(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சவூதி அரேபியா அரசாங்கம் இவ்வருடம் ஹஜ்ஜை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கும் இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கு பாதுகாப்பான அடைக்கலம் அளித்தமைக்கும் இலங்கை அதிகாரிகள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இலங்கை ஒரு பெளத்த நாடாகும். 22 மில்லியன் இலங்கை சனத்தொகையில் முஸ்லிம் சனத்தொகை சுமார் 10 வீதமானதாகும். இலங்கையிலிருந்து இவ்வருடம் சுமார் 3500 பேர் ஹஜ் கடமையினை நிறைவேற்றியுள்ளனர். இதேவேளை சுமார் 1.9 மில்லியன் முஸ்லிம்கள் உலகெங்குமிருந்து ஹஜ் யாத்திரையை மேற்கொண்டிருந்தனர்.
‘பாரிய ஹஜ் ஏற்பாடுகளை மிக வெற்றிகரமாக நிறைவு செய்த சவூதி அரேபியாவின் தலைமைத்துவத்துக்கு நாங்கள் பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்’. என இலங்கையின் சவூதி அரேபியாவுக்கான தூதுவர் பக்கீர் மொஹிதீ அம்சா ‘அரப் நிவ்ஸ்’ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
“சில சவால்கள் உருவானாலும் அவை ஹஜ் அதிகாரிகளால் சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டது” எனவும் அவர் கூறினார்.
சுமார் 100 இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் அவர்களது தங்குமிடம் தொடர்பில் சவால்களை எதிர் கொண்டனர். இந்தப்பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது. சவூதி அதிகாரிகள் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை வழங்கினார்கள் என்றும் அவர் கூறினார்.
‘சவூதி அதிகாரிகள் இவ்வருட ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பான நிர்வாக செயற்பாடுகளை இவ்வருடம் நேர காலத்துடனே இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுத்தார்கள். இது பாராட்டத்தக்கது’ என ஜித்தாவிலுள்ள இலங்கையின் கொன்சல் ஜெனரல் பலா அல்ஹிப்ஸி மெளலானா தெரிவித்தார். சவூதி அரசாங்கம் இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை ஜனவரி மாதத்தில் முன்கூட்டியே ஆரம்பித்திருந்தது என்றும் அவர் கூறினார்.- Vidivelli