­க­ளுக்கு முன்னர் வழங்­கப்­பட்ட பத்வா தொடர்பில் ஜனா­தி­பதி கேள்வி எழுப்­பினார். ஜனா­தி­ப­தியின் இக் கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

இங்கு உலமா சபைத் தலைவர் மேலும் கருத்து வெளி­யி­டு­கையில்,  “இஸ்­லா­மிய கொள்­கைக்கு முர­ணாக பேசி­ய­மை­யி­னா­லேயே மௌலவி அப்துர் ரவூ­பிற்கு எதி­ராக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வினால் பத்வா வழங்­கப்­பட்­டது.

“எல்லாம் இறைவன்” எனும் கொள்­கை­யினை அவர் இலங்கை வாழ் முஸ்­லிம்கள் மத்­தியில் முன்­வைத்தார். இது இஸ்­லாத்தில் பிழை­யா­ன­தொரு கோட்­பா­டாகும். இந்த கொள்கை முஸ்லிம் சமூ­கத்தில் அச்­ச­ம­யத்தில் பாரிய சர்ச்­சை­யினை ஏற்­ப­டுத்­தி­யது.

மௌலவி அப்துர் ரவூப் கல்வி கற்ற இலங்­கையின் பழைமை வாய்ந்த அரபுக் கல்­லூ­ரியில் அவரின் ஆசான்­க­ளாக இருந்த அஜ்வாத் ஆலிம், அப்துல் சமத் ஆலிம் உள்­ளிட்ட பல மூத்த உல­மாக்­க­ளி­னா­லேயே அவ­ரு­டைய கொள்கை வழி­கேடு என்றும், இஸ்­லா­மிய கோட்­பாட்­டிற்கு முற்­றிலும் முர­ணா­னது என்றும் பத்வா வழங்­கப்­பட்­டது.

எனினும் உள்­நாட்டில் வழங்­கப்­பட்ட பத்­வாக்­களை ஏற்­றுக்­கொள்ள மௌலவி அப்துர் ரவூப் அச்­ச­ம­யத்தில் மறுத்­து­விட்டார். இதனால், குறித்த விடயம் தொடர்பில் சர்­வ­தேச ரீதி­யாக புகழ்­பெற்ற எகிப்து அல் -அஸ்ஹர் பல்­க­லைக்­க­ழகம் மற்றும் இந்­தி­யாவின் லக்­னோ­வி­லுள்ள நத்­வதுல் உலூம் அரபுக் கல்­லூரி ஆகி­ய­வற்­றுக்கு இந்த விடயம் அனுப்­பப்­பட்டு பத்வா கோரப்­பட்­டது.

இக்­காலப் பகு­தியில் எம்.எச். முஹம்மத், கலா­சார அமைச்­ச­ராக இருந்­த­மை­யினால் அவரின் ஏற்­பாட்டில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் ஊடா­கவே இந்த பத்வா கோரப்­பட்­டுள்­ளது.

அங்­கி­ருந்தும் இக்­கொள்கை வழி­கேடு என்று அறி­விக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்தே அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வினால்  “எல்லாம் இறைவன்” எனும் கொள்­கைக்கு எதி­ராக பத்வா வழங்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து குறித்த கொள்­கை­யினை வாபஸ் பெறு­வ­தாக மௌலவி அப்துர் ரவூப் அப்­போது அறி­வித்தார்.

எனினும், சில காலங்­களின் பின்னர் இந்த கொள்­கை­யினை மீண்டும் அவர் பேச ஆரம்­பித்தார். பின்னர் அதனை வாபஸ் பெற்­றுக்­கொண்டார். இது போன்று பல தட­வைகள் பேசு­வதும், நிறுத்திக் கொள்­வ­து­மாக இந்த விவ­காரம் நீடித்துச் செல்­கி­றது.

இந்த கொள்­கையை அவர் பேசாமல் விடு­வதே சிறந்­த­தாகும். எனினும் இந்த விடயம் தொடர்பில் அவ­ருடன் பேச்சு நடத்த அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா எப்­போதும் தயா­ரா­கவே உள்­ளது” என றிஸ்வி முப்தி, ஜனா­தி­ப­திக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதுடன் அவை தொடர்பில் தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.